Wednesday, September 10, 2014

ஆப்பிள் வாட்ச்: அறிய வேண்டிய 10 அம்சங்கள்

ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9ஆம் தேதி ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் ஆகிய புதிய வகையை சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது மேலும் ஒரு நூதனத்தைப் புகுத்தியுள்ளது. அதுதான் ஆப்பிள் வாட்ச்.

1. ஆப்பிள் வாட்சின் தொடக்க விலை 349 அமெரிக்க டாலர்கள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பரவலாக இது கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஐஃபோன் 5, 5c,5s,மற்றும் 6 பிளஸ் ஆகியவற்றுடன் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. ஆப்பிள் வாட்ச் சஃபையர் கண்ணாடி முகப்புடன் தட்டையான திரை அமைப்பு கொண்டது. மேலும் சிறப்பாக ‘டிஜிட்டல் கிரவுன்’ என்ற திருகுக் கட்டுப்பாடு கொண்ட ஒன்றின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை ஸ்க்ரோல் செய்து அணுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிரவுன் என்பது ஸ்க்ரோல் சக்கரம் போல் செயல்படும் ஒன்று. மெனுக்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை எளிதில் ஸ்க்ரோல் செய்ய முடிவதோடு புகைப்படம், மேப்கள் ஆகியவற்றை ஜூம் செய்ய முடியும். மேலும் இது ஒரு பொத்தான் போலவும் செயல்படும். சாதாரண வாட்சில் கீ கொடுக்கும் சிறு பொத்தான் போல் இருக்கும் இதனை அமுக்கினால் முகப்புத் திரைக்கு மீண்டும் வந்து விடலாம்.
3. ஆப்பிள் வாட்சின் மற்றொரு சிறப்பம்சம் 'கைரோஸ்கோப்' (gyroscope), மற்றும் இன்றைய நவீன மொபைல்களின் சிறப்பம்சமான ஆக்சிலரோமீட்டரின் உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. ஆட்டோ ஸ்க்ரீன் ரொடேஷனுக்கு ஆக்சிலரோமீட்டர்கள் பெரும்பாலும் பயன்படுகின்றன. இதன் மற்றொரு நவீனப் பயன்பாடு மொபைல் மியூசிக் பிளேயரைக் கட்டுப்படுத்துவதாகும்.
மேலும் மொபைல் கேம் பயன்பாடுகளில் எதற்கெடுத்தாலும் கீ-யைஅழுத்தாமல் மொபைல் கருவியை ஆட்டி அசைத்து பயன்படுத்த உதவுகிறது. மேலும் இது, பயனாளர்களின் ஐஃபோனில் உள்ள ஜிபிஎஸ், மற்றும் வை-ஃபை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தூரத்தையும் கணக்கிட உதவுகிறது.
4. ஆப்பிள் வாட்ச் ஒரு வாக்கி-டாக்கியாக, டிராயிங் பேடாக, நாடித் துடிப்பு அறிய உதவும் கருவியாகவும் கலோரி கணக்கீடு செய்யும் கருவியாகவும், ஆக்டிவிட்டி டிராக்கராக பல பயன்பாடுகள் கொண்டது. ஆப்ஸ்களை செயல்படுத்துவதோடு, டிக்டேஷன் எடுத்துக் கொள்கிறது, மேலும் ஐஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.
5. Siri என்ற தானியங்கி குரல் கட்டுப்பாட்டு அமைப்பை ஆப்பிள் வாட்ச் ஆதரிக்கிறது, பேச்சு வடிவ கேள்விகள் மற்றும் கட்டளைகள் வழியாக உரையாட இது வழிவகுக்கிறது.
6. ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் 2 மாதிரிகளில் வருகிறது: ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்.
7. இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும்.
8. புதுப்பிக்கப்பட்ட iOS 8 பிளாட்பார்மில் ஆப்பிள் வாட்ச் இயங்கும். இதன் மூலம் அனைத்து ஆப்பிள் கருவிகளை ஒத்திசைவுடன் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும். உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், ஐஃபோனில் ஒரு உரையாடலைத் தொடங்குகிறோம் என்றால் அதனை ஐபேடிலோ, ஆப்பிள் வாட்சிலோ முடிக்கலாம்.
9. ஊதா, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய ரிஸ்ட்பாண்ட்களுடன் ஆப்பிள் வாட்ச் வரவுள்ளது. மேலும் கையால் செய்யப்பட்ட கோல்ட் பக்கிளும் கூடுதல் கவர்ச்சி.


10. டிம் குக் இதனை "இதுவரை உருவாக்கப்படாத தனிநபர் பயன்பாட்டுக் கருவி" என்று இதனை டிம் குக் விதந்தோதுகிறார்.

0 comments: