Tuesday, November 18, 2014

என்னைத் தூங்கவிடாத இருவர் -பாரதிராஜா


படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் என்ற அறிவிப்புடன், 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இந்நிறுவனத்தின் தொடக்க விழா நவம்பர் 10-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதி, சிம்ஹா, இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
விழாவினை தொடக்கி வைத்து இயக்குநர் பாரதிராஜா பேசியது:
"'ஜிகர்தண்டா' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை எல்லாம் பார்த்தபோது, என்ன இது இவ்வளவு வன்முறை படமா இருக்கிறதே என்று நினைத்தேன். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்துவிட்டதே என்று கவலைபட்டேன். சில நாட்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு எனக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோன்று மணி ரத்னம் இயக்கிய 'நாயகன்' பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய சிந்தனைகளோடு வருகிறார்கள். சினிமா தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் வடுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு நடிகையும் நடிச்சு காட்டுங்க என்று கூறி தேர்வுசெய்ய மாட்டேன். ஒருத்தரை பார்ப்பேன், பிடித்திருந்தால் வாப்பா என்று அழைத்து வந்து நடிக்க வைப்பேன். நான் காட்டுல பூத்த பூ மாதிரி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் பிருந்தாவனம் கார்டனில் பூத்த பூ போல இருக்கிறார்கள். நன்றாக செதுக்கிறார்கள்.
சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தெரியாத ஒன்று சினிமா வியாபாரம்தான். முதல் இரண்டு பட ஹிட் கொடுத்துவிட்டு, மூன்றாவது படம் ஒப்பந்தமானபோது சம்பளத்தைத் தயங்கித் தயங்கி 15 ஆயிரம் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய உதவியாளர் பாக்யராஜ்தான் சண்டைப் போடு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தார். எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருக்கும் இந்நிறுவனம் சிறப்பாக வர வேண்டும்" என்று வாழ்த்தினார்.
ரஜினி இடத்தை உடனே அடைய நினைப்பது தப்பு: எஸ்.ஜே.சூர்யா
இந்த விழாவில் கலந்து கொண்டு எஸ்.ஜே சூர்யா பேசியதாவது, "நாம தியேட்டர் சைடு தான் ரொம்ப வீக்கா இருக்கோம். அந்த உண்மையை ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும். இங்க பெரிய ஹீரோக்களோட படங்கள் தவிர மற்ற ஹீரோக்களோட படங்களுக்கு அவ்வளவா தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. அது உண்மைதான். ஆனா அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.
இப்போ ரஜினி படம் ரிலீசாகுதுன்னா அதே அளவு தியேட்டர்கள் என்னோட படத்துக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படுறது தப்பு. ஒரு சாதாரணம் பஸ் கண்டக்டரா இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கார்னா அதுக்கு அவரோட உழைப்பு ஒரு காரணம்.
பல வருடங்கள் உழைப்பு அதுக்கு பின்னாடி இருக்கு. அப்படிப்பட்டவர் இடத்துக்கு சினிமாவுக்குள்ள வந்த உடனே வர ஆசைப்படுறது தப்பு. அவரோட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரியே என்னோட படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கணும்னு ஆசைப்படுறதும் தப்பு" என்று கூறினார். 



நன்றி - த இந்து

0 comments: