Thursday, December 25, 2014

கயல் -காதல் கதையா? சுனாமி கதையா? - பிரபுசாலமன் பேட்டி

 

 

அரை ஏக்கரில் பிரம்மாண்ட செட்! இயக்குநர் பிரபுசாலமன்

30kon1“”இரண்டு வருட இரவு, பகல் பாரா உழைப்பு இது. “மைனா’, “கும்கி’ படங்களுக்குப் பின் ரசிகர்களுக்கு எந்தவிதமான படத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்தேனோ, அது வந்திருக்கிறது. இதுவும் முழுக்க முழுக்க இசை தெளித்து எடுத்துக் கொண்டு போகிற திரைக்கதை.  யானை, கடல், ரயில் இந்த மூன்றும் எப்போதும் பிரம்மாண்டம். சலிக்காத பிரம்மாண்டம். “கும்கி’யில் யானையின் பின்னணியில் கதை சொன்னது புதிய அனுபவம். இந்த முறை கடல். கடல் என்றால் சுனாமிதான் ஞாபகத்துக்கு வரும். அந்த குரூர சம்பவத்தின் பின்னணியில் ஓர் அழகான காதல், ஓர் உண்மையான அன்பு, ஓர் ஆத்மார்த்தமான பயணம். இதுதான் இந்த கயல்.” இசையமைப்பாளர் இமான் அலுவலகத்தில் இறுதி கட்ட வேலைகளுக்கிடையே பேச்சு கொடுக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.
“மைனா’, “கும்கி’ போல் இதிலும் காதல்தான் பேசு பொருளா….?உடல்களை முதன்மைப்படுத்தாமல், உணர்வுகளை முதன்மைப்படுத்துகிற காதல்தான் எப்போதும் அழகு. “மைனா’, “கும்கி’ இரண்டிலும் இருந்தது அதுதான். இதில் இருப்பதும் அதுதான். தனிமை, பிரிவு, விரக்தி… எல்லாமே பொய். காதலும் அதில் ஒளிந்து கிடக்கிற அன்பும்தான் இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும்வற்றிப் போவதே இல்லை. விஞ்ஞானமும் அதன் வளர்ச்சி விகிதமும் நாளுக்கு நாள் எகிறுகிற இந்தக் காலத்தில், மனதால் மிகவும் சோர்வான, பலவீனமான இந்த தலைமுறைக்கு காதல்தான் உத்வேகம். அப்படியொரு உத்வேகம்தான் இந்தப் படம்.கதையின் உள்ளடக்கத்தில் ஒளிர்ந்திருக்கிற விஷயம் என்ன….?“”நாளைய தினத்தை குறித்து கவலைக் கொள்ளாதே; அது அதை குறித்து கவலை கொள்ளட்டும்.” இந்த வாசகம்தான் இந்த கதைக்கான மூலம். இந்திய சூழல் படி 65 வருடங்கள்தான் ஆரோக்கியமான வாழ்வு. எப்படி வாழ்ந்தாலும், கடைசி ஐந்து வருடங்கள் வாக்கிங் ஸ்டிக்கோடு இன்னொருவரின் தோள் மேல் கைபோட்டு நடக்க வேண்டிய அவசியம் வரலாம். நினைக்கிற மாதிரி வாழ, இன்னும் சில வருடங்கள்தான் மீதம் இருக்கிறது. அதற்காகத்தான் கிடைக்கிற ஒவ்வொரு விநாடியையும் வாழ்ந்து விட வேண்டும் என்று தவிக்கிறோம். ஓர் அபூர்வமான சந்திப்பிலிருந்து வாழ ஆரம்பிக்கிற இரண்டு பேர், தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ நினைக்கிறார்கள். காசு, பணம், கார், பங்களா என எல்லாமும் கைக்கு வந்து முடிந்த பின், எல்லாரையும் ஒரு தனிமை ஆட்கொள்ளும். அப்போது ஓடி ஓடி உழைத்த எல்லாமே வெறும் பொருள்களாகத்தான் தெரியும். அசை போட்டு பார்க்க நல்ல சம்பவங்கள் எதுவுமே இருக்காது. அதைத் தேடி அடைய முயற்சிக்கிற போது வருகிற காதல் இன்னும் அந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது.
வேறொரு தளம்… புது நடிகர்கள் என படத்துக்கு படம் சிரமம் எடுக்கிறீர்களே…?
களம், நடிகர்கள் இதில்தான் எப்போதும் நேரம் அதிகமாகி விடுகிறது. “மைனா’, “கும்கி’ போல் இதிலும் நடிகர்களுக்கான தேர்வில் அதீத கவனம் தேவைப்பட்டது. புதுமுகங்களை கொண்டு எது சொன்னாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் எந்த இமேஜூம் அவர்களுக்கு இல்லை.  சந்திரன், வின்சென்ட், ஆனந்தி என முதன்மைப் பாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் புதுமுகங்களே. ஆனால் நல்ல சினிமாவுக்கான தீவிரம் உள்ளவர்கள். ஆனந்திக்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை காத்திருந்தேன். அதே போல் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிற காட்சி சுனாமி. அதை அப்படியே கிராபிக்ஸில் கொண்டு வர முடியவில்லை. நம்பகத்தன்மைக்காக நிறைய சிரமம் எடுக்க வேண்டியிருந்தது. பொன்னேரிக்கு பக்கத்தில் அரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் போட்டு, செயற்கையாக ஓர் அணையை ஏற்படுத்தி அந்தக் காட்சியை எடுத்திருக்கிறோம். ஆறு மாதங்கள் வரை அந்த காட்சிகளே படமாகின. இதைத்தவிர ஷூட்டிங் இன்னும் ஆறு மாதங்கள்.  இப்படி நிறைய உழைப்பு.
“மைனா’, “கும்கி’ வரிசையில் இதில் பாடல்கள் ஹிட்டாகி விட்டன அல்லவா… யுகபாரதி – இமான் கூட்டணி இப்போதும் உங்களுக்கு ஸ்பெஷல்…?வரிகளுக்கு பக்க பலமாக நின்று இசை தருவார் இமான். கதை ஓட்டத்தைப் புரிந்து வரிகள் தருவார் யுகபாரதி. எந்நேரத்திலும் அழைத்து பேச இருவரும் மறுப்பதில்லை. இதற்கெல்லாம் உடன்பட்டு இருப்பதால்தான் இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி.  என்னை, என் கதையை புரிந்தவர்கள் அவர்கள். என் வெற்றியைத் தன் வெற்றியாக பார்க்கும் மனம் கொண்டவர்கள். எளிமையான வரிகள், அதை தெளிவாக முன் வைக்கிற இசைதான் இந்தக் கூட்டணியின் பலம்.
By – ஜி.அசோக்

 

கயல்

kayal


எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து பிரபுசாலமன் இயக்கத்தில் ‘கயல்’ படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்துக் கொண்டிருகிறது.சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், ஜேக்கப்,யோகி தேவராஜ், ஜானகி சௌந்தர், பிளாரன்ட் C.பெரேரா, வெற்றிவேல் ராஜா, பாலசுப்பிரமணியம், மைம் கோபி, தரணி, அன்புமதி, ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.“மைனா, கும்கி” ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பிரபுசாலமன் எழுதி இயக்கும் படம் இது.படம் பற்றி பிரபு சாலமன் கூறியதாவது,“இது முழுக்க முழுக்க காதல் படம் தான். 18 வயதே ஆன 8 – 10 அளவுள்ள அறைக்குள்ளேயே தனது வாழ்க்கை என எந்தவித பொழுதுபோக்கு விஷயங்கள், டி.வி, விஞ்ஞான வளர்ச்சி தெரியாத ஒரு பெண்ணின் மனசு கயலுக்கு. அப்படிப் பட்ட பருவ வயதில் அவளை சந்திக்கும் ஒருவனின் உணர்வு பூர்வமான சொற்கள் – அவள் மனதில் ஏற்படுத்திய மாற்றம் –அது காதலா என்று கூட உணர முடியாத பக்குவம். அவன் சொன்ன அந்த வார்த்தைகள், அதுவும் தன்னைப் பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள், அவளை , அவனை நோக்கி ஈர்த்தது. சிறகடிச்சு , மடை திறந்த வெள்ளமாக பறக்க நினைக்கிறாள்.சுனாமியால் டிசம்பர் 26 – 2004 ம் ஆண்டு உலக வரலாற்றில் கருப்பு தினமாக உணரப்பட்டது. அந்த 2004 ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் கயல். அவன் யார் ? எங்கே இருப்பான் என்று கூட தெரியாமல் அவனைத் தேடி அவள் போன காதல் பதிவுதான் கயல். உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திப்படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம். படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப்பட்டிருக்கிறோம்.பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள், மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரபுஞ்சி போனோம். லே, லடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம்.படத்தில் சவுண்டுக்கான முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்,” என்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் ‘கயல்’ படம் வெளியாக உள்ளது.இசை – D. இமான்
பாடல்கள் – யுகபாரதி
கலை – வைரபாலன்
நடனம் – நோபல்
ஒளிப்பதிவு – V.மகேந்திரன்
எடிட்டிங் – 1 சாமுவேல் 2:8
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு நிர்வாகம் – கே.டி.எஸ்.சாமிநாதன்
தயாரிப்பு மேற்பார்வை – செந்தில்
இணை தயாரிப்பு – ஜேம்ஸ்
தயாரிப்பு     –   P.மதன்
எழுத்து, இயக்கம் – பிரபு சாலமன்


thanx  = dinamani

0 comments: