Monday, December 03, 2012

பிரபல பதிவர் கேபிள் சங்கர்-ன் முகமூடி!

முகமூடி!

கேபிள் சங்கர்

டாக்டர்... எனக்கு ஒண்ணுமில்லை. வீட்டுல சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொன்னாலாவது அவங்க நம்புவாங்கன்னுதான் இங்க வந்தேன்" என்று மிக சீரியஸா பேசிய சுப்ரமணியை ஆழமாய் பார்த்தேன். மிக இளைஞனா இருந்தான். இவனுக்காக மொத்த குடும்பமே என்னிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு வந்து பேசியது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
அவன் பேசுறத பார்த்தா நம்புறதா வேண்டாமான்னு தெரியலை டாக்டர்" அம்மா.
சம் டைம்ஸ் ஹி பிகம்ஸ் அரகண்ட்" அப்பா.
என்ன பண்ணுவீங்களோ சார்... அவனை சரி பண்ணிருங்க" அக்கா.
சார்... அவன் பயங்கரமான புத்திசாலி. அதனாலதானோ என்னவோ இப்படி ஆயிட்டான்னு தோணுது" தங்கை.
இப்படி ஆளாளுக்கு அவனை சரி செய்யுங்க சரி செய்யுங்க என்று கண்ணீர் மல்க கெஞ்சியது அவனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதோ இப்போது வந்திருக்கிறான்.
சொல்லுங்க சுப்ரமணி என்ன ப்ராப்ளம் உங்களுக்கு?"
சே.. எனக்கொண்ணும் ப்ராப்ளம் இல்லை சார்.. அவங்கதான் புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க. சினிமால, கதையில வந்தா நம்புறவங்க, நிஜத்தில அந்த மாதிரி இருந்தா நம்ப மாட்டேங்குறாங்க. முதல்ல நீங்களாவது என்னைப் புரிஞ்சிக்கங்க. அப்புறம் அவங்களை கன்வின்ஸ் பண்ணுங்க டாக்டர்" என்று நிறுத்தி நிதானமாய் பேசினான். எனது மனநல மருத்துவ அனுபவத்தில் இதுபோல நிதானமா, ஸ்தாபிதமா பேசிப் பார்த்ததில்லை. எல்லோருமே தமக்கு ஒன்றுமில்லை என்று சொன்னாலும் குரல் காட்டிக் கொடுத்துவிடும். அதீத கோபமோ, லேசான நடுக்கமோ, அல்லது தயக்கமான குரலோ இப்படி ஏதோ ஒன்று அவர்களின் மனநிலையை வெளிப்படுத்திவிடும்.
சரி நீங்க சொல்லுங்க... நான் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுறேன்" என்றதும் கொஞ்சம் சீரியஸா பார்த்தான். அவன் பார்வையில் என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையில்ல என்ற தொனி தெரிந்தது. கம் ஆன் சுப்ரமணி" என்றேன் அழுத்தமான ஆதரவுக் குரலில். அம்மாதிரியான குரல் எப்போதும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்.
சார்... நான் ஒரு சூப்பர் ஹீரோ" என்று சொல்லிவிட்டு என் கண்களைப் பார்த்தான். என் கண்களில் கேலியைத் தேடுகிறானென்று புரிந்தது. இவன் சாதாரணன் அல்ல புத்திசாலி. நான் ம் சொல்லு" என்று அவனை உற்சாகப்படுத்தினேன்.
போன மாசம் ஆந்திராவுல ஒரு ரயில் ஆக்ஸிடென்ட் மயிரிழையில தவிர்க்கப்பட்டு ஆயிரத்துக்கு மேல உள்ள பயணிங்க தப்பினார்கள்னு செய்தி படிச்சீங்க இல்லை. அதை நான் தான் செய்தேன்."
ம்.. அப்புறம்"
நீங்க நம்பலை இல்லியா?"
நீயா அப்படி நினைச்சா நான் என்ன செய்ய முடியும் சுப்ரமணி? பிலிவ் யூ... மேல சொல்லுங்க."
ராத்திரி தூங்கிட்டேயிருக்கேன், கனவு மாதிரி சினிமாவுல காட்டுற ஃப்ளாஷ் கட் போல சீன் சீனா தெரியுது. ட்ரெயின் வேகமாய் போய்ட்டிருக்கு. ஒரே காத்தும் மழையுமா இருக்கு, ப்ரிட்ஜைத் தொடுற அளவுக்கு வெள்ளம் போவுது. அஞ்சு நிமிஷத்துல ட்ரெயின் ப்ரிட்ஜ நெருங்கப் போவுது. அடிக்கிற வெள்ளத்தில ப்ரிட்ஜ் ஆட்டம் காணுது. ட்ரெயின் அதும் மேல போச்சுன்னா மொத்தமும் வெள்ளத்தில அடிச்சிட்டுப் போயிரும்னு தெரியுது. சட்டுனு போனேன். ட்ரெயினோட ப்ரேக்கை சடனா போட்டுட்டு அப்படியே கையால பிடிச்சி நிறுத்தினேன். சரியா ப்ரிட்ஜுக்கு ஒரு ரெண்டடி முன்னால நிறுத்திட்டு வந்திட்டேன். இதை நான்தான் பண்ணேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க டாக்டர்."
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒடுகிற ரயிலை கையால் தடுத்து நிறுத்தினேன் என்கிறவனை என்னவென்று சொல்வது? நிறைய தெலுங்கு படம் பார்ப்பவனா இருப்பானோ?
சரி அந்த ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எங்க... எப்ப... நடந்துச்சு?"
போன வாரம் ஆந்திராவுல கிருஷ்ணா நதிமேல ராத்திரி 12.30 மணிக்கு."
அப்ப நீங்க எங்க இருந்தீங்க?"
வேறெங்கே டாக்டர் என் மடிப்பாக்கம் வீட்டு மாடில?" என்றான் சாதாரணக் குரலில்.
மடிப்பாக்கத்திலிருந்து ஆந்திரா கிருஷ்ணா நதி மீது ஓடும் ரயிலை கையால் தடுத்து நிறுத்தினேன் என்கிறான். நிச்சயம் ட்ரீட்மென்ட் கொடுக்கத்தான் வேண்டும்.
சரி. உங்களுக்குப் பிடிச்ச படங்கள் எது?"
எல்லா சூப்பர் ஹீரோ படங்களும், முக்கியமா காமிக்ஸ். அதுன்னா எனக்கு உயிர் டாக்டர். இன்னைக்கும் தெனம் ஒரு காமிக்ஸ் படிக்கலைன்னா எனக்குத் தூக்கம் வராது."
ஓகே... ஓகே... ஸோ... உங்களுக்கு நீங்க படிச்ச, பார்த்த புத்தகத்திலே வர்றா மாதிரி உங்களை நினைச்சிக்கிறீங்க அப்படித் தானே?"
டாக்டர் பார்த்தீங்களா நீங்க என்னை நம்பலை."

நீ சொல்றதை உங்க வீட்டுல மட்டுமில்ல யாரும் நம்பமாட்டாங்க. சரி உனக்கு அந்த மாதிரி பவர் இருக்குன்னு நீ சொல்றதை நான் நம்பினாலும் ப்ரூப் பண்ண லாஜிக்கு உதைக்குது இல்லை. கடவுளையே நேர்ல வான்னு கூப்பிடுற காலமிது."
சுப்ரமணி கொஞ்சம் யோசனையா இருந்தான். அவன் கண்களில் ஒருவிதமான பளபளப்பு இருந்தது. போதை வஸ்து ஏதாவது உபயோகிப்பவனோ?
சரி சுப்ரமணி உங்க டெலி ரொட்டீனை சொல்லுங்க?"
சார் தெனம் அஞ்சு மணிக்கு எழுந்திருவேன். அப்புறம் ஒரு மணி நேரம் வாக்கிங். சூடா ஒரு ஃபில்டர் காஃபி. எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குக் கிளம்பினேன் என்றால் மதியம் சாப்பாட்டுக்குத்தான் எழுந்துப்பேன். வேலை பின்னி எடுத்துரும். அப்புறம் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து டிபன் முடிச்சிட்டு சூப்பர் சிங்கர் பாத்துட்டு தூங்கிருவேன். எப்பவாச்சும் ஒரு பீர். அப்படி பீரடிச்சா ஒரே ஒரு தம் அடிப்பேன்" கடைசி ரெண்டு வரிகளை மட்டும் சுற்றும் முற்றும் பார்த்தபடி ரகசியமாச் சொன்னான்.
மிகச் சாதாரணனாய் இருந்தான். எல்லா காமிக்ஸ் கதையிலும் வரும் நாயகன் போல. நிஜவாழ்க்கையில் தன்னால் செய்ய முடியாத விஷயங்களையெல்லாம் தாம் படித்த காமிக்ஸ் நாயகர்களை கற்பனையாய் உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
சார்... ப்ரூப் வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி நடக்க இருந்த ஃப்ளைட் ஆக்ஸிடென்டை பத்தி பேப்பர்ல நியூஸ் வந்திருக்கு... அதுல பாருங்க; அவங்க எப்படி காப்பாத்தப்பட்டாங்கன்னு" என்று தன் பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப் போட, அதில் தலைப்புச் செய்தியா எல்லா டி.வி.க்களிலும் அலறிய நடுவானில் விபத்திலிருந்து தப்பிய விமானம் என்கிற தலைப்பில் வந்த விமானியின் பேட்டி. நடு வானில் விமானத்தின் இரண்டு இஞ்ஜின் செயலிழந்து விட்டதாகவும், அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்ன நடந்தது என்று புரிவதற்குள் விமானம் தரையில் யாரோ அலுங்காமல் குலுங்காமல் வைத்தது போல இறங்கியது எப்படி என்று தம்முடைய பல்லாயிரம் மணி பயண அனுபவத்தில் புரிபடவேயில்லை. கடவுளின் ஆசி அன்று பயணித்தவர்கள் அனைவருக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான் உயிர் பிழைத்தோம் என்று கடவுளுக்கு வேறு நன்றி சொல்லியிருந்தார். அதைப் படித்து முடித்து நிமிர்ந்த போது சுப்ரமணியின் கண்களில்இப்பவாச்சும் நம்புறீங்களா?’ என்ற கேள்வி இருந்தது. ஆனாலும் என்னால் நம்ப முடியவில்லை.
உங்களுக்கு எப்படி இந்த மாதிரி விபத்துக்கள் எல்லாம் தெரியவரும்? மண்டைக்குள்ள வலி, காதுக்குள்ள தொடர்ந்து குரல்கள் கேட்பது போல? ஏதாச்சும் சிம்ப்டம்ஸ்?"
சார்... அது ஹலூசினேஷன் சார்" என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தேன். எனக்கு அப்படியெல்லாம் கிடையாது சார். திடீர்னு உடம்பெல்லாம் உஷ்ணமாகி கண்ணு முன்னாடி பாஸ்ட் பார்வர்ட் செய்தாய்ப் போல ட்ரெயின் ஓடுறது, புயலடிக்கிறது, பிரிட்ஜ் உடையப்போறது எல்லாமே ஓடும்."
நாட்டுல ஆயிரம் பிரச்னைங்க நடக்குது; இந்த மாதிரி எல்லாத்துக்கு நீ ஓடிட்டேயிருக்க முடியுமா?"
.. ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். எல்லா விஷயமும் இந்த மாதிரி தெரியாது. நான் சந்திச்ச ஆட்கள் அந்த விபத்துல மாட்டப் போறதா இருந்தாத்தான் எனக்குத் தெரியும். முக்கியமா பாஸ்ட் பார்வர்ட் ஆகும் போது கடைசியா அவங்க முகம்தான் ஃபீரிஸாகி நிற்கும். அன்னைக்கு ட்ரெயினில என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் இருந்தான். ப்ளைட்டுல நான் லவ் பண்ற பொண்ணு மது அவ இருந்தா."
அவங்களுக்குத் தெரியுமா நீதான் அவங்களைக் காப்பாத்தினேன்னு?"
எங்க சார்.. வீட்டுலயே நம்ப மாட்டேங்குறாங்க; அவங்க எங்க நம்பப் போறாங்க?"
இதெல்லாம் சாத்தியமா? என் அறிவுக்கு மனித மனங்களை அறிந்து தெரிந்த வகையில் இதெல்லாம் ஒருவிதமான மனப்பிறழ்வின் ஆரம்பமாகத்தான் தோன்றியது. இவனை தனியா விட்டுப் பார்த்தால் என்ன செய்கிறான் என்று வாட்ச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்திடறேன்" என்று சொல்லிவிட்டு என் தனியறைக்குள் சென்று அறையின் கதவு இடுக்கு வழியே அவனைக் கவனித்தேன். மிக அமைதியாய் உட்கார்ந்திருந்தான். டேபிளின் மேலிருந்த ஜேம்ஸ் சல்லியின் "The Human Mind” புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தான். கண்கள் புத்தகத்தின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் செல்போன் அடித்தது. மனைவி தான் கூப்பிட்டாள்.
சொல்லும்மா."
இன்னும் ஒன் அவர்ல வர்றேன். ஒரே ஒரு பேஷன்ட்தான் இருக்காரு" என்று பேசிக்கொண்டே நிமிர்ந்து பார்த்த போது சுப்ரமணி அங்கேயில்லை. சட்டென கண்களால் சுற்றிப் பார்த்தபடி மனைவியின் போனை அப்புறம் கூப்பிடுவதா" சொல்லி கட் செய்துவிட்டு, நிமிர்ந்தபோது என் அறையின் வாசல் வழியா சுப்ரமணி உள்ளே நுழைந்தான். முகமெல்லாம் வேர்த்திருந்தது.

என்ன சுப்ரமணி என்ன இப்படி வேர்த்திருக்கு? என்ன ஆச்சு? ஆர் யூ கம்ஃபர்டபிள்? எங்க போயிருந்த?"
ஸ்பென்சர் ப்ளாசால பாம் வெச்சிருந்தாங்க. ஒரே களேபரம். என் அத்தைப் பொண்ணு அங்க இருந்தா. வெடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம்தான் இருக்கு. சட்டுனு எடுத்துட்டு கடல்ல போட்டுட்டு இப்பத்தான் வந்தேன். அதான் டயர்ட்" என்றான்.
ஒரு போன் அட்டெண்ட் செய்யும் நேரத்திலா? அவசரமாய் வெளியே போய் திருட்டு தம் அடித்துவிட்டு வந்து கதையளக்கிறானா? இல்லையே, வாசனை ஏதும் வரவில்லையே? இது சாத்தியமே இல்லை என்று அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இன்னும் என்னை நம்பமுடியலை இல்லை? கொஞ்சம் டி.வி.யைப் போடுங்க" என்று அறையில் டி.வி.யின் ரிமோட்டை எடுத்து அவனே ஆன் செய்தான்.
வரிசையா எல்லா சேனல்களையும் ப்ரவுஸ் செய்தபடி வந்தவன் நியூஸ் சேனல்களாய் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முகத்தில் இருந்த தீவிரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு தூரம் அவன் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நம்புகிறான்? அவனையும் டி.வி.யையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எந்த ஒரு சேனலிலும் அவன் சொன்ன செய்தி ஏதும் வரவில்லை. அவன் முகத்தில் ஒரு ஏமாற்றமும் வெறுப்பும் உமிழ்ந்து கொண்டிருந்தது. இம்மாதிரியான பேஷன்டுகள் அப்படித்தான் ரெஸ்ட்லெஸாகி விடுவார்கள்.
இப்போது சுப்ரமணி என் முகத்தையும் டி.வி.யையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென டி.வி.யில் சமீப செய்தியில் சென்னை ஸ்பென்சர் மாலில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த நொடியில் கடலில் வெடிக்க வைத்த மாயாவி யார்? பரபரப்பு தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில்" என்று வர, என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.
இவன் நிஜம்தான் சொல்கிறான். இவன் ஓர் அபூர்வ பிறவி. என்னால் வெளி உலகுக்கு இவன் கொண்டு வரப்படும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய புகழ் அவனளவுக்கு உயரமாய் இருக்கப்போகிறது. இன்னும் ஒருசில டெஸ்டுகளை இவனை வைத்துச் செய்ய வேண்டும்.
வாவ்.. சுப்ரமணி யு ஆர் கிரேட். நான் நம்புறேன். நீ சூப்பர் ஹீரோதான். நாளைக்கு உன்னை ஒருமுறை ஹிப்னடைஸ் பண்ணி பார்த்துடறேன். அதுக்கு அப்புறம் நானே உனக்கு சர்டிபிகேட் தர்றேன். நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். காலையில வந்திரு.. எல்லா டெஸ்டும் முடிச்சிடலாம் என்ன?" என்றதும் சுப்ரமணி முகத்தில் மகா சந்தோஷம் தெரிய சிரித்தான்.
இது போதும் சார். இனி எங்க வீட்டுல என்னை பைத்தியக்காரன்னு சொல்ல மாட்டாங்க.. அது ஒண்ணு போதும் எனக்கு. நிச்சயம் நான் காலையில வந்திர்றேன்" என்று உற்சாகத்தோடு வெளியேறினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு க்ளினிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.
கார் ஓட்டும் போதெல்லாம் சுப்ரமணியின் நினைப்பாகவே இருந்தது. நான் ஒரு சூப்பர் ஹீரோவோடு பேசியிருக்கிறேன். அவனுடய அசாதாரண சக்தியை நான்தான் முதலில் உணர்ந்தவன் என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. ஒரு பிரபல சைக்யாட்ரிஸ்ட் நான் அவனை நம்புவது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நான் சந்தித்த ஆட்களுக்கு ஏதாவது பிரச்னைனாத்தான் எனக்கு தெரியும்" என்று அவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தபோதுதான் அந்த விபரீத முயற்சியைச் செய்து பார்க்கலாமா என்று தோன்றியது.
எதிர்புறத்தில் வேகமாய் ஒரு பெரிய கண்டெயினர் லாரி வந்து கொண்டிருக்க, ஒரு முடிவோடு காரை வேகமாய் லாரியை நோக்கிச் செலுத்தினேன். சுப்ரமணி வருவான் என்கிற நம்பிக்கையோடு...
ம் சுப்ரமணி முகத்தில் மகா சந்தோஷம் தெரிய சிரித்தான்.
இது போதும் சார். இனி எங்க வீட்டுல என்னை பைத்தியக்காரன்னு சொல்ல மாட்டாங்க.. அது ஒண்ணு போதும் எனக்கு. நிச்சயம் நான் காலையில வந்திர்றேன்" என்று உற்சாகத்தோடு வெளியேறினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு க்ளினிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.
கார் ஓட்டும் போதெல்லாம் சுப்ரமணியின் நினைப்பாகவே இருந்தது. நான் ஒரு சூப்பர் ஹீரோவோடு பேசியிருக்கிறேன். அவனுடய அசாதாரண சக்தியை நான்தான் முதலில் உணர்ந்தவன் என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. ஒரு பிரபல சைக்யாட்ரிஸ்ட் நான் அவனை நம்புவது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நான் சந்தித்த ஆட்களுக்கு ஏதாவது பிரச்னைனாத்தான் எனக்கு தெரியும்" என்று அவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தபோதுதான் அந்த விபரீத முயற்சியைச் செய்து பார்க்கலாமா என்று தோன்றியது.
எதிர்புறத்தில் வேகமாய் ஒரு பெரிய கண்டெயினர் லாரி வந்து கொண்டிருக்க, ஒரு முடிவோடு காரை வேகமாய் லாரியை நோக்கிச் செலுத்தினேன். சுப்ரமணி வருவான் என்கிற நம்பிக்கையோடு...


நன்றி - கல்கி, கேபிள் சங்கர் , முக மூடி , புலவர் தருமி 

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுஜாதா கதை படிச்ச மாதிரி இருக்கு! நன்றி!

jgmlanka said...

ஐயையோ என்னங்க இது... அதுக்காக இப்படி விபரீதமாகவா முடிப்பீங்க... நடுங்கிப் போய்ட்டேன்...
கதை சூப்பர்...

Unknown said...

பைத்தியங்களுக்கு
வைத்தியம் பாக்குற
பைத்தியகார
வைத்தியருக்கு
பைத்தியம் புடிச்சுருச்சுங்கோ...........