Wednesday, November 21, 2012

அஜ்மல் கசாப் - தூக்கு தண்டனை - விவாதங்கள்

கசாப் தூக்கு ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்? 
Posted Date : 11:44 (21/11/2012)Last updated : 12:47 (21/11/2012)
புதுடெல்லி: அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலேயே அஜ்மல்  கசாப் தூக்கிலிடப்படுவது ரகசியமாக வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர்  சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30  மணியளவில் புனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.இந்நிலையில் கசாப்  தூக்கிலிடப்படும் வரை அது குறித்த தகவல் வெளியில் கசியவிடாமல் ரகசியம்  காக்கப்பட்டது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது.இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்  குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்,"எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல்  இருப்பதற்காகதான், கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பையும் அரசு  வெளியிடாமல் ரகசியம் காத்தது.இதற்கான அடிப்படை காரணம் இதுதான்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி சித்திக் கொல்லப்பட்டதற்கு  பழிவாங்கும் வகையில் ஆகஸ்ட் 1 ல் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த  திட்டமிடப்பட்டது.எனினும்,சரியாக செயல்படாத காரணத்தால் வெடிகுண்டுகள்  வெடிக்கவில்லை.இதனால் பேராபத்து நீங்கியது.எனவே, கசாப் தூக்கிலிடப்படுவதை  தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக தான்  தகவல்கள் வெளியிடப்படவில்லை” என்றார்.
புதுடெல்லி: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட  தகவல் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்  குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், கசாப் தூக்கில் போட்டதை கடிதம் மூலம்  பாகிஸ்தானுக்கு தெரிவித்தது. ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.  இதனையடுத்து அத்தகவல் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டதாக ஷிண்டே தெரிவித்தார்.

கசாப்பை தூக்கிலிடப்பட்டதன் மூலம் , மும்பை தாக்குதல் வழக்கில் நீதித்துறையின்  உத்தரவை நிறைவேற்றியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
 கசாப் தூக்கு: பா.ஜனதா வரவேற்பு!

புதுடெல்லி: கசாப் தூக்கில் போடப்பட்டதை பா.ஜனதா வரவேற்றுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி  கூறுகையில்,"அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது தாமதமானாலும் வரவேற்க்கத்தக்கது.

தூக்கில் போட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு.நாட்டின் எதிரி  தண்டிக்கப்பட்டுள்ளார்” என கூறினார். 


மும்பை: அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம் என்றும்,  நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றும் மும்பை  தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகாம்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," கசாப்பை தூக்கில் போட்டதன்  மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு அஞ்சலி  செலுத்தியுள்ளோம்.

கசாப்பை குற்றவாளி என நிருபித்து தூக்கு தண்டனை கிடைத்ததன் மூலம், நாம்  மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் எவ்வாறு ஈடுபட்டது என்பதை நிருபித்துள்ளோம்.  கசாபை தூக்கில் போட்டதன் மூலம் மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களை இந்தியா  சகித்து கொள்ளாது என வெளிப்படுத்தியுள்ளோம்.குற்றவாளிகளை நீதி முன்னர்  நிறுத்துவோம் என்பதை நிரூபித்துள்ளோம்.இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டி உள்ளோம்” என்றார்.




நன்றி - விகடன்


புதுடில்லி: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கில் இடப்பட்டான். அவனது கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர், 26ம் தேதி, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையில் முடிவில், அவனுக்கு 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகமும் நிராகரித்ததுள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இம்மாதம் 8ம் தேதி நவம்பர் முதல் வாரத்தில் நிராகரித்தார். ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலை சிறையிலிருந்த கசாப், புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டு தூக்கில் இடப்பட்டான். கசாப்பின் தூக்கு தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது சரியானதே என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரவேற்பு:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப் தூக்கில் இடப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. பா.ஜ., கம்யூனிஸ்ட், தி.மு.க., உட்பட பல கட்சிகளும் தூக்கு தண்டனையை வரவேற்றுள்ளன. இதே போல், மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கசாப்பின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கசாப் வழக்கு: முக்கிய திருப்பங்கள்


2010 அக். 18: மரணதண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு செய்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. கசாப் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்.அக். 19: கோர்ட்டில் நேரடியாக ஆஜராக விரும்புவதாகவும், அமெரிக்காவுக்கு அனுப்புங்கள் என்றும் கசாப் கோபமாக தெரிவித்தான். ஒழுக்கமாக நடக்குமாறு கசாப்புக்கு நீதிபதி எச்சரிக்கை.அக். 21: கசாப் தனது வக்கீலிடம் கோர்ட்டுக்கு நேரடியாக வருவதாக மீண்டும் வலியுறுத்தினான்.
அக். 25: சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் 



இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான கசாப் மற்றும் அபு இஸ்லாம் ஆகியோரின் பயங்கரவாத நடவடிக்கைகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
அக் 27: கசாபுக்கு சிறப்பு கோர்ட் வழங்கிய மரணதண்டனை சரிதான் என அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் கோர்ட்டில் வாதம்.


அக் 29: சிறப்பு கோர்ட்டில் கசாப் அடிக்கடி "பல்டி' அடித்து கோர்ட்டில் குழப்பம் நிகழ்த்தினான்.
நவ 22: கசாப் ஒரு பொய்யர், சதிதிட்டமிடுபவன் என அரசு வக்கீல் வாதம்.
நவ. 23: நீதிபதி மீண்டும் ஒருமுறை சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.
நவ. 24: கசாப் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டதை சிறப்பு கோர்ட் சிறிதளவு ஏற்றுக்கொண்டது தவறு என அரசு வக்கீல் வாதம்.
நவ. 25: கசாப் வக்கீல் அமின் சோல்கர் வாதத்தை தொடங்கினார். சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாதம்.
நவ. 30: "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல்' குற்றம் கசாப் மீது விதிக்கக்கூடாது என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 2: கசாப் சிறிய படகு மூலம் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை. சிறிய படகில் பத்து பேர் அமர்வதற்கு சாத்தியமில்லை என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 7: போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மற்றும் இரண்டு போலீசாரை தான் சுட்டுக் கொல்லவில்லை என கசாப் மறுப்பு. கசாப்பிடம் இருந்த புல்லட்டுக்கும், கர்கரேயிடம் இருந்து எடுக்கப்பட்ட புல்லட்டுக்கும் பொருத்தம் இல்லை என கசாப் வக்கீல் வாதம்.
டிச. 14: கசாப் இளைஞர் இல்லை என அவரது வக்கீல் வாதிட்டதை ஐகோர்ட் ஏற்க மறுப்பு. கசாப்பின் மனநிலையை ஆராய வேண்டும் என்ற கசாப் வக்கீலின் கோரிக்கையையும் ஐகோர்ட் ஏற்க மறுப்பு.
2011 ஜன. 5: சபாபுதின் அகமத் மற்றும் பகீம் அன்சாரி இருவரும் மும்பை தாக்குதலுக்கு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கூட்டு சதித்திட்டம் தீட்டியவர்கள் என அரசு வக்கீல் வாதம்.
ஜன. 6: பகீம் மும்பை தாக்குதல் வழக்கில் ஈடுபட்டதற்கு உரிய சாட்சியங்கள் இல்லை, மேலும் தாக்குதல் குறித்த வரைபடம் அபு இஸ்லாமின் பாக்கெட்டில் இருந்த எடுத்தது இல்லை என பகீம் வக்கில் ஐகோர்ட்டில் வாதம்.
ஜன. 7: பகீம் தவறான விபரங்களை கொடுத்து போலியான பாஸ்போர்ட் பெற்று பாகிஸ்தான் அரசை ஏமாற்றியுள்ளார் என அரசு வக்கீல் வாதம்.
ஜன. 10: பகீமால் வரையப்பட்ட மும்பை வரைபடத்தை சபாபுதீன், பயங்கரவாதி அபு இஸ்லாமுக்கு வழங்கினார் என அரசு வக்கீல் வாதம்.ஜன. 11: பயங்கரவாதி அபுசலீமுக்கு, பகீம் வரைபடம் கொடுத்தது சோடிக்கப்பட்ட குற்றம் என்பதை அரசு வக்கீல் மறுத்தார்.
ஜன. 13: தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் சபாபுதீனுக்கு தொடர்பில்லை, அதற்கான ஆதாரமும் இல்லை என அவரது வக்கீல் இசாஸ் நக்வி வாதம்.ஜன. 17: வழக்கு விசாரணை முடிந்தது. பிப். 7க்கு ஒத்திவைப்பு.





பிப். 7: சில பணிகள் இருப்பதால் தீர்ப்பு 21ல் வெளியிடப்படும் என ஐகோர்ட் அறிவிப்பு.
பிப். 21: அஜ்மல் கசாபுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மரணதண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. சபாபுதீன் அகமத் மற்றும் பகீம் அன்சாரி ஆகியோரை கோர்ட் விடுதலை செய்தது.
2012 நவ.5: கசாப் மீதான கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
நவ.19: மும்பை ஆர்தர்ரோடு சிறையிலிருந்த கசாப், புனேயில் உள்ள எர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.
நவ.21: காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.


எத்தனை பேருக்கு தூக்கு

1983ம் ஆண்டு முதல், மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதிக்கிறது. பயங்கரவாத செயல்கள், குற்றங்களில் இருந்து தப்பிக்க கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது, தற்கொலைக்கு உடந்தையாக இருப்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, நாட்டிற்கு எதிராக செயல்படுவது, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிற்காகவும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பின், இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சர்ச்சைகுரியதாகவே இருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் நாட்டில் இதுவரை 52 பேர் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975க்கும் 1991க்கும் இடை யே 40 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2007ல் 100 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2001ல் 33 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்:

* 2012 நவ.,21ல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
* 2005 ஏப்.,27ல் கடத்தல், கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்டதற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான்.
* 2004 ஆக.,14ல் பாலியல் குற்றத்திற்காக தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான்.

நன்றி - தினமலர்



புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.


பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும் முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.


முன்னதாக கடந்த 12ம் தேதியே கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.


இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,


தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.


தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,


தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.


காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது. அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.
மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.




 Kasab Died Dengue Hanging An Eyewash

கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா?

 

புனே: தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.


26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.

இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,


1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?


2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?


3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.


4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?


கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப் தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.



கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்...



இஸ்லாமாபாத்: கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றன. அவனது தூக்கு தண்டனை குறித்து பாகிஸ்தான் டிவியின் இணையதளத்தில் ஒரு செய்தி கூட இல்லை.


மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகி்ஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்த இந்திய ஊடகங்கள் இது தொடர்பாக செய்திகள் மேல் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.


ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ இது குறித்து அவ்வளவாக செய்தி வெளியிடவில்லை. பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான ஜியோ டிவியின் இணையதளத்தில் கசாபை தீவிரவாதி என்று குறிப்பிடாமல் மும்பை தாக்குதல் கன்மேனை இந்தியா தூக்கிலிட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.


"அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்: இந்திய ஊடகங்கள்" என்று பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அஜ்மல் அமிர் கசாபின் கருணை மனுவை அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை இந்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான் என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.


தி நியூஸ் இன்டர்நேஷனலில், இந்தியாவில் அஜ்மல் கசாப் சாகும்வரை தூக்கிலிடப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.


தி நேஷன் இணையதளத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மும்பை தாக்குதல் கன்மேன் கசாப் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தி உள்ளது. தி டெய்லி டைம்ஸ் தனது இணையதளத்தில் இது குறித்து எந்த முக்கியத்துவம் வாயந்த செய்தியையும் வெளியிடவில்லை. பாகிஸ்தானின் அதிகாரப்பூரவ ஊடகமான பிடிவியின் இணையதளத்தில் கசாப் தூக்கு குறித்து ஒரு செய்தி கூட இல்லை.


பிபிசியில் மும்பை தாக்குதல் கன்மேன் தூக்கிலிடப்பட்டான் என்பது தான் அதிகம் ஷேர் செய்யப்பட்ட செய்தி ஆகும். இன்று நண்பகல் வரை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் கசாப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை. மேலும் நியூயார்க் டைம்ஸ் காலை 11.30 மணிக்கு தான் கசாப் தூக்கு பற்றி ஒரேயொரு செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - தட்ஸ் தமிழ் , புதிய தலைமுறை

3 comments:

நம்பள்கி said...

காப்பி பேஸ்ட் செய்யும் பதிவர்களுக்கும் தூக்கு தண்டனை கொடுக்கக் போகிறார்கள் என்று படித்தேன். அது உண்மையா?

நம்பள்கி said...

சும்மா தமாஷ..!
நீங்க உங்க வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்; தமிழ் நாட்டைப் பற்றி நான் அதிகம் அறிந்து கொள்வது உங்கள் இடுகைகள் மூலம் தான்...

R. Jagannathan said...

A great post - we could read many views in one place.

The hanging was kept secret as otherwise some one would have moved the court and our 'needhimaans' would have stayed it for another few years!

Last statement by Kasab - will not do such things again! The jail warden should have told him that he will not hang him again!

-R. J.