Tuesday, November 03, 2015

உலகின் முதல் துப்பறியும் கதை

எட்கருக்கு அமெரிக்கா வெளியிட்ட அஞ்சல் தலை மற்றும்
‘தி ரேவன்’ கவிதையை விளக்கும் ஓவியம்

எட்கருக்கு அமெரிக்கா வெளியிட்ட அஞ்சல் தலை மற்றும் ‘தி ரேவன்’ கவிதையை விளக்கும் ஓவியம்
உலகெங்கும் பிரபலமானவை ‘ஹாரர்’ வகையைச் சேர்ந்த திகில் திரைப்படங்கள். இந்த வகையில் நாவல்களை எழுதும் எழுத்தாளர்களும் ஏராளம். அவர்களில் எட்கர் ஆலன் போ(Edgar Allan Poe) ஹாரர் கதைகளின் தந்தையாக உலகெங்கும் வழிபடப்படுபவர். உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதியவர். இவரது துப்பறியும் கதாபாத்திரமான அகஸ்டி டுபின் (Auguste Dupin), பல படங்களில் இடம்பெற்றுள்ளது. நாவல்களில் இடம்பெற்ற உலகின் முதல் துப்பறிவாளர் கதாபாத்திரமும் இதுவே. இவர் எழுதிய பல கதைகள் திரை வடிவம் பெற்றுள்ளன. அவ்வகையிலும் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவர் அவரே.
ஆனால், நாற்பதே வருடங்கள் உயிர்வாழ்ந்த ஆலன் போவின் வாழ்க்கையில் துயரமே அதிகமும் நிறைந்திருந்தது. 1809-ல் பிறந்து, 1849-ல் மறைந்த போ, ஒரு சிறுகதை எழுத்தாளர். கவிஞர். வறுமையில் வாடியவர்.
துரத்தப்பட்ட எட்கர்
எட்கரின் தாய் எலைஸா, ஒரு சிறந்த நாடக நடிகை. எட்கருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது அவரது தந்தை, குடும்பத்தையே விட்டுவிட்டு ஓடிவிட்டவர். ‘போ’வின் மூன்றாவது வயதில், அவரது தாயாரைக் கடுமையான காசநோய் தாக்கியது. தனது இருபத்துநான்காவது வயதில் இறந்தார் எலைஸா. இரண்டரை வயதுக் குழந்தை எட்கரின் மனதைத் தாக்கிய கடுந்துயரம் இது. ஒரு பெண்ணிடமிருந்து மரணத்தால் பிரியும் அனுபவம், வாழ்வில் முதன்முறையாக அவருக்கு நேர்ந்தது.
இதன்பின் எட்கரை வளர்த்த தாயான ஃப்ரான்ஸெஸ் ஆலனும் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில், எல்மைரா ராய்ஸ்டர் (Elmira Royster) என்ற பெண்ணின் மேல் காதல்வயப்பட்ட எட்கருக்கு, அப்பெண்ணுடன் நிச்சயமும் ஆகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த எட்கர், விர்ஜீனியா பல்கலைக் கழகத்துக்குச் செல்கிறார். அங்கு பயில்கையில், படிப்புக்கும் வாழ்க்கைக்குமான பணத் தேவை அவரது கழுத்தை நெரித்தது. தனது வளர்ப்புத் தந்தையான ஆலனைத் தொடர்புகொண்டார். பெண் பித்தரான ஆலனோ, எட்கரைத் துரத்தியடித்தார். மகனுக்குப் பணம் எதையும் அனுப்ப மறுத்தார்.
பத்திரிகை ஆசிரியர்
தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தனது கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் இரண்டாயிரம் டாலர்கள் கடனில் மூழ்கிய ஆலன் குடிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் படிப்பைத் தொடர முடியாமல் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி பாஸ்டனுக்குச் சென்றார். அங்கே பிழைப்புக்கு வேறு வழியில்லை என்பதறிந்து தனது பத்தொன்பதாவது வயதில், ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்கள் ராணுவச் சேவைக்குப் பின் தனது அத்தையான மரியா க்ளெம்மின் வீட்டில் தங்கி வாழத் தொடங்கினார். அவரது பன்னிரெண்டு வயது மகள் விர்ஜீனியாவின் மேல் காதல் வயப்பட்டார். ராணுவத்தில் இருந்த இரண்டு வருடங்களில், இரண்டு கவிதைத் தொகுப்புகளை (Tamerlane and Other Poems, Al Aaraaf) வெளியிட்டிருந்தார் எட்கர். பிறகு ‘Southern Literary Messenger’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் எட்கர். இந்தப் பத்திரிகையில் இவர் எழுதிய புத்தக விமர்சனங்கள், பெரும் புயலைக் கிளப்பின. சராசரி எழுத்தாளர்கள் ஒருவரையும் அவர் மன்னிக்கவில்லை. விளாசித் தள்ளினார்.
துயரிலிருந்து பிறந்த எழுத்து
இதே சமயத்தில், விர்ஜீனியாவுடன் எட்கரின் திருமணம் நடக்கிறது. எட்கருக்கு 26 வயது. விர்ஜீனியாவுக்கோ 13 வயது. சட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்க, விர்ஜீனியாவுக்கு 21 வயது என்று சான்றிதழ்கள் தயார் செய்யப்பட்டு இத்திருமணம் நடக்கிறது. ஆண்டு 1842. தனது பத்தொன்பதாம் வயதில், இருமும்போது விர்ஜீனியாவின் வாயிலிருந்து ஒருதுளி ரத்தம் வெளிவருகிறது. உடனடியாகவே அது காசநோய் என்று கண்டுகொள்கிறார் எட்கர். மரணம் விர்ஜீனியாவைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்து, மறுபடியும் பெருங்குடியில் மூழ்கினார்.
விர்ஜீனியாவுடன் வாழ்ந்த காலங்களில்தான் எட்கரின் புகழ்பெற்ற படைப்புகள் ஒவ்வொன்றாக வெளியாயின. வாழ்க்கையின் இருண்ட தருணங்களில் அவர் எப்போதும் மூழ்கியிருந்ததால், தனது மனதின் அடியாழத்தில் ஒளிந்திருந்த வாழ்க்கையைக் குறித்த பயத்தை, தன் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினார் எட்கர். மரணங்களைப் பற்றியும், மரண பயத்தைப் பற்றியும் அவரது படைப்புகள் பேசத் தொடங்கின. ‘Murders in the Rue Morgue’ வெளிவருகிறது. இக்கதையே ஆர்தர் கானன் டாயலுக்கு, ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்க உந்துதலாக அமைந்தது. அவ்வகையில், உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதுகிறார் எட்கர்.
அவர் எழுதிய ஒரு படைப்பு, புகழின் உச்சத்திற்கு அவரைக் கொண்டுசென்றது. அதுதான் The Raven என்ற கவிதை. எழுதிய ஆண்டு ஜனவரி 1845. இன்றளவும் உலகம் முழுதும் கொண்டாடப்படும் கவிதை இது. இதன் முழு வடிவத்தை இன்றும் இணையமெங்கும் விவரமாகவே படிக்கலாம்.
வறுமையின் கைப்பாவையாக
எட்கரின் வாழ்வின் இருண்மையை முழுதாக வெளிக்கொணர்ந்த அந்தக் கவிதையை, பல இடங்களில் படிக்கச்சொல்லி அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எட்கரிடம் இருந்தது ஒரே கோட்டு. கூடவே, கிழிந்த சட்டை ஒன்று. ஆகவே, சட்டை அணியாமல், கோட்டை கழுத்து வரை இறுக்கமாகப் போட்டுக்கொண்டே இக்கவிதையைப் பல மேடைகளில் படித்திருக்கிறார் எட்கர். ஆனால் அங்கீகாரம் கிடைத்ததே தவிர பணம் கிடைக்கவில்லை. தனது வாழ்வையே கவிதையாக உருமாற்றிய அந்தக் கவிஞனின் மனம், படாதபாடு பட்டது. குளிர்காலத்தில், தனது ஒரே கோட்டையும் மனைவி விர்ஜீனியாவுக்கு அணிவித்துவந்தார் எட்கர். பணம் சம்பாதிப்பது மட்டும் அவரால் முடியவில்லை. எழுத்தால் மட்டுமே பணம் என்றே வாழ்ந்ததால், சமுதாயம் அந்த இலக்கியவாதியைப் புறக்கணித்தது. அவனது படைப்புகளை மட்டும் படித்து, அவனது வாழ்வை வாழ அவனுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் அளிக்க மறுத்தது.
ஆண்டு 1847. விர்ஜீனியா இறந்தார். மனைவியை இழந்ததால் கடுமையான மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார். 1849. திடீரென ஒரு நாள் காணாமல் போனார் எட்கர். என்ன நடந்தது என்றே இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு தெருவில், அளவில் பொருந்தாத உடைகள் அணிந்து, மயக்கமுற்றுக் கிடந்த எட்கரை, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். அக்டோபர் 7 1849. அதிகாலையில் திடீரென விழிப்பு அடைகிறார் எட்கர். ‘கடவுளே.. எனது பரிதாபத்துக்குரிய ஆன்மாவைக் காப்பாயாக’ என்ற வார்த்தைகளை மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்.
மரணமடைகிறார் எட்கர் ஆலன் போ. அது அவரது நாற்பதாவது வயது. மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்திருக்க வேண்டிய எட்கர், இப்படியாக அகால மரணம் அடைந்தார்.
உலகெங்கும் இன்றும் பல திரைப்படங்கள் எட்கர் ஆலன் போவின் கதைகளையும் கவிதைகளையும் மையமாக வைத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவரது படைப்புகளைப் பற்றிப் பல ஆய்வுகள் நடக்கின்றன. திரைப்படங்களில் ‘ஹாரர்’ என்ற வகையில் படம் எடுக்க விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் எட்கர் ஆலன் போவைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அப்படங்களில் பல்வேறு அடுக்குகளில் பல ஆழமான விஷயங்களைப் பற்றிப் பேச முடியும்.
தொடர்புக்கு: [email protected]


தஹிந்து

0 comments: