Tuesday, August 27, 2013

மேரேஜே பண்ணிக்காத நவீன அன்னை தெரேசா


மருத்துவ ஸ்பெஷல்

சேவையே உயிர் மூச்சாக!


திருமண வரவேற்பு விருந்து! பந்தியில் அமர்ந்து அந்தப் பெண்மணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள விழா அரங்கு அது. ஆயாம்மா பதற்றமாக ஓடி வருகிறார். அம்மா... ஒரு சிசேரியன் கேஸ். க்ரிடிக்கல் பொசிஷன்மா..." சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஆபரேஷன் தியேட்டர் நோக்கி விரைந்து செல்கிறார். சிறிது நேரத்தில் ஓர் அழகியப் பெண் குழந்தை பிறக்கிறது. திருமண வரவேற்பு விருந்தில் உணவருந்த கிளம்பிச் செல்கிறார். எல்லோராலும்அம்மாஎன்றழைக்கப்படும் அந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் ஆர். கௌசல்யா தேவி. அவருக்கு வயது 83. காந்தி கிராமம் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் ஆலோசகர்.


கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக இம்மருத்துவமனையில் சேவை புரிந்து வரும் இவரை திண்டுக்கல்-மதுரை மாவட்ட மக்கள், ‘எங்கள் தெரசாஎன்றே போற்றுகின்றனர். திண்டுக்கல்-மதுரை சாலையில் சின்னாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது, காந்தி கிராம அறக்கட்டளையின் கஸ்தூரிபாய் மருத்துவமனை.

1930-ஆம் வருடம் சாத்தூர் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தில் பிறந்தவர் கௌசல்யா தேவி. அப்பா ரகுபதி ரெட்டி கால்நடை மருத்துவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மருத்துவம் பயின்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று கௌசல்யா தேவியின் இலட்சியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959-ல் தேர்ச்சி. 1960லிருந்து 69 வரை சங்கரன்கோவில், கோபிசெட்டிப் பாளையம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர். 7.11.1969 முதல் காந்தி கிராம கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேவை செய்து வருகிறார். தமது அறுபதாவது பிறந்த நாளிலிருந்து சம்பளம் ஏதும் பெறாமல், கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த உங்களை, மாற்றம் பெற வைத்த சம்பவம் எது?

எனது நெருங்கிய தோழி சிவரஞ்சனியை மதுரையில் ஒரு நாள் சந்தித்தேன். காந்தி கிராம அறக்கட்டளை சார்பாக இயங்கி வரும் கஸ்தூரிபாய் மருத்துவ மனை நிர்வாகம், சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார். அன்றே கிளம்பி வந்து சௌந்தரம் அம்மாளைச் சந்தித்தேன். தனியாக நானும் அவருமாக மாலை ஐந்திலிருந்து இரவு ஒன்பது மணி வரை பல விஷயங்கள் குறித்துப் பேசினோம். சௌந்தரம் அம்மாளுடன் நான் தொடர்ந்து பேசிய அந்த நான்கு மணி நேர உரையாடலே, என்னை கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வரவழைத்து விட்டது. 1969 நவம்பர் மாதம் முதல் இன்று வரைக்கும் இந்த வளாகம் முழுவதுமாக உயிரும் உடலுமாக உலவி வருகிறேன்.

திருமணம் செய்து கொள்ளாமலே... (நாம் முடிக்கவில்லை. சட்டென அம்மாவே பேசுகிறார்...)

பள்ளிப் பருவத்திலிருந்தே திருமணத்தை நான் விரும்பவில்லை. காரணம், மருத்துவச் சேவைக்குத் திருமணம், ஒரு பெரும் தடைக்கல்லாக இருக்குமென முடிவு செய்திருந்தேன். உயிர் காக்கும் மருத்துவத்தை விட உயர்ந்தது வேறென்ன? நான் அதையே மணம் புரிந்து கொண்டேன் மானசிகமாக!


உங்களது மருத்துவச் சாதனைகள்...

எனது மருத்துவச் சாதனைகள் என்று பட்டியலிட்டுக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. கஸ்தூரிபாய் மருத்துவமனையின் சாதனைகள் என்று தான் அவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தயவுசெய்து அந்த விவரங்களைச் சற்று விவரமாகக் கூறலாமே...

செயற்கைக் கால் மருத்துவ மையம் இங்கு மிகச் சிறப்பு. செயற்கைக் காலினை முதன் முதலாக உருவாக்கியவரான டாக்டர் பி.கே.சேத்தியின், ராஜஸ்தான் மாநில மருத்துவமனைக்குச் சென்று தங்கியிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பிய பின்னர், இங்கு நிறுவப்பட்ட மையம் இது. மிகக் குறைந்த கட்டணத்தில் செயற்கைக் கால் பொருத்தி, அவர்கள் நன்கு நடைப்பயிற்சி பெற்ற பின்னரே வெளியில் அனுப்புகிறோம்.


 இதுவரை 4,233 நபர்களுக்கு செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறோம். எங்கள் மருத்துவ மனையின் இன்னொரு தனிச் சிறப்பு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு, அவர்களது தேவையின் பொருட்டு கர்ப்பப்பைக் குழாய் இணைப்பு அறுவை சிகிச்சை செய்கிறோம். 1976-77லிருந்து இதுவரை சுமார் 1400 பெண்களுக்கு மேற்கண்ட அறுவைச் சிகிச்சை செய்துள்ளோம். 1947-48லிருந்து இதுவரை சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பெண்களுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.



உங்கள் மனதை உலுக்கிய சம்பவம் ஏதேனும்...

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அப்போது எனக்குப் பணி. 1969-ல் நாகை அருகே கீழவெண்மணி கிராமத்தில் இந்தியாவையே உலுக்கியெடுத்த கோரச் சம்பவம். ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடிசைக்குள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரக் கலவரம். ஆயுதங்களால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு மிக மோசமான படுகாயங்கள்






 அத்தனை பேரும் நாகை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து 52 மணி நேரம் பணியாற்றி அறுவைச் சிகிச்சைகள் செய்து பலரையும் காப்பாற்றினோம். என் இதயத்தை ரணமாக்கிய அந்த மக்களின் வேதனைக் குரலை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.


நன்றி- மங்கையர் மலர்

0 comments: