கருமையைப் போக்கும் கமலாப்பழம்!
கமலா ஆரஞ்சுப்பழத்தோலை அரைத்து, பயத்தமாவு, சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகச் சுருக்கம், கரும்புள்ளிகள், தேமல் மறைந்து பிரகாசமாக ஜொலிக்கும்.
பழத் தோலை நன்றாகக் காயவைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
'பளீர் வண்ணத்தில், சுவையான சாறு நிறைந்த ஆரஞ்சுப்பழத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடும் கமலா ஆரஞ்சுப்பழத்தின் சீசன் இது. எல்லா மாதங்களிலும் கிடைக்கும் வெளிநாட்டு ஆரஞ்சுப்பழங்களைவிட, இந்த சீசனில் கிடைக்கும் நம்ம ஊர் ஆரஞ்சுப்பழத்தின் சுவையே அலாதி. சுவை மட்டுமல்ல, கெட்ட கொழுப்பைக் குறைத்தல், சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்னைகளைத் தவிர்த்தல் என ஏராளமான பலன்கள் தரும் ஆரஞ்சுப்பழம்' என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மு.தணிகை அரசு.
'சளி பிடிக்கும் என்ற தவறான புரிதலினால் சிலர் தட்டிக்கழிக்கும் ஆரஞ்சுப்பழத்தின் அற்புதங்கள் பல. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட இந்தப் பழத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பலன்கள் நிரம்பியவை. வைட்டமின் சி நம் உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்னும் பொருளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இதனால் செல்களின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றன.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதில் உள்ள லிமனாய்ட் (limonoids) என்ற வேதிப்பொருள் தோல், நுரையீரல், மார்பகம், குடல் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும். இதயத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவும் பொட்டாசியம் தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.
இதன் எண்ணெயிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கமலாப் பழத்தின் ஒருவகைக் காய்கள்தான் உலர் ஊறுகாய் தயாரிக்கப் பயன்படும் நார்த்தங்காய். சாப்பாட்டுக்குப் பிறகு ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். வாய்க் கசப்பைப் போக்கும். தோல் நோய்கள் குணமாகும். தாது விருத்திக்கு நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடியது. பெண்கள் கருவுற்ற காலங்களில், வாட்டி எடுக்கும் வாந்தியைக் கட்டுப்படுத்த ஆரஞ்சுச் சாறை லேசாகச் சூடாக்கி இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். இதனால் சளி பிடிக்காது.


சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போலவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால்தான் அழகுசாதனப் பொருள்கள் பலவற்றில் ஆரஞ்சு சேர்க்கப்படுகிறது. தோலில் கறுப்புப் படைகள் இருந்தால், ஆரஞ்சுப் பழச்சாறைத் தொடர்ந்து தடவினால், படைகள் மறையும். சிலர், கண்ணில் மை வைத்துக்கொண்டதுபோல் கறுப்பாக இருப்பார்கள். சிலருக்கு, உடலில் திட்டு திட்டாகக் கருமை படர்ந்திருக்கும். கமலா ஆரஞ்சுச்சாறுடன், தக்காளிச்சாறு, பசுநெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பொலிவடையும். உடல் உஷ்ணம் தணியும். பழத்தின் தோல், காய்ந்த மிளகாய், பூண்டு, சோம்பு, லவங்கம் இவற்றைச் சேர்த்து, சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்து, சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட்டால், வாந்தி, குமட்டல், விக்கல், பித்த மயக்கம் சரியாகும்.

இதைத் தவிர, காய்ந்த தோலைக்கொண்டு வீட்டில் புகை மூட்டுவதன் மூலம் வீட்டில் கொசு வராமல் பாதுகாக்கலாம். எல்லோருக்கும் ஏற்ற ஏராளமான மருத்துவப் பலன்களைக்கொண்ட கமலாப்பழத்தை, இந்த சீஸனிலேயே ருசியுங்கள்'' என்கிறார் டாக்டர் தணிகை அரசு.
- த.வா.நல்லிசை அமிழ்து படங்கள்: மு.லலித் குமார்
பழத்தோலும்
பளிங்கு முகமும்!
.jpg)
.jpg)
-விகடன்
0 comments:
Post a Comment