Saturday, November 14, 2015

கைகளுக்கு வலிமை தரும்ஆசனங்கள்

கைகளுக்கு வலுவூட்டும் ஆசனங்கள்
கைகளுக்கு வலிமை தரும் சற்றுக் கடினமான ஆசனங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். சென்ற இதழில் பார்த்த ஆசனங்களைப் பயிற்சி எடுத்த பின்பு, இந்த ஆசனங்களைச் செய்வது எளிதாக இருக்கும். இல்லையேல் உங்களால் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடும். எந்த ஒரு விஷயத்திலும் உரிய முன்தயாரிப்பு இருந்தால், செய்ய வேண்டிய எதுவுமே எளிதாக இருக்கும். ஒவ்வொன்றையும் செய்து முடிக்கிறபோது, மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். முடியாது என்பது மெல்ல ஒதுங்கிவிடும். அதுபோல, கடினமான ஆசனங்கள் செய்வது இயல்பாகும்போது, அதன் பலன்கள் உடலில் பல பாகங்களுக்குப் போகும். சாதாரணமான ஒருவர் வலிமையாவது இப்படிப்பட்ட கடினமான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால்தான். வெளிநாடுகளில் பெரும்பாலும் கடினமான ஆசனங்களையே விரும்புகின்றனர். நீண்ட நேரம் யோகப் பயிற்சி செய்யவும் அவர்கள் தயங்குவது இல்லை. அதனால்தான் அவர்கள் யோகாவின் அருமையை உணர்ந்து, பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இனி பயிற்சிக்குச் செல்வோம்.
ஊர்துவதனுராசனம்
வசிஷ்டாசனம் செய்த பின்பு சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்து, இந்த ஆசனத்தைத் தொடர வேண்டும்.
தரையில் முதுகுப் பகுதியைப் பதித்து நேராகப் படுக்கவும். இந்த நிலையில் இருந்து, கால்களை மடக்கி உடலுக்கு நெருக்கமாகக் கொண்டுவரவும். கால்களுக்கு இடையே சற்று இடைவெளி இருக்கட்டும். கைகளை, தலைப்பக்கம் கொண்டுசென்று இரு உள்ளங்கைகளையும் தலையின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அவை தோளுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். விரல்கள் உடலைப் பார்த்தபடி இருக்க வேண்டும். 

இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தவாறு கை, கால்களைத் தரையில் அழுத்தி, உடலை மேலே உயர்த்த வேண்டும். முதுகை வில் போல் வளைக்க வேண்டும். கால்களும், கைகளும் முழுதாய் நீட்டப்பட்டிருக்கும். தலை, தரையை நோக்கிச் சாய்ந்திருக்கும். உடலின் எடை கால்களிலும் கைகளிலும் இருக்கும். இப்போது உடல் சக்கரம் போல் வளைந்து இருக்கும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி உடலை மெதுவாகக் கீழே இறக்கவும். இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும்.
பிறகு கை, கால்களை நீட்டிச் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
பலன்கள்: கைகள் வலுவடையும். முதுகு நன்கு வளைவதால், நுரையீரல் மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியம் பெறும். கூன் விழுவது தவிர்க்கப்படும். சோம்பல் மறைந்து சுறுசுறுப்பு அதிகரிக்கும். நாடி நரம்புகள் சேர்ந்து வேலை செய்வதால் இளமை அதிகரிக்கும். புத்துணர்வு ஏற்படும்.
சத்தூஸ்பாதபீடம்
உட்கார்ந்த நிலையில் கால்களை மடித்து, கைகளை முதுகுக்குப் பின்புறம் வைத்துக்கொள்ளவும். விரல்கள் உடலைப் பார்த்தபடி இருக்கட்டும். கைகளும் கால்களும் உடலைத் தூக்குவதற்கு ஏற்ப இடைவெளி விடவும். மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மேல்புறமாகத் தூக்கவும். தலை பின்புறமாகத் தரையை நோக்கித் தளர்வாக இருக்கும். கைகள் முழுமையாக நீட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் முடிந்தவரை இடுப்பை மேல் நோக்கித் தூக்க வேண்டும். முட்டிகள் மடங்கி இருக்கும். இப்போது உடலின் எடை கைகளிலும் கால்களிலும் இருக்கும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி உடலைக் கீழிறக்கி ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்: கணுக்கை, தோள்பட்டைகள் பலமடைகின்றன. கீழ் முதுகு வளைவுத்தன்மை பெறுகிறது. முதுகெலும்பு நன்கு நீட்டப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு கால்களை நீட்டி உட்கார்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும்.
படங்கள்: எம்.உசேன், மாடல்: சு.கிருஷ்ணவேணி

-விகடன்

0 comments: