Thursday, December 27, 2012

2012-ல் தமிழகம் -பர பர டாப் 50 சம்பவங்கள்

2012-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்

விகடன் டீம்


ங்கக் கடலில் உருவான 'தானே’ புயல், ஓர் அதிகாலை தமிழகக் கரையைக் கடந்தபோது, அது ஒரு பேரழிவின் துவக்கப் புள்ளி என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'தானே’ தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. தலைமுறை... தலைமுறையாக நட்டு வளர்த்த பலாவையும் முந்திரியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தது 'தானே’. வீடுகள், வெறும் கற்குவியல்களாகின. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூறையாடப்பட்டது. போக்குவரத்து தடைபட்டு, மின்சாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், அன்றாட உணவுக்கே வழியின்றி நரக வேதனையில் தவித்தனர் கடலூர் பகுதி மக்கள். வாசகர்களின் அருளும் பொருளும் கொண்டு 'தானே துயர் துடைப்பு அணி’ உருவாக்கி, கடலூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது விகடன்.


 
முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள உரிமை என்பது சட்டப்பூர்வமானது. அதையும் தாண்டி 'அணை வலுவிழந்துவிட்டது... உடையப்போகிறது’ என்று கேரளா கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த விஷமப் பிரசாரம் இந்த ஆண்டு உச்சத்துக்குப் போனது. விளைவு... தமிழக-கேரள எல்லையோரம் பதற்றப் பிரதேசமானது. பறிபோகும் தங்களின் தண்ணீர் உரிமையை நிலைநாட்ட ஆர்த்தெழுந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள், ஒவ்வொரு நாளும் தன்னெழுச்சியாகத் திரண்டு கம்பம், குமுளி வழியே கேரள எல்லையை நோக்கிப் படையெடுத்தனர். மூன்று அப்பாவித் தமிழர்கள் முல்லைப் பெரியாறுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். நீதிபதி ஆனந்த் கமிட்டி தலைமையிலான ஐவர் குழுவும், அவர்கள் நியமித்த நிபுணர் குழுவும்... அணையின் உறுதியை உத்தரவாதம் செய்தும், கேரள அரசின் அழிச்சாட்டியம் தொடர்கிறது.தூத்துக்குடியில் மருத்துவர் சேதுராமலட்சுமியின்  தனியார் மருத்துவமனையில் தன் மனைவியைப் பிரசவத்துக்காகச் சேர்த்தார் மகேஷ். கடைசி நேரத்தில் 'சிக்கலான கேஸ்’ என்று சொல்லி மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் சேதுராமலட்சுமி. ஆனால், செல்லும் வழியிலேயே மகேஷின் மனைவியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட, மருத்துவ மனையில் வைத்தே சேதுராமலட்சுமியை வெட்டிக் கொலை செய்தார் மகேஷ். மகேஷ் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டாலும், 'தங்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் இல்லை’ என்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் நோயின் வேதனையுடன் பரிதவித்தனர்.

200 ஆண்டுகள் பழமையான சென்னை எழிலகம் கட்டடம் தீ விபத்தில் களை இழந்தது. பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டடத்தில், நள்ளிரவு ஏற்பட்ட தீ, தீயணைப்புப் படையினர் வருவதற்குள் மளமளவெனப் பரவியது. சென்னை தீயணைப்புக் கோட்ட அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் ஆறு பேர் கொண்ட மீட்புக் குழுவினர் எரியும் கட்டடத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழ, முன்னணித் தீயணைப்பாளர் அன்பழகன் இடிபாடுகளில் சிக்கி இறந்துபோனார். ப்ரியா ரவிச்சந்திரன் உடையில் பற்றிய தீ, முடியைப் பொசுக்கி, முக சருமத்தையும் பாதித்தது. பாரம்பரியப் பெருமைகொண்ட கட்டடங் களைப் பரமாரிப்பதன் அவசியத்தை உணர்த்திய விபத்து இது.

கிட்டத்தட்ட தேர்தல் என்பதே ஒரு 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ போல மாறிவிட்ட நிலையில், இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகிவிட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றதும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும்கூட ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால், அடுத்து வந்த புதுக்கோட்டை  இடைத்தேர்தலை தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தது மெகா ஆச்சர்யம். 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் கார்த்திக் தொண்டைமான் வெற்றிபெற, தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் டெபாசிட்டைத் தக்கவைத்து 'வரலாறு’ படைத்தார்.

ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் வெடித்த பிரச்னைதான் இந்த வருடத் தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் காட்சி. தங்களின் புதிய சம்பள விகிதத்தைத் தாங்களே நிர்ணயித்தார்கள் ஃபெப்சி தொழிலாளர்கள். 'மூன்று மடங்கு, நான்கு மடங்கு அதிகம். அந்த அளவு தர முடியாது’ எனத் தயாரிப்பாளர் தரப்பு மறுக்க... படப்பிடிப்புகள் ரத்தாயின. இயக்குநர் அமீர் தொழிலாளர்களுக்கும், சேரன் தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவு அளித்தனர். ஒரு தீர்மானமான முடிவை எட்டாமலேயே அடங்கியது பிரச்னை!

சென்னை, பெருங்குடி வங்கியில் நடந்த பட்டப்பகல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, வேளச்சேரி சந்து வீடு ஒன்றில் வசித்த ஐந்து வட மாநில இளைஞர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது போலீஸ். அந்த ஐந்து இளைஞர்களையும் உயிருடன் பிடிக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் ஏன் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் அனைவரையுமே திருடர்கள் போலச் சித்திரித்து, ''அனைவரும் காவல் நிலையத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்'' என்றது போலீஸ். சொற்பக் கூலிக்காகப் பிழைக்க வந்தவர்களை சந்தேகக் கண்கள் மொய்த்தன; மொய்க்கின்றன.

2006 சட்டமன்றத் தேர்தலின்போது திண்டிவனத்தில் அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் வீட்டில் மர்மக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் முருகானந்தம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட 21 பேர் மீது சி.வி.சண்முகம் புகார் கொடுத்தார். சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கில், ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டபோது, எந்த நேரமும் தைலாபுரம் தோட்டத்துக்குள்ளும் சி.பி.ஐ. நுழையலாம் என்று பா.ம.க பதறியது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் பிடித்த விசாரணை ஏனோ மீண்டும் முடங்கிவிட்டது.

சிகலா, வேதா இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட, அ.தி.மு.க-வில் மடமடவெனக் காட்சிகள் மாறின. ஒரு நிலமோசடி வழக்கில் ராவணன் கைதுசெய்யப்பட, கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சியவரின் ஆதிக்கம் நிறைவடைந்தது. தொடர்ந்து அரங்கேறியது சசிகலாவின் தம்பி திவாகரன் கைது. ம.நடராசனின் கைதுதான் ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். சசிகலா மீண்டும் ஜெ-வுடன் இணைய, தொடர்ந்து சில மாதங்களிலேயே கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்தாலும் தோட்டத்துக்குள் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போது சசி மட்டுமே ஜெ-வுக்கு ஒரே துணை.

வைர விழாக் கொண்டாட்ட சமயம், இத்தனை ஆண்டுகளில் அரங்கேறாத பல சம்பவங்களை தமிழக சட்டமன்றம் சந்தித்தது. அ.தி.மு.க.   எம்.எல்.ஏ-க்களை நோக்கி நாக்கைத் துருத்தியபடி ஆவேசம் காட்டியதால் விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மறுபுறம், தடாலடி மந்திரிசபை மாற்றங்களுக்கு இடையே தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகரையே மாற்றிய பெருமையைத் தேடிக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா.

ணல் கடத்தல் மாஃபியாக்கள் ஓர் இளைஞனை லாரி ஏற்றிக் கொலை செய்த கொடூரத்தை தமிழகம் இந்த ஆண்டு சந்தித்தது. திசையன்விளை அருகே உள்ள நம்பியாற்றில் அதிகாலை 3 மணிக்கு ஒரு லாரியில் மணல் அள்ளப்படுவதைப் பார்த்த மிட்டாதார்குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர், சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார். ஆனால், மணல் திருடர்கள் திடீரென்று லாரியைக் கிளப்பி சதீஷ் மீது ஏற்றினார்கள். உடல் நசுங்கி ரத்தம் பீறிட்டு அங்கேயே இறந்துபோனான் அந்த 21 வயது இளைஞன். அ.தி.மு.க-வின் நாங்குனேரி ஒன்றிய கவுன்சிலர் டென்சிங் என்பவருக்குச் சொந்தமான அந்த லாரியை ஓட்டியது அவரது தம்பி கிங்ஸ்டன். மறுகால்குறிச்சி கிராமத்தில் மணல் கடத்தலைத் தட்டிக்கேட்ட வானுமாமலை என்ற இளைஞரைச் சுட்டுக் கொலை செய்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.

'இக்கட்டான சூழலில் ஒரு ராஜதந்திரி எப்படிச் செயல்பட வேண்டும்?’ என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில், 'ஆ.ராசா’! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் வெளியே வர... மனு மேல் மனுவாகப் போட்டுக்கொண்டே இருக்க... அப்போதெல்லாம் மௌனகுருவாக அமைதிகாத்தார் ராசா. கடைசி ஆளாக, நீதிமன்றக் கதவைத் தட்டி ஒரே மனுவில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ராசாவின் விடுதலையைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் தி.மு.க.வினர்.

திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களைக் காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கிளம்பிய விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஏகத்துக்கும் குட்டு வாங்கியது தமிழக அரசு. 'அந்தப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படவில்லை!’ என்று அரசுத் தரப்பு வாதிட, 'பின் ஏன் அரசு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது?’ என்று கேள்வி எழுப்பி கிடுக்கிப்பிடி போட்டது உயர் நீதிமன்றம்!

சென்னையைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை 9-ம் வகுப்பு மாணவன் முஹம்மது இஸ்மாயில் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரத்தையும் தமிழகம் எதிர்கொண்டது. இஸ்மாயிலின் ரிப்போர்ட் கார்டில், 'சரியாகப் படிக்கவில்லை’ என்று உமா மூன்று முறை ரிப்போர்ட் எழுத, ஆத்திரம் அடைந்த இஸ்மாயில் 20 ரூபாய்க்குக் கத்தி வாங்கி, உமா மகேஸ்வரியை வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்தான். உமா மகேஸ்வரியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய அவரது மகள் சங்கீதா, ''அம்மா, எங்களைவிட இந்தப் பள்ளியின் மாணவர்களைத்தான் அதிகம் நேசித்தார். நீங்களும் உங்கள் ஆசிரியர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று உணர்ச்சிவசப்படாமல் பொறுப்புடன் பேசியபோது, கூடியிருந்தவர்களின் கண்கள் கசிந்தன.

ஞ்சி-நித்தி வீடியோ, ஆர்த்திராவ் அதிரடிகள் எனத் தாறுமாறான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கி அதிரடி செய்தார் அருணகிரிநாதர். நித்தியானந்தா ஆதீனத்தில் உள்ள பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டுத் தன் ஆட்களை உலவவிட்டார். 'நித்தியானந்தா ஆதீனத்தின் வாரிசாகும் தகுதி இல்லாதவர்’ என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்ல, ஆதீனம் தன் கைவிட்டுப் போய்விடக்கூடிய சூழலில் சுதாரித்த அருணகிரி, நித்தியை மடத்தைவிட்டு வெளியேற்றிவர், இப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத்துக்குத் தம்பிரான் பட்டம் சூட்டியிருக்கிறார்.

டைசி நிமிடம் வரை பரபரப்பாக நடந்து முடிந்த 'டெசோ’ மாநாட்டால் யாருக்கு லாபம் என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. ''மாநாட்டில், தனித் தமிழீழம் கோரிக்கைக்காக இலங்கையில் வாக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம்'' என்றார் கருணாநிதி. ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பிறகு, ''தமிழீழத் தீர்மானம் எல்லாம் கிடையாது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடுதான்'' என்றார். கடைசி நாளில் தமிழக அரசு மாநாட்டுக்கு அனுமதி மறுக்க, தி.மு.க-வின் நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தினார்கள். அத்தனை பில்ட்-அப் கிளப்பிய மாநாட்டின் மேடையில் முக்கிய தமிழறிஞர்கள் யாரையும் காணவில்லை. இந்த சர்ச்சைகள், டெசோ மாநாட்டுத் தீர்மான நகலை ஐ.நா. சென்று ஸ்டாலின் வழங்கியது வரை தொடர்ந்தது.

தி.மு.க-வின் பெருந்தலைகள் அத்தனை பேரையும் நில அபகரிப்பு வழக்குகளில், அரசு உள்ளே தூக்கிப்போட, தமிழகம் முழுக்கச் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பை எதிர்பார்க்காத தமிழக அரசு, கைது செய்த அனைவரையும் சில மணி நேரத்திலேயே விடுவித்தது. தி.மு.க-வின் தளகர்த்தர்களில் முக்கியமானவரான வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் குன்றி இறந்துபோனதற்கு, அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் கைது நடவடிக்கைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டும் அளவுக்கு வீரியமாக அரங்கேறின கைது சம்பவங்கள்.

மிழ்நாட்டின் இன்னொரு 'வாக்கிங் கொலை’க்கு இரையானார் ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியில் செல்வாக்கு மிகுந்தவருமான ராமஜெயத்தை  மர்மக் கும்பல் ஒன்று கடத்தி சயனைடு கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலையில் பிசினஸ், முன்பகை எனப் பல வகைகளில் விசாரித்தபோதிலும் இன்னமும் போலீஸ் குற்றவாளியை நெருங்கவில்லை. 'உண்மையிலேயே கண்டுபிடிக்க முடியவில்லையா? கண்டுபிடிக்க விரும்பவில்லையா?’ என்பதே இப்போது மிஞ்சியுள்ள சந்தேகம்.

மிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் 'சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றினார் ஜெயலலிதா. முன்னர் கருணாநிதி மாற்றியதற்குச் சொன்ன காரணம், ''மறைமலை அடிகளார் தை முதல் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என்று அறிவித்ததன் அடிப்படையில் நான் மாற்றம் செய்தேன்'' என்பது. ஆனால் சிம்பிளாக, ''தமிழர்களின் பாரம்பரியப் பழக்கம்'' என்று மட்டும் காரணம் சொல்லி, மீண்டும் மாற்றினார் ஜெ. ஜனவரி 1-ம் தேதியையே  புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிட்ட தமிழர்களை, இந்தச் சர்ச்சைகள் அதிகம் பாதிக்கவில்லை.

சென்னை சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. தொடர்ந்து, வெவ்வேறு விபத்துகளில் இறந்த மாணவிகள் ஜெயலட்சுமி, சுஜிதா, தீபிகா ஆகியோரின் மரணங்கள் மக்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கின. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து கேள்விகளை எழுப்பி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, புதிய சட்டங்களை உருவாக்கி, அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பள்ளிப் பேருந்துகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு வகுக்க, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, வேலைநிறுத்தம் என்று செயல்பட்டது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் புத்தகங்களில், அம்பேத்கர் தொடர்பான கார்ட்டூன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான கிண்டல், நாடார் சமூகத்தைப் பற்றிய தவறான வரலாறு, 'அசைவ உணவு சாப்பிடுபவர்கள் குற்றச் செயல்புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என்ற விஷமக் கருத்து என பல பாடப் பகுதிகள் சர்ச்சை கிளப்பி நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தன!

ந்த ஆண்டு தமிழகத்தை இருள் இன்னும் கடுமையாகச் சூழ்ந்தது. சென்னை நீங்கலாக தமிழகம் முழுக்க சராசரியாக 16 மணி நேரம் மின்வெட்டில் தவித்தது. 60 ஆண்டு கால வளர்ச்சியைக் கண்ணெதிரே பறிகொடுத்தது தமிழகச் சிறுதொழில் துறை. இவற்றுக்குக் காரணம், பெரு நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் கட்டுப்பாடற்ற மின் விநியோகம்தான் என்று எல்லோரும் குற்றம்சாட்ட, தமிழக அரசோ,  மேலும் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏழு பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.

சிரியர்களுக்கான தகுதியை நிரூபிக்கும் தேர்வு ஜூலையில் நடந்தபோது, 6.7 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுதேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர், அதாவது, சுமார் 3 சதவிகிதத்தினரே தேர்ச்சி அடைந்து பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிரவைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் பழனி என்கிற பழனிச்சாமி துப்பாக்கியால் சுடப்பட்டும் தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்டும் கொல்லப்பட்ட வழக்கில், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, தா.பாண்டியன் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது!

கோடு போட்டு, கொடி நட்டு, எல்லை பிரிக்காத கடலில் மீன் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பிடிப்பான் மீனவன். வனங்களில் வேட்டையாடும் காட்டுப் பழங்குடி போல, மீனவன் கடல் பழங்குடி. ஆனால், 'எல்லை தாண்டியதாக’ச் சொல்லி, குறைந்தது மாதம் இரு முறையேனும் மீனவத் தமிழன், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறான். படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்து வீசுவது, பிடித்த மீன்களைத் திருடிச் செல்வது என்று ராணுவச் சீருடையில் ரௌடித்தனம் செய்கிறது இலங்கைக் கடற்படை. பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ 'நமக்கென்ன?’ என்று ஒதுங்கி நிற்கிறது!

மரசம் அற்ற சமகால மக்கள் போராட்டத்தின் முன்மாதிரியை இந்தியாவுக்கு உணர்த்தியது கூடங்குளம். அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இந்த ஆண்டு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. 144 தடை உத்தரவை அணு உலையைச் சுற்றி பல கி.மீ. தூரத்துக்கு நீட்டித்தது போலீஸ். அணு உலை முற்றுகை என அறிவித்து, இடிந்தகரை மக்கள் கடற்கரை வழியே பேரணியாக வர... போலீஸ் வெறிப் பாய்ச்சலுடன் மக்களை அடித்து நொறுக்கியது. மணப்பாட்டில் மீனவர் அந்தோணி ஜான் காவல் துறைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். தாழப் பறந்த விமானத்தின் கொடூர சத்தம் சகாயம் பிரான்சிஸின் உயிரைப் பறித்தது.  போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் முதல், தேசத் துரோக வழக்கு வரை பாய்ந்தன. எதையும் கண்டுகொள்ளாமல், ''இன்னும் ஒரு வருடத்துக்குள் கூடங்குளம் செயல்படத் துவங்கும்'' என்றது அணு உலை நிர்வாகம். கனன்றுகொண்டு இருக்கிறார்கள் இடிந்தகரை மக்கள்.

ர்நாடக அரசியல்வாதிகள் காவிரி நீரை தமிழகத்துக்குத் தரவிடாமல் முடக்கி 'அரசியல்’ செய்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிட்டன. குறுவையும் இல்லை, சம்பாவும் இல்லை. கூரத்தங்குடி ராஜாங்கம் வாடிய பயிர் கண்டு வாடி, பூச்சி மருந்து குடித்து உயிரைவிட்டார். உச்ச நீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, ஒரே ஒரு நாள் மட்டும் 10,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டு, மீண்டும் ஷட்டரை சாத்திக்கொண்டார் கர்நாடக முதல்வர் ஷட்டர். பாசன நீர் போய் இப்போது குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கி நிற்கிறது டெல்டா!

துரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் அனுப்பிய கடிதம்தான், தமிழகத்தின் பிரமாண்டக் கொள்ளை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தானியங்கி பறக்கும் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் பி.ஆர்.பி. குவாரி உண்மையிலேயே 'ஊரை அடித்து உலையில் போட்டு’ குளிர் காய்ந்த கதை வெளிவந்தது. பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட, தலைமறைவான துரை தயாநிதி பிறகு, ஜாமீன் பெற்று சரணடந்தார்.

மோசடி வரலாற்றில் இந்த ஆண்டு தமிழக மக்களைக் 'கொத்தியது’ ஈமு கோழி! 'ஈமுவின் ஒரு முட்டையே ஆயிரம் ரூபாய்!’ என்றெல்லாம் சொல்லி, ஆசை வார்த்தை காட்டியவர்கள் அப்பாவிகளிடம் சுருட்டியது சுமார் 500 கோடிக்கும் மேல். இந்த மோசடித் தொழிலில் முன்னணி வகித்தது சுசி ஈமு கோழிப் பண்ணை. அந்தக் கோழிப் பண்ணை அதிபர் குருசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இதனிடையே பண்ணையாளர்கள் போலீஸுக்குப் பயந்து ஓட, பராமரிக்க ஆள் இல்லாமல் கோழிகள் செத்து விழுந்ததும் அவற்றுக்குத் தீனி அளிக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியதும் தனித் துயரங்கள்!

சிவகாசி மீண்டும் ஒரு பெருந்துயரைச் சந்தித்தது. ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்து 39 உயிர்களைப் பறித்தது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய விபத்தான இது, ஏகப்பட்ட விதிமீறல்களையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. வழக்கம்போல அரசாங்க சால்ஜாப்புகள், சில நாட்களுக்குப் பரபர ரெய்டுகள், வெளிவந்த அதிகாரிகளின் ஊழல் பின்னணிகள் எனப் படபடத்தன காட்சிகள். இந்த அதிர்வேட்டுகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகாசியில் மட்டும் 1,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகின.

தாம்பரம் இந்திய விமானப் படை முகாமில் பயிற்சி பெற வந்தார்கள் சிங்களப் படையினர்.  அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரதமருக்குக் கண்டனக் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. திருப்பி அனுப்பப்பட்டார்கள் அவர்கள். இதே பாணியில் சில மாதங்களுக்குப் பிறகு, தமிழகம் வந்த இலங்கை கால்பந்து வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்!

20 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் போராட்டத்துக்கு நீதி கிடைத்தது. போலீஸாரைத் தாக்கியதாகவும், வனத் துறை அதிகாரிகளைத் தாக்கிக் கொல்ல முயன்றதாகவும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 98 பெண்கள் உட்பட 105 பேர் மீது பதியப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, 'வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று 105 பேர் மீதான குற்றச்சாட்டையும் ரத்துசெய்து உத்தரவிட்டார். வாச்சாத்தி மக்களுக்கு அது சுதந்திர சுவாசம்.

மிழக அரசு மருத்துவமனைகள் ஏழை 'எலி’யவர்களுக்கான மருத்துவமனையாகப் பல்லிளித்தன. சென்னை கஸ்தூரிபாய்  அரசு மகப்பேறு மருத்துவமனையில், மலர் என்ற பெண்மணிக்குப் பிறந்த பெண் குழந்தை இறக்க, மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தைப் பெருச்சாளி கடித்துக் குதறியதைக் கண்டு, உறவினர்கள் அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் தமிழகமெங்கும் பரவியது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட எலி வேட்டையில் 16 நாய்கள், நான்கைந்து பூனைகளும் சிக்க... தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகள் பரபரத்தன!

ரு சினிமா டிரெய்லர் மூலமே உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களைக் கொதிப்படையவைத்தது அமெரிக்கா. அங்கு தயாரான 'தி இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்று உலக முஸ்லிம்கள் கனல் கக்கியது, சென்னையிலும் பலமாகத் தகித்தது. சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முஸ்லிம்கள் ஊர்வலமாகச் சென்றபோது நடந்த போராட்டத்தில், கல்வீச்சு நடந்தது. போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 1,000 பேர் வரை கைது செய்யப்பட்டார்கள். தூதரகத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பல வாரங்களுக்குத் தொடர்ந்த போக்குவரத்து மாற்றம், பல மாதங்களுக்குத் தொடரும் போலீஸ் பாதுகாப்பு என பரபரத்துக்கிடக்கிறது சென்னை அண்ணா சாலை.

'நடுக் கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா?’ பாடலைக் கேப்டனுக்கு டெடிகேட் பண்ணவைத்தது ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். தே.மு.தி.க.எம்.எல்.ஏ-க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, தங்கள் 'தொகுதிப் பிரச்னைகள்’ தொடர்பாக மனு கொடுக்க, திண்டாடித் தவித்துப்போனார் கேப்டன். அந்தப் பதற்றப் பரபரப்பு சமயம், இதுதொடர்பாக விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபரை நாக்கைக் கடித்து, முஷ்டி முறுக்கி, விரல் சொடுக்கி விஜயகாந்த் திட்டியது அனல் கனல் ஹைலைட் ஆனது.

கொள்ளை நோயாக உருவெடுத்தது டெங்கு. திருமணம் முடித்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சலுக்குத் தன் கணவனைப் பறிகொடுத்த துயரம் தாங்க முடியாமல், தன்னைத் தீயிட்டுக்கொண்ட மஞ்சுளாவின் வாழ்க்கை டெங்கு தாக்குதலுக்கு ஒரு சோறு பதம். நிலைமையின் தீவிரம் உறைக்க, டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஒதுக்கியது, கிராமங்களில் விழிப்பு உணர்வு முகாம் நடத்தியது என கடைசி நேரத்தில் சுதாரித்தது தமிழக அரசு!

தேவர் குரு பூஜை சமயம் பரமக்குடி பதற்றப் பிரதேசம் ஆவதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. அஞ்சலி செலுத்த வந்தவர்களிடையே எழுந்த வம்புதும்புப் பேச்சு பதற்றப் பொறி பற்றவைக்க, கல்வீச்சுத் தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு என ரணகளமானது ஏரியா. வன்முறைச் சம்பவங்களால் உயிர்ப் பலிகள் ஏற்பட, பல வாரங்களாகக் கொதிகலனாகக் கொதித்துக்கொண்டே இருந்தது தென் தமிழகம். அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பேருந்து களை இயக்கும் அளவுக்குக் கலவரமானது நிலவரம்.

ந்த ஆண்டும் வெள்ளத்துரை மீது படிந்தது என்கவுன்டர் ரத்தக் கறை. திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கத்தியால் சாரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாகச் சிலர் கைதுசெய்யப்பட, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரன்டெண்டாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டது, சில அறிகுறிகளை உணர்த்தியது. எதிர்பார்த்தது போலவே அரங்கேறியது என்கவுன்டர் வதம். எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலையில் சம்பந்தப்பட்ட பாரதி, பிரபு ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தப்பிச் சென்று, 'எதேச்சையான’ வாகனச் சோதனையில் பிடிபட்டு, போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச... வேறு வழியின்றி அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாகச் சொல்லியது போலீஸ்.

சென்னை பெருங்குடியில் காலை நேர அவசரத்தில் பேருந்துப் படிக்கட்டில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார் நால்வரும் லாரி மோதிப் பலியாகினர். தமிழகத்தில் ஓடும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் கதவுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட, படியில் தொங்கிச் சென்ற மாணவர்களைக் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு. பேருந்து வசதிகளை அதிகப்படுத்தாமல், 'படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்ற கடும் உத்தரவைப் பிறப்பித்தது அரசு.

திருப்பூரில் 'பாசி போரெக்ஸ்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திய கதிரவன், 48 ஆயிரம் பேரின் சுமார் 1,600 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஐ.ஜி. பிரமோத்குமார் சொல்லியபடி  பாசி நிதி நிறுவன நிர்வாகிகளைக் கடத்தி வைத்துகொண்டு 3 கோடி ரூபாய் பேரம் பேசியது தெரியவர... தமிழக போலீஸ் தலை குனிந்தது. பிரமோத்குமார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா வளைவை இடிக்கும் பணி பெரும் அரசியலில் சிக்கியது. வளைவின் உறுதி காரணமாக அதை இடிக்க முடியாமல் இயந்திரங்கள் சுணங்க, வழக்கம்போல், தி.மு.க - அ.தி.மு.க. லாவணி தொடங்க, 'வளைவை இடிப்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை!’ என்று தெரிவித்த ஜெ, அதைச் சீரமைக்கவும் உத்தரவிட்டார்!

'' 'விஸ்வரூபம்’ படத்தைத் தியேட்டரில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னர் டி.டி.ஹெச்-ல் நேரடியாக ஒளிபரப்பப்போகிறேன்'' என்று கமல் அறிவிக்க, அரண்டு மிரண்டு கமலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் தியேட்டர் அதிபர்களும் கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்களும். ''பொருளின் விற்பனையை நிர்ணயிக்கும் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே உண்டு'' என்று கமல் மல்லுக்கட்ட, ''திருட்டு டி.வி.டி-யை ஒழித்து, பெரும்பகுதி வருமானம் அளிக்கும் முயற்சி'' என்று தயாரிப்பாளர்கள் தரப்பும் ஆதரவு தெரிவிக்க, ''கமல் 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் காண்பித்தால், நாங்கள் அதை தெருத் தெருவாக அகன்ற திரையில் காண்பிப்போம்'' என்று முஷ்டி முறுக்குகிறார்கள் கேபிள் டி.வி. சங்கத்தினர். அந்த நாளுக்காக நகம் கடித்துக் காத்திருக்கிறது தமிழ்நாடு.

சும்மாவே அதிரும் ரஜினி பிறந்த நாள், கடந்த 12.12.12 அன்று இந்திய சென்சேஷன் ஆனது. சேனல்களில் ரஜினி சிறப்புத் திரைப்படங்கள், பட்டிதொட்டிஎங்கும் ஃப்ளெக்ஸ்கள், எஃப்.எம்-களில் ரஜினி பாடல்கள் என்று மொத்தத் தமிழ்நாடுமே கொண்டாடித் தீர்த்துவிட்டது. ஆச்சர்யமாக ரசிகர்கள், மீடியா மக்களைச் சந்தித்தார் ரஜினி. அதைவிட ஆச்சர்யமாக மாலை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, ''சிகரெட் பிடிக்காதீங்க. சந்தோஷமான குடும்பம் சொர்க்கத்துக்குச் சமம். ஏழையா ஆனாலும் கோழையா இருக்க மாட்டேன்!'' என்றெல்லாம் அறிவித்துவிட்டு இறுதியில், ''அரசியலுக்கு வர்றேன்னு பொய் சொல்லப் பிடிக்கலை. நான் எப்பவும் அரசியல்ல இருந்ததே இல்லை. எனக்கு அரசியல் வேணாம்!'' என்று பல வருட 'ரேப்பர் ஸ்டோரி’களுக்கு 'கதம் கதம்’ சொன்னார்.

மிழகத்தைத் தாக்கிய 'நீலம்’ புயலால் சென்னையில், தரை தட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்கள் 6 பேர் கடலில் இருந்து தப்ப முயன்றபோது பரிதாபமாக இறந்துவிட்டனர். விசாரணையில், அந்தக் கப்பலின் பதிவே காலாவதி ஆகிவிட்டது, ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக்கூடக் கப்பல் நிறுவனம் பூர்த்திசெய்யவில்லை என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியவந்தன. இது ஒருபுறம் இருக்க, மெரினா பீச்சையே இடமாற்றம் செய்துவிட்டதுபோல குபீர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது கப்பல் தரை தட்டிய பட்டினப்பாக்கம் ஏரியா. 12 நாட்கள் போராட்டத்துக்குப் பின் கப்பல் கரையில் இருந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட, பிரதீபா காவேரியை ரொம்பவே மிஸ் செய்தார்கள் சென்னைவாசிகள்.

ம்.ஜி.ஆர். சமாதியில் றெக்கை கட்டிப் பறந்தது இரட்டை இலைக் குதிரை. அரசாங்கச் செலவில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சமாதியின் நுழைவாயிலில் ஒரு குதிரையை நிறுத்தியது தமிழக அரசு. அதன் முதுகில் பட்டொளி வீசிப் பறந்தது அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை. தி.மு.க. நீதிமன்றத்தை நாட, 'அது இரட்டை இலை அல்ல. பறக்கும் குதிரையின் சிறகுகள்!’ என்று அரசுத் தரப்பு வக்கீல்கள் பகீர் விளக்கம் கொடுக்க, 'உங்களுக்கு பயாலஜி தெரியுமா?’ என  உஷ்ணமானார் நீதிபதி.

'சாதி எல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று கேட்பவர்கள் முகத்தில் அறையாக விழுந்தது தர்மபுரிக் கலவரம். தர்மபுரி அருகே உள்ள நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லங்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவைக் காதலித்தார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் குடும்ப எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டனர். ஊர்க்காரர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் திவ்யாவின் தந்தை நாகராஜன். இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாத இரவொன்றில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் பகுதிகளிலும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தையே அதிரவைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 142 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம். 'தர்மபுரி சம்பவத்துக்கு பா.ம.க-தான் காரணம்!’ என்று தொல்.திருமாவளவன் நேரடியாகவே குற்றம்சாட்ட, பா.ம.க - சிறுத்தைகள் உறவில் விரிசல் விழுந்தது.

ந்த ஆண்டு வைகோவின் சேம்ஸைடு கோல்... நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க-வின் பிரசாரப் பீரங்கி இப்போது போயஸ் தோட்ட ஊதுகுழல். பல மாதங்களாகவே சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையிலான பனிப் போரால், ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவுவார் சம்பத் என்று ஹேஷ்யங்கள் வட்டமடித்தன. ஆனால், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அடித்த சம்பத், ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வின் துணை கொ.ப.செ-வாகி இன்னோவா கார் வென்றார். இந்தப் பக்கம் ஊமைக் காய வலியை வெளிக்காட்டிக்கொள்ளாத வைகோ, 'நெக்ஸ்ட் இலக்கு... பூரண மதுவிலக்கு!’ என்று நடைப் பயணம் கிளம்பிவிட்டார்.

ஜெயலலிதா சகலர் மீதும் வழக்குத் தொடுக்க, அவரது அமைச்சர்கள் மீது வருட இறுதியில் குவிந்தன வழக்குகள். பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் உறவினர் தனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை அழித்துவிட்டதாக காத்தசாமிப்பாளையம் பால்சாமி புகார் அளிக்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரைச் சேர்ந்த கோகுல் என்பவரைக் கடத்தி, அவரது நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. முத்தாய்ப்பாக, நிதி அமைச்சரும் அமைச்சரவையின் நம்பர் டூ-வுமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, தலித் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வலைவீசித் தேடப்பட்டார்!

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிறைவேற்றிவிட, தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி,  கமுக்கமாக வந்தேவிட்டது வால்மார்ட். வணிகர் சங்கங்களின் தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா என அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்களது எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்தனர். இந்து மக்கள் கட்சியியோ, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தடை செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும், அசராத வால்மார்ட் பிரதிநிதிகள், '32 சதவிகிதம் விலை குறைவாகத் தருகிறோம், டோர் டெலிவரி, இலவச உறுப்பினர் வசதி’ என ஆசைகாட்டி சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களைத் தனது வலையில் வீழ்த்திவிட்டனர்.

21.12.12-ல் உலகம் அழிந்துவிடும் என்ற 'மாயன் காலண்டர்’ பரபரப்புக்குத் தமிழகமும் தப்பவில்லை. பரபர கவுன்ட்-டவுன் வைத்து டிசம்பர் 21-ஐ எதிர்பார்த்தான் தமிழன். 'ஃபேஸ்புக், ட்விட்டர்களில், 'அழியும்னு நான் சொல்லலை... அழிஞ்சா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்’, 'அங்கிள்... அன்னைக்கு எனக்கு சோஷியல் சயின்ஸ் எக்ஸாம். உலகம் அழிஞ்சா நல்லதுதானே’ என்று காமெடி களை கட்டியது. டிசம்பர் 20-ம் தேதி இரவு டாஸ்மாக் வழக்கத்தைவிடக் களை கட்ட, 'உயிர் தமிழுக்கு... உடல் மாயண்ணனுக்கு’ என்று சலம்பித் தள்ளினான் தமிழன். ஆனால், டிசம்பர் 21-வழக்கம்போல விடிய, 'அதான் மிந்தியே சொன்னோம்ல... அதெல்லாம் உட்டாலக்கடி!’ என்று வழிந்தான் தங்கத் தமிழன்!


நன்றி - விக்டன் 

0 comments: