Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Tuesday, November 17, 2015

சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை?

பக்கத்துத் தெருவில் புதிதாகக் காய்கறிக் கடை வந்தது. சும்மா சொல்லக் கூடாது. கண்ணைப் பறிக்கும் நிறங்களில் அவர் காய்கறிகளைக் காட்சிப்படுத்தியதில் ஏற்கெனவே இருந்த காய்கறியாளர்கள் வாடியும், வதங்கியும் போனார்கள். ஆப்பிரிக்கா,நேபாள நாடுகளின் மாணவிகள்கூட அங்கே வந்து தங்கள் நிலத்தின் காய்கறிகளைக் கொய்தார்கள்.


காய்கறிக் கடைக்காரர்

நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இடையில் கடை மெல்ல அழகை இழந்தது. தக்காளி கேட்டால்கூட “ இல்லீங்களே...”; வெங்காயம்? “பக்கத்துக் கடைல இன்னிக்கு ஒரு நாளைக்கு வாங்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க சார்.....” பக்கத்துக் கடைக்குச் செல்கிறவர் வெங்காயம் மட்டுமா வாங்கிப் போவார்...?


கடை இன்னும் இருக்கிறது. ஆனால், கூட்டம் மெல்லக் குறைந்து, இறுதிநாள் நோயாளி போல் “அமாவாசை தாண்டுமா...?” என்றிருக்கிறது. தாண்டிச்செல்லும் தனது வாடிக்கையாளர்களைக் குழப்பத்துடன் வெயில் முகத்திலடிக்க, பார்த்துக் கொண்டிருக்கிறார்-- “முன்னாள் காய்கறிக் கடைக்காரர்” என்ற பெயரை விரைவில் சூட இருப்பவர்.


கொஞ்சம் மனசு வச்சா?

நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அடுத்தவர் கேட்கிறாரா, இல்லையா என்ற கவலை எதுவுமின்றிப் பிரச்சாரம் செய்வார்கள். குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய பி.எச்.டி. அறிக்கையையே ஒப்படைப்பார்கள்.

அதிலும், இந்த அம்மாக்களின் ஆய்வுக் குறிப்புகளைத் தாங்க முடியாது. அதில் இடம்பெறும் முக்கியமான வாசகம் “டக்குன்னு புரிஞ்சுக்கறான்... கொஞ்ச நேரம்தான் படிக்கிறான்.. அதுலயே இவ்வளவு மார்க் வாங்கிர்றான். இன்னும் கொஞ்சம் மனசு வச்சு படிச்சாம்னா...,”

குறைந்த நேரப் படிப்பிலேயே அம்மாக்களை அசத்துகிறவர்களால் தொடர்ந்து ஏன் புல்லரிப்பை நிகழ்த்த முடியவில்லை ?

இரண்டு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோன்றினாலும் அவற்றின் பிறப்பு ரகசியம் ஒன்றுதான்.

அட்டகாச ஆரம்பம்

காய்கறியாளரின் முயற்சியிலும், ஆர்வத்திலும் குறை சொல்லவே முடியாது. அட்டகாசமாகவே தொடங்கி யிருக்கிறார். பின் தப்பு நடந்தது எங்கே என்றால், அவர் தொடர்ந்து முயலவில்லை. அதுதான் பிரச்னை..!
ஆரம்பநாட்களில் முயன்றால் போதுமா...? பின் அதுவாகவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்...?

தன்னிடம் வரும் வாடிக்கை யாளரைத் திருப்தி செய்யத் தொடர்ந்து முயற்சி செய்தால்தானே, அவர் களத்தில் நிற்க முடியும்? தினமும் எது தேவை? தனது பகுதியில் எது நன்றாகப் போகும் என்று கணித்து அதை வாங்கி வைக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் கறிவேப்பிலைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்து “காலைல மார்க்கெட்டுக்கு லேட்டா போனேங்க்கா... அங்க வித்து போச்சு...” என்றால் “தனியே...தன்னந்தனியே... நான் காத்துக் காத்து இருந்தேன்” என்று பாட வேண்டியதுதான்.

மாணவச் செல்வங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் மட்டும் படித்தால் “அவனுக்கு இருக்கும் அறிவுக்கு எங்கேயோ போயிருக்கணும் சார்...” என்று தாயார்களின் புகழுரையைக் கேட்டுக் காலம் தள்ள வேண்டியதுதான்.


தொடர்ச்சி

வெற்றி பெற முயற்சி மட்டும் போதாது. அம்முயற்சிகளில் தொடர்ச்சித் தன்மை (consistency) தேவை.

கிரிக்கெட் தெரிந்த யார் வேண்டுமென்றாலும் ஒரு ஓவருக்கு பேட் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட் என்பது ஒரு ஓவர் மட்டும் விளையாடுவது அல்ல. மேட்ச் என்றால் பகல் முழுவதும் நின்று ஆடுகிற உடல், மன வலிமைகளையும் வளர்த்துக் கொண்டால்தான் கிரிக்கெட் வீரராக முடியும். அதை விடுத்து “ஸ்டெயின் பால்லகூட நான் சிக்ஸ் அடிச்சேன்...” என்றால் மூளையின் ஆற்றலைச் சரிவரப் பயன்படுத்தாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். “அவனுக்கு இருக்கிற திறமைக்கு ...”

நம்மில் நிறையப் பேருக்கு அவ்வப்போது உடற்பயிற்சி ஆசை தாண்டவமாடும். அதற்கான ஷூக்கள்,ஆடைகள்; “காலை 6 மணியிலிருந்து 7 வரை நான் வாக்கிங் போயிருப்பேன். அப்ப ஃபோன் பண்ணாதீங்க” போன்ற செய்திகள், பயிற்சி முடித்து வந்த களைப்பைப் போக்கப் பிரத்தியேகப் பானங்கள்... ஒருநாள் நடந்துவிட்டுத் தொப்பையைப் பார்ப்பதென்ன, கண்ணாடியைப் பார்ப்பதென்ன ... என்று டீஸர், ட்ரெய்லர் எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்.

தெரிந்தவர்களைக் கேலி செய்வேன். “எப்போதும் முதல்நாள் உடற்பயிற்சியைவிட இரண்டாவது நா
ள் எளிமையாகத்தான் இருக்கும்.”
“பழகிரும்னு சொல்ல வர்றீங்களா..?”
“அது இல்லை...இரண்டாவது நாள்தான் நாம செய்யவே போறதில்லையே!”
நிறையப் பேர் முயற்சி என்றாலேயே அதை லட்சியத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். ஆனால், அன்றாட வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல உதவும் எளிய வேலைகளில்கூடத் தொடர்ச்சியானத் தன்மை இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாக நகரும்.

எல்லோராலும் வெகு சுலபமாகவும், பிரமாதமாகவும் எதை வேண்டுமானாலும் தொடங்க முடியும். நிறையப் பேர் தொடங்குவதே போதுமானது என்றும் தவறாக நினைத்து விடுகிறார்கள். அது திறமையே அல்ல. அது “ஆர்வக்கோளாறு” என்ற பிரிவிலேயே இடம் பெறும். .


தொடர்ந்தால்தானே?

ஆர்வக்கோளாறுகள் பெட்ரோல் இன்றி வழியில் நிற்கும். “அப்ப எல்லாம் ரொம்ப கஷ்டம். இப்ப இருக்கிற மாதிரி ஈஸி கிடையாது”, “எனக்கு நேரம் இல்ல, வாய்ப்பு வரல...” போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிப் புலம்பும்.

ஊக்குவிப்பு முகாம் ஒன்றில் கேட்டேன் “இப்போது போர் எதுவும் நடைபெறவில்லைதான். இந்திய ராணுவம் இந்தச் சூழலில் என்ன செய்து கொண்டிருக்கும்..? தூங்கி, சாப்பிட்டு, டி.வி பார்த்து, அரட்டையடித்து...”
“போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்...”என்றார்கள்.

வானில் எதிரி விமானங்கள் பறக்கத் தொடங்கிவிட்ட பிறகு, நீங்கள் விடுமுறையில் சென்ற உங்கள் சிப்பாயை வரவழைக்கப் புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்புவதும், ஆயுதங்களைத் தூசு தட்டி அவற்றின் கேட்லாக்கைப் படிக்கத் துவங்குவதுமாக இருந்தால்,போரின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை.

தொடர்ந்து பயிற்சி எடுக்கிறார்கள். தொடர் முயற்சிகளில் இருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் வீரர்களாகிறார்கள்... வாழ்க்கை என்பதும் போர்க்களம்தானே? சுவாசங்கள் தொடர்ந்தால்தானே வாழ்க்கை...?

thanks the hindu

Thursday, November 12, 2015

இப்படியும் பார்க்கலாம்: நத்தைக்கும் சொந்தமானது சாலை

முதலில் ஒரு கேள்வி.

மந்திரக்கை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறீர்களா..? தெரியவில்லை என்றால் கடைசியில் பதில் சொல்கிறேன்.

பையனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காகப் போகிறேன்...பலதரப்பினரும் கார், பைக், நடை என்று பள்ளிக்கு வந்து, திரும்புகிறார்கள்... இதில் காதுக்கும் தோளுக்கும் நடுவில் போனைக் கிடத்திப் பேசியவாறு செல்கிறவர்களும் அடக்கம். வாகனங்களின் அணிவகுப்பில் எழும் விதவிதமான ஹாரன் அலறல்களில் ஒளிந்திருக்கும் செய்தி -- “எனக்கு வழி விடுங்கள்...” நெகட்டிவாகச் சொன்னால் “எல்லோரும் எக்கேடும் கெட்டுத்தொலையுங்கள்...என்னைப் போகவிடுங்கள்...” என்பதுதான்.
இரண்டாவது கேள்வி --- சாலைகள் யாருக்கானவை...?


பலமும் பலவீனமும்

வீடுகளில் கடைக்குட்டிக்கு சலுகை காட்டப்படுவது இயல்பு. தப்பு கடைக்குட்டியின்மீது இருந்தால்கூட, எளிதாகச் சொல்லிவிடுவோம். “ நீதான் பெரியவன்...விட்டுக் கொடுத்துப் போகணும்...”; “ அவதான் கஷ்டப்படறா...நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்...” அவ்வளவு ஏன்...பலவீனமான குழந்தைக்குக் போஷாக்குகூட மற்றவர்களைவிட கொஞ்சம் அதிகம்தான்...இவை குடும்பத்தில் பெரியவர்களின் பொறுப்புணர்ச்சியை உணர்த்துவதாகவும் இருக்கின்றன.
இதே தியரியை சாலைகளில் பொருத்திப் பார்க்கலாம்....நடந்து செல்லும் நீங்கள் , நடந்து செல்லும் இன்னொருவர் மீது மோதினால்--இரண்டு பேருக்குமே அதிக சேதம் ஏற்பட வாய்ப்பில்லை.அவரவர் கிலோகிராம்களைப் பொறுத்து திட்டுக்களோடோ,ஸாரியோடோ விஷயம் முடியும். நடந்து செல்லும் ஒருவர் மீது உங்கள் சைக்கிள் மோதினால் உங்களால் அவருக்கு அதிக வலியைத் தரமுடியும்...

பாதசாரி, சைக்கிள்காரர் மீது பைக்கில் வந்து நீங்கள் மோதினால் உங்கள் முரட்டு வாகனம் தருகிற சேதாரம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து போலீஸையும், ஆம்புலன்ஸையும் அழைக்காமல் விடாது. பைக்குடன் உள்ள நீங்கள் பலம் வாய்ந்தவர். நடந்து செல்கிறவரும், சைக்கிளில் செல்கிறவரும் பலவீனர்கள்.

இதேபோல் காரில் செல்பவரால் பாதசாரிகளின், பைக் ஓட்டிகளின் எலும்பையும், உயிரையும் வெளியே கொண்டு வரமுடியும். அப்படியானால்...பஸ்...லாரி....?

குடும்பத்தில் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டீர்கள் என்றால், காரிலோ, பைக்கிலோ செல்கிற---பலம் வாய்ந்த நீங்கள் --- மெதுவாகச்செல்கிற --- பலவீனர்களிடம்--- எவ்வளவு கருணை காட்ட வேண்டும்...?
கற்களையும், வில்-அம்பையும் வைத்திருப்பவர்களைவிட, அணுகுண்டுகளை வைத்திருப்பவர்கள் நிச்சயம் அதிகப்பொறுப்புடன் இருந்தாக வேண்டும், இல்லையா...?


எப்போதும் அடுத்தவர்கள்தானே?

ஆனால், அன்றாடம் நாம் பார்க்கும், கேள்விப்படும் சாலைக்காட்சி என்ன...?
சினிமா கதாநாயகனுக்கு வேண்டுமானால்.வில்லனைத் தடுக்க இவ்வளவு வேகம் தேவைப்படலாம். மற்றபடி, நம் மகளுக்கோ, தங்கைக்கோ, காதலிக்கோ வில்லன்களால் அவ்வளவு பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்...!

பைக்காரன் புழுதி கிளப்பிப் பறக்கிறான்..”அதான் , ஹாரன் அடிச்சுக்கிட்டே வரேன்ல...காது கேக்கல...?” அதாவது, அதிக சேதத்தை விளைவிப்பவர்கள் வேகமாகவும், பொறுப்பற்றும் வருவார்களாம், ஏனையோர் பதறியும், சிதறியும் அவர்களுக்கு வழி விட வேண்டுமாம்....

“கார் வர்றது கண்ணுக்குத் தெரியல...?” பிற வாகன ஓட்டிகள் மிரண்டு வழி விட வேண்டும். அவ்வளவு அவசரக்காரர்கள் போட்டி போட வேண்டியது லாரிகள், தானே தவிர, நடந்து செல்லும் சாமானியர்கள் அல்ல...

எங்கே சாமானியர்களிடம் நீங்கள் காட்ட வேண்டியப் பொறுப்புணர்ச்சி...?
இவற்றை உணராவிட்டால், விபத்துக்கு உள்ளாகி, மயிரிழையில் தப்பிப் பிழைத்தவர்கள் “ நான் நேராத்தான் போனேன்...அவன் ராங் ஸைட்லதான் வந்தான்...சிக்னல் காட்டாம வந்தான்..டக்குன்னு நான் பிரேக் புடிச்சேன்...நல்லவேளை...நான் கீழ விழுந்தப்ப வண்டி எதுவும் வரல...”; “கொஞ்சம் அசந்திருந்தா தூக்கியிருப்பான்...” ரகக்கதைகளை

சொல்லித் திரியவேண்டியதுதான்..நாட்டில் நடக்கிற விபத்துக்களில் 90 சதவீதம் பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதால்தான் நிகழ்கின்றன.
பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் யார்...? நம்மைப் பொறுத்தவரை எப்போதும் அடுத்தவர்கள்தானே...? நடந்த தவறில் நம் பங்கு எவ்வளவு என்று யோசித்தால்,அடுத்த முறை நீங்கள் பொறுப்புடன் வாகனத்தை ஓட்டுவீர்கள். இல்லையென்றால், காலம் உங்களுக்குக் கன்னத்தில் அறைந்து கற்றுத் தரும். எது வசதி...?

பொறுப்பை உணர்ந்து ஓட்டுபவர்கள் நிச்சயமாய் அடுத்தவர்களைக் குற்றம் சொல்ல மாட்டார்கள். வாகன விதிகள், சாலை விதிகளை அறிவீர்கள். இவற்றுடன் வாகனக்கருணை, சாலைப் பொறுப்புக்களையும் அறிந்து கொள்ளுங்கள். அறிந்தாலும் அவற்றைக் கடைப்பிடியுங்கள்...


நத்தைக்கும்தான்
ஒரு சின்ன அத்து மீறல் எவ்வளவு சிக்கலில் கொண்டு விடும் என்பதை இன்னும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருப்பவர்கள்தான் உணர்வார்கள். ஒரு நகத்தின் அருமைகூட, அது இல்லாதபோதுதான் தெரியும்...! எல்லாம் இருக்கிறபோது நாம் எதையும் மதிப்பதில்லை...!
முந்திச் செல்வது உங்கள் திறமை. நிச்சயமாய் அது அடுத்தவர்களை அச்சுறுத்தியோ, அவர்களை அலறலுடன் ஓடச் செய்தோ அல்ல...சாலை என்பது டயர்களின் வலிமை தெரியாத , மெல்லக் கடக்கும் நத்தைக்கும் சொந்தமானது...

பலம் வாய்ந்தவரின் கருணை பலரையும் காப்பாற்றும். அதுவே அவருக்குப் பெருமையும் சேர்க்கும்...

வாகனக் கருணை

“மந்திரக்கை மனிதர்கள் “யாரென்று கேள்வி கேட்டேனே?
எனக்கும் தெரியாது. ஆனால் அவரை அடையாளம் காட்ட முடியும்...அவர் ஆணாகவும், பெண்ணாகவும், எந்த வயதிலும் இருக்கலாம்...சாலையின் ஒரு ஓரமாக நின்றிருப்பார். அவருக்கு எதிர் ஓரம் நின்றிருக்கும் அமெரிக்க அதிபருடன் அவசரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். சாலையைக் கடந்து சென்றேயாக வேண்டும். வாகனங்களோ இதைப் பற்றிக் கவலைப்படாமல் விரைந்து கொண்டிருக்கும். எனவே, அவர் வேறு வழியின்றி தன் கையை உயர்த்தி மக்களுக்கு ஆசி வழங்குவது போல உயர்த்தி சாலையைக் கடப்பார்....


அவரது கைக்கு ஒரு சூப்பர் பவர் இருந்திருக்க வேண்டும். கையை உயர்த்திய வுடன் போக்குவரத்து நதி துண்டாடப்பட்டு, பல ‘க்ரீச்சுகள்’ ஒலித்து, வாகனங் கள் நிறுத்தப்பட்டு “அறிவு கெட்டவனே...வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா..?” என்று சாலையைக் கலக்குவாரே அவர்தான் மந்திரக்கையாளர்.


பொறுப்பு எல்லோருக்கு மானது, இல்லையா...? வாருங்கள் வாகனக் கருணை கொள்வோம்

thanks - the hindu

Wednesday, October 14, 2015

பதின் பருவம் புதிர் பருவமா?- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே?-டாக்டர் ஆ. காட்சன்

ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
புராகிரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போடுவது, ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே' என்று வகுப்புத் தோழிக்குப் பூ கொடுப்பது, பதின்பருவக் காதலியை எப்படியாவது திருப்திப்படுத்த நினைப்பது... திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இப்படிக் குழந்தையாகவும் அல்லாமல் வளர்ந்தவராகவும் இல்லாமல் இளமைத் துடிப்பு, குறுகுறுப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பியதுதான் இளமைக் காலம்.
நம் அனைவரையும் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் நினைத்துப் பார்க்கச் செய்கிற இந்த வயசுதான் எவ்வளவு அழகானது! இந்த வயதில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கனவுகள், எத்தனை லட்சியங்கள். இனிமையான நினைவுகளோ, கசப்பான அனுபவங்களோ... இரண்டுமே நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.
விவகாரமான பருவமா?
விடலைப்பருவம் விளையாட்டான பருவம் மட்டுமல்ல... கொஞ்சம் விவகாரமான பருவமும்தான்! சரியான நேரத்தில் மன மற்றும் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் தோள், ஒரு கட்டாயத் தேவை. இதைக் குழந்தைப் பருவம் என்றும் சொல்ல முடியாது, விவரம் அறிந்த பருவம் என்றும் எடுத்துக்கொள்ளவும் இயலாது. அதனால்தான் இந்த வயதை இரண்டும் கெட்டான் பருவம் எனச் சொன்னார்கள்.
இந்த வயதின் ஆரம்பக் கட்டமே, உடல் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுதான். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வயதில் வளர்ச்சியின் வேகம் அதிகம். ஆண்கள் அரும்பு மீசையைப் பெருமையுடன் தடவிப் பார்ப்பதிலும், பெண்பிள்ளைகள் கண்ணாடி முன்பு அதிக நேரத்தைச் செலவிடுவதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. சிலருக்கு இந்த வளர்ச்சிகள் இதமாக இருக்கும். சிலருக்கு அதுவே இடறலாகவும் இருக்கலாம்.
குழந்தைகள்தான்
இந்த வயதில் உடல் வளர்ச்சியைக் குறித்து எழும் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தேவை. அவை தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நண்பர்களின் தவறான கருத்துகள், குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும்.
நண்பர்கள், பெற்றோர் தரும் சுதந்திரம், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்கு மனம் முக்கிய இடம்கொடுக்கும். அதேநேரம் விஷயங்களைப் பகுத்து ஆராயும் தன்மை, தனிமனித உறவுகளை மேம்படுத்தும் தன்மை, சமூகத்தின் மீது அக்கறை, தனிப்பட்ட திறமைகள், தலைமைப் பண்புகள் எனப் பல நல்ல குணங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும்.
பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், நண்பர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைப்பது உள்ளிட்ட பல மாறுதல்கள் காணப்பட்டாலும், இவர்கள் இன்னமும் பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள்தான்.
புரிதல் அவசியம்
விடலைப் பருவத்தில் வேகத்தைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சி, கட்டுப்பாடுகளை விதிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சியைவிட முன்னதாகவே முதிர்ச்சி பெற்றிருக்கும். அதனால்தான் இவர்களுடைய செயல்பாடுகள் சில வேளைகளில் கட்டுக்கடங்காமல், பிறர் முகம் கோணும் அளவுக்கு மாறிவிடுகின்றன.
பல மனநோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் பருவம் இதுதான். இந்த வயதில் காணப்படும் மாற்றங்களில் பெற்றோர், சமூகம் மற்றும் கல்வியின் பங்குக்குச் சமமாக மரபணுக்களும், முக்கிய அங்கம் வகிக்கின்றன. பதின் பருவத்தினரின் சாதாரண மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், அவர்களிடம் உள்ள அசாதாரண மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கு பதின் பருவத்தினருடன் தொடர்பில் உள்ள அனைவருடைய புரிதலும் மேம்பட்டிருக்க வேண்டும்.
வளரிளம் பருவம் சில பிரச்சினைகள்
l மற்றவர்களிடம் அனுசரித்துப்போவதில் உள்ள மாற்றங்கள்,
l எதிர்பாலின ஈர்ப்பு, காதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள்
l தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள்
l போதைப் பொருள் பழக்கம்
l படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்
l மன அழுத்தம்
l சமூக வலைதளங்களின் தாக்கம்
l சினிமா தாக்கம்
l சமூக விரோதச் செயல்பாடுகள்
l ஆழ்மனப் பிரச்சினைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
l வளரிளம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள்
(அடுத்த வாரம் தனித்தன்மையா? தடம் மாறுதலா? )
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: [email protected]

நன்றி-தஹிந்து

Thursday, September 03, 2015

தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்? - டாக்டர் கு.கணேசன்

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

Tuesday, August 04, 2015

அடிக்கடி களைப்பு ஏற்படுவது ஏன்? மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. கடுமையான உழைப்புக்குப் பிறகு உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கை. மாலையில் அல்லது இரவில் போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டால், காலையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு மறைந்து, உடல் புத்துணர்ச்சியைப் பெற்றுவிடும். மறுநாள் உழைப்புக்கு உடல் தயாராகிவிடும்.
ஆனால், சிலருக்கு எந்த நேரமும் களைப்பாக இருக்கலாம்; அன்றாட வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்படலாம்; உடல் தளர்ந்து, உள்ளம் உற்சாகம் இழந்துபோகலாம். அப்படியானால், அது சாதாரணக் களைப்பு அல்ல! உடலில் அல்லது உள்ளத்தில் உள்ள பிரச்சினையின் வெளிப்பாடு; அறிகுறி!
களைப்பைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். ஒரு வேலையைச் செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறது; உற்சாகம் இல்லாமல் இருக்கிறது; உடல் சக்தியை இழந்த மாதிரி இருக்கிறது; உடலில் சக்தியே இல்லாததுபோல் இருக்கிறது; ஆர்வமில்லாமல் இருக்கிறது; அசதியாக இருக்கிறது; கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் களைப்பை வெளிப்படுத்துவார்கள்.
காரணம் என்ன?
களைப்புக்கு உடல் சார்ந்த காரணங்களும் உண்டு; உள்ளம் சார்ந்த காரணங்களும் உண்டு. ஒரு சிலருக்கு இந்த இரண்டு விதக் காரணங்களும் சேர்ந்தே இருக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில பேருக்கு, முதலில் உடல் சார்ந்த காரணங்களால் களைப்பு ஏற்படும். அதற்குத் தீர்வு கிடைக்கத் தாமதமாகும்போது உள்ளம் சார்ந்த காரணங்களும் சேர்ந்துகொள்ளும்.
களைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உடல் சார்ந்த களைப்பு என்றால், பகலில் தெரிகிற களைப்பைவிட மாலையில் களைப்பு சற்று அதிகமாகவே தெரியும். உள்ளம் சார்ந்த களைப்பு, நாள் முழுவதும் தொல்லை தரும். இது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. என்றாலும், அவரவர் காரணத்தைப் பொறுத்துக் களைப்பின் தன்மை, அளவு, நேரம், தீவிரம் அமையும்.
முறையற்ற உணவுப் பழக்கம்
கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், துரித உணவு வகைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது களைப்பை வரவேற்கும். காரணம், இந்த உணவு வகைகளில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் குறைவு. இது ஊட்டச்சத்துக் குறைவுக்கு வழிவகுக்கும். மேலும், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால், உடல் மந்தமாகவே இருக்கும்; தூக்கக் கலக்கமாகவே இருக்கும்.
ரொட்டி, கேக் போன்ற பேக்கரி உணவு வகைகளில் ‘குளூட்டன்’ எனும் புரதம் உள்ளது. இது ஒவ்வாமையாக மாறினால் ‘சிலியா’ நோயை (Coeliac disease) ஏற்படுத்தும். அப்போது களைப்பு பிரதானத் தொல்லையாக இருக்கும். நேரம் தவறிச் சாப்பிடும் உணவுப் பழக்கம் நீடிக்கும்போது செரிமானம் குறையும். அப்போது உணவுச் சத்துகள் உடலில் சேராது. இதுவும் களைப்புக்குப் பாதை அமைக்கும்.
ஊட்டச்சத்துக் குறைவு
உடல் உற்சாகமாக உழைப்பதற்குக் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எல்லாச் சத்துகளும் தேவையான அளவில் தரும் சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டியது அவசியம். ஆனால் வறுமை, விரதம், உடல் எடையைக் குறைப்பதில் / ஒல்லியாவதில் விருப்பம் போன்ற காரணங்களுக்காகப் பலரும் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால் உடலுக்குத் தேவைப்படுகிற ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை. இது களைப்புக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். குறிப்பாக இரும்புச் சத்து, வைட்டமின் பி12, வைட்டமின்- டி, ஃபோலிக் அமிலம் போன்றவை குறைய ஆரம்பித்ததும் களைப்பு தலைகாட்டும்.
ரத்தசோகை
ஊட்டச்சத்து குறைவால் ஏற்படுகிற நோய்களில் மிக முக்கியமானது ரத்தசோகை. ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 13.5 கிராமுக்குக் கீழும், பெண்களுக்கு 12 கிராமுக்குக் கீழும் குறைந்துவிட்டால், அந்த நிலைமையை ‘ரத்தசோகை’ என்கிறோம். இன்றைய தினம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் என்று வயது வேறுபாடின்றிப் பாதிக்கிற நோய் இது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு மட்டுமன்றி, முறையற்ற மாதவிலக்கு காரணமாக வும் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்த சோகையின் ஆரம்ப அறிகுறி களைப்பு.
தொற்றுநோய்கள்
எந்த ஒரு தொற்றுநோயும் களைப்பை ஏற்படுத்தும். தடுமம், ஃபுளூ காய்ச்சல் போன்ற சாதாரணத் தொற்றுகளில் தொடங்கி மலேரியா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, காச நோய் என்று பல விபரீத நோய்கள்வரை களைப்பை ஏற்படுத்து வதில் முன்னிலை வகிக்கும். ஆனால், இவை எல்லாமே தற்காலிகமாகவே களைப்பை ஏற்படுத்தும். நோய் குண மானதும் களைப்பும் மறைந்துவிடும்.
தூக்கமின்மை
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலருக்கும் தூங்கும் நேரம் குறைந்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், இன்றைய குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி சராசரியாக 5 மணி நேரமே தூங்குகிறார்கள் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலையில் பகலில் களைப்பு ஏற்படுவது இயல்பு. குறட்டை விடுதல், தூக்கத் தடை (Obstructive Sleep Apnea), அதீதத் தூக்கம், தூக்கக் குறைவு நோய், வேலை நேர மாறுதல்கள், இரவில் நெஞ்செரிச்சல், புராஸ்டேட் வீக்கம் போன்ற தொல்லைகளைக் கொண்டவர்களுக்கு, இதுபோலத் தூக்கம் குறைந்து களைப்பு உண்டாகிற வாய்ப்பு அதிகம்.
மருந்துகளின் பக்கவிளைவு
தடுமத்துக்குத் தரப்படும் மருந்துகள், அரிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், மன அழுத்த மாத்திரைகள், மன அமைதியூட்டிகள், போதை மாத்திரைகள், ரத்த அழுத்த மாத்திரைகள், ஸ்டீராய்டுகள் போன்ற பலதரப்பட்ட மாத்திரை மருந்துகளின் பக்கவிளைவாகவும் களைப்பு ஏற்படும்.
நீரிழந்த உடல்
ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுகளின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, வெயில், அதிக வியர்வை, வயிற்றுப்போக்கு, கடுமையான வாந்தி, நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற பல காரணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படும். அப்போது களைப்புதான் மற்ற அறிகுறிகளைவிட முன்னிலை வகிக்கும்.
உளவியல் காரணங்கள்
தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், கோபம், பொறுமையின்மை, பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் களைப்பு ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள்
தைராய்டு சுரப்புக் குறைவு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், நுரையீரல் நோய், புற்று நோய், மூட்டழற்சி நோய், நார்த்திசு அழற்சி வலி (Fibromyalgia) போன்ற பல நோய்களிலும் களைப்பு தலைதூக்குவதுண்டு. புற்று நோய்க்கு மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை தரப்படும்போது களைப்பு ஏற்படுவதுண்டு. முதுமை, கர்ப்பக் காலம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகைபிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் களைப்பை வரவேற்பவையே.
நாட்பட்ட களைப்பு
ஒருவருக்குக் களைப்பு ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தால், அதை ‘நாட்பட்ட களைப்பு’ (Chronic fatigue syndrome). என்கிறோம். இவர்களுக்குக் களைப்பு கடுமையாக இருக்கும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நிணநீர்ச் சுரப்பிகளில் வலி, தொண்டை வலி, கவனக்குறைவு போன்ற பல அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கான காரணம் மருத்துவர்களுக்கே இன்னும் தெளிவாகப் புரியவில்லை. எனவே, அடிப்படை நோய்க்குச் சிகிச்சை அளிக்கமுடியவில்லை; நோயாளி கூறும் அறிகுறிகளைப் போக்குவதற்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறார்கள்.
பரிசோதனை என்ன?
களைப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல என்பதால், இதற்கென்று தனிப்பட்ட பரிசோதனை எதுவும் இல்லை. களைப்புடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளை வைத்து, அடிப்படை நோய் எது எனத் தீர்மானிக்கப்படும். அதற்கேற்பப் பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படும். பொதுவாக, ரத்தஅணுப் பரிசோதனைகள், ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்க்கான பரிசோதனைகள், ரத்த அயனிகள் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, எக்கோ உள்ளிட்ட ‘முழு உடல் பரிசோதனைகள்’ மூலம் களைப்புக்குக் காரணம் தெரிந்துகொள்வது வழக்கம்.
மேலும், இவர்களுக்கு உளவியல் சார்ந்த பரிசோதனைகளும் உளவிய லாளரின் ஆலோசனைகளும் தேவைப் படும். என்றாலும், நடைமுறையில் மூன்றில் ஒருவருக்குக் களைப்புக்கான காரணம் தெரிவதில்லை.
தடுப்பது எப்படி?
களைப்புக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெறுவதுதான் சரி. அப்போதுதான் களைப்பு மறுபடியும் தொல்லை தராது.
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.
உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.
தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். முக்கிய வேலைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதும், நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம். காரணம், தினமும் அவசர அவசரமாகவும் பரபரப்பாகவும் வேலை செய்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், உடல் விரைவிலேயே களைப்பு அடைந்துவிடும்.
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரிபவர் களுக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக் காலத்தில் வெளியில் தெரியாது. ஆனால், களைப்பு தெரியும். அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தினால்தான் களைப்பு நீங்கும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்றால், இயற்கைப் பழச்சாறுகளை அருந்துங்கள். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம்.
காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் களைப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.
புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
மது அருந்த வேண்டாம்.
மன அழுத்தத்துக்கு இடம் தராதீர்கள். மனக் கவலை இருக்கும்போது உங்கள் நம்பிக்கைக்கு உரியவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆசைகளுக்கு ஓர் எல்லை வகுத்துக்கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். பிறருடன் வாதிடுவது, சண்டை போடுவது போன்றவற்றைத் தவிருங்கள். பாதுகாப் பான முறையில் உங்கள் உரிமைகளைப் பெறுவதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இம்மாதிரி பழக்கங்கள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; களைப்பையும் தடுக்கலாம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Monday, July 20, 2015

கண்களைப்பாதுகாப்பது எப்படி? - மருத்துவக்கட்டுரை

ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண் புரையைத் தெரிந்துவைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர்அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கண் நீர்அழுத்த நோய் என்பது எது?
கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (Iris) கார்னியாவும் (Cornea) இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்' (Aqueous Humor) என்று பெயர். கண்ணின் வெளிப்பக்கத்தில் வட்ட வடிவில் இருக்கிற கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான உணவுச் சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உண்டாகின்ற கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். அதாவது, முன்கண் திரவமும் கண்ணீரும் ஒன்றல்ல. கண்ணின் வெளிப்பக்கமாகக் கண்ணீர் சுரக்கிறது என்றால், இது கண்ணின் உட்பக்கமாகச் சுரக்கிறது. இது விழிவெண்படலமும் (Conjunctiva) கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இதன் வடிதலில் தடை உண்டானாலோ, அதிகத் திரவம் சுரந்தாலோ, திரவத்தின் அளவு அதிகமாகி, கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் பயணிக்கும் ரத்தத்துக்கு ஒருவித அழுத்தம் உள்ளதைப் போல, கண்ணில் பயணிக்கும் இந்தத் திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. அதுதான் கண்ணின் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. இந்தத் திரவம் சுரக்கிற அளவும் வெளியேறுகிற அளவும் சமமாக இருந்தால், கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். நமக்குச் சரியான கண் நீர்அழுத்தம் 10 முதல் 20 மி.மீ. பாதரச அளவாகும். விழிக்கோளத்தின் கனஅளவுகள் மாறாமல் இருப்பதற்கு, இந்த அழுத்தம் தேவைப்படுகிறது.
அதே வேளையில் இந்த அழுத்தம் அதிகமானால், அது கண் முழுவதும் பரவும்; குறிப்பாக, விழித்திரைக்குப் பின்புறம் இருக்கிற பார்வை நரம்பைப் பாதிக்கும். பார்வை பற்றிய தகவல் மூளைக்குச் செல்லாது; அதனால் பார்வை பறிபோகும். இதுதான் இந்த நோயின் அபாயகரமான தாக்குதல்.
வகைகள்
நோயின் தன்மைகளை வைத்தும் அது உண்டாகிற காரணத்தை வைத்தும் இதை விரிகோணக் கண் நீர்அழுத்தம் (Open angle glaucoma), குறுங்கோணக் கண் நீர்அழுத்தம் (Closed angle glaucoma), பிறவி கண் நீர்அழுத்தம் (Congenital glaucoma) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அறிகுறிகள்
இந்த மூன்றில் முதல் வகைதான் முக்கியமானது. இந்த நோயின் தொடக்கத்தில் எந்தவொரு அறிகுறியும் வெளியில் தெரியாது. திடீரெனக் கண்பார்வை குறைவது, இதன் முதல் அறிகுறி. இந்த நிலைமையில் டாக்டரிடம் வரும்போது, நோயாளிக்குப் பார்வை நரம்பில் 30 முதல் 50 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய முடியாது.
இதைத் தொடர்ந்து, இன்னும் சில அறிகுறிகள் ஏற்படும். எரியும் மின்விளக்கைப் பார்க்கும்போது, அதைச் சுற்றி வட்டவட்டமாக வண்ண வளையங்கள் அல்லது புள்ளிகள் தெரியும். இவர்கள் அடிக்கடிக் கண்ணாடியின் 'பவரை' மாற்றுவார்கள். தியேட்டர்களில் சினிமா பார்த்துவிட்டு இருட்டிலிருந்து வெளியே வரும்போது கண்களைச் சுற்றிக் கனமாகத் தெரியும்.
இரவில் பார்வை மங்கலாக இருக்கும். இருட்டுக்குக் கண்கள் பழகத் தாமதமாகும். பகலில் ஒரு பொருளைப் பார்த்தால், அந்தப் பொருளின் நடுப்பகுதி நன்றாகத் தெரியும். ஆனால், பக்கப்பார்வை இருக்காது. நடுப்பார்வை நன்றாகத் தெரிவதால், தங்களுக்கு உள்ள நோயை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள இவர்கள் தவறிவிடுகின்றனர். ஆனால், நாளாக ஆக நடுப்பகுதிப் பார்வையும் குறைந்துவிடும். கண்ணைச் சுற்றி ஒரு மந்தமான வலி, எப்போதும் இருக்கும்.
இரண்டாம் வகை கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்களுக்குத் திடீரென்று கடுமையான கண்வலியும் தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். வாந்தி வரும். கண்கள் சிவந்துபோகும். கண்களில் நீர் வழியும். பார்வை மங்கும். கண்கள் கூசும். விளக்கைச் சுற்றி வளையங்கள் தெரியும்.
மூன்றாவது வகை பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவது. இதுதான் கொடூரமானது. குழந்தையின் கண் மாட்டுக்கண் போல, பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்துகொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கண்கள் கூசும். பார்வை குறைந்திருக்கும்.
யாருக்கு வரும்?
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். பிறவியிலேயேகூட வரலாம். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பர்களுக்கும், அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவோருக்கும் இது சீக்கிரத்திலேயே வந்துவிடுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் பரம்பரை ரீதியாக வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது வரலாம். அதிக மைனஸ் பவர் கண்ணாடி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, இது வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கண்ணில் அடிபட்டு, முன் கண் திரவம் போகும் பாதையில் அடைப்பு ஏற்பட்டாலும் இது வரலாம்.
என்ன பரிசோதனை?
‘விழி அழுத்தமானி' (Tonometer) எனும் கருவி மூலம் கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். ‘விழி அகநோக்கி' (Ophthalmoscope) பயன்படுத்திப் பார்வை நரம்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்த்துவிடலாம். ‘விழிக்கோணமானி' (Gonioscope) உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறுவதில் எங்குத் தடை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பார்வை பரப்பளவை அளக்க உதவும் கணினி இணைக்கப்பட்ட ‘பெரிமீட்டர்’ (Perimeter) கருவிப் பரிசோதனையால் பக்கப் பார்வை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அளந்துகொள்ள முடியும்.
என்ன சிகிச்சை?
இந்த நோய்க்கு மருந்து சிகிச்சை, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை என மூன்றுவித சிகிச்சைகள் இருக்கின்றன. நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து சிகிச்சை பலன் தரும். ஆனால், ஆயுள் முழுவதும் இவர்கள் கண் சொட்டு மருந்துகளைப் போட வேண்டியிருக்கும். மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். டாக்டர் யோசனைப்படி தொடர்ந்து முறையான கால இடைவெளிகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மருந்து சிகிச்சை யோடு லேசர் சிகிச்சையும் தரப்படும். கருவிழியில் மிகச் சிறிய துளை போட்டு முன்கண் திரவத்தை வெளியேற்றிக் கண்ணின் அழுத்தத்தைக் குறைப்பது லேசர் சிகிச்சையின் (Laser iridotomy) முக்கிய நோக்கம். இந்த நோய்க்குத் தற்போதுள்ள நவீன சிகிச்சை இதுதான்.
கண் நீர்அழுத்த நோயை இந்த இரண்டு சிகிச்சைகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கண்ணில் திரவ அடைப்பைத் திறக்க ‘டிரபிகுலெக்டமி’ (Trabeculectomy) எனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையின்போது முன்கண் திரவம் வெளியேறுகிற பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் கண் நீர்அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையால் இனிமேல் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும்; அறுவை சிகிச்சைக்கு முன்பு ஏற்கெனவே இழந்துவிட்ட பார்வையை மீட்டுத் தர முடியாது. அந்தப் பார்வை இழப்பு நிரந்தரமானது. ஆகையால், கண் நீர்அழுத்த நோயைப் பொறுத்தவரை நோய்த்தடுப்பு ஒன்றே பார்வை இழப்பைத் தவிர்க்க ஒரே வழி.
தடுக்க என்ன வழி?
கண் நீர்அழுத்த நோய்க்கு ‘ஓசையின்றிப் பார்வையைத் திருடும் நோய்’என்று ஒரு பெயரும் இருக்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட வேண்டும். பொதுவாகவே 30 வயதைக் கடந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொண்டால் இந்த நோய் இருப்பது தெரிந்துவிடும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி யாருக்காவது கண் நீர்அழுத்த நோய் இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு மேல் வருடத்துக்கு இரண்டு முறை கண் நீர்அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]

நன்றி - த இந்து

Sunday, March 03, 2013

ஃபிகரும் சுகரும் ( நீரழிவு நோய் பற்றிய ஒரு டாக்டரின் மருத்துவக்கட்டுரை)

நீரழிவு நோய் என்றால் என்ன?

நீரழிவு நோய் என்றால் என்ன?நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்
வகை - 1: டயாபிடிஸ் (Type 1 diabetes)வகை - 2: டாயாபிடிஸ் (Type 2 diabetes)வகை - 3: ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

வகை- 1: நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
நீரிழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.
நீரழிவு நோயின் அறிகுறிகள்:-
சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.
பொதுப்பண்புகள்:-
உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை, அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும். உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.

சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.


வகை- 1: நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல

இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின்
இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

வகை- 2: நீரழிவு நோய்
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்

பொதுவாக இது பரம்பரை நோய்

பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

வகை - 3: ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்:
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க வேண்டும்.
தாராளமாக சேர்த்துக் கொள்ளும் உணவு வகைகள்:
1.சூப் மிளகு ரசம், தக்காளிப்பழரசம், (சர்க்கரையில்லாமல்) நீர்மோர், எலு மிச்சை ரசம் போன்றவை.

2. எல்லாவித பச்சைக் காய்கறிகள் (சாலட்) போன்றவை.

3.எண்ணெய், சர்க்கரை இல்லாமல் தயாரித்த ஊறுகாய்.
குறைவாக சேர்க்கக் கூடியவை:
1. ஒரு நாளைக்கு 300 மில்லிக்கு மிகாத பால் உபயோகித்தல் வேண்டும்.

2.எண்ணெய் - சூரிய காந்தி அல்லது ரிபைண்டு எண்ணெய் 2 முதல் 3 டீ ஸ்ன் (தினமும்)

3. கோழி-மீன் உட்கொள்ளும் போது 50 கிராம் -சிறிய அளவு- மிகாமல் உட் கொள்ளுதல் நன்று. (பொரிக்கப்படாமல்).

4. பழங்களில் ஆப்பிள். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, தர்பூசணி ஒன்று அல்லது சில துண்டுகள் தினமும் உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சரக்கரை, க்ளுகோஸ், வெள்ளம், தேன், ஜாம், ஜெல்லி, லட்டு, ப்ரிவி, போன்ற இனிப்பு வகைகள், பிஸ்கட், கேக், கலோரி சத்து அதிகமுள்ள பழங்களான வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி, சப்போட்டா, சீத்தாப்பழம், திராட்சை, உருளைக்கிழங்கு, சேனை, மரவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முந்திரி, பாதாம், தேங்காய் போன்றவை, உலர்ந்த பழங்களான திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவை. நெய், டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு சத்துள்ள எண்ணெய், வகை.

முட்டை மஞ்சள் கரு, சீஸ், கீரிம் லிம்கா. தம்ஸ் அப் போன்ற குளிர் பானங்கள். பழரசங்கள் (சர்க்கரையுடன்) பொரித்த பண்டங்கள்.

இந்தியாவில் மூலிகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் நீரிழிவு ஒழிந்துவிடும் என்று தெரியவருகிறது.

இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது. இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறயான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவரின் அலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கிமான வாழ்வு உண்டு.

நீரிழிவு நோயின் முன்நிலை என்றால் என்ன?

நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.நீரிழிவின் முன்நிலை என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.

குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் 'முன்நிலைப் பள்ளி'க்குப் போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல 'நீரிழிவின் ஆரம்பநிலை' எனவும் சொல்லலாம்.

இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சர்க்கரையின் அளவு (110 முதல் 125 வரை இருந்தால் “நீரிழிவின் முன்நிலை” எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.

மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் டொலரன்ஸ் டெஸ்ட் என்பர்.

50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.

இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.

உணவுக் கட்டுப்பாடு அவசியமா?
நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும். 
thanx -

r janakiraman (@)

Tuesday, December 18, 2012

நான் திரைக்கதை அமைத்திருந்தால்? -கும்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-NHNLIgHCEPz_CJEn1lMPVJkFGfPvddamXO3iHdF1B5Zu1XQpRh5SLhrISMFjnaAPQ5E1k7aVgA_K7wmDL42SqGMF3b6iCNyaVSMDnP_7q5TAweaYld_PuDkbp9u63RZHxHJnAqjD9-90/s1600/kumki1.jpg

மைனா படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ,டி இமானின் இசையில் பாடல்களின் அதிரி புதிரி வெற்றி , ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு  இந்த மூன்று பிரமாதமான பிளஸ் இருந்தும்  கும்கி படம் அட்டகாசமான படமாக அமையாமல் ஏதோ ஓக்கே என்ற அளவில்தான் பேர் வாங்க முடிந்தது .பிரபு சாலமன் எங்கே சறுக்கினார்? இந்தப்படத்துக்கு எப்படி திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் ? ஒரு அலசல்1. படத்தோட டைட்டில் கும்கி-ன்னு வெச்சாச்சு . முதல் வேலையா  முதுமலை 10 நாட்கள் கேம்ப் அடிச்சு அங்கே கூட்டம் கூட்டமா யானைகள் சுற்றுவதை  வீடியோ எடுத்துட்டு வந்து தேவையான இடத்துல அட்டாச் பண்ணி இருப்பேன்.கும்கி யானைக்கு எப்படி பயிற்சி தர்றாங்க? அதனோட ந்டவடிக்கைகள் என்ன? என்பதை படம் பிடிச்சுட்டு வரலாம்.ஏன்னா படத்துல மொத்தமே ஒரே ஒரு யானை தான் வருது . வில்லன் கம் கொம்பன் யானை கிராஃபிக்ஸ் , குட்டி யானை கிராஃபிக்ஸ்.இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்துட்டு  பிரம்மாண்டமா யானைக்கூட்டத்தை காட்ட வேணாமா? 
2. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல யானை ஒரு பெண்ணை கொல்றது மாதிரி சீன் எடுத்தது க்ளோசப் ஷாட்ல நல்லாவே செட்டப் மாதிரி தெரியுது .3 வருடங்களுக்கு முன் யானைப்பாகனையே தூக்கி அடிச்ச மதம் பிடிச்ச யானையோட செய்லகளை சன் டி வி ல காட்டினாங்க . அதை எடுத்து டச்சப் பண்ணி இதுல அட்டாச் பண்ணி இருக்கலாம்.பொதுவா இந்த மாதிரி காட்சி எல்லாம் லாங்க் ஷாட்ல காட்டினாத்தான் நம்பகத்தன்மை வரும் . சும்மா யானையோட பாதம் மட்டும் காட்டி ஒப்பேத்த இது ராமநாராயனன் படம் அல்ல 3. படத்தோட திரைக்கதை டிஸ்கஷனுக்கு படத்தில் பணிஆற்றும்   அதாவ்து படத்தில் நடிக்கும் ஆட்களை உட்கார விடக்கூடாது. இந்தப்படத்துல மைனா ஹிட்டின் காரணமா தம்பி ராமையாவை ஸ்டோரி டிஸ்கஷன்ல டைரக்டர் உட்கார வெச்சாராம். அதுதான் தப்பு . இந்தபப்டத்துல தம்பி ராமையாவின் காட்சிகள் நீளம் அதிகம் . மொக்கை காமெடி நிறைய இருக்கு,. அரதப்பழசான ஜோக், சென்சார் கட் பண்ற அளவு வச்னங்கள் பேசி இருக்காரு . அவர் சமப்ந்தப்பட்ட காட்சிகளை குறைக்கனும்4. படம் போட்டு 2 மணி நேரம் கழிச்சு ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொல்றாரு. அதுக்குப்பின் 40 நிமிஷம் தான் படம் , அதனால ஆடியன்ஸுக்கு ஹீரோ - ஹீரோயின் லவ் ல ஒரு பிடிப்பு வர்லை. அவங்க சேருவாங்களா? சேர மாட்டாங்களா? அப்டினு ஒரு துடிப்பு வர்லை. காதலுக்கு மரியாதை பட்த்துல  ஆடியன்சோட பரிதவிப்பு  நல்லாவே தெரியும் . அதுக்கு இருவரும் காதலிக்கும் காட்சிகள் , காதலின் ஆழம் , இதெல்லாம் படத்தோட 4 வது ரீலில் இருந்து காடிடனும் 5. அந்த 2 போலீஸ் கேரக்டர்களும் என்ன பண்றாங்க? க்ளைமாக்ஸ்ல ஏதோ டர்னிங்க் பாயிண்ட் இருக்கு. அவங்க தான் வில்லன்களா வரப்போறாங்க என்பது மாதிரி பில்டப் எதுக்கு? அட்லீஸ்ட் அவங்க ஹீரோயினை அட்டெம்ப்ட் ரேப் கூட பண்ணலை. இந்த மாதிரி வெட்டி வில்லன்க இருந்து என்ன யூஸ் ? ஏமாற்றம்தான் மிச்சம் . அதனால அந்த 2 கேரக்டர்ஸ்க்கும் பை பை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjea0jWxXOycMDTrSGrwAOtK_ovUimAb5bjZ4XC-6E-wspDStTZRgwRZDNCF1Cmsuh44FJjzsqrnMryDyRy-JJ7OJ8jodeMVip60TxNK_S10LKjmy-d_saAMbpRKlDGZBOtO1aGrHefn00/s320/1.jpg6. ஹீரோயினோட அப்பா ஹீரோ கிட்டே உங்களூக்கு எங்களால வாழ்க்கையே போச்சு , உங்க யானையும் போச்சு அதனால நீங்க இங்கேயே இருந்துடுங்க. என் பொண்ணை உங்களூக்கே கட்டி வைக்கிறேன். உங்க லவ் எனக்குத்தெரியும். அப்பாவை மதிச்சு காதலை கை விட்ட பொண்ணுக்கு இது என் அன்புப்பரிசு அப்டிங்கற மாதிரி ஒரு டயலாக் அடிச்சு க்ளைமாசை காதலுக்கு மரியாதை மாதிரி சுபமா முடிச்சுடனும்7. பருத்தி வீரன் ஹிட்டுக்குப்பின் எல்லாப்படங்களிலும் ஹீரோ கிராமத்தான் என்றால் அவன் ஷேவிங்க் செய்யாம  காட்டான் மாதிரிதான் தாடியோட காட்டறாங்க. ஹீரோவுக்கு எதுக்கு தாடி? நீட்டா காட்டலாமே? 8. ஹீரோயினுக்கு படத்துல ஓப்பனிங்க் ஷாங்க் இல்லை. இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை வெச்சுக்கிட்டு ஹீரோயின் அறிமுகக்காட்சி வைக்கலைன்னா எபடி? அந்த சொய்ங்க் சொய்ங்க் பாட்டை ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்டா வெச்சா குதூகலமான ஓப்பனிங்க் வரும்9. ஹீரோ ஹீரோயின் கிட்டே  தன் லவ்வை சொன்னதும் ஹீரோயின் ஓடிடறார். நோ ரிப்ளை. அவர் லவ்வறாரா? இல்லையா?ன்னே தெரியலை ,. ஆனா அடுத்த சீன்லயே  ஹீரோ கிட்டே “ நீங்க போய்ட்டா நானும் உயிரை விட்டுடுவேன்கறார். ஒப்பிக்கற மாதிரி இருக்கு . ஆல்ரெடி சொன்ன மாதிரி 4 வது ரீல்லயே லவ் ஓப்பனிங்க் சீனை வெச்சு 12 வது ரீல்ல குடும்பத்துக்கு மேட்டர் தெரிய வர்ற மாதிரி எடுக்கனும்10. க்ளைமாக்ஸ்ல ஹீரோவின் யானையும் , கொம்பன் காட்டு யானையும் மோதற சீனை நல்லா பிரம்மாணடமா ஃபாரஸ்ட்ல போய் நிஜ யானைங்க மோதும்போது காத்திருந்து ஷூட் பண்ணி அப்புறம் அங்கங்கே மானே தே பொன் மானே கும்கி யானே அட்டாச் பண்ணி சி ஜி ஒர்க்  பண்ணி பக்காவா ரெடி பண்ணி இருப்பேன். சும்மா நைட் இருட்டுல  ஏதோ சண்டை நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்க மாட்டேன்


11. தம்பி ராமையா உட்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை சாகடிக்கத்தேவை இல்லை . படம் பார்த்த பலரது கருத்து “ படத்துல எல்லாரும் செத்துடறாங்க , ஒரே சோகம் “ என்ற புலம்பல் தான்.http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/11/director-PRABHU_SOLOMON1.jpg