Tuesday, December 09, 2014

அஞ்சான் அட்டர்ஃபிளாப் ஆக அதீத விளம்பரமே காரணம் - லிங்குசாமி ஒப்புதல் வாக்குமூல பேட்டி

சமூக வலைதளங்கள் ஏற்படுத்திய காயங்களின் உச்சம்: லிங்குசாமி மனம் திறந்த பேட்டி

ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவரைப் போலத் தோன்றுகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த சில மாதங்களை அவர் மகிழ்ச்சியாகக் கடக்கவில்லை. லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான அஞ்சான் திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததோடு, அவர்களின் நையாண்டிக்கும் ஆளானது. சமூக வலைதளங்களில் அவரை வைத்து நையாண்டி 'மீம்'கள் உருவாக்கப்பட்டன. அவரது திரைப்பட காட்சிகளை வைத்தும், தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியை வைத்தும் புதிது புதிதாக கேலி செய்ய ஆரம்பித்தனர். 


ஆனால் எல்லாவற்றையும் மீறி, அஞ்சான் தோல்வி குறித்தும், அதற்கு பிறகான அவரது அனுபவங்கள் குறித்தும், அடுத்த திட்டங்கள் குறித்தும் உற்சாகத்துடன் பேசுகிறார் லிங்குசாமி. 


அஞ்சானுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

 
எனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். நாம் செய்யும் வேலை மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நான் நம்புகிறேன். நடிகர் கார்த்தியை நாயகனாக வைத்து ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். அதே நேரத்தில், விஷால் நடிக்கவிருக்கும் சண்டக்கோழி 2-ஆம் பாகத்தின் திரைக்கதை முடியும் தருவாயில் உள்ளது. அந்த வேலைகள் முடிந்தவுடன் உடனடியாக படப்பிடிப்பு துவங்கப்படும். 


மிகவும் காட்டமான விமர்சனங்களை உங்கள் படம் சந்தித்தது. இதை எந்த கணத்திலாவது எதிர்பார்த்தீர்களா?

 
ரசிகர்களுக்கு நம்மிடம் என்ன பகை இருக்கிறது? எந்த நிலத் தகராறும் கிடையாதே (சிரிக்கிறார்). என்னிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டனர். என்னிடம் அதிகமான மரியாதை வைத்துள்ளனர். இது என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்துகிறது. 'நம்மை திட்டுபவர்களைத்தான் நாம் அதிகம் திருப்திபடுத்த வேண்டும்' என சமீபத்தில் கமல் என்னிடம் கூறினார். அதைத் தான் நான் தற்போது செய்துவருகிறேன். என் படங்களைத் தொடர்ந்து ரசிப்பவர்களை நான் ஏமாற்றியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து சிறந்த படத்தை தர விரும்புகிறேன். 


'லிங்கு மீம்கள்' சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவ ஆரம்பித்தன. நீங்கள் அதைப் பார்த்தீர்களா? உங்களை அது காயப்படுத்தியதா? 

 
என்னால் அவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னை மிகவும் காயப்படுத்தியது என்னவென்றால், அது என் பிள்ளைகள் வரை போய் சேர்ந்துவிட்டது. ஒரு நாள் என் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்ப வந்தபோது, 'அய்யா, உங்கள பத்தி இப்படி பேசறாங்க' என்று கூறியபோது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. 'அதெல்லாம் கண்டுக்க வேண்டாம் அய்யா' என பதிலளித்தேன். 


உலகளவில் தமிழ் ரசிகர்கள் உங்களைப் பற்றியும் உங்கள் படங்கள் பற்றியும் பேசுவது குறித்து உங்களுக்கு தெரிய வருகிறதா?


 
எனது உதவியாளர்களும், விளம்பரங்களைப் பார்த்துக் கொள்பவர்களும் அவற்றை கவனித்துக் கொள்கிறார்கள். முக்கியமானவற்றைத் தவிர எல்லாவற்றையும் என் பார்வைக்கு எடுத்து வருவதில்லை. 


எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

 
பாராட்டோ, எதிர்மறையோ அதிகப்படியான விமர்சனங்கள் இயக்குநர்களுக்குத் தடையே. உங்களை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் அவை தடுக்கும். ஆனால் ஒரு திரைப்பட இயக்குநராக, இரண்டு வகையான விமர்சனங்களையும் நான் சந்தித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு முறை எதிர்மறை விமர்சனம் வரும்போதும், பொறுப்புணர்வை உணர்கிறேன். எனது முந்தைய படைப்புகளில் ரசித்த ஒன்று, இந்த படைப்பில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனது படைப்புகள் என் எதிரிகளைக் கூட திருப்திபடுத்த வேண்டும் என விரும்புகிறேன். 


எதிரிகளா? திரைத்துறையில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

 
எனக்கு துறையில் நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் ஒரு மோசமான படத்தை எடுக்கும்போது, அவர்களில் சிலர் என்னை நிராகரிக்க ஆரம்பிப்பார்கள். எனது தொலைப்பேசி அழைப்புகளை அவர்கள் எடுப்பதில்லை, மீண்டும் அழைப்பதும் இல்லை. அப்படி அழைக்கும் போது 'மாப்ள, எனக்கு படம் புடிச்சிருக்கு' என்பார்கள். அந்த 'எனக்கு' என்ற வார்த்தையில் இருக்கும் அழுத்தம் எனக்குப் பிடிப்பதில்லை. அப்படியென்றால் அவர்களை சுற்றியுள்ள பத்து பேருக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்றே அர்த்தம். இப்போது இருக்கும் கமர்ஷியல் சினிமா, புதிய இயக்குநர்களின் சினிமா பற்றி?


 
கடலில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் இருப்பது போல, நமக்கு இரண்டுமே முக்கியம். நான்கு - ஐந்து கோடிகளில் தயாராகும் சினிமாக்களை வைத்து திரையரங்குகளை நடத்த முடியாது. லிங்கா போன்ற பெரிய திரைப்படங்கள் வரவேண்டும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை. பெரிய, சிறிய படங்கள் இரண்டுமே தேவை. ஆரம்பத்திலிருந்தே, மாதவன், அஜித், விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களோடுதான் பணியாற்றி வருகிறீர்கள். புதியவர்களோடு, சிறிய படங்கள் இயக்கும் எண்ணம் இல்லையா?

 
எனது தயாரிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் சதுரங்க வேட்டை, கோலி சோடா போல தரமான படங்களாகவே இருக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம். ஆனால், இப்போதுள்ள பரபரப்பு குறைந்து, சற்று அமைதியான பிறகு சிறிய படங்களை இயக்குவேன். 


அப்படியென்றால் நீங்கள் இப்போது அமைதியாக இல்லையா?


 
இல்லை. நான் சரியான இடத்தில் தான் இருக்கிறேனா எனத் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் எனது வாழ்க்கை தற்போது உள்ளது. உட்கார்ந்து இளைப்பாறும் நிலையில் நான் இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி தெரியலாம். ஆனால் நான் இன்னும் அந்த இடத்தை சென்றடையவில்லை. நடிகர்களைப் போல, இயக்குநர்களிடமும் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும், உங்கள் சமகால இயக்குநர்கள் பலரும் உங்களுடைய முன்னோடிகள் பற்றியும், உங்கள் படைப்புகளில் அவர்களது பாதிப்பு பற்றியும் பேசுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமி போன்ற இளைய தலைமுறை இயக்குநர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?  
நாங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கிறோம். புதிய இயக்குநர்கள் எவரும் திடீரென வந்தவர்கள் அல்ல. தொடர்ந்து இளம் இயக்குநர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். மூத்தவர்களாக, அலட்சியத்தோடும், பொறாமையோடும் அவர்களை நாங்கள் நடத்தக் கூடாது. நாங்கள் கற்றுக் கொள்ளத் தவறிய எது இவர்களிடம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிலைக்க முடியும். பல ஜாம்பவான்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலனின் சகோதர் எழுதிய திரைக்கதையை இயக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். இங்கு, பாலா அண்ணன் நலன் குமரசாமியுடன் கதை விவாதம் செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்தை பாட வைக்கிறார். இவர்கள் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? ஏனென்றால் இன்று அவர்களிடம் ஒரு சப்தம் இருக்கிறது. (ஈர்ப்பு உள்ளது). ரசிகர்களுக்கு அவர்களைப் பிடித்துள்ளது. எனவே நாமும் அவர்களிடம் எது சிறப்பாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தற்போது அஞ்சான் திரைப்படத்தை நினைவுகூரும்போது, அதிகப்படியான விளம்பரங்களுக்கு பலியானதாகத் தோன்றுகிறதா?

 
இருக்கலாம். இசை வெளியீடு கூட வேண்டாம் என்றுதான் சொன்னேன். அதிக விளம்பரம் வேண்டாம் என்றே நானும் சூர்யாவும் நினைத்தோம். இப்போது நான் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் என்னையும் அறியாமல் அஞ்சான் திடீரென மிகப்பெரிய படமாக மாறியது. நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை ஆனால் ட்விட்டர் போன்ற தளங்களில் படம் குறித்த எதிர்பார்ப்பு, வெளியீட்டிற்கு முன்பிலிருந்தே நிலவி வந்தது எனக்குத் தெரியும். இணையத்தில் அதிக லைக்குகள் பெற்றதினால் கேக் வெட்டியது குறித்து பலர் கிண்டலடித்தனர். இதெல்லாம் எங்கு சென்று முடியும் என அப்போது உணரவில்லை. ஆனால், இப்போது அஞ்சானை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் 'இந்தப் படத்தை ஏன் இவ்வளவு விமர்சித்தார்கள்?' என்று கண்டிப்பாக நினைப்பார்கள். 'ஏக் தோ தீன் சார்' பாடலை விமர்சித்தவர்கள் அனைவரும், தமிழ் தொலைக்காட்சிகளில் தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடல் ஒளிபரப்பாவதைக் காணலாம். நான் ஒரு மோசமான திரைப்படத்தைத் தரவில்லை என்றே நம்புகிறேன். குறைந்தது, இவ்வளவு விமர்சனங்களுக்கு ஆளாகும் அளவிற்கு மோசமான படம் இல்லை என்றே நம்புகிறேன்.


எனது கடந்தகாலத்தை பார்த்தே நான் எனக்கு உத்வேகம் சொல்லிக் கொள்கிறேன். 'ஜி' படத்திற்கு பிறகுதான் 'சண்டக்கோழி' படத்தை எடுத்தேன். 'பீமா'விற்கு பிறகுதான் 'பையா' இயக்கினேன். இந்தத் துறையில், தொடர்ந்து நம்மை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. உங்களது பேட்டி ஒன்றில் நீங்கள் கூறிய "டியூன் ஆகிட்டேன்", "மொத்த வித்தையும் எறக்கிருக்கேன்" போன்ற வார்த்தைகளை வைத்துதான், அஞ்சான் திரைப்படம் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. நீங்கள் எதைப் பற்றி அப்போது கூறியிருந்தீர்கள்?


 
அஞ்சான் வெளியான ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி அது. அப்போது அஞ்சானின் கதை கூட முடிவாகவில்லை. உங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்கள் பற்றி? 


 
கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகிய படங்களை ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறேன். உத்தமவில்லன் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொங்கல் சமயத்திலேயோ அல்லது அதற்குப் பிறகோ படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இடம் பொருள் ஏவல், ரா ரா ராஜசேகர் மற்றும் நான் தான் சிவா போன்ற படங்களின் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


© 'தி இந்து' ஆங்கிலம்,
தமிழில் -கார்த்திக் கிருஷ்ணா

thanx - the hindu 

0 comments: