Wednesday, April 17, 2013

வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம் - கருணாஸ்


வி..பி.களின் காதல் அரங்கேற்றம்

கொஞ்சு புறாவே

நீக்ரோ கலரில் வந்த காதல்!

கருணாஸ் கிரேஸ்

Cசையும் காதலும் பக்கத்துப் பக்கத்து வீடு போல. இசை நுழைகிற மனதுக்குள் இலகுவாகக் காதல் நுழைந்து விடுகிறது. இப்போதெல்லாம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜைக் கடந்துபோகும்போது எனக்குள் சிரித்துக் கொள்வேன். அந்தச் சிரிப்பில் ஒளிந்திருப்பது வேறொன்றுமில்லை; காதல்.

அப்போது நான் குயின்மேரிஸ் கல்லூரியில் இளங்கலை இசை படிக்கும் இரண்டாமாண்டு மாணவி. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் நடந்த இன்டர் காலேஜ் காம்படீஷனுக்காகப் பாடுவதற்குப் போயிருந்தபோது நடுவராக வந்தவர்கள் நடிகர் சரத்குமாரும், கருணாஸும். அவர்களை மேடைக்குக் கீழே உட்கார வைத்திருந்தார்கள்.


 மேடையில் பாடும்போது அவர்களைப் பார்க்கக்கூட இல்லை. எங்கள் காலேஜ் சார்பாக இரண்டு பாடல்கள் பாடினோம். ஒரு பாடலை நான் மட்டும் தனியாகப் பாடினேன். இறுதியில் எங்கள் காலேஜுக்கு இரண்டாம் பரிசும், சிறந்த பெண் பாடகிக்கான பரிசு எனக்கும் கிடைத்தன. பரிசுகளை வாங்கக்கூட இல்லாமல் பாடி முடித்ததும் நாங்கள் வந்துவிட்டோம். மறுநாள் அதற்கு மறுநாள் கூட காலேஜுக்குப் போகவில்லை.

இரண்டு நாள் கழித்து காலேஜுக்குப் போகும் போது புரொபஸர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

உன்னைத் தேடிட்டு ஒருத்தன் வந்தான். பேர் கருணாஸ். பாக்கறதுக்கு நீக்ரோ மாதிரி இருந்தான். காதுல கடுக்கன் வேற" என்று சொல்லிக் கொண்டே கருணாஸ் கொடுத்து விட்டுப் போன விஸிட்டிங் கார்டை நீட்டினார்.

என்னவாம் சார்?"

மியூஸிக் ஆல்பம் பண்றானாம். வாய்ஸ் பேங்க் வேற வெச்சுருக்கானாம். உன் குரல் நல்லா இருக்காம். உன்னைப் பாட வைக்கணுமாம். பாக்கறதுக்குக் கரடுமுரடா இருந்தான். நீ தனியா போய் பாக்காத. பேரன்ட்ஸோட போ" என்று அவரால் முடிந்த அளவுக்குப் பயமுறுத்தினார்.

எங்களோடது பாரம்பரியமான பயபக்தி கொண்ட கிறிஸ்தவக் குடும்பம். வீட்டில் டிவோஷனல் சாங்கைத் தவிர வேறெந்தப் பாட்டும் ஒலிப்பதற்கு அனுமதி கிடையாது. ஹிட்லரைவிட எங்க அப்பா பயங்கர ஸ்ட்ரிக்ட். அதனால் அவரிடம் சொல்லாமல் ப்ரெண்டை மட்டும் கூட்டிட்டுப் போய் பார்ப்போம். ஒத்துவந்தா பாடுவோம் இல்லைன்னா ஓடி வந்துடுவோம் என்று கருணாஸைப் பார்க்கப் போனேன்.  


கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிரே அவரது நண்பர் காம்ப்ளக்ஸ் ஒன்றில்தான் அப்போது கருணாஸுக்கு ஆஃபிஸ். டிவோஷனஸ் சாங்க்ஸ் இருந்தா சொல்லுங்க. சினிமா பாட்டெல்லாம் பாட எங்க வீட்டுல அனுமதிக்க மாட்டாங்க" என்று சொன்னேன்.

எல்லா அம்மா அப்பாவும் ஆரம்பத்துல அப்படித்தான் சொல்வாங்க. ஆனா பேரும் புகழும் வந்துட்டா ஒத்துக்குவாங்க. கவலைப்படாதீங்க" என்று என்னை கன்வின்ஸ் பண்ண ஆரம்பித்தார். நானும் ஆல்பத்தில் பாடுகிற ஆசையில் ஒத்துக் கொண்டு வந்துவிட்டேன். கருணாஸின் கச்சேரிகளில் பாடுவதற்கு வீட்டில் பொய் சொல்லிவிட்டு வர ஆரம்பித்திருந்தேன். மெதுமெதுவாக இப்படி ஒரு ஆறு மாதங்கள் ஓடி இருக்கும்.

கச்சேரி முடிந்த ஒரு நாள் பின்னிரவு ஆகி விட்டது. பொய் சொல்லிவிட்டு வந்தது உள்ளுக்குள் உதைத்துக் கொண்டிருந்தது. கோடம்பாக்கத்தில் இருந்து எங்க வீடு இருக்கும் மடிப்பாக்கம் போக வேண்டும். கைபிசைந்து நின்று கொண்டிருந்தபோது கருணாஸ், கவலைப்படாதீங்க நானே உங்களை வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு வர்றேன்," என்று டூவீலரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். அதுவரை கருணாஸோடு டூவீலரில் நான் போனது கிடையாது. மடிப்பாக்கம் போகவேண்டிய டூவீலர் மெரீனா பீச் பக்கம் போனபோது நான் குழப்பத்தோடு கேட்டேன்.


ஏன் கருணாஸ் இப்போ மெரீனா பீச்சுக்குப் போறீங்க?"

உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். பத்து நிமிஷம்தான் ஆகும்" என்று வண்டியை ஓரங்கட்டியவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

நான் உங்களை லவ் பண்றேன். நீ ஏத்துக்கிட்டா சந்தோஷப்படுவேன். இல்லைன்னா செத்தெல்லாம் போகமாட்டேன்" என்று கெத்துக் காண்பித்தார்.
நான், முடியவே முடியாது" என்று சொல்லிவிட்டேன். என்னை வீட்டில் விட்டு விட்டு எதுவும் நடக்காதது போல விசிலடித்துக் கொண்டு போய்விட்டார்.

நான் கருணாஸின் காதலை மறுத்ததற்கு முதற்காரணம் என் அப்பா என்றால் கடைசிக் காரணமும் அவர்தான். நான் மியூஸிக்கில் டாக்டரேட் வாங்கிய பிறகுதான் எனக்குக் கல்யாணம் என்று என்னைவிட அப்பா உறுதியாக இருந்தார். மாப்பிள்ளையும் நன்றாகவேறு படித்திருக்க வேண்டும்.

கருணாஸ் படிப்பு விஷயத்துலேயே அடிபட்டுப் போய்விட்டார். ஏனென்றால் பி.. தமிழையே விவேகானந்தா, நந்தனம் அரசுக் கல்லூரி, பிரசிடென்ஸி... இந்த மூன்று காலேஜ்லேயும் படித்திருக்கிறார். ஆனா பாஸ் பண்ணவில்லை. மூன்று காலேஜ்லையும் எப்படி பி.. தமிழ் படித்தார் என்பது இப்போது வரைக்கும் எனக்கு விளங்கவில்லை.


எனக்கு முன்பாகவே என் தோழிகளோடு ஜாலியாக அரட்டை அடிப்பது; நெருக்கம் காண்பிப்பது என்று என்னைச் சீண்டிக் கொண்டே இருப்பார். நான் கோவப்படுவேன். அப்போதெல்லாம், நீதான் என்னை லவ் பண்ணலையே.. அப்புறம் ஏன் கோவப்படறே?" கூலாகச் சொல்வார். எனக்கு மண்டை காயும். ஏனென்றால் நான் உள்ளுக்குள் கருணாஸைக் காதலித்து இருக்கிறேன். கடைசியில் நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஒருநாள் குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு மாப்பிள்ளை கொண்டு வந்தார். வந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்ல ஒரு காரணம்கூட இல்லை. அவ்வளவு நல்லவர். படிப்பு, வேலை, சம்பாத்தியம் எல்லாவற்றிலும் சூப்பர் டூப்பர். வீட்டில் எங்கே சம்மதித்துவிடுவார்களோ என்று பயந்து போனேன்.

காதலை வீட்டில் சொன்னால் அப்பா சம்மதிக்க மாட்டார் என்பதால் சொல்லாமலே கோடம்பாக்கம் ரெஜிஸ்டர் ஆஃபீஸில்தான் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆகிவிட்டது என்று டெலிகிராம் அனுப்பினோம். முதலில் முரண்டு பிடித்த அப்பா ஒரு மாதத்துக்குப் பிறகு என் அக்கா மகள் என் மீது கொண்ட அன்புக்காகச் சேர்த்துக் கொண்டார்.


கல்யாணம் ஆன புதிதில் எங்களுக்குள் பயங்கரமாக சண்டை வரும். வீட்டுக்குள் சண்டை நடந்தாலும்கூட கச்சேரியில் பாடுவதற்கு போய்த்தானே ஆக வேண்டும். மேடையில் நானும் கருணாஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட மாட்டோம். கச்சேரி போய்க் கொண்டு இருக்கும்போது திடீரென்று மைக்கை வாங்கி இப்போது அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்து காதல் ஓவியம் பாடல் பாடப்படும் என்று அறிவிப்பார் கருணாஸ்


 ஏனென்றால் அந்தப் பாடலை நானும் கருணாஸும்தான் பாடுவோம் என்பது எங்கள் ட்ரூப்பில் அறிவிக்கப்படாத சட்டம். நான் எழுந்து பாடப் போய் விட்டேன் என்றால் பாடலின் முடிவில் சமாதானம் ஆகிவிடுவேன். சமாதானம் ஆக விருப்பம் இல்லையென்றால் வேறொரு பாடகியைப் பாடச் சொல்லி விடுவேன்.

அதிகமான நாட்கள் நான்தான் பாடி இருக்கிறேன். இப்போது அதே காதல் ஓவியத்தின் ஒரு முனையில் நானும் மறுமுனையில் கருணாஸும் நின்றுகொண்டு காதலைப் பாடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் சந்தோஷம், லட்சியம், தனித்தன்மை... இவை எதையும் பாதிக்காத வண்ணம் காதல் உயிர்ப்போடுதான் இருக்கிறது.

 நன்றி - கல்கி

0 comments: