Friday, November 13, 2015

மரியாதை வேணுமா உங்களுக்கு?

பரிமாறுகிறவர்களால் நிறைந்தது உலகம். அன்பை, நட்பை, காதலை, துரோகத்தை, வெறுப்பை… ஒவ்வொரு கணமும் எதையாவது ஒன்றைப் பரிமாறிக்கொண்டே இருக்கிறோம். நாமும் பரிமாறப்படுகிறோம். நம் தட்டில் விழும் உணவுக்கேற்பவும் நமது தன்மைக்கேற்பவும் எதிர்வினையாற்றுகிறோம்.

வயிற்றுப் பசிக்கான உணவைப் பரிமாறுகிற சமையல்கார்கூட கூலியைவிடப் பாராட்டையே டிப்ஸாக எதிர்பார்க்கிறபோது, அன்பைப் பரிமாறுகிற மென் உள்ளங்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்கத் தானே செய்யும்...?

செக்யூரிட்டி மரியாதை

அடுக்குமாடிப் பிரஜையான சங்கீதாவுக்கு வாசலில் நிற்கும் செக்யூரிட்டிகூடத் தன்னை மதிப்பதில்லை என்று ஆதங்கம். ஆனால், அதே செக்யூரிட்டி அதே குடியிருப்பில் உள்ள வேறு சிலருக்குப் பரிவட்டம் கட்டி, முப்படை அணிவகுப்பை நிகழ்த்தி மரியாதை செய்வார். அவர்களின் காலடி ஓசையை காதுகளுக்கு அப்பாற்பட்ட புலன்களில் உணர்ந்து காற்றைவிட வேகமாய் விரைவார். அவர்களின் லக்கேஜைத் தூக்குதல், கார் கதவைத் திறத்தல் ... என்று சிறந்த அடிமை ஆவார்.

ஆனால், சங்கீதாவைப் பார்க்கும்போது மட்டும் அவருக்குள் ளிருந்து இன்னொருவர் வருவார். “இரும்மா, வரேன்...மனிஷனுக்கு ரெண்டு காலுதான இருக்கு...?” என்பார். “ஜெனரேட்டர் போடணுமா... பேசாம ஸ்டெப்லயே நடந்து போயிருங்களேன்...” என்பார்.

இத்தனைக்கும் அவள், அவரிடம் அன்பாகத்தான் நடந்துகொள்கிறாள். வயதுக்கு மரியாதை கொடுப்பாள். அவரது குடும்பத்தின் சில சோகங்களை அவள் அறிவாள். மற்றவர்களைப் போல் மிச்சமான உணவைத் தராமல், நல்ல உணவையே அவருக்குக் கொடுப்பாள்.... இருந்தாலும்... ஏன்...?

பதில் மரியாதை

அன்பைப் பரிமாறுபவர்களின் நியாயமான பிரச்சினை இது.
இவ்வளவு அன்பாக நடக்கிறோம், மற்றவர்களை மதிப்பதுபோல் தன்னை ஏன் மதிப்பதில்லை..? அடுத்தவரை மனுஷனாய் மதிக்கிற தனக்கு ஏன் மரியாதை கிடைப்பதில்லை...?

எது மரியாதை...?

முதலில், நாம் எதை மரியாதை என்று புரிந்து வைத்திருக்கிறோம்...?

பாசாங்கு மரியாதை

ஒரு மேலாளர் சும்மா பேசினாலே திட்டுறமாதிரி தான் இருக்கும். அப்படியானால் திட்டு...? அவரால் இடைவிடாமல் ஐந்து நிமிடங்கள் திட்ட முடியும். எனவே, அங்கே வேலை பார்ப்பவர்கள் அவரது கண்ணசைவு, முகபாவத்தின் பொருள் சொல்லும் அகராதியுடன் அலைந்ததில் ஆச்சரியம் என்ன?

அவர் மட்டுமல்ல...அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுமை செய்தல், வார்த்தைகளால் வடு செய்தல், பலத்தினால் மனதை நசுக்குதல்...போன்ற செயல்களுக்குப் பயந்து, அவற்றைத் தவிர்க்க விரும்பி “ வந்துட்டேங்க...” என்று ஓடி வந்தால்--- அந்த நடிப்பை, பாசாங்கை --- நிறையப் பேர் மரியாதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தவருக்குப் பயந்து நாம் செய்யும் எந்தச் செயலும் “ மரியாதை “ என்னும் பிரிவினுள் வராது.

உண்மையான மரியாதை

எனில், உண்மையான மரியாதை எது...?

ஒருவரின் உன்னதத்தை உணர்ந்து அதன் காரணமாக, பிறப்பதே மரியாதை. உதாரணமாக, காந்தியடிகளின் கொள்கைகளைப் பிடிக்காதவர்கூட அவருக்கு மரியாதையே செய்வர். அன்னை தெரசாவைக் கண்டதும் ஒருவர் எழுந்து நிற்கிறார் என்றால், அது பயத்தின்பால் வருவதல்ல...

தன்னை ஆளுமை செய்ய நினைக்கும் மனிதனை சக மனிதன் விரும்பவே மாட்டான். எனவே தான், அவன் வேறு வழியின்றி அவரது வார்த்தைகளை அல்ல--உறுமல்களைத் தவிர்க்க விரும்பி நெருங்கிச் செல்கிறானே தவிர, உண்மையில் அவன் அவரிடம் இருந்து வெகுதூரத்தில் தான் இருக்கிறான்...அவன் மனதில் மைண்ட் வாய்ஸ் “வந்துட்டேன்டா நாயே...” என்று தான் சொல்லும்.
இதைப்போல்தான் அன்பும்.

உங்கள் அன்பு நிபந்தனைக்கு உட்பட்டதாக இருந்தால் “ரிப்ளை பை ரிட்டர்ன் மெய்ல்..” என்று பலனை எதிர்பார்க்கும். தன் அன்பு மதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும். பின்னே ஏமாறும்--சங்கீதாக்களைப் போல.... சங்கீதா “என்ன பெரியவரே, உடம்பு சரியில்லையா...?” என்ற தன் அன்பான வார்த்தைகள், தான் வரும்போது கரண்ட் போனால் லிஃப்ட் போட அவரது கால்களுக்கு வேகத்தைத் தரும் என நம்பினாள். ஏமாந்தாள். நம்மில் பெரும்பாலானவர்கள் அன்பு என்ற பெயரில் பூ விலங்கைத்தான் மற்றவர்களுக்கு அணிவிக்கிறோம்.

மரியாதை கெட்ட அன்பு

ஆனால், தூய அன்பு---எவ்வித நிபந்தனைகளும் அற்றது. ...மரியாதையாவது, மதிப்பாவது....! அங்கு உரிமையும், இயல்பான தன்மையுமே இருக்கும்.

நீங்கள் அன்பாக இருக்கலாம். ஆனால், மனிதன் தன்னை யார் சிறுமை செய்கிறார்களோ அவர்களுக்கே முதல் வணக்கம் செய்வான். அன்பான உங்களிடமும் வருவான்.. ஆனால், சிவாஜி தேவர் மகன் திரைப்படத்தில் சொன்னது போல “திடீர்னு வான்னா, அவன் எப்படி வருவான்...? அவன் மெல்லத்தான் வருவான்...”

அன்பாய் இருக்கிறோம்; எனவே, அடுத்தவர் நம்மை மதிக்க வேண்டும்; “நாய் மாதிரி விழறவனுக்குத்தாங்க காலம் “ என்பது உங்கள் வாதமாக இருக்குமானால், அவரது வாதம் “இவ்வளவு அன்பான உள்ளம் படைத்தவர்களால் என் வேதனையை, வலியை, சூழலைப் புரிந்து கொள்ள முடியாதா...?” என்பதாகத்தான் இருக்கும்.

நீங்கள் அன்பைக் கொடுத்தீர்கள். பதிலுக்கு அன்புதான் கிடைக்கும். மரியாதை ஸ்லோமோஷனில் பின்னால்தான் மெதுவாக வரும். உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்றால், அவரது செயல்களில் எவ்வித நடிப்பும் இல்லாததையும், வார்த்தைகளின் உண்மையையும் புரிந்து கொள்வீர்கள்.

எது வேண்டும்?

எனவே, மரியாதை செய்பவர்கள், பெரும்பாலும் பாசாங்குதான் செய்கிறார்கள். அந்தப் போலிச் செயல்களின் பின்னால் உள்ள அன்பின் சதவீதம் ரொம்பக் குறைவாகவே இருக்கும்.
அன்பு வேண்டுமா...? போலி மரியாதை வேண்டுமா என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் வாகனத்தில் பெட்ரோல், டீசல் இரண்டையும் ஒன்றாகப் போட்டால் என்ன ஆகும்? “ இரண்டும் சந்தித்தபோது... பேச முடியவில்லையே ....” என்ற நிலை ஏற்படும். அதன் விளைவுகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

thanks the hindu 

0 comments: