Thursday, December 25, 2014

கப்பல் - இயக்குனர் ஷங்கரைக்கவர்ந்தது ஏன்? -மயிலாடுதுறை மாப்ளை கார்த்தி ஜி.கிரிஷ் பேட்டி

‘கப்பல்’… ஓர் அறிமுக இயக்குநரின் படத்துக்கு நாளுக்கு நாள் எகிறி வருகிறது எதிர்பார்ப்புகள்! ஷங்கரின் உதவியாளரான கார்த்தி ஜி.கிரிஷுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. திரைப்படக் கல்லூரி படிப்புக்குப் பின் “சிவாஜி’, “எந்திரன்’ என இரண்டு படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஷங்கரின் “எஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தை வாங்கி வெளியிடுவதால் பரவசமும், உற்சாகமும் சூழ்ந்திருக்கிறது கார்த்தி ஜி.கிரிஷின் முகத்தில்…ஸ்டில்ஸ்… டிரெய்லர் எதிலும் பெரிய வித்தியாசம் தெரியலை… இருந்தும், இந்தப் படத்தில் எந்த அம்சம் ஷங்கரை கவர்ந்திருக்கும்….?எல்லா இடங்களிலும் இழையோடி இருக்கும் நகைச்சுவை தான் இதன் சிறப்பம்சம். அந்த விஷயம்தான் ஷங்கர் சாரை வெகுவாக கவர்ந்திருக்கும். பிரம்மாண்டம், சீரியஸ் என அவர் படங்களின் பேசு பொருள்கள் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், ஷங்கர் சாருக்கு உள்ள க்யூமர் சென்ஸ் அபாரமானது. பத்து நிமிடங்கள் அவரிடம் நெருங்கிப் பேசினால், ஷங்கரா இப்படி? என்று நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகலாம். “ஜீன்ஸ்’ கதைக்கு அவர் முதலில் தேடிப் பிடித்த ஆள் யார் தெரியுமா? கவுண்டமணி. இரட்டை வேடங்களில் கவுண்டமணியை அந்தப்படத்தில் நடிக்க வைப்பதுதான் ஷங்கர் சாரின் திட்டம். ஆனால்,அந்த சமயத்தில் கவுண்டமணி பிஸி. கால்ஷீட் கிடைக்கவில்லை. திட்டமிட்ட நாள்களுக்குள் முடித்தாக வேண்டிய படம் அது என்பதால், நடிகர்களைத் தொடர்ந்து, கதையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இப்போதும் காமெடி படங்களின் தீவிர ரசிகர் ஷங்கர் சார். அந்த மாதிரியான அம்சங்கள் இதில் அவரை கவர்ந்து இழுத்திருப்பதாக நினைக்கிறேன்.ஷங்கரின் உதவியாளர்கள் பெரும்பாலும் காதல், காமெடி என்றுதானே கதையைத் தொட்டுப் பிடிக்கிறார்கள்….? நீங்கள் கூட இப்போது காமெடி…?
இது எனக்கு முதல் டெஸ்ட். எந்த விஷயத்திலும் தீர்மானமாக இறங்க முடியாது. வியாபாரம் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு வித கவனம் தேவை. அப்படியொரு விஷயம்தான் இதில் நடந்தேறி இருக்கிறது. எதையும் இங்கே வலிந்து திணிக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகன் மனதில் இன்றைக்கும் நட்பை பேசும் படங்களுக்கு இடம் உண்டு. அது மாதிரியான பாணியில் ஒரு கதை பிடித்தேன். மயிலாடுதுறை மாதிரி ஒரு சின்ன நகரத்திலிருந்து சென்னை மாதிரி பெரிய நகரம் வரும் நண்பர்களின் கதை. பிரியம், விருப்பம், ஆறுதல், அக்கறை என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாமலே சில நேரங்களில் குறுகி விடுகிறோம். நாகரிக விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் காலக் கட்டத்திலும் அதே அன்பு, அதே நல்லியல்புகளுடன் நட்பை போற்றிப் பாதுகாக்கும் சிலருக்கு இங்கே ஒரு பிரச்னை. அந்த பிரச்னைகளிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? அது என்ன பிரச்னை என்பதுதான் திரைக்கதையின் உள்ளுக்குள் இருக்கும் சிறப்புகள். வாய் விட்டு சிரித்த பின்னர் கண்களின் ஓரம் கசிந்திருக்குமே ஈரம் அது போன்ற உணர்வு இது.
நடிகர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது…?
நடிகர்களின் தேர்வுக்குதான் அதிக நாள் பிடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கலர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். காமெடி படம் என்றாலே, இங்கே நாலைந்து ஹீரோக்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகிறார்கள். அவர்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது இதில் நான் கடைப்பிடித்த முதல் விதி. தெரிந்த முகம், ஆனால் இதுவரை இல்லாத நடிப்பு என்பதுதான் ஹீரோ தேர்வுக்கு நான் வைத்திருந்த ஐடியா. அந்த இடத்தில் வைபவை பொருத்தி பார்த்தேன். நினைத்தபடி அதற்கு பொருந்தி வந்தார். லுக், மேனரிஸம் எல்லாவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்து பார்த்தால், நான் நினைக்கிற சினிமாவுக்கு ஏற்ற ஆளாக இருந்து போனார். ஹீரோயின் வேடத்துக்கு சோனம் பஜ்வா மும்பை இறக்குமதி. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடிப்பார். முக்கிய வேடத்துக்கு கருணாகரன், அர்ஜூன், விடிவி கணேஷ். இதைத் தவிர இன்னும் பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். இது என் முதல் படம். அதை நினைத்தபடி எடுப்பதற்கு இந்த கலைஞர்களின் பங்கு முக்கியமானது.
ஷங்கர் கூட இரண்டு படம்…. அது மட்டுமே முழு சினிமா பயணத்துக்கும் போதுமானதா…?

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவன் நான். கல்லூரி நாள் மேடைகள் எல்லாவற்றிலும் எனக்கே கைத்தட்டல்கள். அந்த கைத்தட்டலின் ருசி பிடித்து போனதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள மனசு விரும்பியது. திரைப்படக் கல்லூரியில் படித்தால் போதும், இயக்குநராகி விடலாம் என்பதுதான் அப்போதைய திட்டம். ஆனால் அது மட்டுமே போதாது என்பதுதான் ஷங்கர் சாரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம்.

ஷங்கர் சாரின் உதவியாளர் நேர்முகத் தேர்வுக்கு நேற்று போனது போல் இருக்கிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 400 பேரில் நான் உள்ளிட்ட சிலர்தான் தேர்வானோம். ஷங்கர் சார் எனக்கு கற்றுக் கொடுத்தது கணக்கு வழக்கே இல்லை. “சிவாஜி’, “எந்திரன்’ இரண்டு படங்களில் வேலை பார்த்தது 200 படங்களில் வேலை பார்த்ததற்குச் சமம். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு இன்னும் பத்து படங்கள் இயக்கலாம். எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க அழைத்தேன். பார்த்தவர் விழுந்து விழுந்து சிரித்தார். கொஞ்ச நேரத்தில் இதை நானே ரிலீஸ் செய்யலாம் என இருக்கிறேன் என சொன்னார். அவர் என் குரு மட்டுமல்ல. அதற்கும் மேலே…

- ஜி.அசோக்.

நன்றி  - தினமணி 

0 comments: