Tuesday, December 03, 2013

1800 பிரின்டுகளுடன் 'வீரம்'

இதுவரை வந்த அஜித் படங்கள் இல்லாத அளவிற்கு, ’வீரம்’ படத்திற்கு 1800 பிரின்டுகள் போடப்படுகிறது.


அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்க, சிவா இயக்கியிருக்கும் படம் 'வீரம்'. விஜயா நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். 


இப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான பணிகளில் மூழ்கி இருக்கிறது படக்குழு. 


இப்படம் குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டி கூறியிருப்பது, "அஜித் முதல்முறையாக படம் முழுக்க வேஷ்டி அணிந்து, கிராமிய பின்னணியில் நடித்துள்ள படம் இது. படத்தின் கதைப்படி, அவருக்கு 4 தம்பிகள். அவர்களுடன் ஒரு விசுவாசமான வேலைக்காரரும் இன்னொரு தம்பி போல் இருக்கிறார்.
சம்பவங்கள், திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் நிகழ்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஊரில் நடக்கும் தப்பு–தவறுகளை தட்டிக் கேட்பவராக அஜித் வருகிறார். 


படத்துக்காக, ஒடிசா மாநிலம் ராயகரா அருகே 100 ஏக்கர் பரப்பளவில் ஒட்டன்சத்திரம் கிராமம் போன்ற அரங்கு பல கோடி செலவில் அமைக்கப்பட்டது. அஜீத் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
படத்தில், மிக பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, ஒடிசாவில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்தோம். ரயில் ஒரு பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கும்போது, அஜித் அதில் தொங்கியபடி நடித்தார். இந்த காட்சியில், ‘டூப்’ நடிகரை நடிக்க வைத்து விடலாம் என்று எவ்வளவோ கூறியும், அஜித் அதை ஏற்றுக்கொள்ளாமல் துணிச்சலாக அவரே நடித்தார். 



அந்த சண்டை காட்சி, 4 கேமராக்களை பயன்படுத்தி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கோவில் திருவிழா காட்சியும் ஒடிசாவில் படமாக்கப்பட்டது. அதில், அஜித்–தமன்னாவுடன் தினமும் 500 துணை நடிகர்–நடிகைகள், நடனக் கலைஞர்கள் கலந்துகொண்டு நடித்தார்கள். 


2 பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அஜித் காய்ச்சலுடன் ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி நடித்துக் கொடுத்தார். 


ஒரு குடும்பத்தின் மூத்த மகனாக, 4 தம்பிகளுக்கு அண்ணனாக அஜித் நடித்துள்ள காட்சிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும்.’’ என்று கூறியுள்ளார். 



நன்றி: தி இந்து

0 comments: