Wednesday, December 26, 2012

காதலிக்க நேரமில்லை’ -விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல். உருவான விதம் - எம்.எஸ்.விஸ்வநாதன் பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 4

இந்தாடா... ‘மேபல்லவி!

எம்.எஸ்.விஸ்வநாதன்

டைரக்டர் ஸ்ரீதர் அசாத்தியமான திறமை படைத்த ஒரு டைரக்டர். தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். அவர் படங்களில் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அந்தப் பாட்டுக்களை அவர் படமாக்கும் விதமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். கண்ணதாசனும், ஸ்ரீதர் படமென்றால், ஆர்வமாக பாடல் எழுதுவார்.
அவருடைய படங்களின் பாடல் கம்போசிங் தி. நகரில் இருந்த சித்ராலயா ஆபீசில் தான் நடக்கும். அங்கே நான் ஹார்மோனியத்தோடு சென்று விடுவேன். அங்கே கண்ணதாசனும் வந்துவிடுவார். ஸ்ரீதரின், ‘காதலிக்க நேரமில்லைபடத்தின் கம்போசிங் நடந்து கொண்டிருந்தது. எனக்கு இசைதான் உலகம், நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. அரசியல் வம்புக்கெல்லாம் போகமாட்டேன். சித்ராலயா அலுவலகத்தில் இருந்தபோது, யாரோ ஒருவர் நியூஸ் பேப்பரில் ஐசனோவர் என்பவரைப் பற்றி ஒரு நியூசைப் படிக்க, நான் வெகுயதார்த்தமாக, ‘ஐசனோவர் யாரு?’ என்று கண்ணதாசனிடம் கேட்க, அவர், ‘டே விசு! அவர் அமெரிக்க ஜானாதிபதிடா!’ என்றார்.
அப்போது ஸ்ரீதர் அங்கே வந்து, எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, பாட்டுக்கான சிச்சுவேஷனை விளக்கினார். ‘ஒரு எஸ்டேட்ல வேலை பார்க்கிறவர் ரவிச்சந்திரன். எஸ்டேட் முதலாளி பாலையா, அவரை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடறாரு. தன்னை முதலாளி டிஸ்மிஸ் பண்ணினதை எதிர்த்து, ரவிச்சந்திரன் போராட்டம் நடத்தறாரு. இந்த சிச்சுவேஷனுக்குத்தான் பாட்டு வேணும்சொல்லிவிட்டு, தன் அறைக்குப் போய் விட்டார் ஸ்ரீதர்.

கண்ணதாசன், யோசித்துக் கொண்டிருக்க, ஜாலி மூடில் இருந்த நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால், வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஐசனோவர் என்ற புதுமையான பெயரைக் கேள்விப்பட்டிருந்ததால், ஹார்மோனியத்தில் விரல்களை ஓட்டியபடி, ‘ஐசனோவர்... ஆவலோவா...’ என்று குஷியாகப் பாடினேன். அது உள்ளே இருந்த ஸ்ரீதர் காதில் விழுந்துவிட்டது. அறைக்குள்ளே இருந்தபடியே, என்னிடம், ‘இப்போ வாசிச்சீங்களே அதுதான் டியூன்என்று சொன்னார். ‘இதெல்லாம் ஒரு டியூனா?’ என்று எனக்கு ஒரே ஆச்சர்யம்!
பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந்த கண்ணதாசனிடமிருந்து பாட்டு வரி வராத சூழ்நிலையில், ‘அண்ணே! சீக்கிரம் பாட்டை எழுதிக்குடுங்க. எனக்கு வேற ஒரு கம்போசிங்குக்குக் கிளம்பணும்என்று சொன்னேன். அதற்கு கண்ணதாசன், ‘இதோ பாரு விசு! நீபாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டா, எனக்கு யாரு வேலை குடுப்பாங்க! இங்கயே இரு! எனக்கு வேலை குடுடா விஸ்வநாதா!’ என்று கேட்டார்.
எங்களின் பேச்சு ஸ்ரீதரின் காதில் விழ, அவர் மறுபடியும் தலையை நீட்டி, ‘கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே. அதுதான் பாட்டுக்குப் பல்லவி!’ என்றதும், நானும், கண்ணதாசனும், ‘இன்னிக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு? நான் பாடினதுதான் டியூன்; நீங்க எழுதினதுதான் பல்லவி என்கிறார்!’ என்று பேசிக்கொண்டோம்.

தொடர்ந்து வேலையில் இறங்கினோம். ‘ஐசனோவர் .... ஆவலோவா..’ என்பதற்கு ஏற்பவேலைகொடு விஸ்வநாதா!’ என்று ஆரம்பித்தார் கண்ணதாசன். உடனே நான், ‘அண்ணே! பாலையா, வயசானவர். எஸ்டேட் ஓனர். அவரிடம் வேலை பார்க்கிறவர் ரவிச்சந்திரன். வயசிலும் சின்னவர். அவர், முதலாளியைப் பார்த்து, விஸ்வநாதா வேலைகொடுன்னு கேட்கறது மரியாதைக்குறைவா இருக்கேஎன்று என் மனசில் பட்டதைச் சொன்னேன். அதைக் கேட்ட கண்ணதாசன், ‘சரிடா! அப்படீன்னா வேலை கொடு விஸ்வநாதான்னுகேட்கறதுக்குப் பதிலாய், ‘விஸ்வநாதன் வேலை வேணும்னு கேட்கறா மாதிரி மாத்திடுவோம்னு சொன்னார். இப்படித்தான் பிறந்ததுகாதலிக்க நேரமில்லைபடத்தில் இடம்பெற்றவிஸ்வநாதன் வேலை வேணும்பாடல்.
சிவாஜி நடித்து, டைரக்டர் திருலோக்சந்தர் இயக்கிய படம்அவன்தான் மனிதன்’. அந்தப் படத்துக்காக பாடல்கள் எழுத வேண்டி இருந்தது. ஆனால், கவிஞரது தேதி கிடைக்கவே இல்லை. அந்த வருடம் மே மாதத்தில் சிங்கப்பூரில் ஒரு மலர்க் கண்காட்சி நடக்கவிருந்தது. அந்தப் பாடல் காட்சியை அந்த சிங்கப்பூர் மலர்க் கண்காட்சியில் படம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்கள் டைரக்டரும், தயாரிப்பாளரும். பலமுறை கவிஞரிடம் தங்கள் அவசரத்தை நினைவூட்டியும், பலனில்லை. ஒருநாள் கவிஞரைப் பார்த்தபோது, ‘அவன்தான் மனிதன் படத்தில் பாட்டு ஷூட்டிங் மே மாசம்...இந்த மே மாசம் நடந்தே ஆகணும் கவிஞரே!’ என்று நினைவுபடுத்தினேன்.
அடுத்த முறை என்னைச் சந்தித்தபோதுஎன்னடா சும்மா மே...மே...ன்னு கத்தினியே அன்னிக்கு! இந்தா பல்லவி!’ என்று காகிதத்தை நீட்டினார். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமேஇப்படி வரிகள்மேவில் முடிந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

அப்போது நான் ரொம்ப பிஸி. காலையில் ஏழு மணிக்கு முதல் ஷிஃப்ட் கம்போசிங் ஆரம்பித்தால் மூன்றாவது ஷிஃப்ட் முடிய இரவு ஒருமணி ஆகிவிடும். அன்று இரவு வீட்டுக்கு வந்தபோது மணி மூன்று. உடம்பு ரொம்ப அசதியாக இருந்ததால், உடனே படுத்துத் தூங்கிவிட்டேன். மறுநாள் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் என்ற கம்பெனி எடுத்துக் கொண்டிருந்தபெரிய இடத்துப் பெண்படத்துக்காக மறுநாள் காலையில் அவர்கள் ஆபீசில் பாடல் கம்போசிங் நடப்பதாக இருந்தது. காலையில் ஆர்.ஆர். பிக்சர்ஸ் ஆபீசுக்கு நேரத்துக்கு வந்துவிட்டார் கண்ணதாசன். என்னை அங்கே காணோம் என்றதும், என் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். வீட்டில், நான் தூங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். கொஞ்ச இடைவெளியில் அடுத்தடுத்து கவிஞரிடமிருந்து போன் வந்தபோதும், இதே பதிலைச் சொல்லி இருக்கிறார்கள் என் வீட்டில். நான் எழுந்த போது, என்னிடம் கவிஞர் போன் செய்த விவரம் சொன்னார்கள். நான் உடனே குளித்து, பூஜை செய்து ரெடியாகி, ஆர்.ஆர். பிக்சர்ஸ் ஆபீசுக்கு விரைந்தேன். அங்கே கவிஞர் இல்லை. ‘விசு வந்ததும், இந்தப் பல்லவிக்கு டியூன் போடச் சொல்லுங்கள்என்று சொல்லி, கவிஞர் எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த பாடலை என்னிடம் கொடுத்தார்கள். பாடலின் முதலடியைப் படித்ததும் பலமாகச் சிரித்துவிட்டேன்.
அந்த வரி: ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா?’
கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்!"
தாத்தா தடுத்துவிட்டார்!

நாலு வயது பிள்ளை விஸ்வநாதனைக் குளத்தில் தள்ளிவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தார் தாய் நாராயணிக் குட்டி அம்மாள். குளக்கரைக்கு வந்ததும் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டுவிட்ட விஸ்வநாதன்நீ முதல்ல குதிம்மாஎன்றதும் லேசாக அதிர்ச்சி அடைந்த தாய், ‘என்னடா சொல்லற?’ என்று கேட்டதும், ‘என்னைத் தள்ளிடு, அப்புறம் நீ மட்டும் குதிக்காம போயிட்டா?’ என்று கேட்டான்.
தாயும், மகனும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கே வந்து சேர்ந்தார் தாத்தா கிருஷ்ணன் நாயர். அதிகாலையில் மகளையும், பேரனையும் வீட்டில் காணோம் என்றதும், இப்படி ஏதாவது விபரீதமான முடிவுக்கு அவள் வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு. அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். குளக்கரையில் மகளையும், பேரனையும் பார்த்ததும் ஒருவாறு விஷயத்தை யூகித்துவிட்டார்.
நாணிக் குட்டி! என்ன காரியம் செய்யத் துணிந்தா? செத்துப் போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? என்ன பைத்தியக் காரத்தனம் இது! இந்தச் சின்னப் பிள்ளையைக் குளத்தில் தள்ளிக் கொல்ல எப்படி உனக்கு மனசு வந்தது? பெத்த அப்பன் நான் உயிரோடு இருக்கிறவரைக்கும் உனக்கேன் கவலை? உங்களை வெச்சு நான் காப்பாத்த மாட்டேனா? வா... வீட்டுக்குப் போகலாம்! இந்த அபத்த எண்ணத்தையெல்லாம் இத்தோடு தலைமுழுகு!’ என்று சொல்லி, அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். இதை நினைவு கூரும்போது, எம்.எஸ்.வி.யின் குரலில் அம்மா மீது துளியும் கோபமில்லை. அன்று அவர் இருந்த ஆழ்ந்த சோகமும், மனவேதனையும், எதிர்காலம் குறித்த நிச்சயமில்லாமையும் அவரை அப்படி ஒரு முடிவு எடுக்கத் தூண்டின. ஆனால் ஆண்டவன் சித்தம் வேறு மாதிரி இருந்தது. அவர் தக்க நேரத்தில் என் தாத்தாவை அனுப்பி வைத்து எங்கள் இருவரையுமே காப்பாற்றிவிட்டார்."
- ராணி மைந்தன்.
(மீட்டர் நீளும்)
தொகுப்பு: எஸ். சந்திரமௌலி


நன்றி - கல்கி , புலவர் தருமி 

0 comments: