Wednesday, December 26, 2012

பட்டணப் பிரவேசம். -வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா - பாடல் உருவான விதம் - எம் எஸ் வி பேட்டி

மீட்டருக்கு மேட்டர் - 5

நாலே நாலுலாதான் பாக்கி!

எம்.எஸ்.விஸ்வநாதன்

டைரக்டர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான படம்பட்டினப் பிரவேசம்.’ அதற்கான இசை கம்போசிங்குக்காக நானும், கவிஞரும் கே.பி. சாரோடு உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர் சொன்ன சிசுவேஷனுக்கு நான் ஒரு மெட்டுப் போட்டேன். அதற்கு கவிஞர் பாட்டு எழுத வேண்டும். ‘விசு! மெட்டை வாசிடா!’ என்று உரிமையோடு சொன்னார் கவிஞர். என் விரல்கள் ஹார்மோனியத்தின் மீது விளையாடிக் கொண்டிருக்க, நான் வாயால் அந்த மெட்டைப் பாடிக் காட்டி னேன். ‘நா...நன்னா...நன்னா... நன்னா...நன்னா.. நான .. நா.’
மடையா! நிறுத்து!’ உத்தரவு போட்டார் கவிஞர். ‘என்னடா! நீ பாட்டுக்கு நா... நன்னான்னு வாயில வந்தபடி சொல்லிக்கிட்டே போறே! எனக்குச் சரியான வார்த்தைகள் வரணுமில்லையா? நீ என்ன பண்ணறே... நல்லதா வேற ஒரு மெட்டுப் போடு!’
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் கே.பி., ‘அந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கே. அதையே படத்துல உபயோகிச்சுக்கலாமே!’ என்று சொல்லிவிட்டு, கவிஞரைப் பார்த்து, ‘இந்த டியூனுக்கு உங்களால அற்புதமான வார்த்தைகளைப் போட்டு, அருமையான பாட்டு ஒன்றைத் தர முடியும்என்றார். அடுத்து, கவிஞர் கவனத்தை ஈர்க்காமல், மெதுவாக என்னிடம், ‘டியூன் அபாரம்; கவிஞரை உசுப்பி விட்டு, ஒரு நல்ல பாட்டை வாங்கிடுங்கஎன்று சொல்லி விட்டு, அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டார்.

நான் கவிஞரிடம், ‘நீயெல்லாம் என்னயா பெரிய கவிஞன்? இந்தச் சந்தத்துக்கு ஒரு பாட்டு எழுத முடியாதுன்னு சொல்லறயே?’ என்று ஆரம்பிக்கவும், அவர், ‘இது ஒரு சாதாரணமான சந்தம் தான்! இதுக்குப் போய் என்னால பாட்டு எழுத முடியாதா?’ என்று வெடுக்கென்று கேட்டார். நான் உடனே கொஞ்சம் குழைவான குரலில், ‘இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா? முயற்சி பண்ணினால் கண்டிப்பாக ஓர் அற்புதமான பாட்டு தானாக வந்து விழும்!’ என்று ஐஸ் வைத்தேன்


 காரணம், கவிஞரை மட்டம் தட்டுவதைப் போல லேசாகத் தாக்கி விட்டு, உடனே, அவரைத் தூக்கி வைத்துப் பேசினால், அவரிடம் காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடலாம் என்ற தொழில் ரகசியத்தை நான் ரொம்ப நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருப்பவன் ஆயிற்றே! அவரது ஈகோவை லேசாகத் தட்டிவிட்டதும், கவிஞர் ஆவேசமாகச் \ செயல்பட ஆரம்பித்தார்.
விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என்றார். கவிஞர் மூடுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டேன் நான். இதுதான் சரியான சந்தர்ப்பம்! இப்போது தூண்டிலை வீசினால் பாட்டு மீன் சிக்கிக் கொள்ளும் என்று முடிவு செய்தேன். சற்று நேரத்துக்கு முன்பு, ‘நா...நன்னா... நன்னா...’ என்று போட்ட டியூனையே, ‘லா...லல்லா..லல்லா...’ என்று மாற்றிப் பாடிக்காட்டினேன். கண்ணை மூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள் மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூடலாவில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும் சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலுலாதான் பாக்கிஎன்றேன். ‘என்னடா சொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலுலாதான் உங்க பாட்டுல வரல!’ என்றதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.



கண்ணதாசனிடம் ஒரு சாதாரணமான அம்பாசிடர் கார் இருந்தது. ஒரு நண்பர் தான் வைத்திருந்த வெளிநாட்டு காரை விற்கப்போகிறார் என்ற தகவல் அவர் காதில் விழ, அந்த வெளிநாட்டு காரை வாங்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் கவிஞர். இருவரும் பேசி, காரின் விலையைக் கூட முடிவு செய்து விட்டார்கள். முழுப்பணத்தையும் கொடுத்து வாங்க முடியாத நிலைமையில் இருந்தார் கவிஞர். எனவே, மூன்றில் ஒரு பங்கு பணத்தை மட்டும் உடனே அட்வான்ஸாகக் கொடுப்பது என்றும், பாக்கிப் பணத்தை விரைவில் கொடுத்து விடுவது என்றும் இரண்டு பேரும் பேசிச் சம்மதித்திருந்தார்கள். கவிஞரும் தன்னிடம் வரப்போகும் புது வெளி நாட்டுக்கார் பற்றின கனவுகளில் மூழ்கினார். ஒரு குறிப்பிட்ட நாளில், நண்பரின் வீட்டுக்குப் போய் வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டுவர முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதற்கு முந்தைய நாள் அந்த நண்பரின் சில நண்பர்கள், ‘பண விஷயத்தில் கண்ணதாசன் ரொம்ப மோசம்; அவருக்கு ஊர் முழுக்க நிறைய கடன். இப்போது அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு போய்விடுவார். ஆனால், அதன் பிறகு, அவரிடமிருந்து பாக்கிப் பணம் எப்போது வரும் என்பதற்கு உத்தரவாதமில்லைஎன்று போட்டுக் கொடுக்க, காரை கண்ணதாசனுக்கு விற்க சம்மதித்திருந்த நண்பர், பல்டி அடித்து விட்டார்.

இது தெரியாமல், மறுநாள் காலை, வெளிநாட்டு காரை எடுத்துக் கொண்டு வருவதற்காக தம்முடைய டிரைவரை அழைத்துக் கொண்டு நண்பர் வீட்டுக்குப் போனார் கண்ணதாசன். நண்பரோ மிகுந்த தயக்கத்தோடு, தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதை நேரடியாகச் சொல்லாமல், ‘இந்த கார் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப ராசி! எனவே விற்க வேண்டாம் என்று தன் மனைவி சொல்லுகிறாள். எனவே, தற்போது காரை விற்பதாக இல்லைஎன்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இது கவிஞரை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.
அன்று மதியானம், இயக்குனர் ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்தபணக்காரக் குடும்பம்படத்துக்காக சோகமான சிசுவேஷனில் ஒரு பாட்டு எழுத வேண்டி இருந்தது. கார் வாங்குகிற விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் தாக்கம் அந்தச் சமயத்தில் அவர் எழுதிய பாட்டில் வெளிப்பட்டது. பாடலை இப்படித் தொடங்கினார் கண்ணதாசன்:
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக - நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக’.
தாத்தா கிருஷ்ணனுக்கு திருச்சியிலிருந்து, கேரளாவில் கண்ணனூருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது. கண்ணனூரில், விஸ்வநாதனை அவர் ஒரு ஸ்கூலில் சேர்த்தார். ஆனால், விஸ்வநாதனுக்கோ, பள்ளிக்கூட வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்களைவிட, அருகில் இருந்த இசைப்பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட இசைமேல்தான் அதிக ஈர்ப்பு.

விஸ்வநாதன் சங்கீதம் படிக்க விரும்பினாலும் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்காது என்று தெரியும். அப்படியே அனுமதித்தாலும், மாதாமாதம் மூன்று ரூபாய் டியூஷன் ஃபீஸ் கட்ட வசதி கிடையாது. எனவே, தினமும் நல்ல பிள்ளையா காலையில் வீட்டிலிருந்து புத்தகப் பையோடு கிளம்பும் விஸ்வநாதன் ஸ்கூலுக்கு வந்து, அட்டெண்டன்ஸ் எடுத்ததும், நழுவி விடுவான். ஸ்கூலுக்கு அருகில் நீலகண்ட பாகவதர் என்ற சங்கீத வித்வான் தம் சீடர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். ஜன்னல் ஓரமாக நின்று அவர் ஸோல்லிக் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, மாலையில் ஸ்கூல் விடும் நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடுவது வழக்கம்.
கர்நாடக சங்கீதத்தின் மீது மட்டுமில்லாமல் சினிமாப் பாட்டுக்கள் மீதும் விஸ்வநாதனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. சினிமாப் பாடல்களை, தானும் பாட வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆனால், பாட்டுகள் கேட்க ரேடியோ கிடையாது. சினிமாப் பாட்டுக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க ஒரு வழி கண்டுபிடித்தான் சிறுவன் விஸ்வநாதன். அந்த ஊர் டூரிங் டாக்கீஸில் இடைவேளையின் போது சினிமாப் பாட்டுக்கள் ஒலிப்பெருக்கியில் ஒலிக்கும். அங்கே ஒரு கடைக்காரரைப் பிடித்து, இடைவேளையின் போது சினிமாக் கொட்டகையில் வடை, முறுக்கு விற்க ஆரம்பித்தார். கொட்டகைக்குள்ளே கால்கள் நடந்தாலும், கைகள் வியாபாரம் செதாலும் காதுகளின் கவனம் கொட்டகைக்குள் ஒலிக்கும் சினிமாப் பாட்டுக்கள் மீதே இருக்கும். ஆனால் இந்த வடை, முறுக்கு வியாபார யுக்தி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? அடுத்த வாரம்.
- ராணி மைந்தன்
தொகுப்பு: எஸ்.சந்திரமௌலி

நன்றி - கல்கி , புலவர் தருமி  

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!