Saturday, December 20, 2014

கிரேசி மோகன் , எஸ் வி சேகர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் நாடகம் போட்டா..-கிரேசியைக் கேளுங்கள் 13

இரா முருகன், செ-17.
தனியார் துறை, அரசுத் துறை... உங்கள் பார்வையில்?
அரசுத்துறையில், ஏதாவது குறை இருந்து ஆராய்ச்சி மணி அடித்தால் அடுத்த நிமிடமே ‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று நாம் பாடும் அளவுக்கு ஆஜர் ஆவார்கள்.
தனியார் துறையில் நாம் நமது குறையை ஒரு நம்பருக்கு போன் செய்து சொன்னால்… அவர்கள் வேறு நம்பர் கொடுத்து பேசச் சொல்வார்கள். பேசினால் ‘நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர் என்றால் எண் ஒண்ணை அழுத்தவும். இனிமேல்தான் வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும். இரண்டுமே இல்லை என்றால் எண் மூன்றை அழுத்தவும். பிறகு, என்னை அழுத்தவும்...
அப்பாலே உன்னையே அழுத்தவும்’ இப்படி பதிவு செய்யப்பட்ட பேச்சு ‘அழுத்திப் பிடி’ வைத்தியம் கூறிக் கொண்டேயிருக்கும். கடைசியில் ‘ஊப்ஸ்... உங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்று சொல்லி இணைப்பு கட் ஆகும். இந்த விளையாட்டில் போன் வைத்து பேசிய நம் காது சிவந்து ‘மெட்ராஸ் ஐ’ போல ‘ மெட்ராஸ் EAR’ ஆகிவிடும்!
கி.மனோகரன், பொள்ளாச்சி.
சுஜாதாவுக்கு கிரேசியின் ‘இரங்கல் வெண்பா’!
‘கதையா கவிதையா கட்டுரையா - கேட்போர்க்(கு)
எதையும் அளித்த எழுத்துப் -புதையலே
ஏ ரங்க ராஜரே, ஸ்ரீரங்க தேவதையே
பார்இங்கு நீரின்றி பாழ்’
ஆத்திகம் - நாத்திகம்... ஓர் லேசான அலசல் ப்ளீஸ்?
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே இறுதி முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரீகம்.
முருகருக்கு மயில். பிள்ளையாருக்கு மூஞ்சூறு. பெருமாளுக்குக் கருடன். அது மாதிரி, நமக்கும் ஒரு வாகனம் உண்டு. அதுதான் கடவுள். Our Vehicle Is GOD. அதில் நமது பாரத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக நாம் சவாரி பண்ணலாம். Free Will Driving.
சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற சிக்னல்களுக்குக் கட்டுப்பட்டு, ஒழுங்காக நாம் ஓட்டினால் We Will Reach The Destination Without Any Accident. இதுதான் என் வீட்டில் எங்க தாத்தா, எங்க பாட்டி, எங்க அப்பா, எங்க அம்மா சொல்லிக் கொடுத்த ‘எங்காத்திகம்!
சிட்டி வேணு, சென்னை.
மதுரை மணி அய்யர் கச்சேரி கேட்டது உண்டா?
மதுரை மீனாட்சி கண்ணுக்கு விருந்தென்றால், மதுரை மணி அய்யர் காதுக்கு விருந்து. ஆறேழு வருடங்களுக்கு முன்பு புனேவுக்கு நாடகம் போடச் சென்றேன். கிளம்பும்போதே வயிறு சரியில்லை. அங்கு போனவுடன் நயாகரா போல வயிற்றுப்போக்கு. என் பால்ய நண்பன் ராம் வீட்டில் தங்கினேன். அவன் மதுரை மணி அய்யரின் தீவிர ரசிகன். இரவு 2 மணி வரை மணி அய்யரின் ஆடியோவைப் போட்டு, எனது வயிற்றெரிச்சலை ‘சாந்தமு லேகு’வாக்கினான். தியாகய்யரின் ‘மா ஜானகி’ கீர்த்தனையை மதுரை மணி அய்யர் ‘காம்போதி’ ராகத்தில் பாடுவதைத் திரும்பத் திரும்ப கேட்டதில், என் பேதி CALMபேதி ஆகி சுத்தமாக நின்றது!
மத்தளராயன், சென்னை-2.
மகாபாரதத்தில் எந்தப் பாத்திரம் உங்க ஃபேவரைட்?
சூரிய பகவானால் கொடுக்கப்பட்டு பாஞ்சாலி பயன்படுத்திய அட்சய பாத்திரம்! பசி என்று சொல்லி வந்த கண்ணன் அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை தின்று ஏப்பம் விட, துர்வாசரின் வாயில் ஏப்பம் வந்ததாம். கண்ணனைப் பஞ்ச, பாண்டவப் பாத்திரங்களுக்கு தோழனாக்கிய அட்சய பாத்திரம்தான் என் ஃபேவரைட் பாத்திரம்!
ராதா ரமேஷ் , சேலம்.
உங்க சினிமா, டிராமா எல்லாவற்றிலும் உங்க ‘ஹீரோயின்’ பெயர் ஜானகியாவே இருக்கே?
‘ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார்’ என்பார்கள். என் வெற்றிக்குப் பின்னால் பல பெண்கள் உள்ளனர். தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் சொல்வது எனது பாட்டி, அம்மா, மனைவி, வகுப்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தை சொல்லித் தந்த ஜானகி டீச்சர் ஆகியோர். நான் வசனம் எழுதப் போகும் படங்களில் ‘சம்பளத்தைக் கூட ரெண்டாம் பட்சமாகத்தான் பேசுவேன். ஆனால், கதாநாயகிக்குக் கட்டாயம் ‘ஜானகி’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பேன்.
ஆறேழு வயதிலேயே எனக்குள் நாடக வெறியை விதைத்தவர் ’ஜானகி’ டீச்சர். எனக்குக் ‘கட்டபொம்மன்’ வேஷம் போட்டு அட்டைக் கத்தி, கிரீடம் எல்லாம் செய்துகொடுத்து, என்னை எல்லாப் பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசு வாங்கித் தந்தவர். அந்த ஜானகி டீச்சருக்கு ‘குரு தட்சணையாக’த்தான் எனது ஹீரோயின்களுக்கு அவர் பெயரைச் சூட்டுகிறேன். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது 85 வயதான எனது டீச்சரை மேடையேற்றி, சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்!
கார்த்திக்கேயன், மதுரை.
நீங்கள் படித்து ரசித்த புதுக்கவிதை ஒன்று சொல்லுங்களேன்?
‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்ற சிறுகதையில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு கவிதை. கதையில் வரும் விஞ்ஞானி, கதை எழுதும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து, ‘கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் கவர்ச்சி,கொஞ்சம் மரபு etc ஆணைகளைக் கொடுத்து, கவிதை எழுதுமாறு பட்டனைத் தட்ட, அது
‘கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜன் - தங்கப்பதுமைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜன்’
என்று பிரின்ட்-அவுட்டைத் துப்பும். நான் ரசித்த சுஜாதாவின் கணினிக் கவிதை இது!
கே.விஸ்வநாதன், சேலம்
ஒரு பஸ்ஸில் நிறைய பாகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ரொம்பவும் பிடித்த பாகம் எது… ஏன்?
ஒழுங்கா ‘பிடிக்கும் பிரேக்’தான் எனக்குப் பிடிக்கும். அது பிடிக்காவிட்டால் நம் பாகங்கள் நம்மைப் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். அப்பால ‘அப்பல்லோ’தான்!
கலைமணி, திருச்சி.
இளையராஜா இசையில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
‘பாரதியார்’ படத்தில் வரும் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடல்தான் இசைஞானியின் இசையில் எனக்கு ரொம்பப் பிடித்தது. இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க காரணம் உள்ளது.
‘தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன்’
- என்கிற மகாகவியின் வேண்டுதல் வரிகள் எனக்கு கீதை, குரான், பைபிள் எல்லாமே. இதையே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ‘கடவுள் என்ற எஜமான் வீட்டு வேலைக்காரனாக இரு’ என்றார். அவர் சொல்வது சரணாகதிக்கு ஷார்ட்-கட்!
எஸ்.மதுரா, குரோம்பேட்டை.
எஸ்.வி.சேகருடன் இணைந்து நீங்கள் ஏன் ஒரு நாடகம் போடக் கூடாது?
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டால் மேடையைக் கலக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் சபாக்காரர்கள் எல்லோருக்கும் லாபம்தான். ஆனால், இரண்டு நகைச்சுவை நாடகங்கள் போட முடியாமல் போய்விடுமே! அந்த வகையில் நஷ்டம். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது மாதிரி ‘கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்குக் கொண்டாட்டம்’, இரண்டு டிராமா போடலாம் இல்லியா!
- இன்னும் கேட்கலாம்... 


 thanx -the  hindu


  • ஜானகி டீச்சர்
    ஜானகி டீச்சர்

 

1 comments:

விச்சு said...

கிரேசியின் பதில்கள் அருமை. அவரின் குருவின் படத்தையும் போட்டதற்கு நன்றி.