Saturday, May 25, 2013

பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலே

வாழ்க்கைத் தொடர் - 2

காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

.எம்.சி..வில் நடந்த பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு, நானும், என் தங்கையும் வீடு திரும்பிய போது இரவு எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது. ‘ஏன் லேட்?’ என்று கேட்டு, கோபத்தின் உச்சத்தில் அம்மா என்னை பயங்கரமாக அடித்துவிட, நான் களைத்துப் போய் தூங்கி விட்டேன். மறுநாள் வழக்கம் போல பள்ளிக்கூடம் சென்று விட்டேன். பாட்டுப் போட்டியைப் பற்றி மூச்சே விடவில்லை.
ஒரு வாரம் கழித்து ஒரு நாள் ஸ்கூலில் பிரேயர் முடியும் சமயத்தில், ‘ராஜேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பு’ (அப்போ அதற்கு ஃபோர்த் ஃபார்ம் என்று பெயர்) என்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். என்னை எதற்காகக் கூப்பிடுகிறார்கள்? என்று புரியாமலேயே நான் போனேன்.
.எம்.சி.. வில் நடந்த பாட்டுப் போட்டியில், எனக்கு மெரிட் சர்டிஃபிகேட் கிடைத்திருப்பதாக அறிவித்தவுடன் எல்லோரும் கைதட்டினார்கள். நான் அந்த சர்டிஃபிகேட்டைக் கையில் வாங்கியபோது, நான் பாடியது எனக்கு நினைவுக்கு வரவில்லை; அம்மா கொடுத்த அடிதான் நினைவுக்கு வந்தது. அன்று மாலை வீட்டுக்கு வந்த பிறகு, அம்மாவிடம் எனக்குக் கொடுக்கப்பட்ட சர்டிஃபிகேட்டை நீட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இது என்ன?’ என்று கேட்டபோது, அப்போதுதான் நான் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது, அதில் நன்றாகப் பாடி மெரிட் சர்டிஃபிகேட் வாங்கினது, லேட்டா வீட்டுக்கு வந்து அடி வாங்கியது எல்லாவற்றையும் சொன்னேன்.
நான் சொல்லி முடித்ததும், என் அம்மா என்னை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ‘உண்மை என்னன்னு தெரியாம, அன்னிக்கு உன்னை அப்படி அடிச்சுட்டேனே!’ என்று வருந்தி, என் தலையை ஆறுதலோடு தடவிக்கொடுத்தார். இன்றைக்கு என் கடந்த கால வாழ்க்கையை அசைபோட்டுப் பார்க்கிறபோது, அந்த சம்பவம் என் இசைப் பயணத்தில் ஒரு துவக்கப்புள்ளி என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கிடையில், பார்ப்பதற்கு சுட்டிப் பெண்ணாக இருந்த என் தங்கை அஞ்சலியை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார் என் அம்மா. ஒரு பக்கம் தானும் கோரஸ் பாடல்கள் பாடிக் கொண்டே, இன்னொரு பக்கம் அஞ்சலியை நடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் எதிர்பார்த்த மாதிரி வெற்றி கிடைக்கவில்லை. வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் என்னையும் சினிமாவில் கோரஸ் பாட வைக்க விரும்பினார் என் அம்மா. எனவே, ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போகிறபோது, அவ்வப்போது, என்னையும் கூட அழைத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்.

மனோகராபடத்தில் ஜிக்கி அம்மா பாடியஇந்த நாளிதே.. இதயம் பாடுதே!’ என்ற பாட்டு இடம்பெற்றது. அந்தப் பாட்டுக்கு கோரஸ் பாடுவதற்கு அம்மாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னையும் கூட அழைத்துக் கொண்டு போயிருந்தார். அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வை என் மேலே பட்டது.
இந்த நாளிதேபாடலில் கோரஸ் பாடுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் பாடகிகள் கிடைக்கவில்லை. அப்போது என் அம்மா, ‘இவள் என்னுடைய பொண்ணு ராஜேஸ்வரி. நல்லா பாடுவா. இவளுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்என்று படத்தின் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராம ஐயரிடம் கேட்க, அவர் என்னைக் கூப்பிட்டு, ஒரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். நான் கணீரென்று, ஒரு இந்திப் பாட்டைப் பாடிக்காட்டினேன். ‘இன்னும் கொஞ்சம் சத்தமா பாடும்மாஎன்றதும் சத்தமாகப் பாடிக்காட்டினேன். அவருக்கு என் குரல் பிடித்துப் போக, கோரஸ் பாடுவதற்கு சான்ஸ் கிடைத்தது.
அங்கே இருந்த மேனேஜர், ‘இந்த சிறுமியின் வாய்ஸ் நல்லா இருக்கேஎன்று சொன்னதோடு எம்.எஸ். விஸ்வநாதனிடம் சிபாரிசு செய்தார். எம்.எஸ்.வி. ‘சொர்க்கவாசல்படத்தில்ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரேபாட்டில் கோரஸ் பாடுகிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்.
நானும் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்த படியே, அவ்வப்போது சினிமாவிலும் கோரஸ் பாடிக்கொண்டிருந்தேன். பத்தாம் கிளாசில் படித்துக் கொண்டிருந்தபோது, இசையமைப்பாளர் ஜி.ராமநாத ஐயர் இசையமைப்பில் ஒரு கோரஸ் பாடுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.
நான் கோரஸ் பாடி முடித்தவுடன், ராமநாத ஐயர் என்னைச் சுட்டிக்காட்டி, ‘இந்தப் பொண்ணுக்கு குரல் ரொம்ப அபாரமாய் இருக்கு. ஒரு காலத்துல இவள் சினிமாவுல ஓஹோன்னு வருவா!’ என்று சொல்லி, என்னை ஆசிர்வதித்தார். அதைக் கேட்ட என் அம்மா ரொம்ப எமோஷனலாகிவிட்டார். அடுத்து அந்த இசை மேதை என் அம்மாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?
நிர்மலா! கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசையா?" அவர் சொன்னதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. என் அம்மாவும் பதில் ஏதும் சொல்லாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அவரே தொடர்ந்து, ஸ்கூலிலும் படிக்கணும்; சினிமாவிலும் பாடணும் என்றால் அது சாத்தியப்படாது. இரண்டில் ஒன்றை முடிவு செய். இவள் குரலுக்கு, பாட்டைத் தேர்ந்தெடுத்தால் பேரும், புகழும் நிச்சயம் கிடைக்கும்" என்றார்.
அன்று வீட்டுக்கு வந்ததும் ஜி.ராமநாத ஐயர் சொன்னதைப் பற்றியே அம்மா யோசித்துக் கொண்டிருந்தார். என்னிடம்உனக்கு படிக்க ஆசையா? பாட ஆசையா?’ என்று கேட்டபோது, இதுதான் என்று தீர்மானித்து பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ‘நீ எது சொன்னாலும் கேட்கறேன் அம்மாஎன்று சொல்லி அம்மாவைக் கட்டிக் கொண்டேன். சிறிது நேரம் கண்மூடி ஆண்டவரைப் பிரார்த்தித்து விட்டு, கண் திறந்த அம்மா சொன்னார்: ராஜேஸ்வரி! நீ படிக்கப் போவதைவிட, பாடப் போனால், குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும் கண்ணு!

அம்மாவின் முடிவை முழு மனசோடு நான் ஏற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.
அம்மாவோடு ஸ்டூடியோவுக்கு ரெகுலாராகப் போகத் தொடங்கினேன். ஒரு நாள் கே.வி. மகா தேவனின் இசையில் கோரஸ் பாடியதை அடுத்து அவர், என் குரலைப் பற்றி டைரக்டர் .பி. நாகராஜனிடம் பாராட்டிச் சொல்ல, ‘அப்படியென்றால், நாம் எடுக்கிற லோ பட்ஜெட் படத்தில் இந்தப் பெண்ணுக்கு ஒரு சோலோ பாடல் தரலாமே!’ என்று .பி.என். சொன்னார்.
அந்தப் படம்தான்நல்ல இடத்து சம்மந்தம்‘ (1958) நான்கு பேர் தனித்தனியாகப் பாடுகிறபுதுப் பெண்ணே... புதுப்பெண்ணே நிமிர்ந்துப் பாரு! உன் பிறந்த இடத்தை மறந்திடாம நினைச்சுப் பாரு!’ என்ற பாட்டுதான் அது. அந்தப் பாட்டை மற்ற மூன்று பேர்களோடு சேர்ந்து நானும் பாடினேன். கோல்டன் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பாட்டைக் கேட்ட டைரக்டர் .பி.என்., மியூசிக் டைரக்டர் கே.வி.எம்., இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டு, அதே படத்தில் இன்னொரு பாட்டையும் பாடுகிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார்கள். ‘பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே; பொருத்தமான ஜோடி போகுது குபுகுபு வண்டியிலேஎன்ற டூயட் பாட்டு அது.
முதல் படத்திலேயே பம்பர் பிரைஸ் அடிச்சா மாதிரி எனக்கும், என் அம்மாவுக்கும் அளவில்லாத சந்தோஷம். அப்போது .பி. நாகராஜன் சார் இந்தப் பொண்ணுக்கு குரல் ரொம்ப நல்லா இருக்கு; ரொம்ப பிரகாசமான எதிர்காலமும் இருக்கு; ஆனா இந்தப் பொண்ணோட பெயரை மாத்தியே ஆகணும்" என்றார்...
சென்னை, தி.நகரில் வித்யோதயா பள்ளி அருகே உள்ளது எல்.ஆர்.ஈஸ் வரியின் இல்லம்.
பழைய காலத்துவீடு! மாடி பெல்லை அழுத்தினால் அவரே யாரு?" என்று கேட்டபடி இறங்கி வருகிறார். வரவேற்பு அறையின் சுவர் முழுக்க குடும்பப் படங்கள், பரிசு வாங்கும் விழா காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விருதுகளும் கேடயங்களும் மர அலமாரியில் நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. டீ-பாய் மீது கிறிஸ்துவ ஸ்தோத்திரப் புத்தகம், பைபிள் முதலியன சீராக வைக்கப்பட்டுள்ளன. தானே சமையல் அறைக்குப் போய்பீச் பழ ட்ரிங்கைக் கலந்து கொண்டு வந்து உபசரித்தார். பழகும் விதத்திலும் எல்.ஆர்.ஈஸ்வரி இனிமை தான்... அவரது குரலைப் போலவே!
(கல கலப்போம்...)

1 comments:

Unknown said...

இன்று எனது தளத்தில்

http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_25.html