Monday, November 09, 2015

கோடநாட்டில் முடிவான 7 தீர்மானங்கள்: 'அம்மா’ அப்டேட்!

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா. 'அம்மா’ வருகையை ர.ர.க்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க, மறுபக்கம் இன்றைய மாண்புமிகுக்கள் பீதியிலும், எம்.எல்.ஏ.க்கள் புதிய போஸ்ட்டிங் எதிர்பார்ப்பிலும் காத்திருக்கின்றனர்.

கோடநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்றபிறகு அங்கிருந்து வந்த உத்தரவுப்படி, தலைமை நிலையத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அணித்தலைவர்கள், தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் முடிவுகளையும் இங்கிருந்து ஃபேக்ஸ், மெயில் வழியாக அனுப்பி வைக்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட சூழ்நிலையில், ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை எப்போதுமே அது குறித்த திட்டமிடலில் வேகம் காட்டுவார்கள். அந்த வகையில் கோடநாட்டிலும் அது தொடர்பான விவாதங்களே நடந்ததாக தெரிகிறது. ஜெயலலிதா சென்னை திரும்பியதும் மேற்கொள்ளவிருக்கும் அதிரடி மாற்றங்களும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

இது தொடர்பாக நம்பிக்கையான வட்டாரங்களில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இவை...
(1) டிசம்பர் 24, கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் தொடங்கி, அதை அப்படியே ஜனவரி 17-ல் வருகிற அவர் பிறந்த நாள் வரையில் அதே உற்சாகத்தோடு கொண்டாட்டங்களை தொடர வேண்டுமென்பது அஜெண்டா.  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மலரில் 'அம்மா' புகழ் குறைத்து, எம்.ஜி.ஆரின் புகழே மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

(2) நவம்பர் மாத இறுதியில் வெளியாகவிருக்கிற சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்கும் என்று அ.தி.மு.க.வினர் தீர்மானமாக நம்புகிறார்கள். அதனால், இப்போதே அந்த வழக்கில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டு,  நான்காண்டு 'அம்மாவின் மக்கள் நல ஆட்சி' குறித்த பிரசாரமாகவும், தி.மு.க.வின் பழிவாங்கும் போக்கினை அம்பலப்படுத்தவும், அந்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

(3) செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் 'பல்ஸ்' அறிவது... பனிஷ்மெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் முன்னாள் மாண்புமிகுக்கள் சிலரை தேர்வு செய்து தேர்தல் பணிகளை ஒப்படைப்பது... அடுத்த கட்டமாக கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த, விடுபட்டிருக்கும் தகுதியானவர்களுக்கு புதிய பொறுப்புகளை அளிப்பது.

(4) குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த கூட்டத்தேதியை அறிவிப்பது. அதற்கு சரியாக மூன்று நாட்கள் முன்னதாக 2-ஜி ஊழல் குறித்த மெகா பொதுக்கூட்டங்களை நடத்துவது. குறிப்பாக, மாவட்ட தலைநகரங்களிலும், தாலுகா, ஒன்றியம் வாரியாக திரும்பும் திசையெல்லாம் கழக தேர்தல் பொதுக்கூட்டங்களாகவே இருக்க வேண்டுமாம். மாற்றுக் கட்சியினர் 'கவுன்ட்டர் கூட்டம்’ போட்டு விடாதபடி கூட்டம் குறித்த விளம்பரங்கள் கடைசி நேரத்திலேயே வெளியில் தெரிய வேண்டும் என்பதும் தீர்மானமான முடிவு.

(5) ஐ.பி.எஸ். இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் முடிவெடுக்கப்பட்டது. அந்த இடமாற்றங்களால் தேர்தல் சமயம் எந்த அதிர்வுகளும் ஏற்படாதவாறு திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறார்கள். (அதுதான் சமீபத்தில் வெளியான அதிகாரிகள் இடமாற்ற பட்டியல்)

(6) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கான்ஃப்ரன்ஸை முடித்துக் கொண்டு அடுத்த கட்டமாக ஐ.ஏ.எஸ்.களின் பதவி உயர்வு லிஸ்ட்டை வெளியிடுவதோடு, முதல்வரின் தனிச் செயலர் போஸ்ட்டிங்கில் புதிதாக சிலரை சேர்த்துக் கொள்வார்களாம்.

(7) '234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனியாகத்தான் நிற்கிறது. யாருடனும் கூட்டணி இல்லை! வெளியிலிருந்து ஆதரிப்போர் வரவேற்கப்படுகிறார்கள்’ என்ற தொனியை ஆரம்பம் முதலே மாற்றுக் கட்சிகள் மனதில் பதிய வைக்கும் திட்டத்திலும் இருக்கிறார்கள்!

- ந.பா. சேதுராமன்

-விகடன்

0 comments: