Tuesday, December 18, 2012

2013 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

செவ்வாய்க்கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்ட நேரம் நள்ளிரவு 12.34-க்கு,  1.1.2013-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி சுக்கிரனின் ஆதிக்கத்தில் (2 0 1 3=6) இந்த ஆண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


முற்போக்கு சிந்தனை உள்ளவர்களே !
மேஷம்: உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... மனதில் தெளிவு, நிம்மதி பிறக்கும். புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். ஆனால், மே 29-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், ஓரே முயற்சியில் முடிக்க வேண்டிய சில வேலைகள் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சனியும், ராகுவும் இந்த ஆண்டு முழுக்க 7-ம் வீட்டிலேயே தொடர்வதால்,  வேலைச்சுமை, அலைச் சல் காரணமாக கணவர் கோபப்படலாம். நீங்களும் அவருக்கு சரிசமமாக அலுத்துக் கொள்ளாதீர்கள். கேதுவும் ராசிக்குள்ளேயே நிற்பதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.

சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே !
ரிஷபம்: இந்த வருட தொடக்கம் முதலே சனியும், ராகுவும் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் பக்குவத்தை அடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனால், மே 28-ம் தேதி வரை ஜென்ம குரு தொடர்வதால், கணவருடன் கருத்து மோதல் வரும். உடல் உபாதை வந்து நீங்கும். மே 29-ம் தேதி முதல் ராசியை விட்டு குரு விலகி 2-ம் வீட்டில் நுழைவதால், தோல்வி மனப்பான்மை, விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை, கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மே 29-ம் தேதி முதல் வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையை  மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும்.இந்தப் புத்தாண்டு, உங்களை சாதிக்க வைப்பதுடன் வசதி, வளங்களையும் அள்ளித் தரும்.

கலையுணர்வு மிக்கவர்களே !
மிதுனம்: கேது பகவான் லாப வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நவீன ரக செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த புத்தாண்டு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். புது சொத்து வாங்குவீர்கள். இந்த வருடம் முழுக்க சனியும், ராகுவும் 5-ல் தொடர்வதால், அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சொந்தபந்தங்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. குருவால் கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். இந்தப் புத்தாண்டு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு அவ்வப்போது உங்களைத் தள்ளினாலும், கடின உழைப்பால் முன்னேற வைக்கும் வருடமாக அமையும். 

 
கால நேரம் பார்த்து காய் நகர்த்துபவர்களே !
கடகம்: உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது சோர்வாக காணப்படுவீர்கள். உடல் பருமனைக் குறைப்பதாக சொல்லி பட்டினி கிடக்க வேண்டாம். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.  மே 28-ம் தேதி வரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மே 29-ம் தேதி முதல் குரு 12-ல் மறைவ தால், அநாவசியச் செலவுகளை தவிருங்கள். இந்த ஆண்டு முழுக்க ராகுவும், சனியும் 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், ஓய்வெடுக்க முடியாமல் போகும். தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படலாம்.. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறு வீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.     


        
சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் தேவைப்படும் வருடமிது.

அன்புக்கு அடிமையானவர்களே !
சிம்மம்: சனியும், ராகுவும் 3-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மனோபலம் அதிகரிக்கும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். ஆனால், உங்களுக்கு 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்... அலைச்சல், திடீர் பயணங்கள், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மே 28 வரை, குரு 10-ம் வீட்டிலேயே நிற்பதால்... சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குரு லாப வீட்டில் நுழைவதால்... பணவரவு அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்கு வீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து பேசுவார்கள். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வும், புது வாய்ப்புகளும் வரும். தொட்டதெல்லாம் துலங்குவதுடன், எதிர்பாராத வெற்றிகளையும் தரும் வருடமிது.

  நகைச்சுவையாக பேசுபவர்களே !
கன்னி: உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானம் உயரும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். இந்த வருடம் முழுக்க 2-ம் வீட்டிலேயே ராகுவும், ஏழரைச் சனியும் தொடர்வதால், வீண் விவாதங்களைத் தவிருங்கள். செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மே 29-ம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களில் சிலர் எதிரில் ஒரு பேச்சு, மறைவில் வேறு பேச்சு என்று இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். பயணங்களின்போது கவனமாக இருப்பதுடன், ரகசியங்களையும், விலை உயர்ந்த ஆபரணங்களையும் பாதுகாக்க வேண்டிய வருடமிது.

நீதிக்குத் தலை வணங்குபவர்களே !
துலாம்: உங்களின் பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். செலவுகள் உங்களைத் துரத்தினாலும், அதற்கேற்ற பண வரவும் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மே 28-ம் தேதி வரை குரு 8-ல் மறைந்திருப்பதால், வீண் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். கவலைகள், மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் 9-ம் வீட்டில் நுழைவதால், எங்கு சென்றாலும் கூடுதல் மரியாதை கிடைக்கும். வீடு கட்ட லோன் கிடைக்கும். மாமியார், நாத்தனாருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். வருடம் முழுக்க உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் தொடர்வதால்... உடல் உபாதை வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரம் செழிப்பாக நடைபெறும். ஜூன் மாதம் முதல் உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.   


இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளையும், நிம்மதி குறைவையும் ஏற்படுத்தும். அதேவேளையில், அந்தஸ்தை அதிகப்படுத்தும்.

சுயகௌரவம் பார்ப்பவர்களே !
விருச்சிகம்: கேதுபகவான் 6-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீட்டை நவீனமாக்குவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால்... வீண் விரயம், ஏமாற்றம், திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்து செல்லும். பழைய கடனை பைசல் செய்தாலும், புது கடன் வாங்க வேண்டி வரும். உறவினர்கள், உங்களின் நிதி நிலையறியாது பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மே 29-ம் தேதி முதல் குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால்... வீண் அலைச்சல்களும், செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


சின்னச் சின்ன சுகங்களை இழந்து, பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது.

தான, தருமங்களை விரும்பிச் செய்பவர்களே !
தனுசு: லாப வீட்டில் சனியும், ராகுவும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தொட்ட காரியம் துலங்கும். வரவேண்டிய பணம் எல்லாம் கைக்கு வந்து சேரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வருடம் முழுக்க கேது 5-ல் நிற்பதாலும், 8-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதாலும், மன இறுக்கம் வந்து செல்லும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பூர்விக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு, மருந்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மே 28-ம் தேதி வரை ராசிநாதன் குரு பலவீனமாக இருப்பதால், சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்று சில நேரங்களில் வருத்தப்படுவீர்கள். ஆனால், மே 29-ம் தேதி முதல் குரு 7-ல் அமர்வதால், தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பம் களைகட்டும். வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 


இந்தப் புத்தாண்டின் முற்பகுதி முணுமுணுக்க வைத்தாலும், மையப் பகுதி முதல் மகிழ்ச்சி பொங்கும்.

மனசாட்சியை மதிப்பவர்களே !
மகரம்: மே 28-ம் தேதி வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி நிறைவேறும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் எதிர்பார்த்தபடி அமையும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். மே 29-ம் தேதி முதல் 6-ல் குரு மறைவதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் யோசித்து செய்வது நல்லது. இந்த வருடம் முழுக்க 10-ல் ராகுவும், 4-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால், ஓரே நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டி வரும். வாகனம் பழுதாகும். தாயாருக்கு உடல் நலக் கோளாறு வந்து செல்லும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக போராடுவீர்கள்.


தைரியமான முடிவுகளாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் வெற்றி பெறும் வருடமிது.

கொடுத்து உதவும் குணம் உள்ளவர்களே !
கும்பம்: ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் சொந்தமாக இடம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். மே 28-ம் தேதி வரை குருபகவான் 4-ம் வீட்டில் நிற்பதால்... வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வேலைச்சுமை வந்து செல்லும். மே 29-ம் தேதி முதல் குரு 5-ல் நுழைவதால், புது தெம்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிக சம்பளத்தில் புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. இந்த வருடம் முழுக்க கேதுபகவான் 3-ம் வீட்டில் வலுவாக தொடர்வதால், துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் ஆதாயமடைவீர்கள். ராகு 9-ல் நிற்பதால், வீண் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.         


இந்தப் புத்தாண்டின் முற்பகுதி அலைச்சல், செலவினங்களை தந்தாலும், ஜூன் மாதம் முதல் எதிலும் வெற்றி கிடைக்கும்.

கற்பனையில் மூழ்குபவர்களே !
மீனம்: உங்களின் சுக - சப்தமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். இந்த வருடம் முழுக்க 8-ம் வீட்டிலேயே சனியும், ராகுவும் நிற்பதால்... ஆர்வமின்மை, சிலர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லும்போது பணம், நகையை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பது நல்லது.  உங்களின் திறமையை மற்றவர்கள் குறைத்து எடை போடுவார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிநாதன் குருபகவான் சாதகமாக இல்லாததால், திட்டமிட்ட காரியங்கள் தடைபட்டு முடியும். இடைத்தரகர்களை நம்பாமல், சில வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வெளி உணவுகளைத் தவிருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். மேலதிகாரியை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம்.


திட்டமிடுதலும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் வருடமிது.


நன்றி - அவள் விகடன்

0 comments: