Saturday, November 07, 2015

'புரூஸ்லி-போட்ட முதலீட்டை விட 4 மடங்கு வசூல்-ஜி.வி. பிரகாஷ் பேட்டி

“என்னுடைய இரண்டு படங்களுமே போட்ட முதலீட்டை விட 4 மடங்கு வசூல் செய்துவிட்டன. அதே வரிசையில் மூன்றாவது படமும் இருக்க வேண்டும் என்றுதான் 'புரூஸ்லி' பண்ணப் போறேன்” என்று உற்சாகம் கரைபுரளப் பேச ஆரம்பித்தார் கோலிவுட்டின் புதிய நாயகன் ஜி.வி.பிரகாஷ்.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்துக்குப் பயங்கர எதிர்ப்பு கிளம்பியதே?
உண்மைதான். விமர்சனங்களைத் தாண்டி தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியம். நாங்கள்தான் முதலிலேயே ‘ஏ’ சான்றிதழ் என்று சொல்லிவிட்டோமே. ‘சிகப்பு ரோஜாக்கள், ‘காதல் கொண்டேன்' போன்ற படங்கள் உருவான காலங்களில் இளைஞர்களை அவை எப்படிக் கவர்ந்ததோ, அதே பாணியில்தான் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படமும்.
‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்துக்கு உங்களுக்கு கிடைச்ச பாராட்டு?
ரஜினி சார் என்னுடைய நடனத்தைப் பார்த்து தாணு சாரிடம் பாராட்டியிருக்கிறார். விஜய் சார் “சூப்பரா இருக்குணா டான்ஸ்” என்று வாழ்த்தினார். எங்கு சென்றாலும் இளைஞர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இளைஞர்களை அந்தப் படம் கவர்ந்திருக்கிறது. அதனால்தான் நல்ல வசூல் கிடைத்திருக்கிறது. தெலுங்கில் ஒரு நேரடி படம் பண்ணக் கேட்டிருக்கிறார்கள். அதற்கான சூழல் அமையும்போது பண்ணுவேன்.
சில காலங்களுக்குப் பின்பு மக்களிடையே நீங்கள் எப்படி அறியப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
எனக்கு எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை. ஜி.வி.பிரகாஷ் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பார்; அவருடைய இசை இப்படித்தான் இருக்கும் என்று என்னை யாருமே கணிக்காத களத்தில் பயணிக்கத்தான் ஆசை. அதற்குத்தான் வெவ்வேறு கதைக் களங்களில் பயணிக்க இருக்கிறேன். ‘புரூஸ்லீ', ‘கெட்ட பயடா இந்த கார்த்தி', இயக்குநர் ராஜேஷ் படம், ‘டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன் படம். இப்படி நான் பயணிக்க இருக்கும் கதைகள் அனைத்துமே நீங்கள் எதிர்பார்க்காத வகையில்தான் இருக்கும்.
‘மதயானைக் கூட்டம்' படத்துக்குப் பிறகு ஏன் படம் தயாரிப்பதை நிறுத்தினீர்கள்?
இப்போது படங்களுக்கு இசை, நடிப்பு என நேரம் சரியாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது கதைகள் கேட்டுவருகிறேன். நல்ல கதைகள் வரும்போது நிச்சயம் தயாரிப்பேன். எனக்கு நல்ல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தும் ஆசை இருக்கிறது. நானே நடிக்கும் படத்தை ஒரு போதும் தயாரிக்க மாட்டேன். அதற்காக நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கவில்லை. அடுத்த ஆண்டு ஒரு படம் தயாரிப்பது உறுதி.
இசையிலிருந்து விலகி முழுநேர நடிகராகிவிட்டது போல் தெரிகிறதே?
கண்டிப்பாக இல்லை. இப்போதும் 4 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நடிப்புக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய ஒவ்வொரு பாடலுமே நான் இதுவரைக்கும் பண்ணியதுபோல் இருக்கக் கூடாது என்றுதான் பண்ணுகிறேன். சில நேரங்களில் “இவன் ஒரே பாட்டைத்தான் திரும்பத் திரும்ப போடுகிறான்” என்கிறார்கள். இதுவரைக்கும் 10 வருடங்கள் நின்றுவிட்டேன், இன்னொரு 10 வருடங்கள் நிற்கிற மாதிரிதான் ஒவ்வொரு படத்தின் இசைக்கும் உழைக்கிறேன்.
ஒரு கதையைக் கேட்டவுடன், வெற்றிபெறும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்.?
ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். எவ்வளவு பெரிய படம் பண்ணினாலும் திரைக்கும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் இடைவெளி இருக்கக் கூடாது. இடைவெளி விழுந்துவிட்டால் அந்தப் படம் தோல்வியடைகிறது. ரசிகர்களோடு ஒன்றிய கதைக் களங்களில்தான் பயணிக்க ஆசை. இதுவரை 50 படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். இதுகூடத் தெரியாமல் இருந்தால் எப்படி?
அனைத்துக் கதைகளையுமே, ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் சராசரி ரசிகனின் பார்வையில்தான் கேட்கிறேன்.
பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணும் திட்டம் எதுவும் இருக்கிறதா?
கண்டிப்பாகப் பண்ணுவேன். ஆனால் இப்போதைக்குத் தனி நாயகனாகப் பயணம் செய்வதுதான் திட்டம். மற்ற நாயகர்களோடு இணைந்து நடிக்கும் எண்ணம் இல்லை. எனக்குச் சரித்திரப் படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். அந்தப் படத்தை இப்போது நான் பண்ண முடியாது. அந்தப் படத்தின் பட்ஜெட்டுக்கு முதலில் நான் பெரிய நடிகனாக வளர வேண்டும். வளர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

-தஹிந்து

0 comments: