Sunday, May 26, 2013

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 2

-எஸ்.முத்துகிருஷ்ணன்

மிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான மூன்றெழுத்து கல்வி நிறுவனத்தின் கல்வித்தொண்டையும், கல்வித் தொண்டு மூலம் கிடைத்த பணத்தில் அந்த நிறுவனம் கண்ட மாபெரும் வளர்ச்சியையும் வரிசைப்படுத்தினால் ஆச்சரியம் மட்டுமல்ல...அதிர்ச்சியும் ஏற்படும். 1968 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்ப பள்ளியை தொடங்கினார் அந்நிறுவனத்தின் நிறுவனர். இந்த பள்ளிதான் அவருக்கு மூலதனம். 

பள்ளியின் வளர்ச்சி அவரை மேலும், மேலும் பணத்தோடு வளர வைத்தது. தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், ஓட்டல் தொழில் நிறுவனங்கள் என்று அவரின் கல்வித்தொழில் விரிந்து கொண்டே சென்றது. தவறுகளை சரிக்கட்ட அவ்வப்போது ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கவனிக்க வேண்டியது இருந்தது.


மாணவர்களுக்கு சைடு பிசினஸ்

இதற்கு முடிவுகட்ட யோசனை செய்தார். கல்வி நிறுவனங்கள், மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் ஆட்சியாளர்களால், தனது கல்வி நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படும் என்று அவரே நிகர்நிலை பல்கலைக் கழகத்தை தொடங்கி விட்டார். அவரின் கல்வி நிறுவனங்களின் படிப்புகளை, அந்த பல்கலைக் கழகம்தான் கட்டுப்படுத்தி சான்றழித்து வருகிறது. 

மெடிக்கல், பொறியியல் என்று முக்கியமான, இந்த இரண்டு துறைகளிலும் பரந்து விரிந்து இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதன் சிறகை விரித்துக் கொண்டிருக்கிறது. இங்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி விட்டால் டாக்டர் பட்டம் எப்படியும் கிடைத்து விடும் என்பதால் கோடீஸ்வரர்களின் பிள்ளைகளைத்தான் கோடி கோடியாக கொட்டி படிக்க வைக்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ்.க்கு, ஒரு சீட் நன்கொடை ரூ.60 லட்சம். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மிகவும் பிரபலமானது. நன்கொடை செலுத்தி பொறியியல் வகுப்பில் சேரும் மாணவர், முதல் ஆண்டு கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும்; இரண்டாவது ஆண்டு அந்த மாணவன் சார்பில் 4 மாணவர்களை சேர்த்து விட்டால் அவர் கல்வி கட்டணத்தை அடுத்த ஆண்டுகளுக்கு கட்டவே வேண்டாம். விடுதி கட்டணத்தையும், உணவு கட்டணத்தையும் கட்டினால் போதும். இந்த சைடு பிசினசையும் படிக்கும் போதே மாணவர்களுக்கு இந்த பல்கலைக் கழகம் சொல்லி கொடுத்து விடுகிறது.

தொடக்கப்பள்ளி தொடங்கி கல்விப் பணியை தொடங்கிய இந்த பல்கலை வேந்தர், இன்று, உயர்கல்வி, தொழில் நுட்பக்கல்வி, மருத்துவ உயர்கல்வி ஆராய்ச்சி, இஸ்ரோவுடன் இணைந்து ராக்கெட் விடுவது என்ற அளவுக்கு கோலோச்சி வருகிறார்.

இமேஜை ஏற்படுத்தி வசூல்

இந்த கல்வி நிறுவனத்தைப் போலவே, இன்னொரு பிரபலமான கல்வி நிறுவனம் சென்னையின் புறநகர் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. முன்னாள் போலீஸ் ஏட்டுதான் இதன் நிறுவனர். சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் முக்கிய நிர்வாகியும் கூட. இவர் ஒரு பல்கலைக்கழகம் மற்றும் 5 பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறார். டாப்டென் கல்லூரிகள் வரிசையில் இவரது கல்லூரிகள் இருக்கிறது. ஆயிரத்துக்கு நூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களிடம் நன்கொடை எதுவும் வாங்காமல் இவரது கல்லூரியில் சீட் கொடுத்துவிடுவார். 
இந்த பிரைட் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக ரேங்கில் ஏதாவது ஒரு பிரிவில் முதல் 10 இடத்தை பிடித்து விடுவார்கள். அதன் மூலம் கல்லூரியின் படிப்பு பற்றி வெளியில் நல்ல இமேஜ் உருவாகும். அந்த இமேஜ் மூலம் மற்ற மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் வசூலை அள்ளி விடுவார். இது கல்வி கொள்ளையின் இன்னொரு டெக்னிக்.   

பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரி வைத்திருப்பவர்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அவர்கள் பள்ளிக்கூடம் தொடங்கிய லாபத்தில் இருந்துதான் கல்லூரிகள் கட்டி தொழிலை படிப்படியாக விஸ்தரித்து இருப்பார்கள். ஆனால், இந்த அரசியல் கல்வித் தந்தை, பல்கலைக் கழகம் ஆரம்பித்த பிறகுதான் ஸ்கூல் தொடங்கினார். தொடர்ச்சியாக பால், ஸ்டீல், சிமெண்ட், ஸ்வீட், குடிநீர், டிராவல்ஸ், மாட்டுபண்ணை, கல்யாண மண்டபம் என்று அவர் கண்ணில் என்னவெல்லாம் தென்படுகிறதோ அனைத்துக்கும் ஆசைப்பட்டு எல்லா தொழிலையும் தொடங்கி விட்டார்.
 எல்லாவற்றுக்கும் பொறியியல் கல்லூரி வசூல்தான் மூலதனம். காண்டிராக்டர்களை வைத்து கல்லூரி கட்டட வேலைகளை செய்ய வேண்டாம் என்று அவரே கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கினார். விளைவு, கடந்த ஆண்டு 10 தொழிலாளர்கள் பலியானதோடு, கட்டுமான நிறுவன ஆசையை நிறுத்திக் கொண்டார்.

பணத்தில் வீசினால் அனுமதி

சென்னை அருகே முருகன் கோயிலுக்கு பெயர் போன குன்றுக்கு அருகே ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் துறையில் மாணவர்கள் படிப்புக்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அந்த துறைக்கான அனுமதியையே அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்து விட்டது. 
அத்தகைய கல்லூரி நிர்வாகம், புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கி நடத்தி வருகிறது. பொறியியல் கல்லூரியை முறையாக நடத்த இயலாக நிர்வாகம், அதிக செலவு பிடிக்கும் மருத்துவ கல்லூரியை எப்படி நடத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியது இல்லை. கையில் இருக்கும் பணத்தை வீச வேண்டியவர் முகத்தில் வீசினால் எந்த படிப்புக்கும் அனுமதி பெற்றுவிடலாம்; அதன் மூலம் மீண்டும் மாணவர்களையும் பெற்றோர்களையும் கசக்கி பிழிந்து வசூலித்து விடலாம் என்ற தைரியமே இதற்கெல்லாம் காரணம். அவருடைய தொழிலும் ஓகோவென்றுதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடவுளின் அவதாரமாக வணங்கப்படும் பெயரை கொண்ட பொறியியல் கல்வி நிறுவனத்தின் கதை சற்று அலாதியானது. இவர், நடத்துவது பொறியியல் கல்லூரி என்றாலும் இவருக்கு ரியல் எஸ்டேட் மீது அபார ஆர்வம் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான் பள்ளி, பொறியியல் கல்லூரியை தொடங்கினார். தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியதோடு மட்டுமல்லாமல், மாற்று மருத்துவ கல்லூரிகளையும் (சித்தா, ஓமியோபதி மருத்துவக்கல்லூரிகள்) நடத்தி வருகிறார். 
ஆனாலும் பழக்கதோஷத்தில் இப்போதும் சொந்தமாக பல ஏக்கர் நிலங்களை வாங்கி லே அவுட் போட்டு பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கல்வி சேவையில் பணம் கொட்டுவது போல ரியல் எஸ்டேட் தொழிலும் அவருக்கு ஓகோ வென்று பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.

கட்டணக் கொள்ளையில் சினிமா படம் தயாரிப்பு

எல்லோரையும் போலவே, பொறியியல் கல்லூரி தொடங்கினால், பணத்தை வாரி சுருட்டலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியை தொடங்கினார் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஒருவர். 
பல ஏக்கர் பரப்பளவில் தடபுடலாக தொடங்கிய பொறியியல் கல்லூரி வியாபாரம் எதிர்பார்த்தபடி போகவில்லை. எனவே, அவர் பொறியியல் கல்லூரி வளாகத்தை அப்படியே பொழுது போக்கு பூங்கவாக மாற்றி விட்டார். இப்போது அவரது தொழில் சிறப்பாக ஓடுகிறது.

ஓசூரில் பிரபல கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடத்துக்குள் இந்த பள்ளிக்கூடம் வந்தது. இந்த பள்ளிக்கூடத்தின் பார்ட்னர், தனியார் மெட்ரிக் பள்ளி சங்கத்தின் முக்கிய நிர்வாகி என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிக்கூட முதலாளிகளையும் தெரியும். இவரின் கூட்டாளிகள் எல்லோரும் சேர்ந்து கடந்த ஆண்டு திரைப்படம் எடுத்தனர். 
பள்ளிக்கூடத்தில் கொள்ளை லாபம் அடிக்கத்தெரிந்த அவர்களால் சினிமாவை லாபம் ஈட்டும் வகையில் எடுக்க முடியவில்லை. கையை சுட்டுக் கொண்டதோடு கோடப்பாக்கம் தொழிலுக்கு டாடா காட்டி விட்டனர். அவர்கள் இப்போது, டீச்சர் டிரெயினிங் பள்ளிகள், பி.எட் கல்லூரிகளை லீசுக்கு வாங்கி நடத்தும் தொழிலுக்கு மாறிவிட்டனர். அதிலும் பணம் கொட்டுகிறது.

அது எப்படி? நாளை பார்ப்போம்...      

Thanks - Vikatan

0 comments: