Friday, November 28, 2014

வன்மம் - சினிமா விமர்சனம்

உயிர் நண்பர்கள் ராதாவும் (விஜய் சேதுபதி) செல்லத்துரையும் (கிருஷ்ணா)... அவர்களுக்குள் பிரிவும் விரோதமும் உருவாகி, தொடரும் விளைவுகளை, கன்னியாகுமரி மண்ணைக் களமாக வைத்துச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெய்கிருஷ்ணா. 


முரட்டு சுபாவம் கொண்ட உள்ளூர் மர வியாபாரியான ரத்னத்தின் (கோலிசோடா மதுசூதன் ராவ்) தங்கை வதனாவை (சுனைனா) செல்லத்துரை காதலிக்கிறான். ரத்னம், செல்லத் துரையைக் கொலைவெறியோடு நெருங்க... கைகலப்பில் வதனாவின் அண்ணன் கொலையாக ராதா காரணமாகிவிடுகிறான். 


ரத்னம் கொலையின் பின்னணியில் அவரது தொழில் கூட்டாளியான ஜே.பி. இருக்கக்கூடும் என்று ஊர் நம்புகிறது. காதலி வதனாவின் துக்கத்தை எதிர்கொள்ள முடியாத செல்லத்துரை, அவசரப்பட்டு அவள் அண்ணனைக் கொன்றதாக ராதாவைக் குற்றம்சாட்டுகிறான். “அவனை விட்டிருந்தா உன்னை வெட்டிப்போட்டிருப்பான்” என்று குமுறும் ராதா, செல்லத்துரையை விட்டுப் பிரிகிறான். 


நண்பர்கள் பிரிந்த அடுத்த நொடியிலிருந்து, ராதா உண்மையான கொலையாளி என்பது வதனாவின் குடும்பத்துக்கும், அவர்களது குடும்பத்தின் தொழில் எதிரிக்கும், ஊர் மக்களுக்கும் எந்த நிமிடமும் தெரிந்துவிடலாம் என்ற சாத்தியத்தை வைத்தே கதையை நகர்த்தியிருக்கும் விதம் விறுவிறுப்பு. குமரி நிலப்பரப்பையும் அதன் வட்டார வழக்கையும் காட்டியிருக்கும் விதமும் அழகு. 


ஆனால், நண்பர்கள், காதல், தியாகம், விரோதம் என்ற முடிச்சுகளை வைத்து ஏற்கெனவே கோலிவுட் கபே அரைத்த அதே மாவைத்தான் இதிலும் இயக்குநர் அரைத்திருக்கிறார். 



கதையின் பல திருப்பங்கள் ‘நான் நினைச்சேன்’ ரகம்தான். 


குடும்பத் தலைவனின் சாவுக்குக் காரணமாகி விட்ட குற்ற உணர்வுடன் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகுவதில் உள்ள ஆழமான சங்கடத்தை விஜய் சேதுபதி யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். நட்பு, கோபம், விரோதம், தியாகம் ஆகிய உணர்வுகளை நன்றாகவே வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் அவர் முகம் மட்டுமே ஆக்‌ஷன் காட்டுகிறது. 


நடனமும் அப்படியே. உடம்பைக் கட்டுக்குள் வைக்காவிட்டால் ‘ஊது’பதி ஆகும் அபாயம் வேறு! 


நடிப்பில் கிருஷ்ணா மெனக்கெட்டிருக்கிறார். சில காட்சிகளில் ‘ஓவர்’ ஆகவே!
சுனைனாவுக்குச் சவாலான பாத்திரம் இல்லை என்றாலும் அவர் முக பாவங்கள் ரசிக்கும் விதம். பானுப்ரியாவும் படத்துக்குக் கொஞ்சம் வலு சேர்க்கிறார். விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் பத்மநாபன் நடிப்பும் பேச்சும் அபாரம். 


தமனின் பின்னணி இசை காதை கிழிக்கிறது. அரங்கத்தில் இருக்கையில் லேசாக தாளம் போட வைக்கிற பாடல்கள், வெளியே வரும்போது நினைவில் நிற்கவில்லை. 


குடித்துவிட்டு வரும் செல்லத்துரை நள்ளிரவில் தன் காதலி வீட்டுக்கு வந்து சத்தம்போட்டு கலாட்டா செய்கிறான். தூக்கத்திலிருந்து எழுந்து வரும் நாயகியின் உதட்டில் அவ்வளவு திருத்தமாக லிப்ஸ்டிக்! தமிழில் யதார்த்த படம் எடுக்கிற தைரியம் இன்னும் முழுசாக வரவில்லையோ...! 


சஸ்பென்ஸிலும் திருப்பங்களிலும் வட்டார வழக்கிலும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் கதையின் போக்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். 


thanx - the hindu

1 comments:

'பரிவை' சே.குமார் said...

விஜய் சேதுபதி இந்த மாதிரி இரட்டை ரோலைக் குறைத்துக் கொண்டு நடிக்க வேண்டும். திறமை இருந்தும் நண்பனாக ஏன் வரவேண்டும்.