Sunday, May 19, 2013

பெண்கள் ட்விட்டரில் குப்பை கொட்டுவது எப்படி?

சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.

இவற்றில் எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது, சில நேரங்களில், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இப்படி பிரச்னையில் சிக்கித் தவிக்காமல், ட்விட்டரை முறையாக பயன்படுத்த, இதோ சில டிப்ஸ்...

ட்விட்டரில், ஒருவர் பகிர்ந்து கொள்ளும் சீர்த்திருத்தக் கருத்துகளைக் கொண்டு, அவரது குணாதிசயங்களை எடை போட வேண்டாம்; இங்கே பாதி பேருக்கு பொய் முகம்.

ட்விட்டர் டைம் லைனில், சமூகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களும் அலசப்படும். அவை அனைத்திற்கும், நாமும் நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், நம் தனிப்பட்ட விஷயத்தைக் குறித்து கூட வாயைப் பிடுங்க, காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ட்விட்டர் பழக்கம், நாளடைவில் நட்பாக மாறுவதைத் தவிர்க்க இயலாது. அந்த நட்பு வளையத்தை உருவாக்க, அவசரப்படக் கூடாது. குறைந்தது, ஓர் ஆண்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், எதிராளியின் மனப்பாங்கு, சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஓரளவு கணிக்க முடியும்.இவற்றில், நிஜப் பெயருக்கு பதில், புனைப் பெயர் வெளியிடுவதே நல்லது. நிஜப் பெயரில் இருந்தாலும், அதை மாற்றி விட வேண்டும். இல்லையென்றால், ஏதேனும் கருத்து மோதல் வந்தால், பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செ#வர். புனைப் பெயரில் விமர்சனம் செய்தால், அவ்வளவாக வலிக்காது.


தனிப்பட்ட முறையில், ஒருவரை அவதூறாக பேசும் போக்கு, ஊடகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இது, ஏற்கத்தக்கதல்ல. எனவே, பொதுவான கருத்துகளை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு, பதில் சொல்ல வேண்டாம்.


இவற்றில், கருத்துக்கு தான் முதலிடம். யார் சொல்கின்றனர் என்பது இரண்டாம் பட்சம் தான். எனவே, தங்களைப் பற்றிய சொந்த விஷயங்களை, பகிர்ந்து கொள்ள வேண்டாம். உதாரணத்துக்கு, நாம் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லாம், இங்கு தேவை இல்லாத ஒன்று.


ஓரளவு நட்பு வளர்ந்து, நம்பிக்கை வந்தால் மட்டுமே, தங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவும், தேவைப்பட்டால் மாத்திரமே. பர்சனல் லைப், சோஷியல் லைப் இரண்டிற்கும் இடையே, எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், அது அனாவசிய குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.


ட்விட்டர் மாதிரி, யாரும் நேரில் அழைத்தால், போக வேண்டாம். இங்கு, எழுத்துக்குத் தான் வலிமை; நேர்முக அறிமுகத்துக்கு இல்லை. நேரில் பார்த்து அளவளாவும் வழக்கம், எழுத்தாளர் உலகத்தில் உண்டு. சின்ன சின்ன கருத்தோ, நகைச்சுவை துணுக்கோ பகிர்ந்து கொள்வதற்கு, நேரில் பார்த்து பழக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசியம் என்று பட்டால், குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.


முக்கியமாக, இதற்காக ஒதுக்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ட்விட்டர் அடிமையாக்கி விடும். ட்விட்டரே கதி எனக் கிடப்பவர்கள், நமக்கு சொல்கிற செய்தி இது தான்... "நாலு விஷயம் தெரிந்து கொள்கிறோம்; சில ஆலோசனைகளை பெறுகிறோம்...' என்பது தவிர, இந்த ஊடகத்தால், தனிப்பட்ட பாதுகாப்பு குறைகிறது என்பது தான் உண்மை. பல அலுவலகங்களில் இதைத் தடை செய்வதற்குக் காரணமும் அது தான்.மனதில் உள்ளதை எல்லாம் பேசும் சுதந்திரம், ட்விட்டரில் இருக்கிறது. அது தான் இதில் உள்ள வசதி. அதுவே, அடிமையும்படுத்தும். கட்டற்ற சுதந்திரம், எப்போது வேண்டுமானாலும், ஆபத்தாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து, அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.போலி முகவரிகளிடம் (பேக் ஐ.டி.,) கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, எல்லாரையும், பேக் ஐ.டி.,யாக, இருக்குமோ என்று நினைத்து அணுகுவதே நல்லது. உதாரணமாக, சாலையில் போகும் போது, ஒரு டர்னிங் வருகிறது என்றால், அங்கு வாகனம் ஏதும் வரும் என்று, எதிர்பார்த்து போகச் சொல்வர் இல்லையா... அது போலத் தான். சிறிது நாள் சென்றதும், பேக் ஐ.டி., இல்லை என்று தெரிந்தால், சின்னதாக ஒரு, "சாரி' சொல்லி சமாளித்து விடலாம்.


ஆபாச வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல், அவற்றை புறக்கணித்து விட வேண்டும். கைமீறி போகும் பட்சத்தில், ப்ளாக் செய்து விட வேண்டும். ஆண்கள் உபயோகப்படுத்தும், இரட்டை அர்த்தமுள்ள பல, பேச்சு”வழக்கு வார்த்தைகள், பெரும்பாலும், பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற ட்விட்ஸ்க்கு பதிலளித்து, பெண்கள் சிலர், சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, அர்த்தம் புரியவில்லை என்றால், "அது சிங்கிள் மீனிங் தான்' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.


யாராவது ஆபாசமாகக் கிறுக்கினால், அவர்களை திருத்த முயல வேண்டாம். அது நம் வேலை இல்லை. இதை, எந்த ஊடகத்திலும் தவிர்க்க இயலாது. பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கிப் போவதே நல்லது.


பேஸ்புக், ஜி-மெயில், ஸ்கைப், வாட்ஸப் போன்றவற்றிற்கு, தகவல் கொடுக்கும் முன், பல முறை யோசிப்பது நல்லது. இல்லையென்றால், அதில் தொடர்பு கொள்கிறவர்களுக்கு பதில் சொல்லி, நம் நேரம் விரயமாகும்.


கடைசியாக, முக்கியமாக ஒன்று... சொந்த வாழ்க்கையில், சிரமம் ஏற்படுத்துமானால், ட்விட்டருக்கு, "குட்-பை' சொல்லுங்கள். இவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துகளுக்கு, அதீத முக்கியத்துவம் தராமல், "லைட்'டாக எடுத்துக் கொள்ளப் பாருங்கள்.
வலைதள ஊடகங்களால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. அன்னபட்சி போன்று நல்லதை மட்டும் எடுத்து கொள்ளலாமே!
***

நன்றி - கட்டதுர ,உமா யசோ, கட்டோரா (
, தினமலர்


0 comments: