Monday, November 09, 2015

அரசாங்கத்துக்கு 20 லட்சம் டாலர்கள் மொத்த செலவுவைத்தவழக்கு- பட்டுக்கோட்டை பிரபாகர்

அமெரிக்காவில்தான் இதுபோன்ற பரபரப்பான கலாட்டாக்கள் அடிக்கடி நடக்கும். ஒரு நாள் ஒஹியோ மாகாணத்தில் ஒரு பெரிய பல்கலைக் கழகத்துக்கு காவல்துறையின் வாகனங்கள் சரசரவென்று நுழைந்தன. அத்தனை வாசல்களும் மூடப்பட்டன. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்தவர்களை அவசர அவசரமாக பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தினார்கள்.
அங்கே பார்க்கிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட மோட்டார் பைக்கை வெடிகுண்டு நிபுணர்கள் எச்சரிக்கையாக சூழ்ந்தார்கள். பரிசோதித்தார்கள். அந்த வாகனத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை.
அதற்குள் அந்த வாகனத்தின் சொந்தக்கார இளைஞன் அங்கு வந்து, ‘‘என் வாகனம்தான் இது. இதில் என்ன தேடுகிறீர்கள்?’’ என்றான்.
‘‘வெடிகுண்டு’’ என்றார்கள்.
‘‘இதில் வெடிகுண்டு இருப்பதாக யார் தகவல் தெரிவித்தார்கள்?’’
அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்கள், ‘‘நீதான்… இதோ பார்! இதற்கு என்ன அர்த்தம்?’’
பைக்கின் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலத்தில் ‘இது ஒரு பைப் வெடிகுண்டு’ என்கிற பொருளில் ‘This is a Pipe Bomb’ என்று எழுதின ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த இளைஞன் சிரித்துக்கொண்டே ‘‘அது நான் ரசிக்கும் ராக் இசைக் குழுவினுடைய பெயர்’’ என்றான். அப்படியும் அவர்கள் நம்பவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அந்தப் பெயரில் ஒரு இசைக் குழு இருப்பது உண்மை என்று தெரிய வந்தது. ஆனாலும் பொது மக்களை பீதிக்குள்ளாக்கும் விதமாக அப்படி ஒரு ஸ்டிக்கரை பைக்கில் ஒட்டி வைத்தது குற்றம் என்று அவனைக் கைது செய்து வழக்கு போட்டது காவல்துறை.
இதுகூட சின்ன விஷயம்தான். ஆனால், 2009-ம் வருடம் அக்டோபர் 15-ம் தேதி நடந்தது சின்ன விஷயம் இல்லை.
கொலரோடோவில் வசித்த ரிச்சர்ட் ஹீன், அவன் மனைவி மயூமி ஹீன் இருவருக்கும் மூன்று குழந்தைகள். ரிச்சர்டுக்கு நிரந்தர வேலை எதுவுமே இல்லை. வீடுகளின் உட்புறமும் வெளிப்புறமும் ஏற்படும் ரிப்பேர்களைச் சரிசெய்து கொடுப்பான்.
இயற்கையின் ரசிகன். குறிப்பாக, இயற்கை சீற்றத்தை இன்னும் அதிகம் ரசிப்பான். மழை, புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி போன்ற சமயங்களில் இவன் இலக்கு இல்லாமல் பயணித்து சீற்றம் காட்டும் இயற்கையை நெருக்கமாகச் சென்று புகைப் படங்கள் எடுப்பான். வீடியோ எடுப்பான். ஒருமுறை கடுமையான புயலில் மோட்டர் பைக்கில் சென்றான். இன்னொரு முறை கடலில் ராட்சச அலைகள் மற்றும் காற்றின் சுழற்சிக்கு நடுவில் தைரியமாக குட்டி விமானத்தில் பறந்து திரும்பிய சாகச வீரன் அவன். இந்த மாதிரி உயிரைப் பணயம் வைத்து சீற்றங்களைத் துரத்துபவர்களை ‘Storm chaser’ என்பார்கள்.
ரிச்சர்ட் அவ்வப்போது தன் வித்தியாச மான அனுபவங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டியளிப்பான். அவன் மனைவியும் கலந்து கொண்டு பேசுவாள். ஆகவே, இந்தத் தம்பதி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள்.
ஒருமுறை ரிச்சர்ட் தன் பேட்டியில் சொன்னான்: இந்த பூமியில் இன்றைக்கு வாழும் மனிதர்கள் எல்லோரும் வேறு கிரகத்தில் இருந்து முதலில் வந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. வேறு வேறு கிரகங்களுக்கு நம்மால் பறக்கும் தட்டுக்களை அனுப்பி தொடர்பு கொள்ள முடியும். அதை நானே செய்யப் போகிறேன்.
அதன் பிறகு ரிச்சர்ட் தன் சொந்த செலவில் அவனே ஒரு பறக்கும் பலூனைத் தயாரித்தான். 20 அடி சுற்றளவும், 5 அடி உயரமும் உள்ள அந்த பலூனை ரப்பர் மற்றும் அலுமினியம் கொண்டு தயாரித்து, அதில் ஹீலியத்தை நிரப்பினான்.
இரண்டு அடுக்குகள் கொண்ட அந்த பலூனுக்குள் அவன், அவன் மனைவி, மூன்றாவது மகன் ஃபால்கன் மூவரும் நுழைந்து, உள்புற அமைப்பை சுற்றிலும் கூடியிருந்தவர்களுக்கு படம் பிடித்துக் காட்டினான்.
அந்த பலூனைப் பறக்கவிடும் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆகவே, உலகமெங்கும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியே வந்து பலூனின் கயிறுகளை விடுவித்து வானத்தில் பறக்கவிட்டதும் அனைவரும் கைத் தட்டி னார்கள். கைத் தட்டல்களை மீறி மனைவியைப் பார்த்துக் கத்தினான் ரிச்சர்ட், ‘‘எங்கே நம் மகன் ஃபால்கன்?''
அங்கும் இங்கும் தேடினார் கள். ஃபால்கனைக் காண வில்லை. பதறினான் ரிச்சர்ட், ‘‘அய்யோ! ஃபால்கன் வெளியே வருவதற்குள் வாசல் கதவை மூடிவிட்டாய். பறக்கும் பலூனில் ஃபால்கன் இருக்கிறான்.’’
அவ்வளவுதான். சுற்றிலும் இருந் தவர்களுக்கும், நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர் களுக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
பெற்றோர் இருவரும் அழுதபடி முதலில் காவல்துறையையும், பேரிடர் மீட்புக் குழுவையும் போனில் அழைத்தார்கள். பலூனை மீட்டு பையனைக் காப்பாற்றுவதற்கு கடலோர காவல் படை களத்தில் இறங்கியது.
மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறக்கத் தொடங்கின. அவற்றுக்குப் போட்டியாக பல தொலைக்காட்சி நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் பலூனையும் மீட்பு முயற்சிகளையும் கவர் செய்ய பறக்கத் தொடங்கின.
பலூனின் எடை, உள்ளே நிரப்பப் பட்டிருக்கும் ஹீலியத்தின் எடை, காற்றின் வேகம், அது பயணிக்கும் திசை என்று விஞ்ஞானிகள் கணித்து உதவத் தொடங்கினார்கள். பலூன் வானில் கடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்த டென்வெர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, எந்த விமானமும் புறப்படவோ, எந்த விமானமும் இறங்கவோ கூடாதென்று உத்தர விடப்பட்டது.
பலவிதமான முயற்சிகள், போராட்டங்களுக்குப் பிறகு அந்த பலூனை தரையிறக்கிப் பார்த்தபோது உள்ளே பையன் இல்லை!
அந்த பலூனுக்குள் நுழைவதற்கான வாசலின் கதவு திறந்தபடி இருந்ததால், பலூனில் பயணித்தபோது பையன் கீழே விழுந்திருக்கலாம் என்று கணித்தார்கள். பலூன் பயணம் செய்த பாதையெங்கும் தேடிப் பார்த்தார்கள். பையன் கிடைக்கவில்லை.
இந்தப் பரபரப்புக்கு மத்தியில் ஒரு பத்திரிகையாளர் அந்த பலூனைப் பறக்க விட்ட இடத்த்துக்கு அருகில் இருந்த கார் ஷெட்டுக்குள் பையன் ஃபால்கன் இருப்பதைக் கண்டுபிடித்தார். அவனை விசாரித்தால் முதலில் விழித்தான். பிறகு என் பெற்றோர்தான் அங்கே பதுங்கியிருக்கச் சொன்னதாக உளறிவிட்டான்.
அதன் பிறகு தம்பதியினர் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். ‘‘ஒருவிதமான பர பரப்பு ஏற்படுத்துவதற்காகவும், தங்களுக்கு மேலும் புகழ் தேடிக் கொள்வதற்காகவும் இது திட்டமிட்டு நடத்திய நாடகம்’’ என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. விசாரணையின் முடிவில் ரிச்சர்டுக்கு 90 நாட்கள் சிறை வாசமும், அவன் மனைவிக்கு 20 நாட்கள் சிறைவாசமும் மற்றும் 36 ஆயிரம் டாலர்கள் அபராத மும் விதிக்கப்பட்டன.
இந்தக் கலாட்டாவினால் அந்த மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கத்துக்கு ஆன மொத்த செலவு 20 லட்சம் டாலர்கள் என்று ஒரு பத்திரிகை கணக்கிட்டு எழுதியது. அந்த நேரத்தில் மட்டும் கூகுளில் இந்த நிகழ்வைப் பற்றி உலகம் முழுவதும் மிக அதிகம் பேர் தேடியதால் அந்த நிகழ்வுதான் உச்சத்தில் இருந்தது.
சில வருடங்கள் கழித்து ரிச்சர்ட் அந்த பலூனை ஏலத்துக்கு விட்டான். அதை 2,500 டாலர்களுக்கு ஒருவர் எடுத்தார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட ஒரு இசை ஆல்பம் பல விருதுகளைப் பெற்றது.
அமெரிக்காவிலாவது ரிச்சர்ட் போன்றவர்கள் அரசாங்கத்துக்குதான் செலவு வைக்கிறார்கள். இங்கே சிலர், மாஞ்சா கயிற்றில் பட்டம் விட்டு உயிர்களையே பறித்துக் கொண்டிருக் கிறார்கள்.
- வழக்குகள் தொடரும்…


தஹிந்து

1 comments:

கலையன்பன் said...

பறக்கும் பலூனின் உள்ளே மனைவியுடனும் மகன் ஃபால்கன் உடனும் சென்ற ரிச்சர்ட், வெளியே வந்து மற்றவர்களுக்குத் தெரியாதவாறு அவன் மகனை ஒரு கார் ஷெட்டிற்குள்ளே ஒளிய வைத்தது, (அல்லது ஒளிந்து கொள்ள சொன்னது) எப்படி, அவ்வளவு பேர்கள் பார்வையையும் மீறி?