Wednesday, November 04, 2015

மரபு மருத்துவம்: வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்-டாக்டர் வி. விக்ரம்குமார்

  • நிலவேம்பு மலர்
    நிலவேம்பு மலர்
டெங்கு, சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் எனப் புதுப்புது வைரஸ் காய்ச்சல் வகைகள் பெருகிவரும் காலம் இது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வீரியமிக்க மருந்து பல நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துவருவதைப் பலரும் அறியவில்லை.
சளி, இருமலுக்கு மிளகு - சுக்கு கஷாயம், காய்ச்சலுக்கு நிலவேம்புடன் வேப்பங்கொழுந்து கலந்த கஷாயம், வயிற்று வலிக்குச் சீரக - ஓம கஷாயம் என இயற்கை மருந்துகள் ஆட்சி செலுத்திய காலம் மருவி, ‘கஷாயம்’ என்ற வார்த்தை இன்றைக்கு வரலாறாகிவிட்டது. நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், பித்தசுரக் குடிநீர், ஆடாதொடைக் குடிநீர், சிறுபீளைக் குடிநீர் எனப் பல்வேறு வகையான குடிநீர் வகைகள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் வீரியம் பெற்றுவரும் நிலையில், மறைந்த கஷாய (குடிநீர்) கலாச்சாரத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் குடிநீர்
சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக அமைந்தவுடன், வரிந்து கட்டிக்கொண்டு வரும் டெங்கு, சிக்குன் குன்யா, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல் அரக்கர்களைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய மருத்துவச் சமூகம். நம் நாட்டில் `நவீன விஞ்ஞானம்’ அறிமுகமாகாத ஆதிகாலத்திலேயே, எழுத்தாணிகொண்டு ஓலைச்சுவடிகளில் மருத்துவ முறைகளைப் பொறித்துவைத்த சித்தர்களின் ஞானம் ஓங்கி இருந்தது. மருத்துவ உலகுக்குச் சித்தர்கள் அறிமுகப்படுத்திய நிலவேம்புக் குடிநீர், அனைத்து வகையான காய்ச்சல்களையும் தீர்க்கவல்லது.
என்னவெல்லாம் இருக்கிறது?
நிலவேம்புக் குடிநீரில், நிலவேம்புடன் வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனத் தூள், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் போன்ற ஒன்பது வகையான மூலிகைகளின் கலவை அடங்கியுள்ளது.
குடிநீர் தயாரிப்பு முறை
இரண்டு தேக்கரண்டி நிலவேம்புத் தூள் கலவையுடன், இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து அரை டம்ளராக வற்றியவுடன், கசடை வடிகட்டிவிட்டு அருந்த வேண்டும். அனைத்து வகையான காய்ச்சல்களும் நீங்கும். காய்ச்சல் நீங்கிய பின் ஏற்படும் உடல் வலி மற்றும் உடல் சோர்வு போன்றவையும் அகலும். மருத்துவரின் ஆலோசனைப்படி நீரிழிவு நோயாளிகளும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். தினமும் இரண்டு வேளை பருகலாம். தயாரித்து மூன்று மணி நேரத்துக்குள் குடிநீரை அருந்துவது சிறப்பு.
நீர் வடிவ மருந்து
நீர் வடிவ மருந்து திசுக்களால் எளிதாக உறிஞ்சப்பட்டு, விரைவாகப் பலன் தரும் என்பது ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை. அந்த வகையில், நீர் வடிவில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர், விரைவில் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும் வல்லமைகொண்டது. பழமையான கஷாயத்தின் மகிமையை மறந்துவிட்டு, கசப்பான உடல்நிலையுடன் அலைந்துகொண்டிருக்கும் நாம், ஓர் அற்புதமான மருந்தையும் மருந்து வடிவத்தையும் நம் அணுக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
செயல்படும் முறை
காய்ச்சல் காரணமாக மந்தமடைந்த பசித் தீயைத் தூண்டவும், சோர்வடைந்த மனதுக்குத் தெளிவைத் தரவும், காய்ச்சலின் உக்கிரத்தைக் குறைக்கவும் நிலவேம்பும் பற்படாகமும் உதவுகின்றன. கொண்ட நச்சை அகற்றும் செய்கையும், காய்ச்சலைக் கண்டிக்கும் குணமும், உடலில் தேங்கிய நச்சுப் பொருட்களை நீக்கும் சிறப்பும் வாய்ந்தவை.
பித்தம் அகற்றும் செய்கை கொண்ட விலாமிச்சை வேர், அதிகரித்திருக்கும் பித்தத்துக்கு ஆறுதல் தரும். சந்தனமும் கோரைக் கிழங்கும் வியர்வையைப் பெருக்கி, காய்ச்சலைத் தணித்து, உடலைத் தேற்றி உரமாக்கும் மகிமை கொண்டவை. வியர்வையைப் பெருக்கி உடல் வெப்பத்தை விரைவாகத் தணிக்கும் தன்மை கொண்டது வெட்டிவேர். கசப்புச் சுவை கொண்ட பேய்ப்புடல், காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும். மொத்தத்தில், நிலவேம்புக் குடிநீர் காய்ச்சலைக் குறைக்கும் மாமருந்து.
இன்றைக்கு அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார நிலையங்களிலும், இலவசமாக வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரைப் பயன்படுத்தித் தீவிரக் காய்ச்சல் நோய்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.
கட்டுரையாளர்,

 த
ஹிந்து
ட்
அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: [email protected]

0 comments: