Thursday, November 26, 2015

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு சரிந்துவிட்டதா?-ஜு.வி. ஸ்பெஷல் சர்வே’-இரண்டாவது பகுதி

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு சரிந்துவிட்டதா?
ஜூ.வி. டீம், ஓவியங்கள்: கண்ணாபடங்கள்: கே.குணசீலன், ஆர்.ராம்குமார், வீ.சக்தி அருணகிரி, ம.சுதன்
‘ஜு.வி. ஸ்பெஷல் சர்வே’யின் இரண்டாவது பகுதி இது. ஒரே சப்ஜெக்டை மட்டும் கேள்விகளாகி சர்வே நடத்தாமல் தமிழக அரசியலின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கித்தான் சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் 16,846 பேரைச் சந்தித்தார்கள். இவர்கள் அனைவருமே ஓட்டுப்போட தகுதிப் பெற்றவர்கள். கிராமம், நகரம், ஆண், பெண், என சர்வேக்கான விகிதாசாரங்களை உள்ளடக்கி பல தரப்பு மக்களை... இந்த மழைக்கு முன்னே சந்தித்தது ஜூ.வி. படை.
‘ஆளும் கட்சி காதுகளாகவும், எதிர்க் கட்சி வாய் ஆகவும் இருக்க வேண்டும்’ என்பது ஜனநாயகத்தின் தத்துவம். எதிர்க் கட்சி அந்தஸ்தைக்கூட தி.மு.க-வுக்குத் தராமல் தே.மு.தி.க-வுக்குக் கொடுத்தார்கள். எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்துக்கு ‘மகுடம்’  சூட்டினார்கள் தமிழக வாக்காளர்கள். சட்டசபையில் அதிகம் பேச வாய்ப்புள்ள ஒருவர் எதிர்க் கட்சித் தலைவர்தான். அந்தப் பொறுப்புமிக்கப் பதவியில் இருந்து விஜயகாந்த் சாதிக்கவில்லை என்று மக்கள் நினைக் கிறார்கள். ‘உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபிறகு பால், பஸ் கட்டணத்தை உயர்த்தினீர்கள். தேர்தலுக்கு முன்பே அதைச் செய்ய வேண்டியதுதானே’ என தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் கேட்டபோது எழுந்து பேசிய ஜெயலலிதா, ‘சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். தே.மு.தி.க-வுக்கு திராணி இருந்தால் எங்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும்’ என்றார். அப்போது எழுந்து பேசிய விஜயகாந்த், ‘இடைத்தேர்தலில் ஆளும் கட்சித்தானே ஜெயித்துக்கொண்டிருக்கிறது. 2006 - 2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏன் அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை’ என ஜெயலலிதாவை சரியாக மடக்கினார். விஜயகாந்த்துக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, ‘சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது’ எனச் சொன்னார். ஆனால், விஜயகாந்த் விடவில்லை. ‘தி.மு.க. ஆட்சியில் நடந்த ஐந்து இடைத்தேர்தல்களில் நீங்கள் போட்டியிடவே இல்லை. பெண்ணாகரத்தில் டெபாசிட்கூட வாங்கவில்லை’’ எனச் சரியாக பதிலடி கொடுத்தார். இப்படியே விஜயகாந்த் செயல்பட்டிருந்தால் எதிர்க் கட்சித் தலைவருக்கான இடத்தை அவரால் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். ஆளும் கட்சியினர் சீண்டினார்கள் எனச் சொல்லி அவர்களுக்குச் சமமாக நாக்கைத் துருத்தினார் விஜயகாந்த். ஆறு மாதங்கள்கூட சட்டசபையில் அவர் முழுமையாக இருக்கவில்லை. சுமார் நான்கு ஆண்டுகள்  சட்டசபைக்கே போகவில்லை. ‘‘எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எல்லாம் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது போனார்களா” என்று அவர் கேட்ட கேள்வி ஏற்றுக்கொள்ளக் கூடியதா? நல்லதை உதாரணம் சொல்லலாம். அல்லதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்க் கட்சித் தலைவராக  ஆன விஜயகாந்த், மக்களை ஏமாற்றிவிட்டாரா? ஜெயலலிதா செயல்பாட்டைக் கேட்டதுபோலவே எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாடு எப்படி என்பதையும் சர்வேயில் கேட்டிருந்தோம். சூப்பர், சுமார், மோசம், மிக மோசம் என நான்கு நிலைகள் தரப்பட்டன. மிக மோசம் என்பதைத்தான் 30.49 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தார்கள். மோசம் என்பதை 30.41 சதவிகிதம் பேர் சொன்னார்கள். இந்த இரண்டையும் சேர்த்தால் 60 சதவிதத்துக்கும் அதிகமானவர்கள் விஜயகாந்த்தின் மீது அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. 
‘தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது என நினைப்பவர்களா நீங்கள்?’ என்பதுதான் அடுத்த கேள்வி. ‘இல்லை’ என்பதுதான் 58 சதவிகிதத்தினரின் பதிலாக இருக்கிறது. ‘ஆம்’ என்றவர்கள் 42 சதவிகிதம் பேர். 1967-ல்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆண்டுகொண்டிருக் கின்றன. 1967-ல் தொடங்கிய திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை அதன்பிறகு வந்த கட்சிகளால் ஒடுக்க முடியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஆட்சியை அமைப்போம் என டாக்டர் ராமதாஸ் சொல்லி வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி ‘மக்கள் நலக் கூட்டணி’ அமைத்துள்ளார் வைகோ.  பி.ஜே.பி-யும் இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி வருகிறது. காந்திய மக்கள் இயக்கம்,  நாம் தமிழர் கட்சி போன்றவையும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகப் பேசி வருகின்றன. இவர்கள் இப்படிச் சொன்னாலும் இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் மீதான ஈர்ப்பும், கவனக் குவிப்பும் தமிழகத்தில் இன்னும் போகவில்லை என்பதைத்தான் சர்வே முடிவுகள் காட்டுகின்றன.!
அ.தி.மு.க.வின் நம்பர் டூ யார்?, தி.மு.க. யாரை அறிவிக்க வேண்டும்? அதிர்ச்சி கேள்விகளுக்கு ஆச்சரிய முடிவுகள் அடுத்த இதழில்

-ஜூவி

0 comments: