Thursday, April 18, 2013

ரம்பா , ரம்பையின் காதல் - ஜட்ஜ் சந்துரு - என்ன சம்பந்தம்? விகடன் பேட்டி

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!
வாசகர் கேள்விகள்
படம்: கே.ராஜசேகரன்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் எந்தக் கமிஷனும், இதுவரைக்கும் பிரயோஜனமாக இந்தியாவில் எதுவுமே செய்தது இல்லையே... என்ன காரணம்?'' 

 
''கமிஷன் அறிக்கை என்பது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை (FIR) போன்றது என்று ஒரு சந்தர்ப்பத்தில் சஞ்சய்காந்தி குறிப்பிட்டார். கமிஷன் விசாரணை என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஒரு பதவி நீட்டிப்பு. லிபரான் கமிஷன் 18 வருடங்கள் நடைபெற்றது நினைவில் இருக் கும். எல்லாப் பிரச்னைகளையும் அரசு கிடப்பில் போடுவது போன்றது, கமிஷன் விசாரணைக்கு அனுப்புவது. சுருக்கமாகச் சொல் வது என்றால், மக்கள் வரிப்பணம் பாழ்!''


கு.மணிமாலா, மயிலாடுதுறை. 


''நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அதிகாரவர்க்கத்திடம் இருந்து அழுத்தங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதா? அப்படிஇருந் தால், அதை எப்படிச் சமாளித்தீர்கள்?'' 


 ''காலஞ்சென்ற நீதிபதி எம்.சீனிவாசன் ஒரு அரசியல்வாதியின் வியாபார சொத்து வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்த போது, நீதிபதியின் சொந்த வீட்டுக்கு மின் சாரத் தடை ஏற்பட்டது. குடிநீர்வழங்குதல் நிறுத்தப்பட்டது. இரண்டு பலமான அரசியல்வாதிகளின் வழக்கில் அவர் தீர்ப்பு அளிக்கும்போது அவருடைய தீர்ப்பில் இவ்வாறுகுறிப்பிட்டார். 'மலர் செண்டுகளையும் மலைப் பிஞ்சுகளையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் எமக்குள்ளது!’


அரசியல்வாதிகளுக்குத் தீர்ப்பு சாதகமானால் அதைக் கொண்டாடுவதும், பாதகமானால் வார்த்தைகளில் நஞ்சை உமிழ்வதும் சகஜம். தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் அடிப்பொடிகள், அல்லக்கைகளிடம் இருந்து மிரட்டல், உருட்டல், கடுமையான வார்த்தைகளில் வசைபாடுதல் தபால் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வருவது இயல்பே. அதை எல்லாம் பார்த்து அசந்துவிட்டேன் என்றால், நான் பதவியை ஏற்றுக்கொள்ளும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்னாவது? அம்மாவா னாலும்... அய்யாவானாலும் நமது செயல்பாடு என்றைக்கும் மாறாது என்று இருந்துவிட்டால் எந்தக் கொம்பனும் நம்மை அசைக்க முடியாது!''


ம.ஞானம், செய்யாறு. 


''தமிழ் சினிமா பார்ப்பது உண்டா? அப்படி எனில் மனம் கவர்ந்த இயக்குநர், நடிகை, நடிகையர் யார்?'' 


''தமிழனாக இருந்து தமிழ்ப் படம் பார்க்காவிட்டால் எப்படி? எனது தீர்ப்புகளிலேயே நான் சினிமா பாடல் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறேன். சாதி அடிப்படையில் சுடுகாடு/இடுகாடு இருக்கக் கூடாது என்று எழுதிய தீர்ப்பில், 'ரம்பையின் காதல்’ படத்தில் வரும் 'சமரசம் காணா உலகிலே...’ என்ற பாட்டு முழுவதையும் குறிப்பிட்டு, 'சினிமா பாடல்களும் இன்று மக்கள் இலக்கியமாக மாறிவிட்டது. அதைக் குறிப்பிடுவதில் தவறில்லை’ என்று கூறினேன். புளூடூத்/செல்போன் வைத்து மாணவிகள் காப்பி அடித்த வழக்கில், 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படக் காட்சியை ஒப்பிட்டு, 'சினிமாவுக்கான கரு சமூகத்தில் இருக்கிறதா? அல்லது சமூகமே சினிமாவைக் காப்பியடிக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பினேன்.


எனது மனதை மிகவும் உலுக்கிய படம் 'தவமாய் தவமிருந்து’. அதில் அப்பாவாக வரும் ராஜ்கிரணைப் போல எனது தந்தையும் இருந்ததே காரணம். இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட எனக்கு, தாயுமானவராக இருந்தவர் என் தந்தை. மறு கல்யாணம் செய்துகொள்ளாமல் என்னுடைய மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும்... ஒற்றை ஆளாக வேலை செய்து சுமந்த சுமைதாங்கி. நான் பள்ளியிறுதி வகுப்பை முடித்தவுடன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். வறுமையில் அவருக்குச் சரியான மருத்துவச்  சிகிச்சைகூட அளிக்க முடியாத வேதனை இன்றும் என்னை வாட்டுகிறது.


 அந்தப் படம் பார்த்தவுடன் தியேட்டரிலேயே அழுகை வந்தது. எனக்குப் பிடித்த படத்தைச் சொல்லிவிட்டேன். அடுத்தது, எனக்குப் பிடித்த இயக்குநர் தங்கர் பச்சான். எனக்குப் பிடித்த நடிகர் ரா.பார்த்திபன். எனக்குப் பிடித்த நடிகைகள் சுகன்யா, ரம்பா.


ஏன்..? அவர்கள் எல்லாம் நான் வழக்கறிஞராக இருந்தபோது, என்னுடைய கட்சிக்காரர்களாக இருந்தவர்கள்!''


வி.மருதையன், பழநி. 

''வழக்கறிஞர்கள் வேத வாக்காகக் கொள்ள வேண்டியது எதனை?'' 


''இந்திய அரசியல் நிர்ணய சட்டசபை 26.11.1949 அன்று அரசியல் சட்டத்தின் இறுதி நகலை ஆமோதித்துத் தீர்மானம் இயற்றியது. அந்த நாள் இந்திய அரசியல் சட்டம் தோன்றிய பொன்னாள். அந்தச் சட்டம் (Constitution of India) பின்னர் 26.1.1950 முதல் அமலுக்கு வந்தது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய நாளைச் சட்ட தினமாக (Law day)  கொண்டாட அகில இந்திய பார் கவுன்சில் முடிவெடுத்தது.


 அந்தத் தினத்தில் இந்தியா எங்கும் உள்ள வழக் கறிஞர்கள் கூட்டமாக சட்ட தின சாசனத்தைப் படித்து உறுதிமொழி எடுத்துக்கொள்வது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. அந்த உறுதிமொழியில் வழக்கறிஞர்களுக்கு உண்டான பல கடமைகள் கூறப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் ஆண்டுச் சடங்காக மட்டும் கருதாமல், ஆண்டு முழுமைக்குமே கடைபிடிக்க வேண்டும். அந்த உறுதிமொழியின் ஒரு பகுதி:


‘We acknowledge the Social responsibilities and the Professional obligation of law in public interest and public service!’


'எங்களுடைய சமூகப் பொறுப்புகளையும் சட்டத்தின்பால் உள்ள எங்களுடைய தொழில்ரீதி யான கடமைகளையும், பொதுநலன்களையும், பொதுச் சேவைகளையும் நினைவுகூர்கிறோம்’- இதுவே ஒவ்வொரு வழக்கறிஞரின் வேதவாக் காக இருக்க வேண்டும்!''


கே.சிந்து பாஸ்கரன், திருநெல்வேலி. 


''ஒரு சாதாரண சிவில் வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன? நம்முடைய சொத்தை நம்முடையதுதான் என்று நிரூபிக்கப் பல ஆண்டுகள் பிடிப்பது ஆரோக்கியமான ஒன்றா? இதனால்தானே குண்டர்கள், ரவுடிகள் துணிச்சலாக சொத்தை ஆக்ரமிக்கிறார்கள்? தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகத்தானே கொள்ளவேண்டும். இதற்குத் தீர்வே இல்லையா?'' 


 ''ஒரு நாள் மெரினா கடற்கரை பக்கம் நடந்துகொண்டிருந்தேன். அப்போது சாலைப் பாதுகாப்பு வாரத்தையட்டி அங்கு ஒரு விழா நடைபெற்றது. மேடையில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார், 'இந்த காமராசர் சாலையில் காலை நேரத்தில் சிவப்பு விளக்கு கள் சுழல, வெள்ளை நிற கார்களில் விரைவா கப் பயணிக்கிறார்கள் நீதித் துறைப் பிரபலங் கள். நீதிதேவன்கள் பயணிக்கும் அந்த வாகனங் கள் அந்த விரைவுப் பயணத்தில் மஞ்சள் கோட்டைத் தாண்டியும், சிக்னல் விளக்குகளை மீறியும் செல்வதைப் பார்க்கிறேன்.


 அப்படி நீதியரசர்கள் விரைந்து பயணித்தாலும், நமது வழக்குகளை விசாரித்து முடிக்க ஆண்டுகள் பல ஆகின்றனவே... அந்த விந்தைதான் எனக்குப் புரிபடவில்லை!’


அந்தப் பேச்சாளருக்கு ஒரு பாராட்டுக் குறிப்பு அனுப்பியதைத் தவிர, என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதியைத் தடுக்கப்பட்ட நீதியாகவே கருதவேண்டும். வழக்கு விசாரிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை விவரித்தால் இங்கு இடம் போதாது. ஆனாலும், ஒரு குறிப்பிட்ட பிரச்னையை இங்கு சொல்லியாக வேண்டும். இந்தியாவில் மட்டும்தான் தீர்ப்பு வருவதை தாமதப்படுத்து வதில் சிலர் வெற்றி காண்கிறார்கள்.


 விரைந்து நீதிகிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தாலும் அதற்குத் தடை வாங்கி தாம தத்தில் வெற்றியடைகிறார்கள். மற்ற நாடு களில் வேண்டும் என்றே இழுத்தடிக்கும் கட்சிக்காரர் மிகப் பெரிய அபராதத் தொகையை இறுதியில் கட்ட நேரிடும் என்பதால் அங்கு தாமதமும் இல்லை... வல்லடி வழக்காடுவதும் இல்லை!''


எஸ்.ஆதிகுமணன், தஞ்சாவூர். 


''ஓய்வுக் காலத்தை எப்படிக் கழிக்கப்போகிறீர்கள்?'' 


''பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் ஓய்வு ஏதும் இல்லை. மனிதர்களுக்கும் வகிக் கும் பதவிகளில் இருந்து வேண்டுமென்றால் ஓய்வு தருவார்களேயன்றி, அவர் ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து ஓய்வு எடுக்க முடியாது. என் கடன் பணிசெய்து கிடப்பதே. மக்கள் சேவையே மகேசன் சேவை!''தெ.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி. 


''உங்களுடைய பெரும்பாலான தீர்ப்புகள் சட்டப்படி வழங்கப்பட்டனவா? அல்லது கருணையின், மனிதாபிமானத்தின் அடிப்படை யில் வழங்கப்பட்டவையா?'' 


''என்னுடைய தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படியே வழங்கப்பட்டன. சட்டத்தின் ஆட்சியில் (Rule of Law) சட்டத்தின்படியே  நீதி அளிக்க முடியும். சட்டத்தின்படி நீதி (Justice according to law) என்பதே சரி. சட்டத்தின்படி தீர்ப்பளித்தாலே நீதி கிட்டியதாகத்தான் அர்த்தம். சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்ற வேண்டியது சட்டமன்றத்தின் கடமைதானே ஒழிய, நீதிமன்றத்தின் வரையறைக் குள் அவ்விதமான அதிகாரம் இல்லை. ஆனால், அதே சமயம் சட்ட வரையறைக்குள் கருணைக்கும் மனிதாபிமானத்துக்கும் இடம் உண்டு!'


'
பி.ராஜன், சென்னை-88. 


''இந்திய நீதித்துறை வரலாற்றில் தங்கள் மனம் கவர்ந்த நீதியரசர்கள் யார்? ஏன்?'' 


''நீதியரசர் தா.சத்தியதேவ்...


கடமை வீரர், கர்மயோகி, காலந்தவறாதவர். கடிகாரத்தைப் பார்த்து அவர் வேலை செய்ய வில்லை. அவர் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் கடிகாரம் தனது முள்ளைத் திருத்திக் கொள்ளும். ஓய்வுபெற்ற அன்றே தனது காரைத் திருப்பி அனுப்பிவிட்டு, வீட்டையும் காலி செய்து ஒப்படைத்துவிட்டு, இரவு ஒரு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் பெங்களூரு சென்ற மாமனிதர். என் தந்தை இறந்தபோது நான் சிறுவன். அழ முயற்சித்தேன். ஆனால், நீதிபதி சத்தியதேவ் அவர்கள் இறந்த தினத்தில்தான் உண்மையாக அழுதேன்.


நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்...


வாழும் சரித்திரம். நடமாடும் சட்ட அகராதி. 98 வயது முதுமையிலும் எங்களுக்குத் தவறாது ஆலோசனை கூறும் மனிதநேயப் பண்பாளர். நீதிமன்றத்தில் பணியாற்றுதலும் தேசத்தின் சேவையே என்று என்னை நீதிபதி பணியேற்க வற்புறுத்தியவர். தொடர்ந்து அவருடைய அன்பும் ஆதரவும் என்னுடைய பணி சிறக்க உதவிவருகிறது!''


 அடுத்த வாரம்...


'நீதிபதிகளைக் கிண்டல் செய்து வெளிவரும் ஜோக்குகளைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?'' 

''66 ஏ சட்டப் பிரிவு பற்றி விளக்கம் தருக?'' 


''கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள தற்காலத்தில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் முதல் முழுவதும் விடுமுறை தேவைதானா

''
- இன்னும் பேசுவோம்.


நன்றி - விகடன்

2 comments:

தமிழ்மகன் said...

குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? ----- http://mytamilpeople.blogspot.in/2013/04/google-safe-search.html

தமிழ்மகன் said...

குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? ----- http://mytamilpeople.blogspot.in/2013/04/google-safe-search.html