Sunday, November 08, 2015

ஹனிமூன் நாட்கள்-கீர்த்தனாஅருள்நிதி

ம.கா.செந்தில்குமார்
''எங்க நிச்சயதார்த்தம் முடிஞ்ச சமயம். குடும்பத்தோடு 'டிமான்டி காலனி’ படம் பார்க்கப்
போயிருந்தேன். அதுல, ஒரு நாடி ஜோதிடர் இவங்களைப் பார்த்து, 'தம்பி, உனக்கு இந்த ரேகைப்படி கல்யாணம் ஆகுறது வேஸ்ட். உன் பொண்டாட்டி பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிப்போயிடுவா...’னு பேசப்பேச எங்க எல்லோர் முகத்திலும் டூத்பேஸ்ட் விளம்பர மாடல் மாதிரி மாஸ் சிரிப்பு. நான் இன்னும் அதிகமாச் சிரிச்சேன். இப்பவும் அந்தப் படக் காட்சியை வெச்சு இவரை காமெடி பண்றது உண்டு'' - அருள்நிதியின் ரியாக்ஷன் பார்த்தபடி பேசுகிறார் கீர்த்தனா. அதைத் தன் தலையசைப்பில் ஆமோதிக்கிறார் அருள்நிதி. இந்த இளம் ஜோடிக்கு இது தலை தீபாவளி! 

''மேடம் செம கிரியேட்டிவ் ஆளு. அண்ணா யுனிவர்சிட்டியில ஆர்க்கிடெக்சர் முடிச்சுட்டு ஒரு கம்பெனியில் இன்டெர்ன்ஷிப் போறாங்க. அப்படியே அப்பாவோட ஆட்டோமொபைல் தொழிலையும் பார்த்துக்கிறாங்க. காலையில் பைக் ஷோ ரூம், மதியத்துக்கு மேல ஆர்க்கிடெக்சரிங்னு எப்பவும் பரபர பட்டாசு'' - மனைவியைப் பாராட்டிப் பூரிக்கிறார் அருள்நிதி.
இது கீர்த்தனா டர்ன்... ''கல்யாணத்துக்கு முன்னாடியே ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணின விஷயம்தானே. நானும் சரி, அவங்களும் சரி, அவங்கவங்க வேலையை நல்லா பண்ணணும்கிறதைப் பற்றி பாசிடிவ்வா நிறையப் பேசியிருக்கோம். அவங்க ஷூட்டிங்ல இருக்கும்போது நானோ, நான் ஆபீஸ்ல இருக்கும்போது அவங்களோ போன் பண்ணிக்கூட டிஸ்டர்ப் செஞ்சது இல்லை'' - புதுமண வாழ்க்கையின் பாசிட்டிவ் பக்கங்களைப் புரட்டுகிறார்.
புதுமணத் தம்பதி... செல்லப்பெயர் இல்லாமல் இருக்குமா? கேட்டோம். ''இதுவரை எனக்கு ஐம்பது செல்லப்பெயராவது சொல்லியிருப்பாங்க. எதுவும் செட் ஆகலை. ஆனா, கல்யாணத்துக்கு அடுத்த நாளே கீர்த்தனாவுக்கு பக்காவா செட் ஆகுற மாதிரி ஒரு செல்லப்பெயர் வெச்சுட்டேன். அந்தப் பெயர் 'குழந்தை’. அவங்களுக்கு மெச்சூரிட்டி, பக்குவம்னு எல்லாம் வேற லெவல்ல இருக்கும். ஆனா, மனசு மட்டும்  பச்சைக்குழந்தை. நமக்குக் கோபப்படவே தோணாது. கரெக்ட்தானே?'' என்கிற அருளிடம், ''ஆனா, அதையும் மீறி என்கிட்ட கோபப்படுறே ஒரே ஆள் நீங்கதான்'' - சிரிக்கிறார் கீர்த்தனா.
கிரீஸ் ஹனிமூன் நாட்கள் பற்றிப் பகிர்ந்தனர்...
''ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான அன்பையும்  அந்த ஹனிமூன் ட்ரிப் எங்களுக்கு உணர்த்திருச்சு.  பொதுவா நாம அம்மா, அப்பா, நண்பர்கள்னு மத்தவங்களைச் சார்ந்தே வாழ்ந்து பழகிட்டோம். நானும் கீர்த்தனாவும் அதுக்கு விதிவிலக்கு இல்லை. யாரோட உதவியும் இல்லாம நாங்க மேனேஜ் பண்ணின அந்த 20 நாட்கள் தந்த அனுபவம், எங்க மொத்த வாழ்க்கைக்குமான சாம்பிள்...'' - அருள்நிதி பேசப்பேச, ''சூப்பருப்பா... நீ இப்படில்லாம் பேசி நான் பார்த்ததே இல்லை...'' - மகிழ்ந்து நெகிழ்கிறார் கீர்த்தனா.
''அருள்நிதியோடது அரசியல் குடும்பம். இவங்க குடும்பத்துல யார் எல்லாம் உங்களுக்கு க்ளோஸ்?'' என கீர்த்தனாவிடம் கேட்டால்,  ''எல்லாரையுமே பிடிக்கும். அதையும் தாண்டி நான், இவங்க, துரை அண்ணன், அனுஷா எல்லாரும் ஒரே ஏஜ் குரூப்ங்கிறதால அடிக்கடி பேசிப்போம்.''  
''கீர்த்தனா நீதித் துறைக் குடும்பம். மாமனார் வீட்ல என்ன சொல்றாங்க?''
''பொதுவாவே நான் எப்பவும் கரெக்ட்டா இருக்கணும்னு நினைப்பேன். இப்போ நீதிபதி குடும்ப மருமகன் வேறு. இன்னும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அப்பாகூட, 'அதே அமைதி, அதே அன்னியோன்னியம்... நம்ம வீடு மாதிரியே இருக்கு’னு அடிக்கடி சொல்வாங்க'' என்கிறார் அருள்.
''அருள்நிதி படங்களுக்கு உங்க கமென்ட் என்ன?'' - கீர்த்தனாவிடம் கேட்டால், அருள்நிதி முந்திக்கொண்டு பதில் சொல்கிறார்...
''நான் இன்னும் காஸ்ட்யூம்ஸ்ல கவனம் செலுத்தணும்கிறதுதான் அவங்க கவலை. என் எல்லா படங்களும் பார்த்துட்டாங்க. அதுல எல்லாத்திலும் எனக்கு தரை டிக்கெட் கேரக்டர். பின்ன எப்படி கோட் சூட் போட முடியும்? இதுவரை ஃபாரின் போய் ஷூட் பண்ற மாதிரி ஃபுல் ரொமான்டிக் படம் அமையலை. அப்படி அமைஞ்சா, அவங்க ஆசையைப் பூர்த்தி பண்ணலாம். ஆனாலும், அவங்களுக்கு 'மௌனகுரு’ ரொம்பப் பிடிக்கும்.
எல்லா வீடுகள்போல நானும் எங்க அப்பாவும் சேர்ந்து அம்மாவை செமயா கலாய்ப்போம். இப்ப கீர்த்தனாவை அப்படிக் கிண்டலடிக்க ஆரம்பிச்சிருக்கேன். எங்க அம்மாவைக் கிண்டலடிக்கும்போது என் டீம்ல இருந்த எங்கப்பா, இப்ப மருமகள் டீம்ல சேர்ந்துட்டார். அப்படி நான் கிண்டலடிச்சா அவருக்குப் பயங்கர கோபம் வரும். 'எதுக்கு இப்ப அந்தப் புள்ளையை நீ கிண்டல் பண்ற?’ம்பார். 'நான் எதுவும் சொல்லலைப்பா... உங்க மனைவி மாதிரிதான் என் மனைவியும்’னு சிரிப்பேன். ஆனா ஒரே விஷயம்தான் சார், நானும் எங்க அப்பாவும் ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கோம். அதான் எங்களுக்கு ஏத்த மனைவிகள் அமைஞ்சிருக்காங்க'' - கீர்த்தனாவை அன்போடு அணைத்துச் சிரிக்கிறார் அருள்நிதி.
அது ஹேப்பி காலனி

-விகடன்

0 comments: