Wednesday, December 26, 2012

பரதேசி - வசனகர்த்தா நாஞ்சில் நாடன் பேட்டி

http://www.shalsaa.com/movie_gallery/Paradesi-Audio-Launch-Stills-12_S_981.jpgபரதேசி’ xclusive

‘‘பாலா, ஒரு வலி கடத்தி!’’

நாஞ்சில் நாடன் பேட்டி
எஸ். சந்திரமௌலி

கடந்த ஐம்பதாண்டுகளில் நான் ஏராளமான தமிழ்ப் படங்களைப் பார்த்து வந்திருக்கிறேன். இன்று தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்கமுடியாத ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் சினிமா இன்னமும் ஒரு பொழுதுபோக்காகவே இருப்பது வருத்தம் தருகிறது அபூர்வமாக சில படங்கள் மட்டுமே பொழுதுபோக்கு தளத்தைத் தாண்டி, இந்தச் சமூகத்தை, இந்த மண்ணின் சரித்திரத்தைப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றன. இயக்குனர் பாலாவின்பரதேசிஅதுபோன்ற ஒரு அரிய முயற்சி. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்," என்கிறார் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்தான் படத்தின் வசனகர்த்தா. குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்த அவர்பரதேசிபடம் பற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்...

சமகாலப் பிரச்னை இல்லையென்றாலும் கூட, பாலாபரதேசிபடத்தில் கையாண்டிருப்பது ஒரு சரித்திரப் பதிவுதான். 1940களில் நிகழ்ந்த மிக முக்கியமான விஷயத்தைத் தான் அவர் கையாண்டு இருக்கிறார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்த பரிதாபத்துக்குரிய வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார் பாலா. நம் நாட்டில் தேயிலை, காஃபித் தோட்டங்கள் என்பது இயற்கை இல்லை. ஆங்கிலேயர்கள் இங்கே வந்த பிறகு, மலைவாசஸ் தலங்களை ஏற்படுத்திய காலகட்டத்தில், காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்கள் முளைத்தன. அங்கே வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படிப்பறிவு இல்லாத, கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்த அடிமட்டத்து மக்களுக்கு முன் பணம் கொடுத்து, கூலிகளாக, அடிமைகளாக, பெண்களைத் தோட்டங்களில் தேயிலைப் பறிக்கவும், ஆண்களை கரடு முரடான வேலைகளைச் செய்யவும் கூட்டிக் கொண்டு போனார்கள்.அங்கே கல்வி, மருத்துவ வசதி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது. அதிகார வர்க்கத்தினரின் கைகளில் அவர்கள் அனுபவித்த கொடுமைகளின் பதிவுகளே பரதேசி."

கதையில் என்ன விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன?

இந்திய தேயிலைத் தோட்டங்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள். காந்திஜியும் நிறைய பேசியிருக்கிறார். அதன் பிறகுதான், அவர்கள் விஷயத்தில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு பக்கம் என்றால், இயற்கை கூட அவர்களை மனிதநேயத்தோடு பார்க்கவில்லை.தேயிலைத் தோட்டங்களில் மழைக் காலத்தில் மலேரியா வந்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பலியாவார்கள். ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அவர்களின் அடக்குமுறைக்கும், மலேரியாவுக்கும் பலியான இந்தியர்கள், உலகப் போர்களில் மாண்ட இந்தியர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகம். இதுதான் கதையின் ஆன்மா. உபரியாக, படத்தில் வரும் காதல், பழிவாங்கல், ஊர்த் திருவிழா எல்லாம் சினிமா அம்சங்கள்."

பாலாவோடு பணியாற்றிய அனுபவம்?

இதுபோன்ற ஒரு விஷயத்தை, ஆழமாக ஆராய்ந்து, ஒரு திரைப்படமாக பாலா எடுக்க முன்வந்திருக்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.
தம்முடைய கல்லூரி நாட்களில் படித்த என்னுடைய ஆரம்பக் காலப் படைப்புக்களில் ஒன்றானஇடலாக்குடி ராசாசிறுகதை தம்மை மிகவும் பாதித்ததாக பாலா எழுதி இருக்கிறார். என்தலைகீழ் விகிதங்கள்என்ற நாவலைத்தான் தங்கர்பச்சான்சொல்ல மறந்த கதையாக எடுத்தார். இயக்குனர் ஞான ராஜசேகரன்பாரதி’, ‘பெரியார்படங்கள் எடுத்தபோது, ஒரு சிறு அளவில் என் பங்களிப்பும் உண்டு. என்னுடையஎட்டுத் திக்கும் மத யானைநாவலைப் படமெடுக்க சிலர் அணுகியபோது நான் மறுத்துவிட்டேன். ஆனாலும், அதைப் பல்வேறு வழிகளிலும் பலரும் எடுத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்.பாலா, ‘நான் கடவுள்படம் எடுக்கத் தொடங்கியபோது, என்னை வசனம் எழுதும்படிக் கேட்டார். ஆனால், அந்தக் கதையில் ஜெயமோகனின் நாவலுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் வசனம் எழுதுவதுதான் பொருத்தம் என்று சொன்னேன். ‘பரதேசிபடத்துக்கு வசனம் எழுத வேண்டும் என்று கேட்டபோது, படத்தின் இயக்குனர், இயக்குனர் பாலா என்பதாலும், அவர் படத்தில் கையாளப்போகும் விஷயம் மிக முக்கியமான ஒன்று என்பதாலும் சம்மதித்தேன்."


முதன்முதலில் சினிமாவுக்கு வசனம் எழுதியது?

என்னுடைய இடலாக்குடி ராசாவின் தாக்கத்தில் தம்முடைய பட ஹீரோக்களை உருவாக்கியதாகச் சொன்ன பாலா, பரதேசி படத்தின் முக்கிய பாத்திரமே அந்த ராசா தான் என்று முதலில் என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆனாலும், 60 வயதுக்குப் பிறகு நமக்கு சினிமாவெல்லாம் தேவைதானா? நம்மால் சினிமாவுக்கு வசனம் எழுத முடியுமா? என்றெல்லாம் தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால், ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள்உங்களால் முடியும்; தள்ளிப் போடாமல், உடனே உட்கார்ந்து ஒன்றிரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதுங்கள்; அதன்பிறகு, தானாகவே வேலை சூடு பிடிக்கும்என்று ஊக்கமளித்தார்கள். சென்னைக்கு வந்து கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். கையோடு உட்கார்ந்து ஏழெட்டு நாட்களில் பாதி படத்துக்கான வசனத்தை எழுதி முடித்துவிட்டேன்."

ஷூட்டிங் போனீங்களா?

போனேன். என்னை ஹீரோயினின் அப்பா என்று நினைத்து விட்டார்கள். நான் தான் படக் காட்சிகளுக்கு வசனம் எழுதினேன் என்றாலும், காகிதத்தில் பதிவான எழுத்து, பாலா போன்றவர்களின் கையில் நடிகர்களின் உடல் மொழியால், திரையில் பதிவாகும்போது, அது இன்னமும் உயிர்ப்பு பெறுவதைக் கண்டு பிரமித்துப் போனேன். கதாபாத்திரங்கள் கதையில் அனுபவிக்கும் உடல்ரீதியான, மனரீதியான வலிகளை, திரை மூலமாக அப்படியே படம் பார்க்கிறவர்களுக்கு பாலா கடத்தி விடுகிறார். பாலா ஒரு மிக நுணுக்கமான வலி கடத்தி!" - பேசும் நாஞ்சில் நாடனின் கண்களில் விரிகின்றன அந்தக் காட்சிகள்...


நன்றி - கல்கி , புலவர் தருமி  


http://www.thehindu.com/multimedia/dynamic/00477/CB15_TY26SIRPI_GAM2_477857g.jpg

0 comments: