Wednesday, December 26, 2012

தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா?

பளிச் பரிகாரம்

அச்சம் போக்கும் அனுமார்!

ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
விசாலாட்சி, சென்னை
என் மகளுக்கு மனோபலம் குறைவாக உள்ளது. எதிர்மறை எண்ணங்களும், அச்ச உணர்வும் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

சந்திரனை சனியும், செவ்வாயும் பார்த்தால் மனவலிமை குறைவாக இருக்கும். தாழ்வு மனப்பான்மைக்கு இது வழிவகுக்கும். இத்தகைய கிரக நிலவரம் உள்ளவர்கள் ராமநாம ஜபம் செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமைகளில் வழிபட வேண்டும். அங்கு நேத்திர தரிசனம் என்னும் சேவை வியாழக்கிழமை தோறும் நடைபெறுகிறது. நவக்கிரக தலங்களுள் சந்திரனுக்கு மிக முக்கியமான தலம் திருப்பதி திருமலை. வேங்கடவனை வழிபட்டு, ஸ்ரீராமஜெயம் தினமும் இயன்ற அளவு எழுதி ஆஞ்சனேயரையும் வழிபட்டால் மனம் தொடர்பான நோய்கள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வெங்கடகிருஷ்ணன், மதுரை
ஜாதகத்தில் ஒரே கட்டத்தில் ஐந்து கிரகம் சேர்ந்திருந்தால் அது யோகமா? தோஷமா?
லக்னத்திலோ, ஐந்திலோ, பதினொன்றிலோ ஐந்து கிரகம் சேர்ந்தால் அது யோகம். எந்த லக்னத்தில் பிறந்தவர் என்பதைப் பொறுத்தும் எந்தெந்த கிரகங்கள் ஒன்றாக இணைந்துள்ளன என்பதைப் பொறுத்தும் யோகமா தோஷமா என்பது வேறுபடும். பொதுவாக சாதனையாளர்கள் ஜாதகங்களில் இத்தகைய கூட்டு கிரக சேர்க்கை காணப்படுகிறது.
மங்களம் மணி, திருச்சி
திருமண முகூர்த்தம் குறிக்கும்போது மணமகன் அல்லது மணமகளின் பிறந்த மாதம், பிறந்த ஆங்கில தேதி, ஜென்ம நட்சத்திரம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டுமா?
ஆனி மாதத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கு அதே தமிழ் மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது. மற்ற மாதங்களில் பிறந்தவர்களுக்கு அவர்கள் பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாம். ஒருவர் பிறந்த ஆங்கில மாதம், ஆங்கில தேதி ஆகியவற்றுக்கும் திருமணம் நடைபெறும் ஆங்கில தேதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் நல்ல சுபமுகூர்த்த நாளாக இருந்தால் திருமணம் செய்யலாம். ஜென்மம், அனு ஜென்மம், ஜென்மானு ஜென்மம் என்னும் 1,10, 19வது நட்சத்திரங்களில் திருமண முகூர்த்தம் வைக்கலாம்.
புவனேஸ்வரி, மும்பை
குழந்தைக்கு குலதெய்வம் கோயிலில் மட்டும்தான் முடி இறக்க வேண்டும் என்று ஏதேனும் சாஸ்திரம் உள்ளதா?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. தந்தை வழி குலதெய்வ கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும். தாய்வழி குலதெய்வ கோயிலில் இரண்டாவது மொட்டை அடிப்பது வழக்கம். அதன் பிறகு உங்கள் இஷ்டதெய்வ கோயில்களிலும், குலதெய்வ கோயில்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் முடி காணிக்கை செலுத்தலாம்.

ரமேஷ், சென்னை
இருதார யோகம் யாருக்கு அமையும்?
இரு தாரம் அமைவது யோகம் அல்ல; தோஷம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி
மார்கழி மாதத்தில் பத்திரப்பதிவு செய்து வீடு வாங்கலாமா?
மார்கழியில் முன்பணம் கொடுக்கலாம். பத்திரப்பதிவு செய்யலாம். ஆனால் கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது. வீடு மாற்றம் செய்யக்கூடாது. வாடகை வீட்டுக்கு பால் காய்ச்சுவதும் மார்கழியில் செய்யக்கூடாது.
செல்வி, திருவண்ணாமலை
தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணை விட பெண் ஒருநாள் மூத்தவளாக இருந்தால் கூட திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் லக்னத்திலிருந்து ஏழாமிடத்தில் சனி, கேது, சுக்ரன், சந்திரன் சேர்க்கை உள்ளவர்களுக்கு வயதில் மூத்த பெண் அல்லது விதவைப் பெண் மனைவியாக வாய்க்கும் நிலை உருவாகும்.
வனஜா கல்யாணராமன், மும்பை
எனது இரண்டு மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஒரே நாளில் இருவருக்கும் திருமணம் நடத்தலாமா?
ஒரே மேடையில் இரண்டு மகளுக்கும் திருமணம் நடத்தலாம். கண் திருஷ்டி பட்டு விடுமோ என்னும் பயத்தில் சிலர் அவ்வாறு செய்வதில்லை. இரண்டு மகளுக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்வது சாஸ்திரப்படி தவறில்லை.


நன்றி - கல்கி , புலவர் தருமி 

0 comments: