Thursday, September 01, 2011

ஜெவின் 100 நாள் ஆட்சி - பிளஸ்ஸும், மைனஸூம் விகடன் கட்டுரை

ஜெ. அரசு மார்க்! 48/100



நூறாவது நாளைக் கடந்த அ.தி.மு.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஐஸ் மழை பொழிந்தனர். அதில் திளைத்தெழுந்த ஜெயலலிதா, ''இந்தப் பாராட்டுகளைக் கேட்கிறபோது எனக்கு மகிழ்ச்சி என்பதைவிட, என்றுமே என் வாழ்க்கையில் தோன்றாத ஓர் அச்ச உணர்வு இப்போது தோன்றி உள்ளது. இந்தப் பாராட்டு தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற அச்ச உணர்வுதான் அது!'' என்று சொன்னது, அவரது மனதில் ஏற்பட்டுள்ள மாறுதல் என்றால், வரவேற்போம். ''மாற்றத்தைக் கொண்டுவந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தைத் தருகின்ற அரசு!'' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முழுமையான காரியங்கள் 100 நாளில் முடிந்திருக்க முடியாதுதான். ஆனால், அதற்கான முன்னோட்டமாவது ஒழுங்காக இருக்கிறதா?

 அள்ளிக் கொடுத்த அம்மா!
'வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்!’
- இது சட்டசபையில் நின்றபடி பொதுமக்களுக்காக ஜெயலலிதா பாடிய பாட்டு. அப்படிப்பட்ட ஏழை மக்களுக்கான இலவசத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளிவிட்டார். அவை அனைத்தையும் இந்த ஆண்டுக்கான கவர்னர் உரையில் சேர்த்துவிட்டது நம்பிக்கையான செய்தி. கருணாநிதி கொடுத்த ஒரு ரூபாய் அரிசிக்கான விலையில் அந்த ஒரு ரூபாயையும் கழித்தது மட்டும் அல்ல, 'அதற்கு விலை இல்லா அரிசி’ என்று புதுப் பெயர் சூட்டியது நல்ல விஷயம்.

இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள், மடிக் கணினிகள், தாலிக்கு 4 கிராம் தங்கம்... எனச் சொன்னது எல்லாவற்றையும் செப்டம்பர் 15-க்குள் காப்பாற்ற வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்புக் கொடுத்ததற்குப் பெரும் வரவேற்பு. அரசு கேபிள் திட்டத்தைக் கொண்டுவந்து மாதம் 50 ரூபாய்க்குள் எல்லா சேனல்களையும் ஜெயலலிதா திறந்துவிட்டால், அவரை ஜெயிப்பதே இனி சிக்கல் ஆகிவிடும்!


சறுக்கிவிட்ட சமச்சீர்க் கல்வி!
ருணாநிதி, தனிப்பட்ட மனிதர்களைப் பகைத்துக்கொள்வார். ஜெயலலிதா, கூட்டம் கூட்டமாகப் பகைப்பார். முந்தைய ஆட்சியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் என்றால், இந்த ஆட்சியில் கோடிக்கணக்கான மாணவ - மாணவிகள்! ஜூன் 4-ம் தேதி பள்ளிக்கூடம் போய் பாடங்களைப் படித்திருக்க வேண்டிய பிள்ளைகளை அப்படியே தடுத்து நிறுத்தி, ஆகஸ்ட் 12-ம் தேதி வரைக்கும் மூலையில் முடக்கிவைக்கும் காரியமாக, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை ரத்து செய்த வர், கடைசியில் 'தீர்ப்பு என்ன வந்தாலும் நான் ஏற்பேன்’ என்று இறங்கி வரும் நிலை. 'கருணாநிதி கொண்டுவந்ததை ஒழிக்கிறேன்’ என்ற ஒரே நோக்கம்தான் தெரிந்தது. போகட்டும்!

கல்வித் துறையில் பெரும் மாறுதலைச் செய்வதற்கான சில முயற்சிகளை ஜெயலலிதா தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது முதல் உள்கட்டமைப்பு வசதிகள் வரை அவர் சொன்னது மாதிரி கவனம் செலுத்தினால், சமச்சீர்க் கல்விச் சறுக்கலைச் சரிசெய்யலாம்!

பதவிகள் பந்தாட்டம்!

'அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மாற்றுவது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை. மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஓர் அதிகாரிக்கோ, அமைச்சருக்கோ, குறிப்பிட்ட கால அவகாசம்கூடத் தரப்படாத நிலையில், அவரது தகுதியைத் தராசில்வைத்து நிறுத்து, தடாலடியாகத் தூக்கி எறிவது சரியா’ என்று ஒரு தரப்பும், 'தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தும் ஒருவரை அந்தத் துறையின் அமைச்சராக வைத்திருப்பது சரியா’ என்று இன்னொரு தரப்பும் விவாதிக்கும் நிலை நீடிக்கிறது.

கருணாநிதி காலத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரனை சிறைத் துறைக்குத் தூக்கி அடித்துவிட்டு, மறுநாளே அவரை உளவுத் துறை பொறுப்புக்கு நியமித்ததும்; மின் வாரியத் தலைவராக ஸ்வரண் சிங்கை உருட்டி உருட்டி விளையா டியதும், உள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த வாரமே ஷீலா ராணி சுங்கத்தைத் தூக்கி 'பொம்மை’ பார்க்க அனுப்பிவைத்ததும்... அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பத்தையே காட்டுகிறது. இசக்கி சுப்பையா தவறான மனிதர் என்று அமைச்சரான சில வாரங் களில்தான் தெரியும் என்றால், அமைச்சர் ஆக்கப்படுவதற்கு முன்பு சொக்கத் தங்கமாக இருந்தாரா? அல்லது அவ்வாறு முதல்வர் நம்பவைக்கப்பட்டாரா?


யாரோ பரிந்துரை செய்வதால் நம்புவதும், யாரோ குறை சொல்வதால் நிராகரிப்பதும் தொடர்வதால்தான் இந்தக் குழப்பங்கள்!

   ஈழத் தமிழனுக்குக் கண்ணீர்!

து கருணாநிதியைக் குப்புறத் தள்ளியதோ, அதைத் தனக்குச் சாதகமானதாக ஆக்கிக்கொண்டார் ஜெயலலிதா. தமிழக சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்னையை மையமாகவைத்து, ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களையும் மனம் குளிரவைத்தது. மத்திய காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்தது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், முதல்வரைச் சந்திக்க ஓடி வந்தார்.

'போர்க் குற்றவாளி யாரோ... அவரைத் தண்டிக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் பார்த்து, இலங்கைத் தூதர் பதறினார். கொழும்பில் இருந்தபடி கோத்தபய ராஜபக்ஷே, ஜெயலலிதாவைச் சீண்டினார். அதற்கும் மறு நாளே சட்டமன்றத்தில் அறிக்கை படித்து அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெ. 'இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும்’ என்பதும் அவரது கோரிக்கை. அதோடு, அமைதியாகிவிடாமல், தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு தலா 1,000 ரூபாயை உதவித்தொகையாக அறிவித்தது, அந்த மக்களது உள்ளத்தில் பால் வார்த்தது. மொத்தத்தில், ஈழத் தமிழர் பிரச்னையை உதாசீனப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தவராக ஜெயலலிதா தன்னைக் காட்டிக்கொண்டார்.

அவரை அமைதியாக்க வேண்டும் என்பதற்காகத்தான், பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனையை காங்கிரஸ் அரசு விரைவுபடுத்தியதாக தமிழ் உணர்வாளர்கள் சந்தேகப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை!


கருணாநிதியை மறந்துவிடுங்கள்!

'பூனையைவிட புலி வலிமையானது என்பதை எலிகள் ஏற்றுக்கொள்வது இல்லை’ என்பார்கள். தனக்குத் தெரிந்தவன் தானே அதிக பலசாலி. அப்படித்தான் ஜெயலலிதாவை கருணாநிதி பிம்பம் ஆட்டிப் படைக்கிறது. கருணாநிதி செய்ததற்கு எல்லாம் எதிர்ப்பதமாகச் செய்வது என்பது ஒரு நல்ல தலைவருக்கு அழகு அல்ல.

சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தினாரா... அதை ரத்து செய். புதிய தலைமைச் செயலகம் கட்டினாரா... அதற்குள் நுழைய மாட்டேன். தமிழ்ப் புத்தாண்டு சித்திரை என்பதை தை மாதம் ஆக்கினாரா... பஞ்சாங்கப்படி அது தவறு என்பது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமா... நான் அதை வேறு மாதிரி ஆக்குகிறேன்.

கலைஞர் வீடு கட்டும் திட்டமா... அதன் விதிமு¬றையை மாற்றி வேறு வீடு கட்டும் திட்டம். செம்மொழி உயர் ஆய்வு நிறுவனமா... அது எதற்கு? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியா... இனி டி.வி. தர மாட்டேன். இப்படி ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்தால், 'வந்தது கருணாநிதியின் தீர்ப்புகளைத் திருத்துவதற்கு மட்டும்தானா?’ என்று பொதுமக்கள் நினைக்க மாட்டார்களா?


கருணாநிதி செய்ததில் பல்வேறு தவறுகள் உண்டு. அதில் கொள்ள வேண்டியதைக் கொண்டு... தள்ள வேண்டியதைத் தள்ளியவர் ஜெயலலிதா என்ற பெயரை வாங்க இனியாவது ஜெயலலிதா முயற்சிப்பாரா!


துணிச்சலான கைதுகள்!


போலீஸ், வருவாய்த் துறை, பத்திரப் பதிவு மூன்றையும் கையில்வைத்துக் கொண்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏராளமான நிலப் பறிப்புகள் நடந்ததாக அப்போதே தகவல்கள் பரவின. சிலர் மட்டுமே வெளியில் வந்து புகார்கள் சொன்னார்கள். மற்றவர்கள் வெளியில் வரப் பயந்தார்கள். பலம் பொருந்தியவர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால்தான், அந்த பயம். ஆட்சி மாறியதும் அவர்கள் புகார்கள் கொடுக்கப் புறப்பட்டு வந்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 8,947 புகார்கள் வந்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் 462 புகார்கள் மட்டுமே வழக்குகளாகப் பதிவாகி உள்ளன. 419 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். 415 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, நிலத் தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளது. பறிகொடுத்த நிலத்தை மீண்டும் பெற்றுக்கொண்டதும் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டாடியவர்கள் முகங் களைப் பார்த்தபோதுதான், அரங்கேற்றப் பட்ட மோசடியின் கொடூரம் தெரிகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் மதுரையின் அடாவடிப் பேர்வழிகள் வரை தி.மு.க-வின் நிழலில் பதுங்கிச் செய்த காரியங்களை வழக்கு மன்றத்தில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. பொதுமக்களுக்கு இந்தக் கைதுகள், இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளன!


எதிர்காலத் திட்டம் என்ன?


ந்த ஓர் ஆட்சியாக இருந்தாலும், அது எந்த நோக்கத்தில் செயல்படப்போகிறது என்பதே மிக முக்கியமானது. மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து ஆட்சிக்கும் அடிப்படையானவை. ஒருத்தர் யானை கொடுத்தால்... இன்னொருத்தர் குதிரை கொடுக்கலாம்.

ஆனால், கொள்கை சார்ந்த விஷயங்களில், எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களில் ஒரு மாநில முதலமைச்சர் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தியாக வேண்டும். 'தமிழகத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு 2025 தொலைநோக்குப் பார்வைத் திட்டம் தயாரிக்கப்போகிறோம்’ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எதை நோக்கிய திட்டம், என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய சிக்கலாக இருந்த மின் வெட்டைத் தீர்ப்பதற்கான திட்டமிடுதலும் இல்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் அவசர முயற்சியும் இல்லை!


ஊழல் பற்றிய மௌனம்!

ன்று ஊழலுக்கு எதிரான யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் போவதற்கும், ஒரு மாநிலத்தின் நிர்வாகம் செல் அரித்துக்கிடப்பதற்கும் ஊழல் மட்டுமே முக்கியக் காரணம். அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெயலலிதா இறங்கவே இல்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீதான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்தில் நடக்கிறது.

அதை சட்டரீதியாக எதிர்கொள்வதில் இருந்து ஜெயலலிதா இதனைத் தொடங்க வேண்டும். கர்நாடக எடியூரப்பாவும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியும் துடிப்பதைப் பார்த்தால், இனி ஊழல் அரசியல்வாதிகள் தப்பிப்பது சிரம திசையாகத்தான் இருக்கும். எனவே, லோக் ஆயுக்தா அமைப்பை தமிழகத்தில் தொடங்கி, ஊழல், முறைகேடுகளைக் குறைப்பதற்கான காரியங் களைத் தொடங்கியாக வேண்டும். அதுவே கடந்த காலக் கசப்புகள் கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கும்!


சட்டசபையில் ஜேஜே!


ட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது வெறும் ஜனநாயகக் கடமை மட்டும் அல்ல. தன்னளவில் ஆர்வமும் இருந்தால் மட்டுமே உத்வேகமாகச் செயலாற்ற முடியும். கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒரு நாள்கூட வரத் தவற மாட்டார். அதைவிட முக்கியமாக கடைசி வரைக்கும் இருப்பார். ஜெயலலிதாவும் இம்முறை இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.

எல்லா நாட்களும் சபையில் இருக்கிறார். அனைத்து மானியக் கோரிக்கை விவாதங்களையும் கவனிக்கிறார். யார் எந்தக் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் குறித்துக்கொள்கிறார். உடனடியாக எழுந்து பதில் சொல்கிறார். அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஏன், அவைத் தலைவருக்கே திருத்தம் கொடுக்கிறார். உடல் உபாதைகளையும் தாண்டி, ஜெயலலிதா இப்படி நடந்துகொள்வது உண்மையில் மெச்சத் தக்கது!


நடமாடும் நிழல் மனிதர்கள்!


ந்த ஐந்து பேர் பெயர்களை இந்த இடத்தில் சொல்லப்போவது இல்லை! கோட்டையில், போயஸ் கார்டனில், குறிப்பாக முதல்வரிடத்தில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும் 'நாங்கள் சொல்வதைத்தான் முதல்வர் கேட்பார், இங்கே நாங்கள் வைத்ததுதான் சட்டம்’ என்றும் அந்த மனிதர்கள்... அதிகாரிகளிடம், அமைச்சர்களிடம் நடந்துகொள்கிறார்கள். இது அதிகார மட்டத்தில் வலம் வரும் அனைவருக்கும் பச்சையாகத் தெரிந்த சமாசாரம். இது முதல்வருக்குத் தெரியாமல் இருக்காது. தெரியாது என்றால், அது அதைவிட அதிர்ச்சிக்குரியது.

உண்மையில் அவர்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்றால், அரசு அங்கீகாரம் பெற்ற பொறுப்புகளில் அமரவைத்து அவர்களைச் செயல்பட வைக்கலாமே தவிர, 'சூப்பர் சுப்ரீம்’களாக அவர்களை அங்கீகரிப்பது இந்த ஆட்சிக்கு ஆபத்து!

'நாங்கள் எதைச் செய்தாலும் உள்ளச் சுத்தியுடன் செய்கிறோம். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கிஞ்சித்தும் இல்லை’ என்று ஜெயலலிதா சொல்வது உண்மையானால், இந்த நிழல் மனிதர்களின் நடமாட்டம் உடனடியாகக் கட்டுப்படுத் தப்பட வேண்டும்!

thanx - vikatan


டிஸ்கி -

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

23 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான கணிப்பு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர்ந்து அம்மாவின் நடவடிக்கைகளை கவணிப்போம்....

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாதனைகளை விட மக்கள் பட்ட வேதனைகளே அதிகம் என்பதை உணர்ந்தேன்

உணவு உலகம் said...

வருகை பதிவு.

சி.கிருபா கரன் said...

அண்ணே ஆனந்தவிகடன் மட்டும் தான் படிபிங்கலா?

சி.கிருபா கரன் said...

என்னை பொறுத்த வரை இந்த அரசு நடுநிலையுடன் செயல் படவில்லை,
தர்மபுரியில் ஆதிமுக பிரமுர்கள் கூட நிலஅபகரிப்பு செய்றாங்க,ஆனா அவர்களை இந்த ஆரசு கண்டுகொள்வதில்லை.

SURYAJEEVA said...

முதல் கோணலாக சமச்சீர் கல்வி ஆகா முற்றும் கோணல் தானே..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

ஜெ அவர்களின் ஒவ்வோர் பணிகளையும் சிறப்பாக அலசியிருக்கிறாங்க.

கூடல் பாலா said...

Happy Ganesh chathurthi

rajamelaiyur said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

rajamelaiyur said...

அம்மா பாஸ்

settaikkaran said...

100 நாட்களை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே பார்த்தாலும், விகடன் கொடுத்திருக்கிற மதிப்பெண் மிக மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நல்ல பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

கவி அழகன் said...

பிச்சு வாங்குது

சென்னை பித்தன் said...

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

JJ Just pass தான் ஆவாருன்னு நினைச்சேன்...

ஸ்வீட் ராஸ்கல் said...

நல்ல கணிப்பு நண்பா.அப்படியே ஜெ வின் சாதனைகளையும்,சறுக்கள்களையும் அப்படியே கண் முன் நிறுத்திவிட்டீர்.ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.