Monday, November 02, 2015

பதின் பருவமா, புதிர் பருவமா? 7 - கலக்கம் தரும் திடீர் கனவு-டாக்டர் ஆ. காட்சன்

வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவ்வப்போது அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படும் அல்லது செக்ஸ் கனவுகளின் விளைவாக வெளிப்படும். சிலருக்கு அதனுடன் சேர்ந்து உச்சகட்டத்தை அடைந்த உணர்வும் ஏற்படலாம். சில வேளைகளில் உடை நனைந்த உணர்வால் விழிக்கலாம். இந்த அனுபவம் முற்றிலும் சாதாரணமான ஒன்று. இதைக் குறித்துப் பயப்படவோ, கலக்கமடையவோ தேவையில்லை.
கிட்டத்தட்ட 13 வயது ஆரம்பிக்கும்போது தேவைப்படவில்லை என்றாலும் ஆண் குழந்தைகளின் விதைப்பைகள் விந்து உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. உதாரணமாக ஒரு மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை எடுத்துக்கொள்வோம். கீழே குழாய் திறக்கப்படவே இல்லை. ஆனால், தொட்டியில் தண்ணீர் மட்டும் நிரம்பிக்கொண்டேயிருந்தால், அந்தத் தண்ணீர் வெளியே நிரம்பி வழிவதைத் தவிர வேறு வழியே இல்லை. அதுபோலத்தான் பதின் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் விந்து வெளியேறுவதற்கு, கனவு ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது.
சிறுநீரில் விந்து
‘ஒரு சொட்டு விந்து, 52 சொட்டு ரத்தத்துக்குச் சமம்’ என்ற முறையில்கூட விளம்பரங்கள் வருகின்றன. சில விடலைப்பருவத்தினர் சிறுநீர் கழிக்கும்போது அதில் விந்து வெளியேறுவதாகவும், அதனால் தங்கள் ‘சக்தி’ முழுக்க வீணாகி உடல் சோர்வு, நடுக்கம், தேக மெலிவு ஏற்படுவதாகவும் நம்புவார்கள். முற்றிய நிலையில் தங்களுடைய ஆணுறுப்பு சுருங்கிக் கொண்டே போய், வயிற்றின் அடியில் சென்றுவிட்டதாகவும் பிரமையில் புலம்புவார்கள். சில வேளைகளில் மனநோய்க்கும் ஆளாவார்கள்.
சிறுநீர் என்பது உடலின் கழிவுநீர். அதில் பல செல்கள், திசுக்கள், சிலநேரம் கிருமிகள் கலந்து வரலாம். இதனால் அதன் நிறம் மாறி விந்து வெளியேறுவதுபோலத் தோற்றமளிக்கலாம். அப்படியே வெளியேறினாலும்கூட, அது ஒன்றும் ரத்தத்துக்குரிய மாற்று அல்ல.
சுயஇன்பம்
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர், அதைத் தொடர்ச்சியாகவும் செய்கிறார்கள். விடலைப்பையன்கள் இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, பெண் குழந்தைகள் சொல்வதில்லை.
கொல்லும் குற்றஉணர்வு
சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் சுயஇன்பத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. ஆனால் உடலியக்கவியல் ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இந்தப் பழக்கம் விடலைப்பருவத்தின் கடந்து செல்லும் நிலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பார்வைகளுக்கு நடுவே வளர் இளம்பருவத்தினர் சிக்கிக்கொள்வதால்தான், அவர்கள் எளிதில் குற்றஉணர்வுக்கு ஆளாகின்றனர். நண்பர்கள் வட்டத்திலேயே இதைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவுவது, அவர்களுக்குப் பயத்தை உருவாக்குகிறது.
செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், செய்தால் அதைப் பற்றிய குற்றஉணர்வு என்ற இந்த இரண்டு மனநிலைகளுக்கு இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் வளர் இளம்பருவத்தினரை நேரம் பார்த்துத் தாக்க இன்னொரு கூட்டமும் காத்திருக்கிறது.
தவறான போதனைகள்
கொசு கடிப்பதால்தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் கூற்றை நம்பும் நம்மவர்கள், சுயஇன்பப் பழக்கத்தைப் பொறுத்து மட்டும் அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்களையும் வைத்தியங்களையும் நாடிச்செல்லும் நிலை உள்ளது.
தொலைக்காட்சி, வார இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களும் இவர்களை வேட்டையாடிவிடுகின்றன. சுயஇன்பத்தால் உறுப்பு சுருங்கிப்போவதாகவும், நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதாகவும், விந்து நீர்த்துப் பின்பு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் விளம்பரங்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளை நம்பிப் பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்த இளம்பருவத்தினர் ஏராளம்.
குற்றஉணர்வுதான் எல்லா மனநலப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அறிவியல் உலகம் கூவிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'அப்படியாகும்', 'இப்படியாகும்' என்ற பயத்தையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்திப் பிரச்சினைகளைப் பெரிதாக்கும் ஆதாரமற்ற வைத்தியங்களைத் தவிர்ப்பதுதான் விடலைப்பருவத்தினருக்கு நல்லது.
எது பாதிப்பு?
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி சுயஇன்பத்துக்கும் பொருந்தும். ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுயஇன்பத்துக்கு தீனிபோடும் பழக்கம். சுயஇன்பம் செய்வதற்காக முக்கிய வேலைகளைப் புறக்கணித்தல், மற்ற விஷயங்களில் கவனம் குவிக்க முடியாமை போன்றவை, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக மாற்றும் அறிகுறிகள்.
சுயஇன்பம் நல்லதா, கெட்டதா என ஆராய்ச்சி செய்வதைவிட, அதைக் கைவிட்டு வெளியேற முயற்சிப்பதே நல்லது. அது அளவுக்கு மீறி செல்லும்போது சுயகட்டுப்பாட்டை பாதிப்பதுடன், சுயஇன்பத்துக்கு அடிமையானால் திருமணமான பின்பும்கூட வாழ்க்கைத்துணையுடனான பாலியல் உறவுகளைவிட சுய இன்பத்திலேயே அதிக நாட்டம் செல்லலாம். அப்போது குடும்ப உறவில் பல பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தனிமையைத் தவிர்ப்பது, சந்தோஷம் தரும் மாற்று வழிகளில் ஈடுபாட்டை அதிகரித்துக்கொள்வது, நல்ல புத்தகங்களை வாசிப்பது, இசையில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வது, விளையாட நேரம் செலவழிப்பது, ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது போன்ற வழிமுறைகள் சுயஇன்பப் பழக்கத்திலிருந்து வெளிவர உதவும்.
(அடுத்த முறை: காதல் என்பது எதுவரை?)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்தொடர்புக்கு: [email protected]

தஹிந்து
சுய இன்பம் அனுபவிப்பது என்பது கட்டுபாடின்றி போகும்போது நிச்சயம் ஆக உடல் சக்தி குறையும், பாதிப்பு அடையும், 50 சொட்டு ரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது சித்தர்கள் கூறியது, இது பொய்யாகாது. மேலும் ஆண், பெண் இன உடல் உறவு முடிந்ததும் ஏன் அதிக இன்பத்திற்கு பதிலாக உடல் முழுவதும் வலி, களைப்பு ஏற்படுகிறது, அதிக உடல் உறவில் ஏன் மூட்டுகள் வலி ஏற்படுகிறது, இது உடல் சக்தி குறைவதால் தானே, எனவே எதுவும் அளவு முறை மீறும்போது விபரீத விளைவுகள் ஏற்படும்.

0 comments: