Friday, December 05, 2014

விஞ்ஞானி - சினிமா விமர்சனம்

விஞ்ஞானி விமர்சனம்

Vingyani Movie

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய நெல்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் விஞ்ஞானியான நாயகன் பார்த்தி. ஆனால் இது சாத்தியமற்றது என்று சக விஞ்ஞானிகள் கூற, அதையே சவாலாக எடுத்துச் செய்கிறார்.


இன்னொரு பக்கம், நாயகி மீரா ஜாஸ்மினின் கனவில் வரும் தெய்வம் ஒரு பொக்கிஷத்தைக் காட்டுகிறது. அதில் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் தொல்காப்பியரால் புதைத்து வைக்கப்பட்ட ‘தாகம் தீர்த்தான்’ என்ற நெல் ரகம் ஒன்று கிடைக்க, அதன் மரபணுவைக் கண்டுபிடித்து உயிர் கொடுத்தால் போதும் எதிர்காலத் தேவையை அது தீர்க்கும் என்று தெரிகிறது. பார்த்தியின் தேவை எதுவோ, அது மீரா ஜாஸ்மின் வசம் இருக்க, மீராவே அவரைத் தேடி வந்தும் அவர் சொல்லும் கதையை மூட நம்பிக்கை என்று ஒதுக்குகிறார் பார்த்தி.
 


இதனிடையே ‘தாகம் தீர்த்தான்’ மரபணுவைக் கண்டுபிடிக்க, பார்த்தியை ஒத்துக்கொள்ளச் செய்யும் நோக்கத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ளுகிறார் மீரா ஜாஸ்மின். சமயம் பார்த்து தாகம் தீர்த்தா நெல்லைப் பற்றி பார்த்தியிடம் சொல்ல மீரா ஜாஸ்மீன் காத்திருக்க, அந்த நேரத்தில் அந்த தாகம் தீர்த்தா நெல்லை, அவரிடம் இருந்து பார்த்தியின் உதவியாளரான சஞ்சனா பறிக்க முயற்சிக்க, நெல்லை காப்பாற்ற அவருடன் மல்லுகட்டும் மீரா ஜாஸ்மீன் மயக்கமடைகிறார்.


 நெல்லை திருடிச்சென்ற சஞ்சனாவும் மீரா ஜாஸ்மீன் வீட்டிலேயே கொலை செய்யப்பட, அந்த கொலை பழி மீரா ஜாஸ்மீன் மீது விழுகிறது.  இறுதியில் நெல்லின் உண்மைத்தன்மையையும் தனது மனைவி குற்றம் செய்யாததையும் உணரும் பார்த்தி எதிரிகளை அழித்து, நெல்லை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுதான் க்ளைமேக்ஸ்..!



புதுமுகம் பார்த்தி அவரே நடித்து, படத்தையும் இயக்கியுள்ளார்.. அவரது கதாபாத்திரத்தையே முரண்பாடாக சித்தரித்துள்ளதும் அதற்கு அவர் நடிப்பு பொருந்தாமல் தனித்து நிற்பதும் மைனஸ்..


 
நீண்ட நாட்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின். முன்பு பார்த்த அதே அழகுடன்.. ஆனால் கண்ணியமாக சித்தரிக்கப்படும் அவர் கதாபாத்திரம் அடுத்து பார்த்தியை திருமணம் செய்ய அவர் நடத்தும் கூத்துக்களால் சிதைந்து விடுகிறது. மீராவின் தங்கையாக வரும் நடிகையும் நல்ல தேர்வு. விஞ்ஞானி உதவியாளராக வரும் சஞ்சனா படம் முழுக்க கவர்ச்சி உடையில் வலம் வருகிறார்.
 

சிறு இடைவெளிக்குப் பிறகு தனது காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார் விவேக். அவருடன் தேவதர்ஷினியும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தொல்காப்பியராக கொஞ்ச நேரமே வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பு ஆறுதல் தருகிறது. தலைவாசல் விஜய், பாலா சிங், பாலு ஆனந்த், மயில்சாமி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை திறமையாக செய்திருக்கிறார்கள்.



மாரீஸ் விஜய்யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.


கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் பார்த்தி. குறைந்த தண்ணீரை உறிஞ்சும் நெல்லைக் கண்டுபிடிக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. ஆனால் அதை சொன்ன விதம் கொஞ்சம் பழசு. திரைக்கதையில் இன்னும் புதுமை புகுத்தி இருந்தால் படம் பேசப்பட்டிருக்டிருக்கும். இருந்தாலும் நாட்டின் மிக அத்தியாவசிய தொழிலான விவசாயத்தையும் குறிப்பாக நெல் உற்பத்தியை பெருக்குவதை பற்றியும் விஞ்ஞான ரீதியாக சொல்ல முயற்சித்திருக்கும் பார்த்தியை பாராட்டலாம்.



மொத்தத்தில் விஞ்ஞானி – விதை நெல்.

thanx - dinamani



0 comments: