Thursday, March 08, 2012

வாடகைத்தாய் - சிறுகதை ( மகளிர் தின ஸ்பெஷல்)


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhriyK9Dxt3fS_U3bZ0AmjJtHUhXuTAo4AvKF12fBYcnVuf5PqMScDVZ5Gl4d1n86swTAmRZguY8CrxX0yROekrlD0TO_EJJJo6Vj9R554xINgrNCpvdsOIT6D6ZIMVFush-hLprlHIuIC/s400/mom1.jpg 

நடுநிசி இரவில் வந்த அந்த அதீத வலியின் பொருட்டு உறக்கம் கெட்டு விழித்தாள் மலர். எப்படியான வலி இது.? முன் எப்போதும் இதுபோல் வந்ததில்லையே. இதன் பொருட்டு ஏதேனும் தீங்கு நேருமோ என மனமெல்லாம் படபடப்பு.

பாதிக்கும் மேல் குச்சிகள் வெளிவந்துவிட்ட அந்த கோரைப் பாயில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தவள் கைகளை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்தாள். இரட்டைக் குழந்தைகளை சுமந்துக் கொண்டிருந்த வயிறு அவளுக்கு முன்பாக நகர பெருமூச்சு வாங்கியபடி அறையின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமானின் புகைப்படத்தின் முன்பு வந்தாள்.

படத்தை பார்த்ததும் தானாகவே கைகள் தொழத் துவங்கியது. இனம் புரியாத கலக்கத்திற்கு விடை கூறும் விதமாய் கண்களை மூடி தியானித்து ஆழ்ந்தாள். கடவுளே, இந்த இரட்டை குழந்தைகளை நல்லபடி பெற்றுக் கொடுக்கும் வலிமையை எனக்குக் கொடு. ராதா தம்பதியிடம் நல்லபடி குழந்தைகளை ஒப்படைத்துவிட்டால் போதும். என் கடனெல்லாம் பறந்துவிடும். எந்த பாதிப்பும் இன்றி குழந்தைகளை காப்பாற்றப்பா முருகா என்பதாக இருந்தது அவளின் பிராத்தனை.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக சிவப்பு மாருதி காரில் வந்திறங்கினாள் ராதா. மொத்தமே பத்தடி கொண்ட அந்த ஓட்டு வீட்டின் நுழைவு வாயில் சிறுத்து இருக்கவே தலை குனிந்து உள்ளே நுழைந்தாள். கையோடு கொண்டு வந்த பழக்குவியல் அடங்கிய கவர்களை மலரின் கைகளில் திணித்தாள்.

“எதுக்கும்மா இவ்வளவு பழம்…”

என்ன மலர், மறந்துட்டியா உன் வயித்துல வளர்றது ஒன்னுல்ல இரண்டு குழந்தைங்க. அதை ஆரோக்கியமா நீ எனக்கு பெத்துக் கொடுக்கணுமில்ல. அதுக்குத்தான். ஆமாம், உன் பொண்ணு பார்கவி எங்க?

இங்கதாம்மா வெளியில விளையாடிட்டு இருந்தா. 

இதோ கூப்பிடுறேன்.

இன்னிக்கு டாக்டர் செக்கப் ஆச்சே. அதான் அழைச்சிட்டு போகலாம்னு கார் எடுத்துட்டு வந்தேன். அப்புறம் மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டியா… வாந்தி எப்படி இருக்கு?

5 மாசம் முழுசாயிடுச்சில்ல, வாந்தி நின்னுருச்சிம்மா.

சரி, ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரியே எப்பவும் மூஞ்சிய வெச்சிட்டிருக்க. ஓ… செத்துப் போன உன் புருஷனை நினைச்சிட்டிருக்கியா. அதையெல்லாம் மறந்துடு. நீ சந்தோஷமா இருந்தாதான் உன் வயித்துல இருக்குற என் குழந்தைங்க நல்லா இருப்பாங்க. புரிஞ்சுதா. சரி சரி கிளம்பு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு.


இதோ ஒரு நிமிஷம் உட்காருங்கம்மா. நான் ரெடியாயிடுறேன்.


 மெல்லிய பூக்கள் போட்ட சந்தன நிற சேலை, அதை ஒத்த ரவிக்கை என பாந்தமாய் மாறினாள். வகிடெடுத்த நீண்ட கூந்தலை பின்னி அடியில் முடிச்சு போட்டாள். கணவன் இறந்ததிலிருந்து பாலைவனமாய் மாறிவிட்ட நெற்றியில் ஒற்றை ஈச்சமரம் தென்பட்டது போல் சின்ன கருப்பு திலகம் வைத்துக் கொண்டாள் மலர் அதுவும் ராதா கொடுத்த தைரியத்தில்.

ஐந்து வயது பார்கவியையும் அள்ளி காரினுள் போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி கிளம்பினார்கள். வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியம் குறித்து பயணிக்கையில் விலாவாரியாக சொல்லிக் கொண்டு வந்தாள் ராதா. கேட்டுக் கேட்டு சலித்துப் போன மலருக்கு மனம் பின்னோக்கி பயணப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

விபத்தொன்றில் இறந்துவிட்ட கணவனை நினைத்து நித்தம் அழுது கொண்டிருக்கையில் சதா பசியெடுத்து வயிறு தன் உரிமையை கோர வேறு வழியின்றி கைக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கென சென்ற வீடுதான் ராதாவினுடையது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை ராதாவிற்கு. நீர்க்கட்டிகளின் தொந்தரவினால் கர்ப்பப் பையையே அகற்றிவிட, வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள எத்தனிக்கையில் கட்டுமஸ்தான தேகம் கொண்ட மலரின் நினைவுகள் ராதாவை ஆக்கிரமித்தது.


ஆரம்பத்தில் மறுத்த மலர், குழந்தை பிறந்தவுடன் பணம் சுளையாக 1 லட்சம் கைக்கு கிடைக்கும் என்ற பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டாள். பணம் வந்தவுடன் வீட்டிற்கு வெளியேயே கவுரவமாக ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொள்ளலாம் என்பதாக இருந்தது அவள் எண்ணம்.


இதோ கருவை அவள் கருப்பைக்குள் செலுத்தி 5 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டது. அதிலும் இரட்டை கரு. வேலைக்காரியாக இருந்தபோது சதா சிடுசிடுத்த ராதா அவளின் குழந்தையை சுமக்கையில் காரியத்தில் கண்ணாக பாசமழை பொழிந்தாள். ராதாவின் குணம் தெரிந்து அவள் மேல் கொண்ட பரிதாபத்தின் பேரில் அத்தனையும் ஏற்றுக் கொண்டாள் மலர்.

 டக் என கார் நிற்கும் சத்தம் கேட்டு நிகழ்காலத்திற்குள் வந்தாள் மலர்.ஹாஸ்பிடலுக்குள் போய் செக்கப் முடிந்து மலரையும் மகளையும் வீட்டில் விட்டு கிளம்பிவிட்டாள் ராதா.


போனவள் போனவள்தான். சதா இரு தினங்களுக்கு ஒருதரம் மலரை வந்து பார்ப்பவள் ஏனோ இருபது நாட்களாக வரவேயில்லை. என்னவாக இருக்கும் என மனது ஓரத்தில் ஒரு நெருடல். மேலும் பத்து நாட்கள் கடந்து போகவே செக்கப் குறித்து ஞாபகப்படுத்த வீடு நோக்கி புறப்பட்டாள் மலர்.


சிவப்பு கார்ப்பெட் விரித்திருந்த அந்த ஹாலினுள் நுழைந்ததுமே ஏசியின் குளிர் மெல்ல உடம்பில் ஊடுருவியது. இவளைப் பார்த்ததுமே ராதா வீசிய அலட்சியப் பார்வையில் திக்கென்றது இவளுக்கு.


அம்மா, நாளைக்கு செக்கப். டாக்டரைப் பார்க்கணும்.அதான் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்னு வந்தேன்.


ம்…ம்… தெரியும். நானே வந்து உன்னை பார்க்கலாம்னு தான் இருந்தேன். உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த குழந்தைங்க எனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.அதனால…


என்னம்மா சொல்றீங்க, குழந்தை வேணும்னு எவ்வளவு பிரியமா இருந்தீங்க. இப்பப் போயி…


உங்கிட்ட சொல்லித்தானே ஆகணும். என் புருஷனுக்கு இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு. ஒரு மாசம் முன்னதான் இது எனக்கு தெரிய வந்துச்சு. என்னை ஏமாத்தின அவரோட வாழ எனக்கு விருப்பமில்ல. டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன். என் வாழ்க்கையே அர்த்தமில்லாம போனதுக்கப்புறம் இந்த குழந்தைங்க எதுக்கு. அதனால…


அதனால


டாக்டர்கிட்ட பேசிட்டேன். கருவ கிளீன் பண்ணிட போராடி சம்மதம் வாங்கிட்டேன்.


கேட்டதும் அடிவயிற்றில் அப்படியொரு கலக்கம்.


என்னம்மா விளையாடுறீங்களா, 

ஆக்ரோஷமாய் சீறி வந்து விழுந்தது வார்த்தைகள்.


நீங்க வேணும்னும்போது வளர விடவும் வேண்டாம்னா வெட்டி விடவும் இதென்ன தோட்டத்துல விளையற செடின்னு நினைச்சீங்களா. குழந்தைம்மா… அதுவும் இரண்டு உயிர். நீங்க ஐயாவ கூப்புடுங்க. நான் அவர்கிட்ட பேசிக்குறேன்.


உண்மை தெரிஞ்சு நான் சண்டை போட்டதும் அந்த மனுஷன் வீட்டுக்கே வர்றதில்ல. இங்க பார், ரொம்ப பேசாத. உனக்கு கஷ்டம்தான், நான் இல்லேன்னு சொல்லல. என் நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பார்.


முதல்ல, என்னைப் பத்தி நீங்க நினைச்சுப் பாருங்க. புருஷன் போனதுக்கப்புறம் வயித்த தள்ளிட்டு நான் நின்னப்ப என் நடத்தைய சந்தேகிச்சு பலர் பலவிதமா பேசுனாங்க. ஒரு உதவி செய்யற திருப்தியில அதையெல்லாம் பொறுத்துக்கிட்டேன். இப்ப, என் உயிருக்கே உலை வைக்கப் பாக்குறீங்களே.


அடி அசடே… இங்கப் பாரு. நான் டாக்டர் கிட்ட பல தடவை கன்சல்ட் பண்ணிட்டேன். கரு வளர்ச்சி சரியில்லைன்னா அதை பிரசவம் மாதிரி வலி உண்டாக்கி வெளியே எடுக்கிற முறையிலதான் உனக்கு செய்யப் போறாங்க. இது அபார்ஷன் மாதிரி இல்லை. அதனால உனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூணு மாசம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா போதுமாம்.

குறை பிரசவத்த உண்டாக்கி சே… முன்ன பின்ன குழந்தைய சுமந்திருந்தா தானே அதோட அருமை தெரியும்.

யேய், என்ன வாய் ரொம்ப நீளுது. உனக்கு அவ்வளவு அக்கறை இருந்தா நீயே பெத்து வளர்த்துக்கோயேன், பார்ப்போம்.

இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. இனிமே இது ஈவு இரக்கம் இல்லாத உங்க குழந்தைங்க இல்ல, என் குழந்தைங்க.

இடியென பேசிவிட்டு மின்னலாய் வெளியேறினாள். ஆவேசத்தில் சொல்லிவிட்டு வந்தாலும் உள்ளுக்குள்உதறல்தான். இந்த வறுமையில் பார்கவியோட சேர்த்து 3 குழந்தைகளை எப்படி வளர்ப்பது. நாளுக்கு நாள்
வயிற்றில் ஏறும் சுமை ஒருபுறம், பிரசவத்திற்கு பின் எதிர் கொள்ளப் போகும் சவால் மறுபுறம் என அவளை அலைகழித்தது. அக்கம் பக்கத்தினர் அவளின் கதையைக் கேட்டு உச் கொட்டினர்.

பிரசவ தேதியும் வந்தது. ஒரு பெண், ஒரு ஆணென இரு குழந்தைகளை பெற்றெடுத்தாள் அரசு மருத்துவமனையில். ஆண்டவன் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பான் என்பதற்கேற்ப அக்கம் பக்கத்தினர் உதவியில் நெக்குறுகி போனாள் மலர். குழந்தைகளைப் பார்த்ததும் புது வைராக்யம் மனதில் ஊற்றெடுத்தது.

ராதா தம்பதியரின் பேரில் வழக்கு தொடரலாம் என சிலர் அறிவுறுத்தியும் எங்கே குழந்தைகளை பிரிய வேண்டிவருமோ என்ற கலக்கத்தில் மறுத்துவிட்டாள்.

மொட்டுக்கள் இரண்டும் தவழ்ந்து முட்டிப்போட தொடங்கியிருந்தன. பார்கவியும் தம்பி தங்கை என எப்போதும் அவர்களுடனேயான உலகமாகிப் போனாள்.

மழை வலுத்திருந்த ஒரு முன்னிரவு நேரத்தில் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் ராதாவும் அவளது கணவன் மோகனும்.

தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சேலை தீப்பற்றிக் கொண்டது போல் எரிச்சல் பரவியது மலருக்கு, அவர்களைப் பார்த்ததும்.

மலர், என்னை தப்பா நினைச்சிக்காத. உனக்கு நான் பண்ணதெல்லாம் பெரிய தப்புதான். இப்ப என் வீட்டுக்காரரு திருந்தி வந்துட்டாரு. நான் பேசினத மனசுல வெச்சுக்காம என் குழந்தைங்கள என்கிட்ட கொடுத்துடு. முன்ன பேசின ஒரு லட்சத்துக்கு இப்ப 2 லட்சமா வேணா கொடுத்துடுறேன்.

பணத்தை வீசி பாசத்தை விலை பேச வந்திருந்தவர்களின் கண்களை கூர்மையாக நோக்கினாள். அவளின் பார்வை தகிப்பை தாங்க இயலவில்லை இருவராலும்.

ரெட்டைக் குழந்தைகளை பெற்று நாதியின்றி இருந்தபோது இல்லாத மனிதாபிமானம் தற்போது சுயநலத்தின் பேரில் வந்ததா என்பதாய் இருந்தது அவள் கண்கள் கேட்ட கேள்வி.

வண்டி வந்த சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என உதவிக்கு வந்தனர் அக்கம் பக்கத்தினர். கூட்டத்தைப் பார்த்ததும் மருண்டனர் தம்பதி.

“ஆம்பளைப் பிள்ளைய வேணும்னா நீயே வெச்சுக்க பொம்பள பிள்ளைய மட்டுமாவது எங்களுக்கு கொடுத்துடு” மெல்ல கசிந்து வெளிவந்தது ராதாவிடம் வார்த்தைகள்.

எச்சில் கூட்டி ‘தூ’ என காறி உமிழ்ந்தாள் அவர்களைப் பார்த்து.

தலையை தொங்கப் போட்டபடி வெளியேறிய அவர்களைக் கண்டு பொக்கைவாய் காட்டி சிரித்தது மழலைகள் இரண்டும்.

14 comments:

அருள் said...

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

ராஜி said...

மகளிர் தின வாழ்த்துக்கு நன்றி

Jayaprakash said...

kadhai migavum arumai! kadhai aga theriya villai, vunmai aga nadandhadhai neril partha oru feeling kedaikirathu padikkum pothu! nice all the best
By
JP

மதுரை அழகு said...

காமெடியில் மட்டுமல்ல... டச்சிங்கான சிறுகதையிலும் கலக்குறீங்க!

Sharmmi Jeganmogan said...

Excellent.. My friend.. Touched my heart very much.

Lingesh said...

அருமை, அட்டகாசம்.

குரங்குபெடல் said...

கில்மா , ஜிகிடியல்லாம் விட்டிட்டு இது மாறி எழுது தம்பி . . .

நல்லாருக்கு . .

வாழ்துக்கள்

தட்சிணாமூர்த்தி said...

அருமையா இருக்கு தல ! காமெடியாக மட்டும் எழுதி அனைவரையும் ரசிக்க வைத்த சிபி இன்று தன்னுடைய இன்னொரு சிறப்பான பக்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்....வாழ்த்துக்கள்...........

தட்சிணாமூர்த்தி said...

வாரம் ஒரு முறை இது போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவுகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.....செய்வீர்கள் என நம்புகிறேன்....

rajamelaiyur said...

வாவ் .. அருமையான சிறுகதை .. கலக்குங்கள்

rajamelaiyur said...

இன்று

குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை

சேகர் said...

அருமையான கதை அண்ணே..தொடர்ந்து இது போன்று டச்சிங்கா எழுதுங்க..

பவள சங்கரி said...

ஆகா, தங்களின் மறுபக்கம் மிக நன்று.. நல்ல கதை.. வாழ்த்துகள்..

துரைடேனியல் said...

உண்மையிலேயே கதை அசத்தல் சிபி சார்! கலக்கல். மன நிறைவா இருக்கு.