Sunday, November 08, 2015

நீங்களும் ரஜினியும் சேர்ந்து நடிப்பது எப்போது? -விகடன்மேடையில் கமல் அளித்த சுவையான பதில்கள்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு விகடன்மேடையில் கமல் அளித்த சுவையான பதில்கள்.
''பரமக்குடியில் பிறந்தீர்கள் அவ்வளவுதான். ஆனால் வளர்ந்தது, வாழ்வது சென்னையில். ஆனால், நீங்கள் ஒருபோதும் சென்னையைப்பற்றிக் குறிப்பிடுவது இல்லை. 'நான் இன்னும் பரமக்குடிக்காரன்தான்’ என்று அழுத்திச் சொல்கிறீர்கள். ஒரு சென்னைக்காரனாக மிகுந்த கோபத்தோடு இந்தக் கேள்வி?''
 
''நான் வாழ்ந்து அனுபவித்த எல்லா மண்ணிலும் என்னை ஊன்ற விரும்பாது, நாடோடிக்கொண்டு இருக்கும் கலைஞன் நான். நான் பரமக்குடிக்காரன் என்பதோடு, சென்னை வாழ் தெலுங்கு மலையாளி எனவும் கொள்ளலாம். To put it succinctly... INDIAN..''

''ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுத அவனுடைய அந்தரங்கத்தை அறிந்துகொள்ள ஏன் பத்திரிகைகள் (உலகமெங்கும்) ஆவல்கொள்கின்றன? அதைவிட, அவற்றைப் படிக்க வாசகன் ஏன் பெரிதும் ஆர்வம்கொள்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகனாக உங்களை மிகவும் பாதித்த... உங்களைப்பற்றிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?''
''அது திரைச் சீலையாக இருந்தாலும், வெறுஞ்சீலையாக இருந்தாலும் விலக்கிப் பார்க்கும் ஆதார குணம் உள்ளவர் அதிகம் இருப்பதும் ஒரு காரணம். ஒரு திருடன் பிடிபடும்போது, பிடிபடாத திருடன் பரிகசிப்பதுபோன்ற குணாதிசயமும் காரணம். நீங்கள் கேட்ட கேள்வியும் அந்தரங்கம் ஆராயும் ஒரு கேள்விதான். நானா நேரடி பதில் சொல்வேன்? இஸ்கு... இஸ்கு!''
 
'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''

''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''
 
"'உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?''
'காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!''
 
''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''

''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''

'மருதநாயகம்’ என்கிற மாமனிதரைச் சந்திக்கவே முடியாதா?''
''சினிமாவில் முடியும்!''
''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? பல வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''
'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச் - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''
 
''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?

''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே. இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''
 
''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''

''நட்புதான்!''
 
''ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?''

''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''
 
11. ''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''

''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''

''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''
''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''
''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''
 
''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்கமானவர் யார்?''

''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''
 
''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?''

''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''
''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?''
'உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''
'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?''
''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''
''நீங்கள் ஏன் இன்னும் ரகசியக் கவிஞராகவே இருக்கிறீர்கள்? உங்கள் கவிதைத் தொகுப்பு எப்போது வரும்?''
''இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்!''
 
''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!''

'ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை
இறந்த பின், சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு!’ ''

''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?''
''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''
'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?''
''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''
 
''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?''

''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''
 
'திருமணத்துக்குப் பிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணைச் சந்திக்கிறோம் என்பது சரியா?''

'இந்த வம்புனாலதான், நான் இனி மணம் முடிப்பதாக இல்லை - போதுமா?''
 
'கலவி முடிந்த பின் கிடந்து பேசினாளாயின் காதலாய் மாறலாம் எச்சரிக்கை!’ - அனுபவம் பேசுகிறதா கமல்?''

''சும்மா கிடந்து அலையாதீங்க. அனுபவம் இல்லாமலா ரெண்டு பிள்ளைகளும்... காதலிகளும்?''
''காமம் இல்லா காதல் சாத்தியமா?''

''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''
 
''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?''

''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''
 
''உங்களைக் கவர்ந்த பெண் யார்?''

''என் தாயில் துவங்கிப் பலர்!''
 
''ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில், உங்களை மட்டும் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்புபற்றி..?''

''அவள் இறந்தாலும் இறவா நட்பு!''
 
''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.)

''இருக்கலாம்!''
''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''
 
''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?''

''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''
 
''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''

''நான் அப்படிச் சொல்லவில்லை. என் வாரிசுகளே என் கண்ணுக்குத் தெரியும் அவர்களையும் விஞ்சும் திறமையை உணர நேர்ந்தால் உடனே சொல்லிவிடுவேன்!''
 
''உண்மையைச் சொல்லுங்க கமல் சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?''

('தெரியலப்பா’னு சொல்லக் கூடாது!) ''எல்லோரையும் மாதிரி ரெண்டும்தான்!''
 
''நீங்கள் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களைச் சிறந்த நடிகராக நீங்கள் உணர்ந்த தருணம் எது?''

''இன்னும் உணரவில்லை. நான் வெறும் வதந்திகளை நம்புவது இல்லை!''
 
''தமிழ் சினிமா அடுத்த பரிணாமத்துக்குச் சென்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா? ஏனென்றால், இன்னும் ஐந்து பாட்டு, குத்துப் பாட்டு, ஹீரோ - ஹீரோயின் டூயட் டிரெண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் 90 நிமிடங்கள்தான். ஏன் இன்னும் நாம் அந்த அளவுக்கு முயற்சிக்கவில்லை. 'உலக நாயகன்’ படங்களிலும் குத்துப் பாட்டு, தேவையற்ற சண்டைக் காட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன?''

''இல்லை. விரிவான பதில் உங்கள் கேள்விக்குள் அடக்கம்!''

''தமிழ்ப் பட உலகத்தைப் பிடித்து ஆட்டுகிற நோய் என்ன... அதைப் போக்குவது எப்படி?''

''ரசனைக் குறைவுதான். அதைப் போக்குகிறேன் பேர்வழி என்று ரசிகர்களையே தொலைத்துவிடக் கூடாதே என்ற பயமும் உண்டு. பயம்கூட ஒரு வகை நோய்தான்!''
.
''சினிமாவால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''

''பெற்றது உம்மை. இழந்தது (கொஞ்சம்) என்னை.''

சர்ச்சை’க்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?''

''சர்ச்சைதான்!''
 
''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''
'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?''
''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''

-விகடன்

0 comments: