Wednesday, November 11, 2015

நடிகையை திருமணம் செய்துகொள்வது என்ன தப்பு இருக்கிறது.-அது எனக்குக்கிடத்த “வரம் “ - விஷால் சூசக பேட்டி

  காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்னைகளில் எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த மாட்டோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியும் வந்திருக்கிறது. நடிகராகவும், சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பணிகளை செய்யவேண்டிய கடமையில் இருக்கிறேன். பொறுப்புகள் அதிகமாகியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளேன். பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘மதகஜராஜா’ எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. அடுத்து முத்தையா இயக்கும் ‘மருது’ படத்தில் நடிக்க உள்ளேன். லிங்குசாமி இயக்கும் ‘சண்டைக்கோழி’ இரண்டாம் பாகம் படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

நடிகர் சங்க கட்டட கட்டுமானப்பணி ஜனவரியில் தொடங்குமா?

நடிகர் சங்க கட்டட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கான பத்திரத்தை சரத்குமார் எங்களிடம் வழங்கியிருக்கிறார். தற்போது வரவு–செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கட்டடத்துக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும்.

நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்ட புதிய படம் எடுக்கப்போவதாக சொன்னீர்களே?, அதில் ரஜினிகாந்த்– கமல்ஹாசன் நடிப்பார்களா?

எல்லா நடிகர்களும் சேர்ந்து இந்த படத்தை எடுக்க உள்ளோம். டைரக்டர் யார், எந்தெந்த நடிகர்கள் நடிப்பார்கள், என்ன மாதிரி கதை, மொழிமாற்று படமா, நேரடி படமா என்பதுபற்றியெல்லாம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களையும் நடிக்க அழைப்போம்.

உங்கள் புதிய படத்தில் ராதாரவி நடிக்கிறாரா?

என் படத்தில் ராதாரவி நடிப்பது டைரக்டரின் முடிவு. கதைக்கு தேவையென்றால் சரத்குமாருடனும் இணைந்து நடிப்பேன். நாங்கள் தேவைப்பட்டால் சந்தித்தும் பேசுவோம். கார்த்தி ஏற்கனவே சரத்குமாரை சந்தித்துள்ளார்.

உங்கள் திருமணம் எப்போது?

என் திருமணம் இப்போதைக்கு இல்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டியப்பிறகு திருமணம் செய்துகொள்வேன்.

காதல் திருமணம் செய்வீர்களா?, பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணப்பீர்களா?

‘எனக்கு காதல் திருமணம்தான் சரிபட்டு வரும். கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்துகொள்வேன்.

நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண் நடிகையாக இருப்பாரா?

நடிகையை திருமணம் செய்துகொள்வது என்ன தப்பு இருக்கிறது. என்னிடம் ஒளிவு மறைவு கிடையாது. எதுவும் வெளிப்படையாகவே பேசுவேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கிறது. நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் நல்லது செய்யவே, நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வரமாட்டேன், தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்.

காவிரி பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்று நீங்கள் சொன்னதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே?

எனது வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போராடுபவர்கள் முதலில் ஏழைப்பிள்ளைகளை படிக்க வையுங்கள். காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பது அரசு செய்யவேண்டிய வேலை. அதற்கான போராட்டங்களில் நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நடிகர் சங்கம் கலந்துகொள்ளாது. அரசு சார்ந்த விஷயங்களில் நடிகர் சங்கம் பங்கேற்காது. நானும் தமிழன்தான், தமிழ் குடிமகன்தான். சென்னையில்தான் பிறந்தேன். காவிரி பிரச்னைக்கு தீர்வு ஏற்படவேண்டும் என்பது என் ஆசை.

நன்றி - விகடன்

0 comments: