Friday, November 06, 2015

பள்ளிக்கூடம் போகாமலே (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : கணேஷ் வெங்கட்ராமன்
நடிகை :ஐஸ்வர்யா ராஜா
இயக்குனர் :ஜெயசீலன் பவுல்தாஸ்
இசை :சாம்சன் கோட்டூர்
ஓளிப்பதிவு :யுகே செந்தில்குமார்
கால் டாக்சி ஓட்டும் ஏ.வெங்கடேஷ்-தேவதர்ஷினி தம்பதியின் மகன் தேஜஸ். பள்ளி மாணவனான இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை. ஆனால், விளையாட்டுகளில் சாம்பியனாக இருக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தேஜஸ்க்கும் மோதல் ஏற்பட்டு பிறகு நட்பாகிறார்கள். இவர்களுடன் படிக்கும் பணக்கார மாணவன் திலீபன் புகழேந்தி படிப்பில் முதலாவதாக திகழ்கிறார். இவர் அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்.

குறைந்த மதிப்பெண் எடுக்கும் தேஜஸை ஆசிரியர்களும் பெற்றோரும் திட்டுகின்றனர். இதனால் மனவேதனையடையும் தேஜஸ் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இவரை ஐஸ்வர்யா காப்பாற்றி விளையாட்டில் முதலிடத்தில் இருக்கும் நீ நினைத்தால், படிப்பிலும் முதலிடத்திற்கு வரலாம், என்று ஊக்கம் தருகிறார்.

இவரின் ஊக்கத்தினால் தேஜஸ் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் திலீபன் புகழேந்திக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. இவர்களை பழிவாங்க துடிக்கிறார். பள்ளியின் பொதுத் தேர்வு வருகிறது. அப்போது தேஜஸ், ஐஸ்வர்யா இருவரும் காணாமல் போகிறார்கள். இவர்களை கண்டுப்பிடிக்க போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராம் களத்தில் இறங்குகிறார். தேஜஸ், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து ஓடிப்போனார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பள்ளி மாணவராக நடித்துள்ள புதுமுகம் தேஜஸ் நடனம், நடிப்பு என்று, தனது வேலையை சரியாக செய்துள்ளார். அவரைப் போலவே மாணவி வேடத்தில் நடித்த ஐஸ்வர்யாவும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். இவர்களுடன் வில்லத்தனமான வேடத்தில் நடித்துள்ள புதுமுகம் திலீபனும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராம் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். திருடனை துரத்தி பிடிப்பது, துப்பாக்கி சண்டைப் போடுவது என்று வழக்கமான போலீஸ் போல் இல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே, காணாமல் போன மாணவர்கள் குறித்து விசாரிப்பது, பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று புத்திமதி சொல்லுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஏ.வெங்கடேஷ், தேவதர்ஷினி, ராஜ்கபூர், ஸ்ரீஹரி என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல கதைகள் வந்திருந்தாலும், இப்படத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயசீலன். கமர்ஷியல் என்பதற்காக மாணவர்களை டூயட் பாட விடுவது, ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வது போன்றவற்றை தவிர்த்துவிட்டு, சிறந்த முறையில் இப்படத்தினை படமாக்கியிருக்கிறார். மதிப்பெண்ணுக்காக திணிக்கப்படும் அழுத்தங்கள், மாணவர்களின் மனச்சிதைவுகள், பெற்றோர், ஆசிரியர் கடமைகள், தற்போதைய கல்வி முறை அவலங்கள் போன்றவற்றை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

சாம்சன் கோட்டூர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். யூ.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். இவர்களின் கூட்டணி கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ பாஸ்.

-மாலைமலர்

0 comments: