Tuesday, May 07, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 12

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 12-ஆண்டனி ராஜ்


படங்கள்: ஏ.சிதம்பரம் 

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்ததும் தூத்துக்குடி நகரில் பட்டாசு சத்தம் ஓய்வதற்கு நீண்ட நேரம் ஆகியது. பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இனிப்புகள் வழங்கி மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அரசியல் கட்சியினரும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்றார்கள். ம.தி.மு.க பொதுச்செயலாளர் 
வைகோ, அரசின் முடிவை வெகுவாக பாராட்டினார். 'பொதுமக்கள் நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூட மிகச் சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் ம.தி.மு.க சார்பாகவும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார். போராட்ட காலத்தில் ஆலைக்கு ஆதரவாக பாதியிலேயே போராட்டத்தை முடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள் கூட முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலான இந்த முடிவை பாராட்டினார்கள்.

இறுதிக் கட்ட விசாரணை

உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஹெச்.எல்.கோகலே முன்னிலையில் 30 அமர்வுகள் நடந்து வந்த ஸ்டெர்லைட் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியது. ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1-ம் தேதி இறுதியாக வாதிட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், 'ஸ்டெர்லைட் ஆலையை மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடச் செய்துள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றார்.

ஆனால் ஆலை மீதான தமிழக அரசின் நடவடிக்கைக்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கையை அதில் இடம்பெற செய்ய முடியாது என நீதிபதி பட்நாயக் தெரிவித்து விட்டார். அதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் எடுத்த நடவடிக்கை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய இயலவில்லை.

உடனே வைகோ எழுந்து, 'ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழக அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்' என தெரிவித்து விட்டு நீதிபதிகளின் அனுமதியுடன் பேச தொடங்கினார். 'ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக-டை-ஆக்சைடு நச்சுப் புகையால் தூத்துக்குடி மக்கள் கடற்கரை ஓரத்திலும், பல இடங்களிலும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிக்கு ஆளானார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால் மார்ச் 30-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலையை மூடிவிட்டது' என்றார்.

அதற்கு நீதிபதி பட்நாயக், பத்திரிகைகளில் பார்த்தோம் என சொன்னதோடு, 'எங்களின் தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. சுற்றுச் சூழலைக் கண்காணிப்பதற்கும் அது குறித்து எவ்விதமான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்பதையும் நாங்கள் எங்கள் தீர்ப்பிலே குறிப்பிட்டு இருக்கிறோம்' என்றார்.

ஆலையை திறக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

பரப்பான சூழ்நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு
 சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன காரணங்களை ஏற்பதற்கு இல்லை. அதனால் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டது. ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் தீர்ப்பில் ஆலைக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள், நீதிபதிகள் பட்நாயக், கோகலே ஆகியோர்.

தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் '44 மாதங்கள் ஒப்புதல் இல்லாமல் ஆலையை ஓட்டியதால், தூத்துக்குடியை சுற்றிலும் நிலம் நீர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்காக ஆலை நிர்வாகம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க வேண்டும். அந்த தொகையை ஐந்தாண்டு காலத்துக்கு வைப்பு நிதியில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து கொள்ளலாம். அதே சமயத்தில். தகுந்த காரணங்களோடு மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை உயர்த்தி கேட்குமானால் அதனை ஆலை நிர்வாகம் அதிகரித்து கொடுக்க வேண்டும்.

ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை போதாது என நினைப்பவர்களும் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம்' என குறிப்பிட்டார்கள்.

மேலும் தங்கள் தீர்ப்பில், 'மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 21 தீவுகளை சுற்றிலும் இருக்கும் பகுதிகளை 1986-ல் தேசிய கடல் பூங்காவாக அரசு அறிவித்து இருக்கிறது. இத்தகையை பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையானது அமைந்து இருக்கிறது. கடல் பூங்கா பகுதியில் உள்ள வான்தீவில் இருந்து 6கி.மீ தொலைவிலும் கசுவாரில் இருந்து 7கி.மீ தொலைவிலும் கரைசல்லி மற்றும் விலாங்குசல்லி ஆகிய தீவுகளில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் மட்டுமே இந்த ஆலை அமைந்து இருக்கிறது.

மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தேசிய கடல் பூங்கா பகுதி என்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டு இருக்கிறோம். அதனால் நில பகுதியை மேம்படுத்தவும் அங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆலைகளை அமைக்க நிபந்தனைகள் விதிப்பது அல்லது செயல்பட்டு வரும் ஆலைகளை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அப்போது சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் இந்த ஆலை உள்ளிட்டவற்றை அகற்றவும் மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்க உரிமை இருக்கிறது' என தீர்ப்பில் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த ஆலையை மூடுவதால் 1,300 பணியாளர்கள் வேலை இழப்பார்கள். இந்த ஆலையை நம்பி செயல்பட்டு வரக்கூடிய துணை தொழில் நிறுவங்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் வரிகளின் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஆலையை மூடுவதால் பாதிப்படையும். ஆலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடுவது சரியல்ல. ஆகவே, சென்னை உயர் நீதிமன்றம் தனது எல்லைகளை மீறி ஆலையை மூடும்படி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் ஆஜரான வைகோ குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

wait 


thanx - vikatan

diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.htmlதூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html

1 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி