Sunday, April 21, 2013

உதயம் என்.ஹெச்-4 - சினிமா விமர்சனம் (தினமலர்)

"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".


பெங்களூரூக்கு படிக்கப்போகும் சென்னை மாணவர் சித்தார்த், உடன் படிக்கும் பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷின் மகள் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு அம்மணியை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நண்பர்கள் உதவியுடன் கடத்துகிறார். விடுவாரா அவினாஷ்? தன் பண பலத்தையும், படை பலத்தையும் துஷ்பிரயோகம் செய்து சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை துரத்துகிறார் பெங்களூரூ என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனோஜ் மேனன் எனும் கே.கே.மேனன். 


 

சட்டத்திற்கு அப்பால் சில விஷயங்களில் தனக்கு பெரும் உதவி செய்த அவினாஷூக்கு இவ்விஷயத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உதவ முன் வருகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அன்று இரவு 12 மணிக்கு மேல் 18வயது பூர்த்தியாகும் அஷ்ரிதா ஷெட்டியை, அதற்குள் சித்தகர்த் கையில் இருந்து மீட்டு விட வேண்டுமென்ற கட்டளைக்கு கட்டுப்பட்டு என்.ஹெச் 4 எனப்படும் பெங்களூரூ - சென்னை நேஷனல் ஹைவேஸில் அந்த ஜோடியை துரத்து துரத்தென்று துப்பாக்கியும் கையுமாக துரத்துகிறார்.


 இறுதியில் வென்றது சித்தார்த்தா? கே.கே.மேனனின் துப்பாக்கியா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்புமான க்ளைமாக்ஸில், த‌ிகில்-சஸ்பென்ஸ் சரிவிகிதத்தில் கலந்து கலக்கலாக சொல்லப்பட்டிருக்கிறது.


 


"பாய்ஸ் சித்தார்த் தனக்கு இதுநாள் வரை இருந்த சாக்லெட் பாய் இமேஜை தகர்த்தெறிய "உதயம் என்.ஹெச்-4" படத்தை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டிருக்கிறார். புத்திசாலித்தனமாக லீஸின் மூவ்களை முன்கூட்டியே கணித்து அவர் செய்யும் மூவ்மெண்ட்டுகள் பிரமாதம். பிரமாண்டம்! ஆக்ஷ்ன் அதிரடிகளும் சூப்பர்ப்!!

ரித்திகாவாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக நாயகி அஷ்ரிதா ஷெட்டியின் நடை, உடை, பாவனைகள், நிச்சயித்து திருமணம் செய்தவர்களையும் காதலிக்க வைக்கும்! அம்மணி அத்தனை ஹோம்லி குல்கந்து! பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனன், சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜெய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் சித்தார்த்தின் உறவினர்களாக வரும் வக்கீல் பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், ரம்யா உள்ளிட்டோரும் உதயத்தின் உருப்படியான உத்தரங்கள்! அதாங்க தூக்கி நிறுத்தும் தூண்கள்!!


 

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "யாரோ இவன்..., "ஓரக்கண்ணாலே... உள்ளிட்ட பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், நடிப்பும்(ஒரு சில சீன்களில் மப்டி போலீஸ் கான்ஸ்டபிளாக மனிதர் கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் பலே... பலே!) சூப்பர்ப்!

ஹீரோவின் நண்பர், ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா என ஆளாளுக்கு அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் கதை சொல்வது ஓ.கே, சூப்பர்ப்! அதற்காக அஷ்ரிதா, சித்தார்த்தை துரத்தி அடித்துவிட்டு, தன்னை தூக்கி செல்லும் என்கவுன்டர் மேனனிடம் கதை சொல்வதும், அதற்கு காதலித்து திருமணம் செய்த அவர், அப்பா-அம்மா தான் முக்கியம் என அட்வைஸ் பண்ணுவதும் ரொம்ப ஓவர்! இதுமாதிரி ஒருசில குறைகள், க்ளைமாக்ஸ் நெருக்கும் போது ஹைவேஸில் நடைபெறும் இழுவையான ஆக்ஷ்ன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், வெற்றிமாறனின் எழுத்திலும், தயாரிப்பிலும், மணிமாறனின் இயக்கத்திலும் "உதயம் என்.ஹெச்.4" அவர்களது விளம்பர வாசகங்களில் இடம் பெறும் டயலாக் மாதிரியே "செம ஸ்பீடு, ஹைஸ்பீடு" எனலாம்!

ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்!"

நன்றி -   தினமலர்

diski - cps review will b posted  monday evening 6 pm

 
 

1 comments:

Actress Videos said...

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்