Saturday, April 27, 2013

ஐந்து வருட வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை உண்டா?

ஐந்து வருட வீட்டுக் கடனுக்கு வரிச் சலுகை உண்டா



மே, 2013-ல் 10 லட்ச ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்க உள்ளேன். கடன் காலம் ஐந்து வருடங்கள். குறுகியகாலம் என்பதால், வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகைகளை பெற முடியுமா? 

 
- ஜே.மகேஷ், செங்கல்பட்டு. சத்தியநாராயணன், ஆடிட்டர். 


''வீட்டுக் கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் வட்டிக்கும், அசலுக்கும் வரிச் சலுகை பெற குறுகியகாலம், நீண்டகாலம் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை. இந்த மாதம் வாங்கி, அடுத்த மாதம் வட்டியோடு திருப்பிக் கட்டினால்கூட அதற்குரிய வட்டி மற்றும் அசலுக்கு வரிச் சலுகை கிடைக்கும். வீட்டுக் கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் ஒரு லட்ச ரூபாயும், வட்டிக்கு ஒன்றரை லட்ச ரூபாயும் ஓராண்டில் நீங்கள் வரிச் சலுகையாகப் பெற முடியும்.


மேலும், 2013 ஏப்ரல் முதல் தேதிக்குப் பிறகு வாங்கும் வீட்டுக்கான கடன் என்றால், திருப்பிச் செலுத்தும் அசலில் ஏற்கெனவே இருக்கும் 1.5 லட்சம் வரிச் சலுகையுடன் கூடுதலாக ஒரு லட்சம் சேர்த்து 2.5 லட்சமாக வரிச் சலுகை பெறலாம். கூடுதல் ஒரு லட்சத்தை முழுமையாக 2013-14-ல் க்ளைம் செய்யமுடியாவிட்டால், மீதமுள்ள தொகையை அடுத்த வருடத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால், இந்தச் சலுகையைப் பெற இது முதல் வீட்டுக்கான வீட்டுக் கடனாகவும், வீட்டின் மதிப்பு 40 லட்ச ரூபாய்க்கு மிகாமலும், கடன் 25 லட்ச ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.''

  

 ஒரு தனியார் நிறுவனத்தில் 11 வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்கியது. புதிய நிறுவனம் எங்களுக்கான பி.எஃப். எண்ணையும் மாற்றியது. இதனால் தற்போது இரண்டு பி.எஃப். எண்களோடு இருக்கிறேன். வேலையைவிட்டு விலகிய பின்னர் பி.எஃப். தொடர்பாக நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் சரியான பதில் இல்லை. என்ன செய்வது? 


- எஸ். செல்வகுமாரி, வேப்பம்பட்டு. 

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக அதிகாரிகள், ராயப்பேட்டை. சென்னை.  

'' பி.எஃப். கணக்கைப் பொறுத்தவரை, நீங்கள் பணியாற்றிய நிறுவனம் சரிவர பதில் அளிக்க வில்லை என்று காத்திருக்கத் தேவையில்லை. மேலும், இரண்டு பி.எஃப். கணக்கு இருந்தாலும் உங்கள் பி.எஃப். தொகையை பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி  அலுவலகத்திலேயே இதற்குரிய தீர்வு கிடைக்கிறது.


 பி.எஃப். அலுவலகத்தில் பி.எஃப். தொகையை க்ளைம் செய்வதற்கு விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து தேவையான விவரங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள்.  உங்களது பி.எஃப். எண் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை அணுகவும்.''



நான் சென்னையில் இருக்கும்போது தபால் நிலையத்தில் பி.பி.எஃப். தொடங்கி கட்டிக்கொண்டிருந்தேன். தற்போது வெளிநாட்டில் பணியாற்ற வந்துவிட்டேன். இந்த நிலையில் அந்த பி.பி.எஃப். கணக்கிலிருந்து வெளியேறிவிடலாமா? அல்லது தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கு மாற்றிக்கொள்வதோ, ஆன்லைன் மூலமோ தொடர முடியுமா? 


- விஜய்.  அனிதாபட், முதலீட்டு ஆலோசகர். 


''பி.பி.எஃப். கணக்கைப் பொறுத்தவரை,  பதினைந்து வருடங்களுக்குள் வெளியேற முடியாது. கணக்கைத் தொடராமல் இருந்தாலும், பதினைந்து வருடங்களுக்குப் பிறகே உங்கள் சேமிப்பை வெளியே எடுக்கமுடியும். மேலும், கணக்கை தபால் நிலையத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அனுமதிக்கப்படுகிறது.


ஆனால், ஆன்லைன் மூலம் பி.பி.எஃப். கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி தற்போது இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, பி.பி.எஃப். கணக்கிலிருந்து இப்போது வெளியேற முடியாது. முதிர்வு காலம்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.''  



நான் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் கொடுக்கும் வாடகையை காட்டி வரிச் சலுகை பெற முடியுமா? 


- தேனம்மை, புதுக்கோட்டை. செந்தில்குமார், ஆடிட்டர். 

''உங்களது ஓய்வூதியப் பட்டியலில் வீட்டு வாடகை படி அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வீட்டு வாடகை வரிச் சலுகையை பெற முடியும். ஓய்வூதியப் பட்டியலில் வீட்டு வாடகை படி குறிப்பிடவில்லையென்றால் வரிச் சலுகை பெற முடியாது. அப்படி அனுமதிக்கப்பட்டிருந்தால், ஓய்வூதியக் கணக்கு இருக்கும் வங்கியிலேயே வீட்டு வாடகை தொடர்பான ஆவணங்களைக் கொடுத்தால் வரிப் பிடித்தம் செய்யாமல் இருப்பார்கள். ஆனால், பொதுவாக ஊழியராகப் பணியாற்றும்போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகை படி ஓய்வூதியதாரர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.''




மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். நீண்டகால நோக்கில் பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்யலாமா? ஒரே தடவையில் முதலீடு செய்வது அல்லது எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது இரண்டில் எது நீண்டகால நோக்கில் பயன்தரும்? 


- ராகவன், சென்னை. அழகப்பன், இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ். 


''உங்களிடம் இருக்கும் பணம் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு அதன் தேவை  இல்லையெனில், பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களிலேயே ஒரே தடவை முதலீடாகச் செய்யலாம். நீண்டகால நோக்கில் 12 - 14 சதவிகித வருமானம் எதிர்பார்க்கலாம்.


பேலன்ஸ்டு ஃபண்டுகள் தவிர, யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப், ஐ.சி.ஐ.சி. புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் போன்ற ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.


நீண்டகால நோக்கில் என்கிறபோது முதலீட்டிலும் பாதிப்பிருக்காது. பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களைவிட 2 - 3 சதவிகிதம் வருமானம் அதிகமாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.''

thanx - vikatan

1 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

நானும் அடுத்த மாதத்தில் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று இருந்தேன்..உங்கள் விளக்கங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளன..