Sunday, November 08, 2015

மொகாலி டெஸ்ட்டில் இந்தியாவை ஜெயிக்க வைத்த 5 காரணங்கள்!

கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்தியாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி. உலகின் நம்பர் 1 அணியான தென்னாப்பிரிக்காவை இந்தியா ஜெயிக்க இந்த 5 காரணங்களே பிரதானம்...!
1. சுழலும் பிட்ச்  

 பந்துகள் மேலே எழும்பாமல், பிட்சில் பட்டவுடனே திரும்பும் அளவுக்கு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது மைதானம். இதனால் பெரும்பாலான  பேட்ஸ்மேன்கள் எந்த பந்துக்கு எந்த ஷாட் விளையாடுவது என்றே தெரியாமல் குழம்பினர். இந்தியா - இலங்கை போன்ற நாடுகளில் சுழலுக்கு சாதகமான இத்தகைய பிட்சில், இந்திய வீரர்கள் நன்றாக விளையாடி பழக்கப்பட்டு விட்டனர் என்பதால் இந்தியர்களுக்கு அனுபவம் இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க பந்துகள் எளிதில் திரும்பும் வகையிலான இந்த பிட்ச், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்தது.

2. விராட்  கேப்டன்ஸி

அக்ரஸிவ் மோடுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்ற தனது கருத்தை மீண்டும் இந்த போட்டியின் மூலம் உணர்த்தி இருக்கிறார் விராட் கோலி.  மூன்று தரமான ஸ்பின்னர்கள்,  பிட்ச்சை உடைக்கும் அளவுக்கு வீசக்கூடிய வருண் ஆரோன், உமேஷ் யாதவ் என பவுலிங் டிப்பார்ட்மெண்ட்டுக்கு  சரியான ஆட்களை அணியில் தேர்ந்தெடுத்தார் கோலி. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் யாரையுமே களத்தில்  செட்டில் ஆக விடவில்லை விராட் கோலி. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய டிவில்லியர்ஸ் தவிர, மற்ற அனைத்து வீரர்களும் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின், வேகப்பந்து என மாற்றிக்கொண்டே இருந்த விராட்டின் சமயோசிதத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

பார்ட்னர்ஷிப் ப்ரேக் செய்ய யாரை எப்போது அழைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் விராட் கோலி. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 39 ரன்களுக்கு கடைசி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கேற்ப பவுலர்களை பயன்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தியதிலும்,  விராட் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய டெஸ்ட் கேப்டனாக திகழ்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
3. மாஸ் காட்டிய சென்னை பாய்ஸ்

இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு பேட்டிங்கில் கலக்கிய முரளிவிஜய், பவுலிங்கில் கலக்கிய அஸ்வின் ஆகிய இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கும் முக்கிய பங்குள்ளது.இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 75 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 47 ரன்களும் குவித்து மொத்தமாக 122  ரன்களை சேர்த்திருக்கிறார் முரளி விஜய். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என தென்னாப்பிரிக்க வீரர்களை தனது சுழலால் திணற வைத்தார் அஸ்வின். 

4.  தென்னாப்பிரிக்காவின் சீட்டுக்கட்டு பேட்டிங் வரிசை

இந்தியா போன்ற நாடுகளில் விளையாடும்போது அனுபவ வீரரகள் அவசியம் தேவை, பேட்டிங்கில் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோரையே அதிகம் சார்ந்திருந்தது தென்னாப்பிரிக்கா. பொதுவாக தென்னாப்பிரிக்க அணி, ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மென்ஸ் தரும். ஆனால் சமீபகாலமாக இந்தியா, இலங்கை போன்று ஓரிரு வீரர்களை நம்பிய அணியாக மாறிவருகிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. எனினும் பீனிக்ஸ் போல தென்னாப்பிரிக்க அணி, தோல்வியில் இருந்து மீண்டு எழும் திறமை கொண்டது என்பதால், பெங்களூருவில் நடக்கும் அடுத்த டெஸ்ட்டுக்கு தென்னாப்பிரிக்கா முழுவேகத்துடன் திரும்பும்.

5. ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்ஸ்  

டிவில்லியர்ஸை ரன் அவுட் செய்யத்தான் முடியும்... அவரை போல்ட் ஆக்குவது கடினம் என்று பலர் கூறினாலும், அசால்ட்டாக இரண்டு  இன்னிங்ஸிலும் டிவில்லியர்ஸை போல்டாக்கிய மிஸ்ரா,  அணியில் ’உள்ளே-வெளியே’ வீரராக இருந்தார். அவரது துல்லியம் டிவில்லியர்ஸை காலி செய்தது. 'மனுஷன் நின்னு இருந்தா, ஒத்த ஆளா ஜெயிக்க வைச்சுருப்பார்' என்று கமெண்ட்ஸ் கிளப்பிய டி வில்லியர்ஸை காலி செய்ததும் இந்திய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்!

அதோடு, மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட ஜடேஜா (சர். ஜடேஜா) ரஞ்சியில் கலக்கியதால் ரீ-என்ட்ரி ஆனார். வந்த முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் ஆகியுள்ளார்.

- பு. விவேக் ஆனந்த் 

-விகடன்

0 comments: