Saturday, November 07, 2015

மனுசங்க.. 27: மாசம் சுளையா ஒரு ரூபா சம்பளம்!

இந்த மஞ்சள் நிற தொழதொழா அங்கிச்சட்டை போடுறதுக்கு முன்னாடி துரசாபுரம் தாத்தாவும் அந்த ஊர்க்காரங்க போல வேட்டியக் கட்டி முழங்கால் உசரத்துக்குவிட்டு பின்புறம் சொருகிக்கொண்டு, ஒரு வட்டலேஞ்சி மட்டுமெ கட்டிக்கொண்டு தான் இருந்தார். இந்தத் தொங்காரமாகக் கட்டிக் கொள்கிறதும் மடிச்சிக் கட்டிக் கொள்கிறதும் இப்பத்தான் வந்தது.
தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில், இந்த மண்ணில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகளையே உண்ணுவது என்றுதானிருந்தது.
“இந்த நெல்லுச் சோறுங்கிறது நேத்துவந்ததுதான்” என்பார்கள்.
‘‘அப்போ கல்யாணம்போல விசே ஷங்களுக்குப் பந்தி பரிமாற என்ன சாப்பாடு செய்தீர்கள்?’’ என்று கேட்டால்.
பெரியப் பெரிய மண் பானைகளில் கம்மம்புல் குத்திப்போட்டு கம்மஞ்சோறு தான். நாலைஞ்சி ஆடுகளை அறுத்துப்போட்டு ஆட்டுக்கறிதான். கட்டாயம் தயிர் உண்டு.
காலையில் கருப்பட்டித்தான். பணி யாரம், வடை இப்படி இருக்கும்.
“பெரிய பானைச் சோறு” என்ற பெயர் கம்மஞ்சோறுக்கு உண்டு. சிறிய பானைச் சோறு என்றால் நெல்லுச் சோற்றைக் குறிக்கும்.
எல்லாச் சோற்றுக்கும் தலையாயது பருப்புக்கறிதான்.
‘‘எப்போ எங்களுக்குப் பருப்புச் சோறு போடப்போறீக?’’ என்று யாராவது கேட்டால், ‘கல்யாணச் சாப்பாடு எப்போ?’ என்று அர்த்தம். அதிலும், முக்கியமாக நிச்சயதார்த்தம் அன்று நூற்றுக்கு நூறு தனிப் பருப்பும், நெய்யும்தான். மருந்துக்குக்கூட அதில் காரமோ, புளிப்போ இருக்கக்கூடாது.
பருப்புப் பிரியர்கள் என்று தனியாக தாத்தாக்கள் உண்டு. அவர்களுக்குப் ‘பப்பு தாத்தா’ என்றே பட்டப்பெயர் இருக்கும். எத்தனை தடவை மறு சாதம் வாங்கினாலும் பருப்புக்கறி பருப்புக்கறிதான்!
அரிசியில் பருப்பைச் சேர்த்து சாதம் வடிக்கிறதும் உண்டு. முக்கியமாக உளுத்தம்பருப்பு. அதன் தோல் களைந்தும் களையாமலும்; இரண்டு வகைப் பிரியர்கள். இதுக்குக் காரண மான கோழிக் கறி விசேஷம்!
தசரதராம் சீத்தாராமனைப் போல சாப்பாட்டுராமன்கள்தான் மனுசர்களில் அதிகம். இவனுடைய அனுபவிப்பில் சரிபாதி சாப்பாடுதான்.
“அடைமழைக் காலங்களில் ராத்திரி பூஜையின்போது, குற்றாலம் திருக் கோயிலில் சுவாமிக்கு சுக்குவெந்நி உண்டு தெரியுமோ?” என்று கேட்டார் ஒருத்தர்.
‘‘தெரியாதே சுவாமிகளே’’ என்றார் மற்றவர். ‘‘சாப்பிட்டவை செமிக்க வேண்டிதான்’’ என்று ஆமோதித்த இன்னொருவர் ‘‘தீபாவளி பட்க்ஷணம் செய்யும்போதே அம்மாக்கமார் ‘தீபாவளி மருந்து’ என்று லேகியம் போல ஒன்றை யும் தருவார்களே ஞாபகம் இருக்கா?’’ என்று விளக்கினார்.
‘‘பிளாக்கெட்’’
என்று சொல்லி ஒரு நாள் ஒருவனைத் திட்டினார் தாத்தார்.
இது ஒரு வசவு என்று யாருக்கும் தெரியாது. சிரிப்புதான் வந்தது கேட்ட வர்களுக்கும் பட்டவனுக்கும்.
வெளிநாட்டுச் சாமான்களின்மீது நம்மிடையே ஒரு மதிப்பு இருப்பதைப் போல, வெளி நாட்டு வசவுகளின்பேரிலும் இருக்குமோ என்னவோ
டேய் கருந்தலையா, கருவாயா (பிளாக்ஹெட், பிளாக் மவுத்) என்ப தெல்லாம் ஒரு வசவா?
ஒரு வெள்ளைக்கார அம்மையார் கேட்டார்: ‘‘ரோமம் என்று சொல்வதை ஒரு வசவாக எப்படிக் கருதுகிறார்கள் உங்கள் மக்கள்’’ என்று.
எப்படி பதில் சொல்லுகிறது.
அந்த அம்மையார் தமிழ் படித்துக் கொண்டிருப்பவர்.
அது ரோமம் இல்லையம்மா மயிர் என்று பதில் சொல்லப்பட்டது.
‘‘இரண்டும் ஒன்றுதானே…’’ என்றார் அவர்.
ஆமாம்; ஒன்றுதான். ஆனாலும் ரோமம் என்றால் கோபப்பட மாட்டார்கள். வார்த்தைகளின் விசித்திரமே தனிதான்!
எங்கே திரும்பினாலும் மரங்கள்தான் அந்த ஊரில். முக்கியமாகப் பனை மரங்கள் தோப்புத் தோப்பாய்; ஆயிரக் கணக்கான மரங்கள். தாத்தாவின் குடும் பத்துக்கே ஆயிரம் மரங்கள் சொந்தமாக இருந்தன. விடலிகள், பருவப் பனைகள் மற்றும் ஆண், பெண் மரங்கள் என்று.
பனைமரங்களின் மகத்துவத்தை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
துரசாபுரம் தாத்தாவின் வீட்டுக்கு ஒரு புது வேலையாள் சம்பளக்காரனாக வந்திருந்தான். ‘சக்கணை’ என்று பெயர் அவனுக்கு.
அந்தக் காலத்திய சம்பளக்காரர் களுக்கு வருஷத்துக்கு ஒருமுறைதான் சம்பளம் தருவார்கள். சாப்பாடு மூணுவேளையும். துணிமணியும் உண்டு. வீட்டோடு தங்கிக்கொள்ளலாம். சித்திரை மாதத்திலிருந்துதான் கணக்கு. ஒவ்வொரு மாசத்துக்கும் சம்பளம் சுளையாக ஒரு ரூபாய்.
தாத்தா காலத்து ஏழு ரூபாய்களை கொண்டுபோய்க் கொடுத்தால், ஒரு பவுன் கிடைக்கும் சொக்கத் தங்கமாக.
சோபாக் கட்டிலில் தாத்தா உட் கார்ந்து தலை சாய்த்தார். அப்படிப் படுத்துக்கொண்டே வீட்டிலும் தெரு வழியாகவும் போற வாரவர்களைப் பார்க்கலாம்.
இந்தப் பட்டகசாலை அகலமும் நீளமும் கொண்ட அமைப்பில் இருக் கும். எதிர்மூலையில் சக்கணையன் கும்பாவின் முன்னால் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். கம்மஞ் சோற்றை ஆள்க்காடி விரலால் ஒரு வழிப்பு வழித்து, காணத் துவையளின் மேல் பட்டதோ, படலையோ என்று தொட்டு எடுத்ததும் தெரியாது, களு கென்று விழுங்கியதும் தெரியாது. அப்படியொரு வேகம்.
பசி வயிறு ‘கொண்டா… கொண்டா என்கிறதாம்.
ரெங்கநாயகிப் பாட்டிதான் சோறு வைத்துக்கொண்டிருந்தாள்.
பாட்டிக்கு ஒரு சந்தேகம் கேட்கணும் என்று, ‘‘சக்கணை’ங்கிறது எந்தச் சாமியோட பெயரு?
‘‘அது ஏம்பேரு இல்லேம்மா; எங்க ஊரோட பேரு.’’
‘‘ஊரோட பேரா? அந்த ஊரு எங்கிட்டு இருக்கு?’’
இப்போ அந்த ஊரு இல்லேம்மா; ஊரு அழிஞ்சிபோயிட்டது.’’
சாய்ந்து படுத்திருந்த தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
- இன்னும் வருவாங்க…


தஹிந்து

0 comments: