Wednesday, November 25, 2015

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் கிண்டல் பத்தி கவலைப்பட மாட்டேன்!’ - கலகல கலாட்டா விஜயகாந்த்

நாளை வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் விரிவான பேட்டி இடம் பெற்றிருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள்....

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் போய் வருகிறீர்கள். என்ன கேட்கிறார்கள் மக்கள்?

‘‘சென்னை சிட்டி மொத்தமும் மிதக்குதுன்னா, இங்க அரசாங்கம் இருக்கா... இருந்துச்சா? இதுதான் மக்களோட கேள்வி. அந்த அளவுக்கு எல்லா மக்களும் மனசு ஒடிஞ்சுபோய்க் கெடக்காங்க. தண்ணி வடியுறது அப்புறம்... மக்கள் மனதில் இருக்கிற கோபம் எப்ப வடியும்? ரமணன் சொல்றார்... மழை வரப்போகுது, புயல் அடிக்கப்போகுதுனு. பஞ்சாங்கத்துல இருக்குனு சொல்றாங்க. இதுக்கு மேல யார் சொல்லணும்? கடவுளே இறங்கி வந்து, ‘மழை வரப்போகுது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க... தாழ்வான பகுதியில் இருக்கிறவங்களை மேடான பகுதிக்குக் கொண்டுபோங்க. கல்யாண மண்டபத்துல, சமூக நலக்கூடத்துல குடியேத்துங்க’னு சொல்லணுமா? ‘படகு வாங்கி வெச்சுக்கோங்க’னு தயார்செய்து அனுப்பணுமா? தலையில கொட்டி யாராவது சொன்னாத்தான் செய்வாங்களா? தலைமைச் செயலகத்துல மீட்டிங் போட்டோம்னு கலர் போட்டோ எடுத்துக்கிட்டா, தண்ணி ஊருக்குள்ள வராதா? தலைமைச் செயலகத்துக்குள்ள வராது. மக்கள் குடியிருக்கிறது ரோட்டுல. அதை நினைச்சுப் பார்த்தாங்களா?

இந்த அரசாங்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலைங்கிற வருத்தம் எல்லாம் அப்புறம். யாருமே வந்து ‘என்னாச்சு?’னு எட்டிக்கூடப் பார்க்கலைங்கிற கோபம்தான் அதிகம். எம்.எல்.ஏ எங்கே... எம்.பி எங்கே... மந்திரி எங்கே... அதிகாரிகள் எங்கே... ஆர்.கே.நகர்ல வெற்றி பெறுவதற்காக 30 மந்திரிகளையும் இறக்குனீங்களே... அவங்க எல்லாம் எங்க போயிட்டாங்க... அமெரிக்காவுக்கா? ஓட்டு கேட்க வீடுவீடாப் போனவங்களுக்கு, இன்னைக்கு மழை பெய்த இடத்துக்கு வர வழி தெரியலையா? வழி தெரியும். வந்தா, ஜனங்க உதைப்பாங்க. அதனாலதான் பதுங்கிட்டாங்க. நான் போனேன். கார்ல எல்லாம் போகலை. இறங்கி நடந்து போனேன். மேட்டுல நின்னுக்கிட்டு தண்ணியைப் பார்க்கல. மழை வெள்ளத்துல நின்னு மக்களைப் பார்த்தேன். வேட்டியைத் தூக்கிக் கட்டிட்டு நின்னேன். ‘நீங்கதான் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க’னு சொன்னாங்க. என்னால முடிஞ்ச உதவியைச் செய்தேன்; இன்னமும் செய்வேன்!’’


ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தைப் பார்க்கிறீர்களா?

‘‘அது ஷூட்டிங்! ஒரு நாளைக்கு ரெண்டு கடையில டீ குடிக்கிறார். ரெண்டு கடையில வடை சாப்பிடுறார். ரெண்டு இடத்துல பேசுறார். அவ்வளவுதான். ஓவர்... ஓவர்... ஓவர்! இப்படிப் பண்றவர், இப்ப வெள்ளத்துல மிதக்கிற பகுதிகளுக்குப் போய் அந்த மாதிரி அலையணும்ல... அப்பத்தான் மக்கள் நம்புவாங்க!”

உங்களைப் பற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல வரும் கிண்டல்களைப் பார்க்கிறீர்களா?

‘‘சொல்வாங்க! கேட்டுப்பேன்! அதைப் பற்றி கவலைப்படுறது இல்லைங்க!”

- ப. திருமாவேலன்

************ 

‘‘உங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்களே?”

‘‘நீங்கள் தே.மு.தி.கவுக்காக 90 தொகுதிகள் நீங்கள் கேட்பதாகச் சொல்கிறார்களே?”

‘‘அ.தி.மு.க-வை வீழ்த்த தி.மு.க-வுடன் சேர்வீர்கள் என்கிறார்களே?”

‘‘பாரதிய ஜனதா கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா... இல்லையா?”

‘‘தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள். ஆனால், நீங்கள் சட்டமன்றத்துக்கே போவது இல்லையே?”

‘‘திடீர் திடீரென எம்.எல்.ஏ-க்களை அடிக்கிறீர்கள், மாவட்டச் செயலாளர்களை அடிக்கிறீர்கள். உங்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா?”

‘‘பிரேமலதா இந்தத் தேர்தல்ல போட்டியிடுவாரா?”

‘‘நீங்கள் ஏன் உங்களை முதலமைச்சர் வேட்பாளர் எனச் சொல்லிக்கொள்ளவில்லை?”

மேற்கண்ட கேள்விகளுக்கான விஜயகாந்தின் கலகல, கலாட்டா பதில்கள் நாளைய ஆனந்த விகடனில்..

1 comments:

Unknown said...

எதார்த்த மனிதர் விஜயகாந்த், பகிர்வுக்கு நன்றி.
Joshva