Tuesday, June 26, 2012

சரோஜாதேவி

சரோஜாதேவி


Veteran Actress B. Saroja Devi


ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை. என் இளம் பிராயம் கறுப்பு- வெள்ளைத் திரைப்படக் காலமாக அமைந்த தென்பது காலம் எனக்களித்த பரிசு. கறுப்பு வெள்ளைத் திரைப் படங்களும் அவற்றின் அற்புதமான பாடல்களும், ஆடிப்பாடிய அழகு தேவதைகளும் என் நினைவுகளின் சேகரக் கிடங்குகளில் சேர்மானமாகியிருக்கும் பொக்கிஷங்கள்.

திரைப்படங்களுடன் பெரும் அபிமானத்தோடு உறவுகொள்ளும் காலமென்பது, பத்து முதல் இருபது வரையான பத்தாண்டுக் காலம். என்னுடைய இப்பிராயத்தில் தமிழ்த் திரையுலகம், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடைய ஆளுகையில் இருந்தது. அவர்களோடு இணைந்து நாயகிகளாக நடித்த சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, தேவிகா ஆகியோரே இன்றளவுக்கும் என் மனதுக்கு இதமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், என் அபிமானம் அதிகமாக சாய்ந்திருந்ததும், சாய்ந்திருப்பதும் சரோஜாதேவியின் பக்கம்தான். என் வளரிளம் பருவத்தில் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திர நாயகி சரோஜாதேவி. காலம் பரிசளித்த மகத்துவம். என் கால யுவன்களையும் யுவதி களையும் முழுவதுமாக வசப்படுத்தியிருந்த பைங்கிளி.

தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி (பின்னாளில் தன் காலத்திற்கேற்ற அம்சங்களோடு அந்த பிம்பத்தில் கச்சிதமாகப் பொருந்தியவர் சிம்ரன். அன்று சரோஜாதேவி; இன்று சிம்ரன் என்று கொண்டாடுவதற்கான என் மன அமைப்பு இதன் வழி வெளிப்படுவதாகவே தோன்றுகிறது).


 இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.



பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.

சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.

http://im.rediff.com/movies/2007/nov/28saroja2.jpg


காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.


ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.

தமிழில் அதிகமான படங்களில் மாணவியாக நடித்தவர் இவராகத் தான் இருக்கக்கூடும். அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள்.

அக்காலகட்டத்துப் படங்களில் சரோஜாதேவி அணிந்த விதவிதமான காதணிகளை மட்டுமே கொண்ட ஒரு கண்காட்சிக் கூடத்தை நிர்மாணிக்கலாம். மேலும், இவர் உடுத்திய ஆடைகள்தான் எத்தனை வகை. பாவாடை – தாவணி, சேலை – ஜாக்கெட் (ஜாக்கெட்டில் விதவிதமாய் பல்வேறு வடிவங்கள்), முழு நீள கவுன், அரை கவுன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், சுடிதார், பைஜாமா, பேன்ட், விதவிதமான மேலாடைகள், சட்டை, டி-சர்ட் என எல்லாமே இவர் உடலில் அழகுற, பாந்தமாய்ப் பொருந்தின.

அதுபோன்றே கணக்கற்ற சிகையலங்காரங்கள். விதவிதமாய் ஸ்கார்ப் அணிந்ததும், அழகழகாய் ரிப்பன்கள் சூடியதும் இவர்தான். இரட்டைச் சடை போட்டு, அதையும் இரண்டாக மடித்து அவற்றில் ரிப்பன்களைப் பூ வடிவில் சூடிச் சுடர்ந்தார். அவர் கொண்ட எண்ணற்ற அழகுக் கோலங்கள், தமிழ்ப் பெண்கள் சமூகத்தையும் அழகுபடுத்தின. தமிழ்த் திரையுலகம் இவரை விதவிதமாய் அழகுபடுத்திப் பார்த்தது. இவர் தமிழ்ச் சமூகத்தை விதவிதமாய் அழகுபடுத்தினார்.

அபிநய சரஸ்வதியாக தன் இருபதாவது வயதில் (1958) சரோஜாதேவி கன்னடத்திலிருந்து தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர் தமிழ்த் திரையுலக்கு அளித்த பெரும் கொடையாக இந்நிகழ்வு அமைந்தது. எம்.ஜி.ஆர் முதன்முதலாக தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார்.

 கறுப்பு  – வெள்ளைப்படமான நாடோடி மன்னனின் பிற்பாதியில் சரோஜாதேவி அறிமுகமா வதிலிருந்து படம் வண்ண மயமாகும். தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய நட்சத்திரம் மங்காத வண்ணமாய் ஒளிவீசத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில், தன் கொஞ்சும் தமிழாலும் அழகாலும் நடிப்பாலும் கன்னடத்துப் பைங்கிளியாகத் தமிழ் மனங்களில் சிறகடித்தார்.

பெங்களூரில் அவருடைய இல்லத்தில் தமிழ்த் தொலைக்காட்சி சேனலொன்று சமீபத்தில் எடுத்த நேர்காணலின் போது அவர் வெளிப்படுத்திய ஆதங்கமிது: “எனக்கு முன்பெல்லாம் சென்னையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நான்கு வீடுகள் எப்போதும் இருந்தன. அவர்களில் எவரும் இப்போது இல்லை. நெஞ்சில் நினைவுகளோடும் கண்களில் கண்ணீரோடும் நான் மட்டும் தனியாக இருந்து கொண்டிருக்கிறேன்."

இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.


என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.


 நன்றி - த சண்டே இந்தியன் 

4 comments:

'பரிவை' சே.குமார் said...

சரோஜா தேவி அவர்களைக் குறித்து நல்லதொரு பகிர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...
This comment has been removed by the author.
Yoga.S. said...

என்னமோ பத்திரிக்கை பற்றி எழுதப் போகிறார் என்று நினைத்தேன்!ப்பூ.........,இம்புட்டுத்தானா?ஹ!ஹ!ஹா!!!!!

”தளிர் சுரேஷ்” said...

சரோஜா தேவி பற்றிய சிறப்பான பகிர்வு!நன்றி சி.பி.