Thursday, November 13, 2014

'லிங்கா' படம் 'முல்லைவனம் 999' படத்தின் காப்பியா? ரஜினி அதிர்ச்சி


கதைத் திருடப்பட்டதாக 'லிங்கா' படத்துக்குத் தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரை - சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர், 'லிங்கா' படத்துக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "பல ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநராக இருக்கும் நான், முதன்முறையாக 'முல்லைவனம் 999' என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளேன். முல்லை பெரியாறு, முல்லை பெரியாறு அணை மற்றும் அந்த அணையைக் கட்டிய பென்னி குக்கின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது இப்படம்.
எனது படத்துக்கு வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க, இந்தப் படத்தின் கதையை யூடியூப்பில் 24.2.2013-ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். அதன்பின், படபூஜை நடைபெற்றது. கடந்த 10 மாதங்களாக மதுரை, கேரளம், தேனி பகுதிகளில் படத்தின் ட்ரெய்லருக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. 



இந்த நிலையில், எனது கதையை 'லிங்கா' என்ற பெயரில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அறிந்தேன். 'முல்லைவனம் 999' படத்தின் கதையை யூடியூப்பில் இருந்து திருடி 'லிங்கா'வை தயாரித்துள்ளனர். 


சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது கதையைத் திருடியது சட்டப்படி குற்றமாகும். எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் ரவி ரத்தினம் கோரியுள்ளார். 


இந்த மனு இன்று (புதன்கிழமை) நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லிங்கா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இம்மாதம் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 



 thanx -the hindu

0 comments: