Friday, May 24, 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

குருப்பெயர்ச்சி பலன்கள்
‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
ஜோதிடம்
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை (28.05.2013) கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15-க்கு பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.06.2014 வரை இங்கு அமர்ந்து ஆட்சி புரிவார்.
மேஷம்: கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு தன

வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும்,

அந்தஸ்தையும் கொடுத்து வந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த ஓராண்டு காலத்தில் திட்டமிடாமல் எதையும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி திடீர் செலவுகளும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும்.    
இந்த குரு மாற்றம் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் சகிப்புத் தன்மையால் உங்களை வளர்ச்சியடைய வைப்பதாக அமையும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று வாருங்கள்.

ரிஷபம்: கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்து, பல வகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கனிவாக நடந்து கொள்வார். குருபகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால், திடீர் பயணங்கள் செய்ய நேரிடலாம். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பத்தாவது வீட்டையும் குருபகவான் பார்ப்பதால், மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் ஏற்பட்ட வேலைச்சுமை, வீண் பழி, அவமானங்கள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை மதிப்பார்கள்.
இந்த குரு மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுப்பதுடன் அதிரடி யோகத்தையும் அள்ளித் தரும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் சித்தர் பீடத்துக்கு சென்று நெய் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள்.

மிதுனம்:  இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், அலைச்சலையும் தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடலாம். ஜென்ம குருவாக இருப்பதால், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பணத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்லுங்கள். குருபகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குருபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். என்றாலும், மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும்.  
இந்த குரு மாற்றம் உங்கள் வேலைச்சுமையை அதிகமாக்கினாலும், சிக்கனத்தால் கொஞ்சம் முன்னேற்றத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள்.

கடகம்: இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளைத் தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான். உங்களின் பாதக ஸ்தானமான 11-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதேசமயம், புது சலுகைகளும் கிடைக்கும்.    
இந்த குரு பெயர்ச்சி உங்களை மாற்றுப் பாதையில் சென்று முன்னேற்ற வைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.

சிம்மம்: இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மன உளைச்சல், டென்ஷன், அவமானங்களை ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால், இனி உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால்,  தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், அனுபவப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். தைரியம் கூடும். குரு, ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தை, புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இனி நிம்மதி உண்டு. எதிர்பார்த்தபடி சம்பளம் உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம், குடத்தில் இருந்த உங்களை குன்றின் மேல் ஒளிர வைக்கும்.
பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தின் நந்தவனத்தை சீரமையுங்கள்.

கன்னி: கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்து, ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் புகழ், கௌரவத்தையும் உயர்த்திய குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் 10-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். உங்கள் ராசிநாதனான புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால், எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிக்க அலைச்சல்பட வேண்டி வரும். சின்னச் சின்ன கவலைகள் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டும் முயற்சி பலிதமாகும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்யோகத்தில் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். மூத்த அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.
இந்த குரு மாற்றம், 'சகிப்புத் தன்மை இருந்தால் சாதிக்கலாம்’ என்பதை உங்களுக்கு உணர வைக்கும்.
பரிகாரம்: பைரவரை தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள்.

துலாம்: இதுவரை 8-ல் மறைந்து செலவுகளை இரட்டிப்பாக்கி, குடும்பத்தில் சலசலப்புகளை ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், இனி எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு உண்டு. ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புது சொத்து,  தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்களெல்லாம் வலிய வந்து பேசுவார்கள். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால், வருமானம் உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாட்டில் இருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். சிலர் அலுவலகம் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள்.  
இந்த குரு மாற்றம், உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றித் தரும்.
பரிகாரம்:  நந்திகேஸ்வரரை பிரதோஷ நாளில் வணங்குங்கள்.

விருச்சிகம்: இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைக்கு பரிசு, பாராட்டை தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 8-ம் வீட்டில் மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். முக்கிய விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தினருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில் மறைவதால், அவ்வப்போது நல்லது நடக்கும். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால், நீண்ட நாட்களாக போக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 8-ல் மறைவதால், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் புது சலுகைகளும், பதவிகளும் வரும்.
இந்த குரு மாற்றம் சலிப்பையும், அலைச்சலையும் தந்தாலும்...  தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைக்கும்.
பரிகாரம்:  ஸ்ரீஹயக்ரீவரை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

தனுசு: ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து உங்களைப் பகடைக் காயாக உருட்டிய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்க்க இருப்பதால், சோர்வு நீங்கி, உற்சாகமாக செயல்படுவீர்கள். பல மாதங்களாக அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகள் உங்களின் உள்ளார்ந்த அன்பை புரிந்து கொள்வார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் பலவீனங்களைத் திருத்திக் கொள்வீர்கள். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். புதிதாக வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு இனி முக்கியத்துவம் கிடைக்கும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள்.  
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு முழு பலத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

மகரம்: இதுவரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் புது முயற்சிகளில் வெற்றியைத் தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 6-ம் வீட்டில் மறைவதால், சின்னச் சின்ன பிரச்னைகள் எழும். சகட குருவாக இருப்பதால், குடும்பத்தில் சில சமயங்களில் காரசாரமான விவாதம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். குருபகவான் உங்களின் தன ஸ்தானத்தை பார்ப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 10-ம் வீட்டை குரு பார்ப்பதால், புது வேலை அமைய வாய்ப்பு உண்டு. 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தோழிகள் உங்கள் நிலையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை  இருக்கும். என்றாலும் மதிப்பு, மரியாதையும் குறையாது. சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக வரும்.
இந்த குரு மாற்றம் உங்களுக்கு பணப்பற்றாக்குறையை தந்தாலும், திட்டமிடுதலால் நெருக்கடியிலிருந்து விடுபட வைக்கும்.  
பரிகாரம்:  ஸ்ரீவராஹி அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள்.

கும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும் பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால், விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், அமைதியும் வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தூக்கமின்மை, உடல் உபாதை நீங்கும். குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால், வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கும். சிலருக்கு சொந்த இடத்துக்கே கடையை மாற்றும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில், சம்பளம் உயரும். சக ஊழியர்களால் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.  
இந்த குரு மாற்றம் உங்களை வசதி, வாய்ப்புகளால் நிமிர வைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

மீனம்: இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து முடிவுகள் எடுப்பதில் குழப்பத்தையும், தடுமாற்றத்தையும், மனதில் அச்சத்தையும் தந்து கொண்டிருந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்காமல் ஓயமாட்டீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். என்றாலும், உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான், 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், திருமணம், கிரகப் பிரவேசத்தை போன்றவற்றை போராடி முடிக்க வேண்டி வரும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு வீடு மாறுவது, ஊர் மாறுவது போன்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கிய தோழிகள், உறவினர்களாக இருந்தாலும், அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இடமாற்றம் சாதகமாக அமையும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும்.
இந்த குரு மாற்றம் உங்களை பலவிதங்களில் பந்தாடினாலும், இறுதியில் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபிரத்யங்கரா தேவியை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.


நன்றி - அவள் விகடன்

0 comments: