Thursday, May 09, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 13


ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,"இந்த வழக்கில் ஆலையை எதிர்த்து வழக்காடியவர்கள், தொண்டு மனப்பான்மையோடு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்குரிய விதத்தில் செயல்பட்டனர்"  என தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் வைகோ எழுந்து, 'நீதியரசர்களே, தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களைப் பாதுகாப்பதற்காக ஸ்டெர்லைட் நாசகார அழிவில் இருந்து மக்களை மீட்பதற்காக இதுவரையிலும் அர்ப்பணிப்போடு பாடுபட்டு வந்துள்ளேன். அதே நோக்கத்துடன் நீதிக்காக ஏக்கமுற்று இந்த நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன்' என்று சொன்னவுடன், 'நாங்கள் தீர்ப்பில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறோமே, மக்களுக்காகப் போராடுகிறீர்கள்; தொடர்ந்து அதைச் செய்யுங்கள்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஆலை நிர்வாகம் தரப்பில் பேசிய அதிகாரிகள், 'இது நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இந்த பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறோம். தொடர்ந்து அதனை செய்வோம்' என்றார்கள் உற்சாகத்துடன். இந்த தீர்ப்பு வெளியான மறு நிமிடத்திலேயே பங்குச் சந்தையில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்குகளின் விலை உயரத் தொடங்கியது. ஒரே நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் உயர்வடைந்தது.

தீர்ப்புக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் இந்த களத்தை இழந்து இருக்கலாம். ஆனால் எங்கள் யுத்தம் தொடரும். ஸ்டெர்லைt ஆலையை மூடும் வரையிலும் எங்களின் சட்ட போராட்டம் தொடரும். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வேன். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டி, கடப்பாறையோடு ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால் அந்த மாநில அரசு லைசென்சை ரத்து செய்தது. தென் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் அப்படி செய்யவில்லை. அறவழியில் நீதிக்காகப் போராடினோம். இதில் பின்னடைவு ஏற்பட்டாலும், தொடர்ந்து போராடி நீதியை நிலைநாட்டுவோம்" என்று ஆவேசப்பட்டார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலை திறக்கப்படவில்லை. இந்த விவகாரத்தையும் சீக்கிரத்திலேயே முடித்தால் மட்டுமே ஆலையை இயக்க முடியும் என்பதால் மார்ச் 29 ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ராஜகோபால், "ஆலையால் சுற்றுப்புற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களிடம் தேவை இல்லாத அச்சத்தை திட்டமிட்டே சிலர் உருவாக்குகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உள்ளேயே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆலையில் 1100 பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். 2500 பேர் ஆலையின் மூலமாக மறைமுகமாக பெணி வாய்ப்பு பெறுகிறார்கள். ஆலையை மூடுவதால் அவர்களின் குடும்பம் கஷ்டப்படும்.

ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடக்கும் இந்த நிறுவனத்தின் மூலமாகவே நாட்டின் 50 சதவிகித அலுமினிய தேவை ஈடு செய்யப்படுகிறது. அத்துடன் வருமான வரியாக மட்டும் 1,600 கோடி ரூபாய் கட்டப்படுகிறது. இவ்வளவு பெரிய ஆலையை மூடுவது நாட்டின் வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். அதனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 

அரசுத் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் சலீம், ம.தி.மு.க சார்பில் ஆஜரான வைகோ ஆகியோர் இதற்கு பதில் அளிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள், இதற்கு முன்னர் நீதி குழு, உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு போன்றவை ஆலையின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துக்களை பசுமை தீர்ப்பாயத்தில் எடுத்து வைத்தனர். எந்த குழு தெரிவித்த கருத்துக்களையும் ஆலை நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்பதையும் தாங்கள் வாதத்தில் முன்வைத்தனர்.
 
அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சோமையாஜூ, "இந்த ஆலை விதிமுறைகளை மீறுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பலதடவை இது போல விதிகளை மீறி இருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம் விதித்த தடையை நீக்க வேண்டுமானால் அந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டுமே தவிர, பசுமை தீர்ப்பாயத்திடம் அல்ல. அதனால் இந்த மனுவை ஏற்றதே தவறு" என வாதிட்டார்.

இதனால் கோபம் அடைந்த பசுமை தீர்ப்பாணையத்தின் தலைவரான சொக்கலிங்கம், "இதுவரையிலும் இந்த ஆலை 84 முறை அளவுக்கு அதிகமாக கழிவுகளை வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எதற்காக?' என கேள்வி எழுப்பினார்.

தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், நீதிபதி வெளியிட்ட அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது பற்றிய விவரம் நாளை... 

0 comments: